yathaadmin/ March 10, 2016/ கதை/ 0 comments

digital-art-by-adam-martinakis-7

 

Box -முதலாம் கதை .

 

அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான்  வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான்.  அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க  தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும்  பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் ஆகியிருந்தது. கட்டாயமாக குடும்பத்தில் ஒருவர் இணைந்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் அண்ணா தானே போய் இணைந்து கொண்டான் .

பெரியம்மாவிற்கு நான்கு பிள்ளையள் , நான்கு பேரும் ஒழித்துவாழ இயலாது எப்படியும் ஒருவரை பிடித்து விடுவார்கள் என்பதால்  அண்ணாவே போய் இணைந்து கொண்டான். கணணி பிரிவில் இணைந்தால் சண்டைக்கு போக தேவை இல்லையாம் , தம்பியும் கொம்பியூட்டர் படிச்சவன் தானே என்று பெரியம்மா அண்ணாவை “கணனி பிரிவில்” இணைத்து விட்டாள். ரெயினிங் முடிந்து ஒருமுறை லைனிற்கு சென்று வந்த பின் அண்ணா எங்கள் ஊரில் உள்ள ஒரு பேசில் தான் தங்கிநின்றான் , மற்றபடி அண்ணா தன் வேலை பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இரவில் வருவான் பொதுவான அரசியல் , அரட்டைகளுடன் அதிகாலைக்கு முதல் புறப்பட்டு விடுவான் , இது கடந்த மூன்று மாதங்களாக நடந்தது.

எனக்கு அண்ணாவுடன் பேச பிடிக்கும் ,  துவக்க தொட்டுபாக்க விடுவான் , அம்மா வருவதற்குள் ஒரு பூனை குட்டியை தடவுவது போல் அதனை தடவி பார்த்து விட்டு இது என்ன ? அது என்ன என்று பாகங்களை கேட்பேன் . அண்ணாவும் சொல்வான்.

சொல்லிவிட்டு

“உனக்கேன் இதெல்லாம் நீ படி”  என்பான்,

அண்ணாவுடன் வரும் யாரேனும்  ஒரு போராளி

“என்னடாப்பா படிக்க போற ?”

“கொம்பியூட்டர்”

“அப்ப நீயும் கணணி பிரிவுதானோ ?”

சிரிப்பார்கள்.

“சீ சீ நான் கேம் டிசைனரா வருவன்”

“கேம் டிசைனரோ ?”

“ஓம்”

“என்ன கேம் விளையாடுவாய் ?”

“ஐ.ஜி.ஐ , கொமாண்டோ , டெல்டா போஸ் ”

“எங்க விளையாடுறனி உதெல்லாம் ?”

“சந்திரன் பூங்கால”

அப்ப  வெளிநாடுக்கெல்லாம் போய் படிக்க போறாய்   என்று சிரிப்பார்கள்.

அண்ணா  பெரியம்மா வீட்டிற்கு போவதில்லை , அவர்கள் வீட்டின் அருகில் அரசியல்துறையினரின் பேசும் செக் பொயிண்டும் இருந்தது எனவே அண்ணாவை பார்க்க எங்கள் வீட்டிற்குதான்  பெரியம்மாவும் பெரியப்பாவும் வருவார்கள் .ஆனால் அண்ணா எப்போதுவருவானென்று தெரியாது  பல இரவுகள்  ஏமாற்றத்துடனேயே திரும்பினர் . அண்ணா  பெரியம்மாவிடம் அக்காக்களை பாஸ் எடுத்து எப்படியாவது வவுனியாவிற்கு கூட்டிச்செல்லும் படி சொன்னான்  பெரியம்மா எப்படியோ அலுவல் பார்த்து அக்காக்களை  வவுனியாவிற்கு அனுப்பிவிட்டாள்.

அக்காக்கள்  இருவரும் வவுனியாவிற்கு போய் கொஞ்ச நாட்களில் அண்ணா வருவது நின்று போனது .

 

 

அம்மா  லேசாய் பதறினாள்

”பெடியன லைனுக்கு சண்டைக்கு அனுப்பி போட்டாங்களோ என்று ”

பெரியம்மாவிடம் அப்படி ஒன்றும்  சொல்லிபயமுறுத்த வேண்டாம் என்று அப்பா எச்சரித்தார் .

எனக்கும் அந்த பயம் இருந்தது.

