yathaadmin/ March 2, 2016/ கட்டுரை/ 1 comments

 

aaaaaaaa

 

(பாவ மன்னிப்பு-    ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.)

திரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் ,ஈழத்தின் இலக்கிய நீரோட்டத்துனுள் நுழைய எண்ணும் அல்லது நுழைந்திருக்கும் எல்லா பிரதியாக்குனர்களுக்கும் சொல்லபடவேண்டிய செய்தி அது.

 

(நிலாந்தனின் உரை – https://www.youtube.com/watch?v=x5LkW2ZgGxk)
ஆதிரையின் அரசியல் மற்றும் அதன் மையச்சரடு என்பவை வரலாறு எனும் சட்டத்தில் கட்டியெழுப்ப படுகின்றது என்றது நிலாந்தனின் குரல். மேலும் ஈழத்தின் வரலாறு என்பது தவிர்க்க முடியா இடையறுந்த நிலைகளையும் , இருண்டுபோன ,பலதனிமனிதர்காளோடு இறந்து போய் மீட்டெடுக்க முடியாத பக்கங்களை கொண்டிருப்பதாக கூறியது குரல். அதாவது ஈழத்தின் கடந்த கால வரலாற்றை பூரணமாக யாரும் எழுதி முடிக்கமுடியாது என்பது குரலின் சாறு.
உண்மை ,
வரலாற்றின் மீதான தரிசனம் இல்லாமல் ஒரு சமூக இருப்பினை புனைவு அல்லது புனைவற்ற தன்மைகளை கொண்டு உருவாக்குதல் சாத்தியமற்றது.
ஆனால் நிலாந்தனின் கருத்து குரலால் மேம்படுத்தபட்ட ஒன்று , அதாவது இயல்பான உண்மை வார்த்தைகளாலும் , நாவன்மையாலும் அதன் உப சிக்கல்கள் மீது சடுதியாக யாரும் கேள்வி கேட்டுவிடாதபடி கட்டப்பட்டதாக இருக்கின்றது . உண்மையில் வரலாறு ஒன்றே இந்த உலகத்தின் நிகரில்லாத புனைவாக இருக்கின்றது . சயந்தனிடம் இருந்த வரலாற்றின் மீதான தேவைத்தெரிவு, ஒரு எழுத்தாளனிடம் , மட்டுமல்ல ஒரு வரலாற்றாசிரியனுக்கும் இருக்கின்றது . தற்சார்புள்ள தெரிவென்பது இயல்பானது. நடுநிலையென்பது வெறும் இலட்சிய தீர்மானம் மட்டுமே.
தற்சார்பு அற்ற ஒரு வரலாற்று ஆசிரியனின் குறிப்பை யாரும் காட்டிவிட இயலுமா , ஆக வரலாறு கடந்த காலத்திலிருந்து தெரிவு செய்யும் அரசியலே. இதையே நிலாந்தனின் குரல் சொன்னது . இங்கே நிலாந்தன் சயந்தனிடம் விமர்சகர்கள் எழுப்பும் “உங்களுடைய தெரிவு வரலாறு எது ?” என்ற கேள்விக்கான நிலாந்தனின் பதில் அல்லது நியாயப்பாடு. ஒரு வரலாற்றாசிரியன் மோசமான அரசியலை உடையவன் என்னும் பட்சத்தில் எதிர்காலத்தின் விளைவுகள் மிகமோசமாக மாறிவிடும் . இன்று வரை இலங்கை தேசத்தின் இன, மத சிக்கல்களை உருவாக்கிய மகத்தான பணியை செய்தவர் மகாவம்சத்தை எழுதிய மகாநாமதேரர் எனபதை வகை மாதிரியாக இங்கே நினைவு கூர்கிறேன்.

 

அதனைப்போலத்தான் இலக்கியவாதிகளும் . இங்கே சயந்தனிடம் என்ன அரசியல் இருக்கின்றபோதும் அவர் எதனை தெரிவு செய்கிறார் எதனை புறக்கணிக்கிறார் என்பது அவருடைய நேர்மையில் தங்கி நிற்கின்றது.
ஆக நிலாந்தனின் முற்பாதி உரை , சயந்தனின் அரசியலை வரலாற்று சட்டகத்தில் நின்று வியாக்கியானம் செய்ய வேண்டும் என்ற இன்னொரு பிரதி வாசிப்பு முறையை கோருகின்றது , இது முற்றிலும் ஆரோக்கியமானது. அல்லது ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கிச்செல்லக்கூடியது.

