yathaadmin/ February 24, 2016/ கதை/ 0 comments

சுதந்திரபுரம்

கிளிநொச்சி நகரைத் தாண்டி இராணுவம் நகர்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.  யாரிடம் கேட்டாலும்  “திட்டமிருக்கு கிட்ட வரட்டுமாம் ” என்றார்கள். தொடர்ந்து ஆமி முன்னேறிவந்தால்  முல்லைதீவு மட்டும்  போகும் எண்ணத்தில்தான் அப்பா இருந்தார், ஆனால் அம்மா உறுதியாக இருந்தாள்.

“இங்க இருந்து பிள்ளையள் பயத்திலையே அரைவாசி செத்து போங்கள்”

“பெரியவன்ர வயசு பெடியளையும் பிடிக்க தொடங்கீட்டாங்கள் போல கிடக்கு”

ஆகிய காரணங்ளை சொல்லி அப்பாவிடம்  ஆமி வந்தா ஆமிக்குள்ள போவம் என்ன நடந்தாலும் நடக்கட்டும் இனி இடம்பெயரேலாது , என்று சொல்லிவிட்டாள்.  ஏற்கனவே ஏழெட்டு இடங்களில் பங்கர் வெட்டி வெட்டி  ரெண்ட் அடிச்சு அடிச்சு அப்பாவும் சலித்துப் போயிருந்தார்.

99dbf89951b8e3aff367f5dcf0a0f7c9இறுதியாக சுதந்திரபுரத்தில் ஒரு வீட்டு வளவில் தங்கினோம்.  ஏற்கனவே அந்த வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் தங்கியிருந்தன.  அந்த வீடு முன்னர்  இயக்கம் இருந்ததாம் என்றும் அது பெரிய பொறுப்பாளர் ஆரோவின் வீடு என்றும் பேசிக்கொண்டார்கள்.  அப்பா அந்த வீட்டைப் பார்த்து விட்டுச் சொன்னார், இந்த வீட்டில இயக்கம் தான் இருந்திருக்கு!

அப்பா அப்படிச் சொன்னதற்குக் காரணமிருந்தது.  அந்த வீட்டையே ஒரு பெரிய பங்கர் என்று சொல்லலாம்.  வீட்டின் கூரை பலமான கொங்கிரீட்டில் இருந்தது.  சுவர்களைச் சுற்றி ஏராளம்  தேக்கு மரக்கட்டைகள் வரியப்பட்டு இருந்தன.  சாதரண குடிமகன் ஒருவனின் வீடு நிச்சயமாக அப்படி இருக்காது. எனினும் நாங்கள் அவர்கள்  அனுமதியளித்ததன் பேரில் அந்த வீட்டிற்கு சற்றுத் தள்ளி  எங்கள் கூடாரத்தை அடித்துக் கொண்டோம்.  அருகில் நாங்கள் நால்வரும் இறங்கத் தக்க பங்கர் ஒன்றையும் அப்பா வெட்டினார்.

“உந்த வீடு பயமப்பா;  கிபிர்க்காரன் பாத்திட்டு அடிச்சா நாங்களும் சேர்ந்துதான்  சாகவேணும்”

ஆனால் வேறு வழி இல்லை சுதந்திரபுரம் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர் , கிணறு, கக்கூசு உள்ள வளவு கிடைக்கிறது கஸ்ரம்; அதனால் அங்கேதான் தங்க வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டார். ஷெல் செறிவாய் விழுந்தால் நாங்களும் அந்த வீட்டினுள் பதுங்கலாம் என்பது அம்மா அப்பாவின் எண்ணம்.

எங்கள் பங்கருக்கு எதிரே ஒரு பெரிய மா மரம் இருந்தது.  அதன் நிழலில் கதிரை ஒன்றைப் போட்டுவிட்டு அந்த பங்கர் வீட்டை நோட்டம் விட்டபடி ஏதும் கதைபுத்தகம் படித்த படியோ, படம் வரைந்த படியோ இருப்பேன்.