ஆனால்  அண்ணா எப்போ ஒரு நாள் அண்ணா வந்தான்  , கையில் துவக்கு ,கோல்சர் எதுவும் அவனிடம் இல்லை .சகாக்கள் யாரும் இல்லை ,  அண்ணாவிற்கு தாடி வளார்ந்திருந்தது  மிகவும் இளைத்துப்போயிருந்தான். ஏதோ ஒரு பழைய ஜீன்ஸ் அணிந்திருந்தான் , சேட்டும் அவன் அளவை விட பெரியதாயிருந்தது. அன்று இரவு என் குடும்பமே பர பரத்தது ,பெரியம்மாவும் பெரியப்பாவும் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் வந்து இறங்கினர் . பெரியம்மா அண்ணாவை கட்டிபிடித்து அழுதாள் , நான் எல்லாவற்றையும் கவனித்த படியிருந்தேன்.

“எங்கட வீடு நோட்டட் ஆகிட்டு ” அப்பா சொன்னார்.

“அப்ப எங்க விடுறது ?”

“தெரிஞ்சாக்கள் வீட்டிலதான் நிக்கோணும் ஒரே இடத்தில கனநாள் தங்கேலாது ” அம்மா கிசு கிசுத்தாள்

”செல்லம்மா ஆச்சிவீட்ட கேட்டு பாப்பமோ ? ” பெரியப்பா .

முடிவில் செல்லம்மா ஆச்சிவீடு தீர்மானிக்கப்பட்டது.

எனக்கு நன்றாக விடயம்  புரிந்தது  அண்ணா ஓடிவந்து விட்டான்  , சமீபகாலமாக கட்டாயத்தின் பெயரில் இணைந்த்து கொண்ட போராளிகள் ஓடிவந்த படிஇருந்தார்கள்.

என் நண்பன் டலக்சன் அன்று என்னிடம் மிக ரகசியமாக

“டேய் அக்கா ஓடி வந்திட்டு கடலால அனுப்ப போறம்”

என்று சொல்லியது எனக்கு ஞாபகம் வந்தது . அவன் சொல்லி அடுத்தடுத்த நாளில் டலக்சனின் மாமாவீட்டிலிருந்து  அவனுடைய அக்காவை  அரசியல்துறை அக்காமார் கதற கதற இழுத்துச்சென்றதை வேடிக்கை பார்த்துவட்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.

அண்ணாவிற்கு அப்படியாகக்கூடாதென்று நேர்ந்து கொண்டேன்.

அப்போது அம்மா

“பெரியவன் அண்ணா வோட ஒரு கிழமைக்கு நிக்கோணும்  இப்ப லீவுதானே

“நான் தலையாட்டினேன்” நேற்றுதான் முதல் நாள்தான் இரண்டாம் தவணை லீவு விட்டிருந்தது.

”அண்ணாக்கு ஏலாது  நீ தான் தம்பி அண்ணாவை கவனிச்சு கொள்ளோணும்”

என்று தலையைத்தடவினாள் பெரியம்மா. நான் அண்ணாவைப்பார்த்தேன்.அவன்  இடிந்துபோய் கருவளையம் கண்டிருந்த கண்களால் என்னைப்பார்த்து  புன்னகைத்தான்.

 

இரண்டுவாரமாகிவிட்டது அண்ணா தேறிவிட்டான் .  ஆச்சிவீட்டில் ஆச்சிமட்டும் இருந்தாள் . தென்னந்தோப்பு ஒன்றின் நடுவில் இருந்தது ஆச்சியின் வீடு .இருவரும் பகல் முழுதும் அறையில் இருப்போம் அண்ணா பெரும்பாலும் உறங்கிவிடுவான் , அவன் உறங்கும் நேரங்களில் புத்தகம் படிப்பேன் , ஆச்சிவீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன  எனக்கு அப்போது சாண்டில்யன் கதைகள் என்றால் உயிர் . கடல்புறா ,ஜலதீபம் ,யவனராணி என்று அதற்குள் மூழ்கி போவேன். அண்ணா உறங்காத நேரங்களில் அவனுடன் உரையாடியபடி இருப்பேன்.

“எப்பிடி ஓடி வந்த நீங்கள் ?”

“பேஸ்ல பல்லுமின்னுக்க விட்டவங்கள் அப்ப ஓடிவந்திட்டன்”

“பேஸ் எண்டா காட்டுக்கையோ ?”

“ஓம்”

“சென்ரிக்கு ஆள் இல்லையோ அப்ப?”

“இருந்தது”

“முள்ளுகம்பி வேலி எல்லாம் இருக்குமே .”

“இருக்கு”’

“பிறகு எப்பிடி ஓடிவந்தனியள் ?”