 

ஆனால் நிலாந்தனின் பிற்பாதி உரை சிக்கல் மிகுந்த ஆரம்பங்களை தோற்றுவிக்கின்றது.
நிலாந்தன் தன்னுடைய பிற்பாதி உரையில் மூன்று ஈழத்து படைப்பாளிகளை தன்னுடைய சட்டத்தின் மீது நிறுத்துகின்றார் .
ஷோபாசக்தி , சயந்தன் , தமிழ்க்கவி.
இவர்கள் மூவரையும் ஒரே சட்டத்தில் நிற்கவைக்கின்றது குரல்
ஷோபா தமிழிலக்கிய பரப்பில் அதிகம் கொண்டாடப்பட்ட , படும் படைப்புக்களுக்கு சொந்தக்காரர் , பிரதிகளில் தன்னுடைய தெரிவு அரசியலை ,அல்லது வரலாற்று தெரிவரசியலை கொண்டிருப்பவர் .
ஷோபாவை ஷோபாவும் , நாமும் புலி எதிர்ப்பரசியல் கொண்டவர் என்ற முத்திரைக்குள் இறக்குகின்றோம், ஆனால் ஷோபாவின் பொக்ஸ் ஷோபாவை அதனையும் தாண்டிய பிறிதொரு தெரிவரசியலுக்குள் இட்டு செல்வதை உணரலாம் , ஆக ஷோபாவும் நெகிழ்ச்சிவாய்ந்த தெரிவரசியலை கொண்ட ஒருவராகவே இருக்கின்றார். அதுவே இன்னும் ஷோபாவின் எழுத்தை ஈரப்பிசுபிசுப்புடன் வைத்திருப்பதாக கருதுகின்றேன்.
உரையாடலில்
ஷோபாவின் படைப்புத்தன்மையின் உருவ உள்ளடக்கங்களை மையப்படுத்தி நிலாந்தனின் குரல் பேசுகின்றது, படைப்புலகினை பொறுத்தவரை ஆகக்கூடிய புனைவுச்சுதந்திரத்தை அனுபவித்தபடியிருக்கும் ஒருவராக ஷோபாவை முன்வைக்கின்றது நிலாந்தனின் குரல் , அப்படியே ஷோபாவை தன்னுடைய சட்டத்தின் ஒரு அந்தத்தில் கொண்டு சென்று நிறுத்துகின்றது .
அடுத்து தமிழ்க்கவி
தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தை பற்றி கூறும்போது நிலாந்தன் தன்னுடைய தீனமான குரலின் அர்த்தங்களை மெல்ல மர்ம முடிச்சுக்களாக மாற்றுகின்றார் , அவரின் மொழிதல் தாடனத்தால் ஊழிக்காலத்தை வியாக்கியானிக்கிறார் , ஊழிக்காலத்தை ஒரு நாவல் என்றோ இலக்கியம் என்றோ அவரின் குரல் எந்த ஒரு இடத்திலும் கூறிவிடாமல் தந்திரமாக நழுவிச்செல்கிறது , தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தை ஒரு வரலாற்று பதிவுப்புத்தகமாக குறிப்பிடுகின்றார் . தகவல்களை ஒழுங்கு படுத்து இன்னோர் வரலாற்று ஆவணமாக அது இருக்கின்றது என்பது அவரின் கருத்து , தவிர தமிழ்க்கவியின் அரசியல் தெரிவுகள் பற்றி அவரின் குரல் சிறிதும் பேசவில்லை , ஷோபாவின் , சயந்தனின் அரசியல் பற்றி நிலாந்தனின் குரல் நன்கு அறிந்திருக்கிறது ஆனால் தமிழ்க்கவியின் வரலாற்று ஆவணத்தின் அரசியல் நிலைப்பாடுபற்றி அக்குரல் மேற்புல் மேய்ந்து செல்கின்றது.

 

தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தில் அழகியல் இருக்கின்றதா என்ற கேள்வியை பிரபல விமர்சனக்குரல் சபைக்குவிடுகின்றது . ஊழிக்காலத்தை இலக்கியம் என்று குறிப்பாடத அந்தக்குரல் , தமிழ்கவியிடம் இருக்கும் அகச்சிக்கலையும் கடந்தகாலம் பற்றிய சுய இருப்பை நிலைநாட்ட தேவையான கடந்தகாலத்தை தெரிவு செய்யும் மனநிலை அரசியலையும் தவிர்த்துவிடுகின்றது. அங்கே குரலுக்குள் இன்னோர் அரசியல் குமைகின்றது.
தொடர்ந்து அவரின் குரல் சயந்தனை தூக்கிவந்து நடுவில் வைத்து , ஷோபா , தமிழ்க்கவி ஆகிய இருவருக்கும் நடுவில் பயணிக்கும் எழுத்தை கொண்டவர் என்கின்றது .

 