அந்த வீட்டில் மூன்றோ நான்கோ ஆண்கள் மட்டுமே இருந்தனர்.   பெண்கள் தான் அதிகமாக இருந்தனர்.  ஒரு வேளை என்னோடு அவர்களில் யாராவது  வந்து உரையாடினாலும் பெரும்பாலும் அப்பெண்கள் அன்ரி என்று அழைக்கும் வயதில் இருந்தனர்.  அவர்களில் ஓரிருவருக்குக் குழந்தைகளும் இருந்தார்கள்; பெரிதாக யாரும் வெளியே வருவதில்லை.  நானும் அவர்களைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை; அவள் ஒருத்தியைத் தவிர!

என்னதான் கிபீர் அடிக்குது, ஆமி வந்திட்டான், ஷெல் விழும், பங்கர் வாசம் இதெல்லாம் இருந்தபோதும் புத்தகம் படிப்பது, படம் கீறுவது, சிரிப்பது, சுய மைதுனம் செய்வது எல்லாம் இல்லாமல் நான் இருக்கவில்லை. அப்படித்தான் அவளை அந்த வீட்டு வாசலில் கண்டதிலிருந்து  புதிதாக உடலில் ஏற்படத் தொடங்கியிருந்த அந்த கிளர்ச்சியையும் நான் தடுக்கவேயில்லை.

அவள் அழகாக இருந்தாள், அளவான உயரம், தேவையான அளவு விம்மிய மார்புகள், இடை, தலைமுடி, கண்கள் இப்படி ஓர் அழகான பெண் இப்படித்தான் இருப்பாள் என்று நான் நினைத்திருந்த அனைத்து அம்சங்களும் அவளிடம் இருந்தன. நான்கைந்து நாட்களாக அவள் வெளியில் வரும் போது பார்த்துகொள்வேன். பெரும்பாலும் பாவடை சட்டை அணிவாள், இடைக்கிட நைட்டியிலும் பார்ப்பேன். அவள் உள்ளே போகும் நேரங்களில் படம் கீறுவேன்; ஏதேனும் ஒரு சாண்டில்யன் புத்தகத்திலோ ராஜேஸ்குமார் புத்தகத்திலோ  மூழ்கிப் போவேன்.

அன்றும் படம் கீறிக்கோண்டு இருந்தேன்

“படம்கீறுவீரோ ?”

நிமிர்ந்து பார்தேன். அவள் நின்றிருந்தாள்.  தீடிரென நெஞ்சுக்குள் பெயரில்லா ஒரு அதிர்ச்சி நகர்ந்து தொண்டையை அடைத்து நின்றது.

சிவப்பு நைட்டியுடன் கைகளை மார்ப்புக்குக் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தாள்

சில நொடிகள் கழியச் சுதாகரித்து கொண்டு

“சும்மா கீறுவன்”

“சித்திரமோ எடுக்கிறீர் ?”

“ம்ம்”

“நான் சங்கீதம்“ என்றாள்.

“எத்தினையாம்வகுப்புநீங்கள் ”

“பதினொண்டு நீர் ?”

“பத்து”

“என்ன படம் கீறுறீர் தம்பி ?”

அந்த தம்பி பிடிக்கவேயில்லை எனக்கு.

வெறும் தாளைக் காட்டினேன்.

“நல்லா இருக்கு”

“நக்கலடிகிறீங்களோ ?”

“இல்லை இனிக் கீறுவீர்தானே!  அளந்து சிரித்தாள்.

உங்கட பேர் என்ன ?

உம்மட பேர் என்ன ?

சொன்னேன்

என்ர பேர் தர்சினி

பதினைந்து நாட்கள் இரவு போக அவள் என்னுடன் தான் இருந்தாள். எங்கள் வீட்டிலே  சீ,சீ எங்கள் டெண்டிலே அம்மா சமைத்ததையே சாப்பிட்டாள்.

