yathaadmin/ February 25, 2016/ கட்டுரை/ 0 comments

இங்கே சிறைக்கதவுகள் ,மூன்று பக்கமும் எழுந்து நிற்கும்  பழுப்பேறிய சுவர்  மற்றும்  வெள்ளை விதானச்சுவர் தவிர இங்கே புனைவென்று சொல்லத்தக்க இன்னும் இரண்டு விடயங்கள் இருந்தன ஒன்று இந்த சீட்டுக்கட்டு. அடுத்தது

அனுக்குட்டி ,

அழுந்தும் தனிமையை போக்குவதன் பொருட்டு உன்னையும் ஒரு புனைவாக ஆக்கும் படி நானிந்த காலத்தால் சபிக்கப்பட்டிருப்பது  எதெட்சையான ஒன்றல்ல அனு.

உனக்கு சொல்வதற்காக கதைகளை இந்த சீட்டுகட்டுகளாக மாற்றி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீட்டாக அடுக்கி அடுக்கி உனக்கு எதிரில் இந்த சீட்டுகட்டுக்கோபுரத்தை மெல்ல எழுப்புகின்றேன். கடைசி இரண்டு சீட்டுக்களைக்கொண்டு கோபுர உச்சியை செய்து முடிக்கும் மட்டும் உன்னுடைய அம்மா உன்னிடம் விட்டுப்போன தெத்தி பல்லில் ஒரு புன்னகையை ஊன்றி நிறுத்திய படி கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.

கட்டிமுடித்த பிறகுதான் உனக்கு கதைகளைப்பற்றிய எண்ணம் வந்திருக்க வேண்டும் , சட்டென்று கோபுரத்தின் அடியில் கையை விட்டு சீட்டு ஒன்றை உருவியெடுக்கிறாய். ஜொசிக்காரனின் கிளி மிக அநயாசமாக சீட்டொன்றை உருவியெடுப்பது போலிருக்கிறது உனது செய்கை.

சீட்டை என்கைகளில் திணித்து இந்த கதையைச்சொல் என்கின்றாய். சீட்டுக் கோபுரத்தின் வீழச்சியை சற்றும் பொருட்படுத்தாமல் நானுனக்கு என்னுடைய கதையைச்சொல்லதொடங்குகின்றேன். ஒரு புத்தக திருடனின் கதையை ஒவ்வொன்றாக சொல்லத்தொடங்குகின்றேன்.

இந்த கதை என்னுடைய அம்மாவில் தொடங்கப்போகின்றது. சதாசர்வ காலமும் உன்னுடைய அம்மாவின் பெயரை நான் உச்சரித்துகொண்டிருப்பதை கேட்டு கேட்டு உனக்கு சலிப்பேற்பட்டிருக்கும், ஆதலால் இப்போழுது என்னுடைய அம்மா என்று ஆரம்பிப்பது சிறிது சுவாரஸ்யத்தையேனும் உனக்களிக்கும் என்று நம்புகிறேன்.

open-book-art-wallpaper

என்னுடைய அம்மா , 1993 இல் நான் பிறக்கும் முதலே ஒரு வாசகியாக இருந்தாள், அம்மா உணர்ச்சிவசமானவள். எப்போதும் “மனோரதியகதைகளை” படிப்பது அவளுடைய பொழுது போக்காக இருந்தது, அம்மாவின் நனவுலகை ரமணிச்சந்திரனும் ,அனுராதா ரமணனும் , லக்‌ஷ்மியும் அக்கிரமித்திருந்தனர் , நான் குழந்தையாக இருந்த போது அம்மாவை அடிக்கடி புத்தகங்களுடன் நெருக்கமாய் பார்த்த ஞாபகம் இன்னும் என்னுடைடய மனதில் பதிந்திருக்கின்றது ,நான் கருவிலிருந்த போதும் ஏராளமான நேரத்தை காதல் கதைகளை படிப்பதில் செலவிட்டதாக அம்மா கூறுவாள் .

(இந்த இடத்தில் அனுக்குட்டி அபிமன்யுவை நினைத்துக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்பினேன்)

நான் குழந்தையாக இருக்கும் போதே என்னுடைய அம்மாவை வாசிக்க  தூண்டும் ஒருத்தனாக இருந்தேன், ஏன் சிரிக்கிறாய் அனு , தொடர்ந்து கேள் ,

அம்மாவாசிக்கும் போதுதான் எனக்கு தேவையானது கிடைக்கும்,

அப்பா அடிக்கடி என்னை சுட்டி அம்மாவிடம் பகிடியாக  பெரியவன் என்னெண்டு பால் குடிக்கிறவன்,

”அம்மா பாப்பா தாடி”

என்று அம்மாவை பார்த்து கேட்பேனாம் ,அப்பா சொல்லிச்சொல்லி சிரிப்பார். அம்மா தராமல் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பாள் , அதிகமாக ஈர்க்கு பிடியை கொண்டு வளவினை துப்பரவு செய்து கொண்டிருப்பாள் , நான் ஈக்கு பிடியை அம்மாவிடமிருந்து பறித்து வைத்து விட்டு அம்மாவை பாலூட்டும் படி தொந்தரவு செய்வேன்.