“கிணத்தடில தண்ணி போறதுக்கு ஒரு பொட்டு ஒண்டு வேலியோட கிடந்தது  அதுக்கால தவண்டு காட்டுக்க பாய்ஞ்சிட்டன்”

“ஏன் உங்களுக்கு போராட விருப்பம் இல்லையோ ?”

“இல்லை”

“ஏன் ?”

“இனி ஆயுதத்தால சண்டை பிடிச்சு வெல்லேலாது ”

“ஏன் ?”

“அப்பிடித்தான் , நீ சின்ன பெடியன் உனக்கு விளங்காது ”

”ம்ம்”

 

தலைவரை கண்டு இருக்கிறியளோ ?

ம்ம் ஒருக்கா பேசுக்குவந்தவர் . உனக்கேன் தலைவர் எண்டோண்ணை முகம் பிறைட் ஆகுது”

“தலைவர பிடிக்கும்”

“ஓ  ஏன் ?”

“நிறைய காரணம்  இருக்கு”

“என்ன காரணம்?”

“வருசத்தில ஒருநாள் தான் கதைபார்”

“ம்ம்”

“துவக்கு கட்டி கம்பீரமா நடப்பார்  . ”

“பிறகு ?”

“புதுசு புதுசா சண்டைக்குபிளான் போடுவார் .”

“ஹா ஹா”

“ம்ம்ம்  ..  என்னை போல அவரும் சாண்டில்யன் பான் ”

“சாண்டில்யன் பானோ ?”

“ஓ”

“உனக்கார் சொன்னது ?”

“கேள்வி பட்டனான்”

“உன்னக்கு ஆரோ கதை விட்டு இருகிறாங்கள்”

இல்ல உண்மையாதான் சொல்லுறன்

“சரி சரி கோவபடாத நான் நம்புறன்”

“நீங்கள் நம்பேல தானே  . இயக்கத்தின்ர வரலாறு சொல்லி தந்திருப்பாங்கள் தானே ?”

“என்ன வரலாறு ?

“தலைவர் கடல்படையை உருவாக்கிட்டு  அதுக்கு முதல் முதல் என்ன பேர் வச்சவர் சொல்லுங்கோ பாப்பம் ?”

“ம்ம்ம்  தெரியாது என்ன பேர் வச்சவர்?”

“கடல்புறா நாவலை  அவன் முன் எறிந்தேன்

”கடல் புறா எண்டோ ?”

“ஓம்  பிறகுதான் கடற்புலி எண்டு மாத்தினது தெரியுமோ ?”

”நீ பெரிய கெட்டிகாரன் தான்”

எனக்கு பெருமைதாளவில்லை

”அவர்  சண்டைக்கு வியூகம்  அமைக்கிறது கூட சாண்டில்யன் ர  புத்தகத்தில வாற மாதிரிதான்”

பெரிதாய் சிரித்தான்

“உத ஆர் உனக்கு சொன்னது ?”

“நான் தான் கண்டு பிடிச்சன் ”

“போடா உனக்கு விசர்”

பெட்சீட்டை இழுத்து போர்த்தி  கொண்டு படுத்துவிடுவான்.

 

பிறிதொரு நாளில்

 

அண்ணை

”என்னடா ?”

“சண்டேல  நிண்டனியோ ?”

“ஓம்”

“போக்ஸ் அடிக்கிற சண்டேல நிண்டனியோ ?”

“போக்ஸ் சோ ?”

“ஓம் ”

“உனகென்ன விசரே ஏன் இதல்லாம் கேக்கிற , இயக்கத்துக்கு போக போறியோ ? சின்ன பெடியன் நீ படிக்கிற வேலையை மட்டும் பார் கதைக்கிறதுக்கு நல்லா இருக்கும் இதெல்லாம்  சண்டேல நிண்டா  வாழ்கை வெறுக்கும் தெரியுமோ ”

“சீ இல்ல நீ கோவப்படாத நான் கேக்கேல ஒண்டும்”

”ம்ம்”

“……..”

“என்னடா கோவமோ ?”

“இல்லை”

“பொக்ஸ் சண்டேல எல்லாம்  நிண்டதில்லையடா ”

“ம்ம்”

“வேற என்ன தெரியோணும் ?”

“பொக்ஸ் எப்பிடி அடிக்கிறது எண்டு தெரியுமோ ?”

“தெரியும்  இப்ப அரசாங்கத்துக்கே தெரியும் ” ஏழனமாக சிரித்தான்.

அந்த வியூகம் எப்பிடி நடக்கும் ?