என்னைப் பற்றித் தெரிந்து கொண்டாள்.  அவளைப் பற்றி சொன்னாள்.

அவர் வரும் மட்டும் அன்ரியோட இந்த வீட்டில நிக்கிறன்,

“அவரோ ?”

“ஓம் எனக்கு மேரேஜ் முடிஞ்சுது”

“புளுகாதேங்கோ ”

“இல்லை நம்பும், பிடி பிரச்சனையால அம்மாவாக்கள் என்ர மச்சான் ஒராள மெரி பண்ணி வச்சிட்டினம்”

“ஏன் பொய் சொல்லுறியள்  கழுத்தில தாலி ஒண்டையும் காணேல்ல”

சட்டென்று எழுந்து போய்க் கழுத்தில் மஞ்சள் நூலோடு திரும்பினாள்.

நம்பிவிட்டேன்! உள்ளே ஏதோ ஒரு பக்கம் லேசாய்க் குடச்சலாக இருந்தது.  இரண்டொரு நாட்களில் சகஜமாகிவிட்டது.

“அவர் எங்க இப்ப?”

“எங்கட அம்மா அப்பாக்கள மாத்தளன்ல கொண்டுபோய் விடப் போய்ட்டார்”

“நீங்கள் ஏன் போகேல்ல?”

“எங்கட சாமான் சட்டி எல்லாம் இங்க கிடக்கு; அதுக்காக தான் நிக்கிறன்; அவர் வந்து கூட்டிக்கொண்டு போவார்”

“எப்ப வருவார்?”

“இரண்டு மூண்டு நாள்ல வந்திடுவார்”

ஏழெட்டு இரண்டுமூன்று நாள் போய் விட்டது.

அவளுடைய அவர் வரவில்லை.  நானும் அது பற்றிக் கேட்கவில்லை  அல்லது அது பற்றிக் கேட்க விரும்பவில்லை.

அவளும் அவர் பற்றிய பதட்டம் இல்லாமல் என்னுடன் நட்பு வளர்த்து கொண்டிருந்தாள்.

அவள் சங்கீதம் என்று சொன்னாள் ஆனால் என்னை விட 100 மடங்கு சித்திர ஞானம் அவளிடம் இருந்தது.  எப்படி சித்திரம் தெரியும் என்றால், அப்பா ஒரு பெயிண்டர் என்றாள்.  சங்கீதம் பற்றிக்கேட்டால், “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்று பாடிக்காட்டுவாள்.  அவள் அற்புதமாக பாடுவதாக நினைத்துக் கொண்டேன்.

கீறுவதில் நான் ஆரம்ப கட்டங்களில் தான் இருந்தேன்.  எனக்குச் சித்திரம் பற்றி நிறைய சொல்லித் தந்தாள்; அல்ல கீறிக் காட்டிப் பொறாமைப்பட வைத்தாள்.   ஒரு நாள் அவள் என்னிடம் பிக்காசோ பற்றிக் கேட்டாள்.  நான் “திருதிரு” வென முழித்தேன்.   சத்தியமாய் அம்மேதையை இந்த அற்பப் பதர் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவள் சொல்லிதான் எனக்கு தெரியும்.

கொஞ்ச நாளில் பேசுதல், அடிபடுதல், டா டி க்கு மாறி இருந்தோம்.

ஒரு நாள் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் வந்தாள்.

“இந்தாடா ”

“என்னடி”

“கிப்ட்”

பிரித்துப் பார்த்தேன்.

மூன்று பென்சில்கள்!

“இதான் கிப்டா ?”

“மடையா என்ன பென்சில் எண்டு பார் ”

“என்ர பென்சிலும் நடராசா பென்சில் தான்”

“சனியனே எவன் உனக்குச் சித்திரம் படிப்பிச்சவன்?  இது HP பென்சில்டா ”

“அப்பிடின்னா ? ” (இப்போது கூட வெக்கவெக்கமாய் வருது என்னை நினைச்சா)

அவள் பென்சில்களின் வகையறா, தடிப்பு பற்றி எல்லாம் விளங்கப்படுத்தினாள்.