“பவானி பாப்பா தாடி”

அதற்கும் வராவிட்டால் ஓடிச்சென்று ரமணிச்சந்திரன் புத்தகங்களை எடுத்துவந்து  அம்மாவின் கையில் கொடுத்து பாலூட்டும்படி கேட்பேன் ,

என்னுடய குழந்தை பருவத்தில் நான் கண்டறிந்த பெரிய விடயமாக அது இருந்தது , அம்மா பாலூட்டும் போது எப்போதும் புத்தகங்களை வாசித்தபடியிருப்பாள் அதனை நானும் பிடித்துக்கொண்டேன் , எனக்கு பசியெடுக்கும் போதெல்லாம் அம்மாவின் புத்தகங்களை அம்மாவிடம் கொடுத்து படி படி என்று சொல்லிவந்தேன் , அம்மா எனக்கு பாலூட்டுவதற்கு புத்தகங்கள் எனக்கு துணையாய் இருந்தன.

அப்போது நாங்கள் இருந்த வீடு பனையோலைகளும் , தென்னோலைகளும் கொண்டு வேயப்பட்ட குடிசை வீடு , அப்பா ராக்டர் ஒன்றை வைதிருந்தார் , ஒரு நாள் ராக்டருக்கு பயன்படுத்திய கழிவு ஓயிலை  அப்பா சேமித்துகொண்டார் , போர்ச்சூழல் காரணமாக விளக்கு எரிப்பதற்கான மண்ணெய்  தட்டுப்பாடான ஒன்றாய் இருந்தது , எனவே கழிவு ஓயில்களை நெருப்பில் காய்ச்சி அவற்றின்  கடின தன்மையை வடித்து எடுத்து விளக்கெரிக்கும் முறைமையை எங்களுடைய மக்கள் கண்டறிந்திருந்தனர். அப்பாவும் அம்மாவும்  அதை செய்ய முடிவு செய்தனர் ,

எங்களுடைய வீட்டின் பின்புறம் உள்ள குசினி (சமயலறை) அருகில் ஓயில் காய்ச்சுவதற்கு பெரிய பானையை நெருப்பில் ஏற்றி ஓயிலை நிரப்பி காய விட்டுவிட்டு அப்பா சற்று தள்ளி போய்விட்டார் .

என்னை என்னுடைய தமக்கை ”வாத்துவாளி”

எனப்படும் நான் குளிப்பதற்குரிய தண்ணீர் நிரப்பப்பட்ட ரப்பர் தொட்டியில் இறக்கி விட்டு என்னுடன் விளையாடிபடியிருந்தாள் .

அம்மா குசினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

எரிந்துகொண்டிருந்த ஓயில் காய்ச்சும் அடுப்பில் இருந்து ஒரு தணல் கீற்று குசினியின் செத்தையில் பற்றிக்கொண்டது , குபு குபுவென தீ பரவியது கண்ணிமைக்கும் பொழுதில் குசினியை தீ சூழந்து விட்டது அப்படியே வீட்டின் இதர பாகங்களுக்கும் தீ பரவத்தொடங்கி விட்டது. அம்மா பெரிய குரலெடுத்து கத்தினாள் ,அக்காவும் கத்தினாள் , அப்பாவும் அயலவர்களும் ஓடிவந்து மண்ணையும் தண்ணீரையும் எடுத்து கொட்டினர் ,அம்மா வெளியே வர முடியாதவளாய் தவித்துக்கொண்டிருந்தாள்.

நான் வாத்துவாளியில் இருந்து கீழே குதித்தேன் , பிறந்த மேனியாக எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஊடே பாய்ந்து உள்ளே சென்றேன் , அம்மா

“பெரியவனை பிடியுங்கோ பெரியவனை பிடியுங்கோ ” என்று கத்தினாள் நான் என் பக்கம் ஓடிவந்த அம்மாவை கடந்து பாய்ந்து சென்றேன் எல்லோரும் செயதறியாது பார்த்துகொண்டிருக்க அப்பா பாய்ந்து வந்து அம்மாவை ஒருவாறு இழுத்து  வெளியே தள்ளிவிட்டு நெருப்புக்குள் புகுந்து என்னை நோக்கி பாய்ந்து வந்தார் ,

என்னை அணைத்துக்கொண்டு அப்பா வெளியே பாய்ந்து வந்தார், என்னை கீழே இறக்கிய போது அம்மா பாய்ந்து என்னை அணைத்துக்கொண்டாள் ,அப்போதுதான் நான் நெஞ்சோடு அணைத்துவைத்திருந்ததை அம்மா கண்டாள்.

நான்கைந்து ரமணிசந்திரன் புத்தகங்களை அம்மாவிடம் நீட்டி,

”பவானி பாப்பா தா ”

-யதார்த்தன் –

(தொடரும்)

Share this Post

Leave a Reply