 

வியூகமோ ?

“பெரிய அபிமன்யும் வியூகம் கேக்கிறார் ”

“சரி அர்சுனரே சொல்லுங்கோவன் எப்பிடியெண்டு ”

“வியூகம் எண்டு இல்லையடா  அங்க தைரியம் தால் வெண்டு குடுக்கும் . ப  போல  தளத்த செட் பண்ணி  ஆமிய உள்ள மூவ் பண்ண விட்டு குறுக்கால இறங்கி சப்ளேய கட்பண்ணி  ப வ பெட்டியாக்கி சுத்திவர நிண்டு வெளுக்கிறது.

நிறைய பேர் சாகோணும்  , ஊடறுத்து இறங்கோணும் , கட்டளை  ஷெல் அடி எல்லாம் கோடினேட் பண்ணோணும்

என்று தொடங்கி எப்படி  பொக்ஸ் சண்டை இருக்கும் என்று சொன்னான் .

“நீ நினைக்கிறமாதிரி அர்சுனனும்  கண்ணனும் மட்டும் இருந்தா காணாது , அங்க போராளியள்  உணர்வோட சண்டை பிடிக்கோணும் ,தைரியமா இறங்கோணும்”

”ஏன் இப்ப தைரியம்  இல்லையோ ?”

“பிடிச்சுகொண்டுபோய் சண்டை பிடியெண்டா  பெடியள் சண்டை பிடிப்பாங்களே ?”

“ம்ம்”

 

நாம் ம்ம் கொட்டிமுடிப்பதற்கும் நாங்கள் இருந்த வீட்டின் கதவு உதய படுவதற்கும் சரியாக இருந்தது . ஆச்சி ஐயோ என்று கத்தினாள்  தட தடவென  வரியுடை அணிந்த போராளிகள் எங்கள் அறைக்குள் நுழைந்தனர் எழுந்து சுதாகரிக்க முயன்ற அண்ணனின் முகத்தில்  தடினமாக இருந்த ஒருவனின் புயங்கள் இறங்க அண்ணன் தடுமாறி வீழ்ந்தான்.

கடைசியாக அண்ணா திமிற திமிற பயுரோ ஒன்றில்  அவனை தூக்கி போட்டபடி வாகங்கள் மறைவதை நானும் ஆச்சியும் பார்த்தபடியிருந்தோம் .

சரியாக ஒருமாதத்த்தில் அண்ணாவின் வித்துடல் கிளிநொச்சி பொதுநோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டது. முகமாலை சண்டையில் வீரச்சாவடைந்த அண்ணாவின் உடல் இருந்ததாக சொல்லப்பட்ட  புலிக்கொடி போர்த்திய சவபெட்டியை  அறைந்து அறைந்து பெரியம்மாவும் அம்மாவும்  இதர சொந்தங்களும் கதறிக்கொண்டிருந்தனர்.

பெரியம்மா பெட்டியை திறந்து  காட்டும்படி கூவினாள் ஆனால் பொடி சிதைந்துவிட்டதாக கூறி அதனை சீல் வைத்திருந்தனர் . நான் கிட்ட போகவில்லை என் உடல் நடுநடுங்கி கொண்டிருந்தது , கண்ணீர்  எதுவும்  வரவில்லை , தொண்டை விக்கலெடுத்து கொண்டிருந்தது  நான் அண்ணாவின் சவப்பெட்டியை உற்றுபார்த்தபடியிருந்தேன். யாரோ வந்து என்னை நகர்த்தி பெட்டியின் அருகில் கொண்டு சென்றார்கள் கையில் கொஞ்சம் செவ்வரத்தம் பூக்களை தந்து தூவச்சொன்னார்கள் தூவும் போது பெட்டியில் இருந்து அந்த வாடை என் நாசியைதாக்கியது , இது இப்படித்தான் என்று அப்போது என்னால் அந்த வாடையை  அடையாள சொல்ல முடியவில்லை ஆனால் அந்த வாடை அப்படியே மனதினுள் இறங்கி நின்று கொண்டது.

 

 

box – இரண்டாம் கதை

 

“அன்ரி இருக்காங்களா ?”

அவளிற்கு தமிழ் பேச வரும் என்று அன்றுதான் எனக்கு தெரியும் .

கையில் பாற்சோறு நிறைந்த பீங்கான் தட்டுடன் எங்கள் வீட்டு  ஹோலின் வெளிப்படிகளில் நின்று கேட்டுகொண்டிருக்கும் அவளை ஏறிட்டேன்.