மலைத்துப் போய் எனக்குச் சித்திரம் படிப்பிச்ச சொட்டை

மண்டை தேவனேசனை சபித்துத் தள்ளினேன்.

பென்சிலை எடுத்து என் புத்தக பையினுள் பத்திரப்படுத்தினேன்.

புலிகளின் குரல் ரேடியோவில் மரணச் செய்திகளையும் வீரச்சாவுச் செய்திகளையும் கொற்றவையும் தமிழ்மாறனும்  வாய் உழைய சொல்லிகொண்டே இருந்தனர்.  ஆமி  கிட்ட வந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக ஷெல் சத்தங்கள் அருகில் கேட்கத் தொடங்கின.  அந்த வீட்டில் இருந்தவர்களில் பெரும்பாலானோர்  அங்கிருந்து இடம்பெயரப் போவதாக அவள் சொன்னாள்.  அவருக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று கவலைப்பட்டாள்.  முகத்தைக் கையில் புதைத்து விம்மினாள்; நான் தேற்றினேன்; அம்மாவும் தேற்றினாள்.  அம்மா ஆமிக்குள்ள போவம் நீரும் இரும்; அவர்  வந்திடுவார் என்று அவளிடம் சொன்னாள்.  இல்ல அன்ரி எங்கட வீட்டில இருக்கிற நிறைய அக்காமார் இயக்கத்தின்ர மனுசிமார்; அவையள் ஆமிக்க போக பயப்படுகினம்.

நீர் வாரும் நாங்கள் கூட்டிக்கொண்டு போறம் என்று அம்மா சொன்னாள்.

அதற்கும் அழுதாள்.

அன்று 10 மணி இருக்கும். நானும் தர்ஷியும் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தோம்.  அப்போது தூரத்தில் ஷெல் குத்தும் சத்தம் கேட்டது.  வருவது மோட்டார் குண்டா? ஆட்லறியா? மல்டிபெரலா என்பதை அச்சத்தத்தை வைத்தே சொல்லுமளவிற்கு நாங்கள் பரிச்சயமாகியிருந்தோம்.

“டேய் ஆட்லரி குத்திறாங்கள் “

என்று தர்ஷி சொல்லி முடிக்கும் முதல் பெருமரம் ஒன்று முறிந்து சரியும் சத்தம் கேட்டது.  எங்கள் காணிக்குப் பக்கத்தில் இருந்த வீடொன்றின் கூரை பத்தியெரிந்தது.  நாங்கள் இருவரும் தட்டுதடுமாறி எங்களின் பங்கருக்குள் வந்து குதித்தோம்.

அடுத்தடுத்து ஷெல் பொழிந்தபடியிருந்தது.  எங்கள் காணிக்குள்ளும் இரண்டு ஷெல் வீழ்ந்தது.  மதியம் வரை ஷெல் ஓயவேயில்லை.  கொஞ்ச நேரம் ஓய்ந்தது.  எங்களை அவள் அந்த வீட்டு பங்கருக்குள் கூட்டிப்போயிருந்தாள்.

எங்களைப் போல் அயலில் இருந்த ஒருசிலரும் குடும்பமாக அந்த பங்கர் வீட்டிற்குள் பதுங்கினர்.

ஷெல் சரமாரியாக பொழிந்தது.  நாங்கள் வீட்டினுள் பதுங்கினோம்.  வீட்டிற்கு மேலால்  துப்பாக்கி குண்டுகள் மூசிக்கொண்டு போயின.

அப்பா

“ஆமி கிட்ட வந்திட்டான் போல கிடக்கு இந்த செல் அடில பின்னாலையும் போகேலா ஆமிக்க தான்  போகோணும்”

“ஆமிக்க போறாக்கள இயக்கம் சுடுதாம்”

“ஆமி என்ன செய்வானோ தெரியாது  நான் குமர்ப் பிள்ளையளை வச்சுக் கொண்டு நிக்கிறன்” என்று ஒருதாய் அழுதாள்.