இங்கே பலமாக எழும் கேள்வியென்னவென்றால் போர்சூழல் பற்றிய இலக்கியங்களில் எந்தச்சரட்டின் அடிப்படையில் நிலாந்தன் மூன்றுபிரதியாக்குனர்களைத் தெரிவிவு செய்தார். அவர் சொல்வதைப்போல வரலாற்றின் மையச்சரட்டில் பயணிக்கும் எழுத்துக்களை கொண்டவர்கள் என்பதனாலா ? அப்படியென்றால் தமிழ்க்கவியின் ஊழிக்காலம் ஷோபாவின் , மற்றும் சயந்தனின் பிரதிகளுடன் எந்த இடங்களில் இடை வெட்டுகின்றது ? ஷோபாவிடமும் சயந்தனிடமும் இருக்கும் தெளிவான நிலைப்பாடு , கடந்தகாலத்தை தெரிவு செய்வதில் இருக்கும் நேர்மை தமிழ்க்கவியின் எழுத்துக்களில் உள்ளதா ?
தமிழ்கவியின் எழுத்துக்களில் எழும் முன் பின்பான முரண்களை பற்றிய நிலாந்தனின் நிலை என்ன ? அப்படியென்றால் நிலாந்தன் தமிழ்கவியின் வரலாற்று கோப்பினை கேலி செய்கின்றாரா ?
சட்டகத்தின் இரு அந்தங்களில் ஒரு அந்தத்தில் பலமாக ஷோபா அழுத்தி நிற்க இன்னொரு அந்தத்தில் தமிழ்க்கவி நிற்க அங்கே சமநிலை எத்தகைய தன்மையினதாக இருக்கின்றது , சயந்தனின் பிரதியின் உருவ உள்ளடக்கங்களை இவ்விருவருக்கும் நடுவில் நிற்கின்றது என்று குரல் விளக்குவதை பார்வையாளன் / வாசகன் எங்ஙனம் விளங்கிக்கொள்வது .
தொடர்ந்து நிலாந்தன் , தமிழ்க்கவியினுடைய எழுத்தை இலக்கியமா , அழகியல் உடையதா என்பதனை சபையிடமே கேட்கின்றார் , சபையில் என்னைப்போலத்தான் எல்லோரும் அந்த குரலினால் தோய்ந்து நைந்துபோய் இருக்கின்றனர்.
ஆதிரையின் அரசியல் மீதான நிலாந்தனின் உரையில் எனக்கு உடன்பாட்டுத் தன்மைகள் அதிகமாக இருக்கின்றன ,
எனினும்
நிலாந்தன் அடிக்கடி தன்னுடைய தனிப்பட்ட இரசனை இது , என்று சொல்லியபடியிருந்தார் . நியாயமானது தான் . அவர் தன்னுடைய சட்டத்தில் யாரை நிறுத்த வேண்டும் என்பதனை தெரிவிப்பதில் முழுச்சுதந்திரமுடையவர் , அதனைப்போலத்தான் ஊழிக்காலம் ஆதிரைக்கு நிகராக, அல்லது ஆதிரைக்கு அருகில் வைக்கப்பட்டு ஒப்பிட்டு வியாக்கியானிக்க தக்க தகுதிப்பாட்டினை கொண்டுள்ளது எனபதனை என்னுடைய தனிப்பட்ட இரசனை ஏற்க மறுக்கின்றது .
நேர்மைத்தன்மையில் ,அழகியலில் ,மொழிதலில் தரமற்ற பிரதியாக என்னுடைய தனிப்பட்ட இரசனை ஊழிக்காலத்தை அடையாளம் காண்கின்றது . தமிழ்கவியிடம் ஆர்வமும் உழைப்பும் இருக்கின்றது , அவர் ஒரு குழந்தை மனது கொண்டவராக கூட இருக்கலாம் ஆனால் இலக்கியத்தினை செய்யும் போது அவருடைய சிக்கலற்ற தீர்க்கமான நிலைப்பாடு அவரால் எழுதபடும் ஒவ்வொரு பந்தியின் உயிரையும் சிதைத்து , வெறும் தகவல்கள் கொண்ட ஆவணமாக மட்டும் மாற்றிவிடும் , நிலாந்தனின் இடக்கரடக்கலுக்குள்ளும் இந்த விடயம் தான் மறைந்திருக்கின்றது.
அதன் பிரகாரம் ,
நிலாந்தன் குறிப்பிடுவதைப்போல் ஒரு வரலாற்று ஆவணத்தை வரலாற்றை மையச்சரடாக கொண்டிருக்கின்றன என்பதற்காக எப்படி ஒரு இலக்கிய பிரதியுடன் ஒப்பிட முடியும் ?
வேண்டுமானால் ஊழிக்காலத்தை  மகாவம்சத்தைப் போல குறைபாடுகளை கொண்ட வரலாற்று நூல் என்று மேற்கோள்காட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

-ய-

Share this Post

1 Comment

  1. தமிழ்க் கவி இயக்கத்தில் நாவல் எழுதவா பழகினார் , அவருடைய தெரிவில் , அது ஓர் வடிவம் , நிலாந்தன் பின்வாங்கியமைக்குக் காரணம் , சமகால நாவல்கள் மீதான பரீட்சயம் சார்ந்த குறைபாடு , பிரதிகள் பற்றி உருவாகி இருக்கும் சிக்கலான கோட்பாட்டுச் சூழல் , நிலாந்தனுடைய தளம் , எப்பொழுதும் அரசியல் சார்ந்தே சிந்திக்கும் . அதனையே அடித்தளமாகக் கொண்டது அவருடைய பார்வை .

    சயந்தன் வாழ்க்கையை பற்றி பேசுகிறார் . அதில் , மையளவே அரசியல் உள்ளது . இது அரசியல் பிரதி அல்ல .அதற்காக அரசியல் நீக்கப்பட்டதும் அல்ல .இது வாழ்வியல் பிரதி .

Leave a Reply