அவள் மஞ்சள் தேகத்திற்கு அந்த வெள்ளை உடை கொள்ளைழகை தந்திருந்தது  .  அணிந்திருந்த பாவாடை முழங்காலுக்கு ஒரு இஞ் கீழே இறங்கி முடிந்திருந்தது. கால்களில் வளர்ந்திருந்த ரோமத்தை நான்கைந்து நாட்களுக்கு முதல்தான் றிம் செய்திருப்பாள்  என்று நினைத்தேன் லேசாய் ரோமங்கள் தலைகாட்டிக்கொண்டிருந்தன . எனினும் நான் அதற்கு முதல் அவ்வளவு பளபளப்பான கால்களை பார்த்ததே இல்லை என்பதை மனது பூரணமாய் ஒப்புக்கொண்ட்டது.

கம்பராமாயணம்  நளவெண்பா இரண்டிலும் சொல்லப்பட்ட இடைகள் இப்படிதான் இருந்திருக்கும் என்று தோன்றியது  அளவாய் மேடிட்டு இருந்த மார்பில் இறுக்கமாய் படர்ந்திருத வெள்ளை  டீசெட்டில் எழுதியிருந்த  being human   என்ற வாசகத்தின் அர்த்தப்பாட்டை என் கண்கள் மீறிக்கொண்டிருந்தன.

எனக்கு உள்ளே  நடந்து கொண்டிருக்கும்  பெருவெடிப்பை பற்றியோ என் கண்களின் அலைதல் பற்றியோ அறியாத அவள் முகம்முழுவதையும் பயன் படுத்தி புன்னகைத்து கொண்டிருந்தாள் . அச்செவ்விதழ்களில் தொடங்கிய அப்புன்னகை முகம் முழுவது நிறைந்து நின்றது.

“இல்ல்ல  அம்மா  இல்ல ”

“ஓ டு டே எங்க பெஸ்ரிவல் ”

கையிலிருந்த வட்டிலப்ப தட்டை நீட்டினாள் . வாங்கிக்கொண்டேன் , என்னிடம் ஏதும் கேட்காமல் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன படிக்கிறீங்க ?”

என் கதிரையில் இருந்த புத்தகத்தை சுட்டிகாட்டி கேட்டாள்

எடுத்துக்கொடுத்தேன்

“தி டாவின்சி கோட்”  இதெல்லாம் படிபீங்களா ?

 

“ம்ம்”

“அதென்ன  பெரிய புக்”

“டிக்சனெரி”

அவளுக்கு புரிந்து விட்டது .சிரித்தாள் . நான் சிதறிக்கொண்டிருந்தேன் . அதற்குள் அம்மா வந்து விட்டாள்.

ஹாய் அன்ரி என்று அம்மாவுடன் உரையாடத்தொடங்கினாள் . எனக்கு அவசரமாக உள்ளே போகவேண்டும் போலிருந்தது போய் விட்டேன்.

 

இப்படித்தான் நிலுமியை முதன் முதலில் சந்தித்தேன். முகாமில் இருந்து விடுதலையாகி நாங்கள் நேராக புத்தளத்திற்கு வந்துவிட்டோம் , நாங்கள் வாடகைக்கு வீடு எடுத்த இடம்  தமிழ்,சிங்கள் , முஸ்லீம் செறிந்திருக்குமிடம்  எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு நிலுமியினுடையது.அவளுடைய அப்பா ஒரு சிங்கள் பொலீஸ்காரர் என்று அம்மா சொன்னாள். அவளுடைய தாய் திருகோண்மலையை சேர்ந்த தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் என்று அக்கா சொன்னாள்  , திருகோணமைலையில் காதலாகி அவருடன் வந்துவிட்டாள் என்றும் அம்மா அக்கா சொன்னாள் .அத்துடன் அந்த அன்ரி மிகவும் நல்ல மாதிரி என்றும்  அக்கா சேட்டிபிக்கேட் கொடுத்திருந்தாள் என் அம்மாவும் அக்காவும் எப்போதும் அப்படித்தான் பக்கத்து வீடுகளில் உடனே சினேகமாகிவிடுவர்.

நான்  நிலுமியை பின்னேரங்களில் அவளுடைய பொக்கட் நாயுடன்  வோகிங் போகும் போது பார்ப்பேன். சிங்களத்தில் அதனை அதட்டிக்கொண்டு நடந்து செல்வாள் . அவளுக்கு அப்பாவின் மொழிதான்  பிடித்திருக்கிறது போலும்  தமிழ் தெரியாது என்றும் நானாகவே   நினைத்துகொண்டேன் . மற்றபடி மதிலுக்கு அந்தப்புறம் எப்போதாவது அவள் குரல் கேட்கும் .அம்மாவும் அக்காவும் நிலுமியின் வீடுவரை சென்று ஐயரம்மாவுடன் (நான் நிலுமியின்தாயை அப்படித்தான் அழைப்பேன்) உரையாடத்தொடங்கினர்.

 

இந்த நிலையில் தான் அன்று நிலுமி யாருமில்லா வேளையில் பாற்சோறுடன்  வந்திருந்தாள்.

இதற்கு பிறகு என்னை கண்டால் அவளாகவே பேச்சு கொடுப்பாள் . அருகில் இருந்த புத்தளம் கடற்கரை கருங்கல்லி இருந்து உரையாடுவோம் ,அவ்ளும் என்னைப்போல்  க.பொ.த சாதரண தர பரீட்சை எழுதிவிட்டு  றிசஸ்ல்டுக்கு  காத்திருந்தாள்.

அவளுக்கு பிடித்த ஐந்து விடயங்களை சொன்னாள்

-மம்மி (அவள் அம்மா)

-ஏஞ்சல் (அவள் நாய்குட்டி –அது ஒரு பெண்)

-யஸ்ரின் வைபர் (அவள் சொல்லும் வரை நான் ஜஸ்ரின் வைபர் பற்றி அறிந்திருக்கவில்லை  )

-கம்பியயூட்டர் கேம்ஸ் (இதை மூன்றுமுறை அழுத்தி சொன்னாள்)

-ஹனா  (அவள் பள்ளித்தோழி )

எனக்கு அவள் சொன்ன 4 ஆவது விருப்பம் பிடித்திருந்தது. ஆனால் நான் கம்பியூட்டர் கேம் பற்றி மறந்தே விட்டிருந்தேன் . மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது நான் கேம் விளையாடி . கேம் டிசைனராக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் நான். ஆனால் கடைசி மூன்றுமாதம் மட்டும் படித்து ஓ. எல் லில்  பாஸ் ஏனும் வருமா என்ற  சந்தேகத்துடன் திரும்பி படிக்க எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அந்த கனவெல்லாம்  மிக அதிகம் தான் என்று நினைத்திருந்தேன்.

அவளிடம் சொன்னேன்  ஒருகாலத்தில் கண்ட கேம் டிசைனர் கனவை பற்றி, அவள் சிரிப்பாள் என்று நினைத்தேன்  என்ன நினைத்தாளோ  என் கையை பிடித்து கொண்டு புன்னகைத்தாள்.

அவள் தான் ஒரு கொம்பியூட்டர் கேம் பைத்தியம் என்றாள் அவளிடம் பெரிய திரையும் . முப்பரிமாண கேம் விளையாடத்தக்க  கொம்பியூட்டரும் இருந்தது என்னை அழைத்து சென்று கேம் விளையாடச்சொல்வாள் எனக்கு அவள் கணனியில் விளையாட கூச்சமாய் இருக்கும் .அத்துடன் அந்த மூன்றுவருடத்தில் கேம்  நான் நினைத்தே பார்க்காத பரிமாணத்திற்கு சென்றிருந்தது. எனவே அவளை விளையாடச்சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டுப்பேன். சில நேரங்களில் கேமையும் அதிகப்படியாக அவளையும் .

அவள் மேல் எனக்கிருந்த ஈர்ப்பு அவளிற்கு தெரிந்திருந்தது ஆனால் அவள அதைப்பற்றி எதுவும்  கவலை பட்டதாய் தெரியவில்லை. அவள் தொடுகையும் நெருக்கமும் என்னை பதட்டத்திற்குள்ளாக்குவதை அவள் எவ்வளவுதூரம் அறிந்திருந்தாளோ தெரியாது

ஒருநாள்  பேச்சினூடே

“ஏண்டா  எப்ப பாத்தாலும் அங்கையே”

என்றாள்

“என்ன ? என்றேன்  திடுக்கிட்டதை காட்டி கொள்ளாமல்”

“ஒன்றுமில்லை என்று பேச்சை இயல்பாய் கடந்தாள்’ அன்றிலிருந்து கொஞ்சம் என் பார்வையையும் நடத்தையையும் கட்டுப்படுத்த தொடங்கினேன்.ஆனால் ஒரு அளவிற்கு மேல் எல்லை மீறியே ஆகும் .

பெரும்பாலும் being human என்னை அதிகம் அலைகழித்தது , நான் அதனை காதல் என்றும் உள்ளே ஒரு எண்ணத்தை வளர்த்துக்கொள்ளதொடங்கினேன்.

ஒரு நாள் நிலுமி கவலையாய் இருந்தாள்

”என்னாச்சு ?”

“ஐ லொஸ்ட் இட்”

“என்ன நடந்தது ?”

“தோத்து போனேன் டா”

எனக்கு புரிந்தது

“எந்த கேம் ?”

அந்த புது மல்டிபிளேயர் கேம்

(மல்டி பிளேயர் என்பது உலகின் பல மூலைகளில் இருந்து ஒரே விளையாட்டை குழுவாக விளையாடுவது)

“ஓபன் வேல்டோ ?”

“ம்ம்”

ஏன் தோத்தனி ? கஸ்ரமோ ?

“தனிய எண்டா ஈசியா முடிச்சிடுவன் டா , ஆனா மல்டிபிளேயர் என்ர குரூப்புக்கு நான் தான் ஜெனரல் , என்னால வின் பண்ண முடில”

அவள் குரல் உடைந்திருந்தது.

“என்ன மாதிரி கேம் ? ”

“மில்ரி ஒப்பரேசன் ஒண்டு . லாஸ்ட் மிசன்  ரொம்ப கஸ்ரம் என் பக்கம் ஆட்கள் இருக்கு ஆனா  வெப்பன்ஸ் இல்ல ”

”சரி வா பாப்பம்”

“நீ விளையாட போறியா ?’

“இல்ல நீ விளையாடு நான் கெல்ப் பண்ணுறன்.”

அவள் தலையாட்டினாள் .

என் காதில் ஒரு பெரிய கெட் செட்டை மாட்டி விட்டாள் தானும் ஒன்றை மாட்டிக்கொண்டாள் . திரை உயிர் கொண்டது ஒரு கழுகு உலகை பார்பதுபோல் விளையாடும் இடம் பரந்து தெரிந்தது .ஒரு கடலோடு கூடிய நிலப்பகுதியில் காடும் மலையும்  ஆறுகளும் ஓடின . அவள் எனக்கு எதிரிகளின் நிலைகளையும் நம்முடைய நிலைகளையும் சுட்டிகாட்டினாள் .

எங்கள் பக்கத்தில் சுமார் ஆயிரம் படைகளும் இரண்டு பெரிய போர்கப்பல்களும் , நான்கு தளபதிகளும் இருந்தனர் .ஏனைய தளபதிகள் அவளைப்போல் வெவ்வேரு இடங்களில் இருந்து விளையாடும் நபர்கள். நிலுமி அந்த படைக்கு பிரதான கட்டளைத்தளபதியாகவிருந்தாள்.

எதிரி படை முன்னேறுவதை குறுகாட்டி காட்டியது . நான் அவர்களை நன்கு கவனித்தேன் பின்னர் ஒருமுறை கண்களை மூடிக்கொண்டேன். அண்ணாவின் சிரித்த முகம் உள்ளே எழுந்தது .

”ரெடி டா  ஒப்ரேசனுக்கு ஒரு நேம் சொல்லு”

“ஒப்பரேசன் பொக்ஸ்”

“ஓகே என்ன செய்யணும் சொல்லு ”

“உன் படைய இரண்டா பிரி”

“சரி”

“பாதி படைய  ப வடிவத்துல அந்த மலையின்ர கணவாய் யை சுத்தி நிப்பாட்டு”

ம்ம்

“நான் சொல்லும் மட்டும் சுட வேண்டாம்  பங்கருக்க எல்லாரையும் பதுங்க கட்டளை குடு”

“மழ மழவென  கெட்செட்டில் இருந்த இஸ்பீக்கரில் தன் தளபதிகளுக்கு ஆங்கிலத்தில் அறிவித்தாள்”

“மீதி படைய என்ன செய்றது என்று கெக்கிறாங்கள்”

“மீதி படைய இரண்டு கப்பல்லையும் ஏத்து ”

“கப்பல்ல நிண்டு சண்டை போடேலாதுடா , இருக்கிறதெல்லாம் தரைபடைதான்”

“தெரியும் ஏத்து”

“சரி ஏத்தியாச்சு மலை பக்கம் துப்பாக்கி சத்தம் கேக்குது ”

“ஸ்பைச அனுப்பி  உளவு பாக்க விடு”

“டாங்கி யள்  முன்னால வருது ந்னுகாட்டுதடா”

“ஓகே சொல்லும் மட்டும் எதுவும் கட்டளை குடுக்காத”

”சரி இப்ப என்ன செய்ய ?”

“கப்பல் ரெண்டையும் மலைக்கு பக்கத்தில முடியிற கடல் பரப்புக்கு நகர்த்து ஒவ்வொரு கப்பலா நகர்த்து  , கொஞ்ச நேர இடை வெளில”

“சரி”

“எவ்வளவு தூரம் உள்ளுகு வந்திட்டாங்கள் ?”

“நம்ம ப ட வாய்க்க புல்லா நுழைஞ்சாச்சு அடிக்கவோ ?”

“இல்ல இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வர சொல்லு ப வ”’

“அப்ப நம்ம   முக்கால் பங்கு நிலம் அவங்க கைல போய்டும் நம்மளிட்ட ஆயுதமும் இல்ல”

“தெரியும் நிலு சொல்லுறத செய்”

“சரி”

கப்பல் ரெண்ட்டையும் கரைக்கு நகர்த்தி மலை சைட்ல படைய தரை இறக்கு

”ம்ம்”

அவள் மிகவும் குழம்பிபோய் இருந்தாள்.

“சரி இப்ப மலைசைட்ல மூவ் பண்ணி கணவாய் பக்கம் போக கட்டளை கு கப்பல் படை முன்னேறுறதுக்கு எதிர் பக்கம் ஏவுகணையள அனுப்பட்டும்”

“அவள் என்னை திரும்பி விசித்திரமாய் பார்த்தாள் அவள் தளபதிகள் குழப்பத்தில் அவளிடம் கேள்விகேட்டுகொண்டே இருந்தனர் . எனினும் நான் சொல்வதை செய்த படியிருந்தாள்”

எதிர் திசையில் கப்பல்கள் குண்டுகளை ஏவ எதிரிகள் அந்த திசை நோக்கி சுட ஆரம்பிக்க மலை பக்கத்தில் முன்னேறிய படைகளை கொண்டு கணவாயிலிருந்து வந்த எதிரிகளின் இணைப்பை துண்டித்தேன் . ப வடிவம் பொக்ஸ் ஆக மூடிக்கொள்ள

“இப்ப அடி நிலு”

”ஓபன் பயர் அண்ட் மூவ்”

என்றாள் உறுதியான குரலில் .

அரை மணிநேரம் அருகில் இருந்த என்னையும் கவனிக்காமல் அந்த ஏசி அறையில் வேர்க்க விறுவிறுக்க கட்டளைகளை கொடுத்தவாறு  எதிரிபடைகளை துவசம் செய்து முடித்தாள்.

“நீ வென்றுவிட்டாய் என்று திரையில் தோன்ற”

அவளை அறியாமல் கத்திகொண்டே எழுந்தவள் சந்தோசம் முகத்தில் வெடிக்க என்னை அணைத்துக்கொண்டாள் ,மிகவும் இறுக்கமாக

நான் அதை எதிர்பார்க்கவில்லை அவள் மெல்லிய தேகம்  , மென்மைக்கும் கடினத்திற்கும் இடைப்பட்ட அவளுடைய மார்பு என் மார்புடன் அணைய அவளை அணைத்துக்கொண்டு என் நாசியை அவள் கழுத்தருகே புதைத்தேன்.

அப்போதுதான் அந்த நெடி சடுதியாய் வந்து என் நாசியைதாக்கியது .அவள் காதுமடல் என் கன்னத்தில் குளிர ஆரம்பிக்கும் போது அத்னை நுகர்ந்தேன். அவள் தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் இருந்து வந்தது அந்த நெடி. அதே நெடிதான்  அண்ணாவின் சவப்பெட்டியிலிருந்து வந்த அதேநெடி. மனதில் இறுகி எங்கோ ஒரு மூலையில் கிடந்த அது  மீண்டும் எழுந்து வந்து நின்றது .அப்போது  அவள் மார்பின் இஸ்பரிசமோ உடலின் மென்மையோ அவளின் மிகநெருக்கமான நிலையோ என்னால் எதையும்  உணரமுடியவில்லை  எனக்கு உணர்முடிந்தது ஒன்றே ஒன்றுதான் அந்த நெடி . தலைக்குள் ஏதோ புகுந்து இரச்சல் எழுப்பியது. உடல் விறைத்து நாவறண்டது. தோல்வேர்த்து சூடாய் வியர்வை கசியத்தொடங்கியது . சட்டென்று அவளை தள்ளி விலக்கிவிட்டு வேகமாய் வெளியே இறங்கி நடந்தேன் .

-யதார்த்தன்-

Share this Post

Leave a Reply