தர்ஷினியும் நானும் என் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர்கள் எல்லோரும் உரையாடுவதைக் கேட்டபடி இருந்தோம்

என் அம்மாவும் அப்பாவும் எல்லோரையும் உசுப்பேத்தி கொண்டு இருந்தனர்

“என்ர அவர் இயக்கம்; வீரச்சாவு. நான் போனா விசாரிப்பாங்கள் தானே அண்ணை” என்றாள் ஓர் இளம் விதவை.

“இல்ல பிள்ளை, இப்ப நிறையச் சனம் போகுதாம். அப்பிடி ஒண்டும் நடக்காது”

என்றார் அப்பா.

அப்பாவும் அம்மாவும் வேறு சிலரும்  ஆமிக்குள் போவதில் உறுதியாக இருந்தார்கள்,

அங்கே இருந்த அனைவரின் முகத்திலும் பீதி உறைந்து கிடந்தது.  பின்னேரம் மட்டும் ஷெல்லும் துப்ப்பாக்கிச் சத்தமும் ஓயவே இல்லை.  அங்கிருந்தும் இங்கிருந்தும் துப்பாக்கிகள் உறுமிக்கொண்டு இருந்தன.  தர்ஷினி என் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தாள்.  அவள் முகத்தில் சலனமே இல்லை.  எனக்குத் தான் கை கால் எல்லாம் உதறியபடி இருந்தது; தம்பி, அம்மா,  அப்பாவை அருகில் வந்து இருக்குமாறு சொன்னேன்.

திடீரென கொஞ்சநேரம் ஷெல் சத்தமும்   துப்பாக்கிச் சத்தமும் நின்று போயின.  எல்லோரும் ஒருவை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அப்போதுதான் அந்த சத்தம் மெல்ல மெல்ல எழத்தொடங்கியது

தட் தட் தட்!

எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. சப்பாத்துச் சத்தமே தான்.

எல்லோருக்கும் விளங்கி விட்டது.  பெண்கள் சிலர் “ஓ” என்று அழத்தொடங்கினர்.  ஒரு சிலர் அவசர அவசரமாகக் கழுத்தில் இருந்த தாலிகளைக் கழற்றி தேக்கங் கட்டைகளின் இடைவெளிகளினுள் வீசத்தொடங்கினர்.  எனக்கு விசயமே புரியவில்லை.  அப்போது தர்ஷியும் தன் தாலியை  வேகமாக கழற்றினாள்; அவள் அதனை வீசும்போது தான் கவனித்தேன்.  தாலியின் மீது புலிச்சின்னம் இருந்தது!

எனக்கு எல்லாம் தெளிவாகியது  , வன்னியில்  இயக்கத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்யும் போது அப்போது புலிச்சின்னம் பொறித்த தாலிகளே கட்ட பட்டன . ஆமியின் காலடி சத்தம் கேட்டவுடன் அவர்கள் தாலியை கழற்றி எறிந்தது அந்த புலிச்சின்னத்தினால் தான் என்பது எனக்கு பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் தர்ஷியின் தாலியும் புலிச்சின்னம் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது.

நான் அவள் கணவன் பற்றி பெரிதாக கேட்டதேயில்லை. அதனால் அவள் அதனைச் சொல்லாமல் விட்டு இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.  தவிர ஆமி நெருங்கும் நேரம் இதை பற்றி எங்கே யோசிப்பது?

சப்பாத்துகள் வெளியே வேகமாக எங்கள் பங்கர் வீட்டிற்குள் வருவதை உணர முடிந்தது.  அம்மாவும் வேறு சிலரும் என்னுடைய பள்ளிக்கக்ச் சீருடைத் துணியில் செய்த வெள்ளைக் கொடிகளைப் பிடிக்கத் தயாரானார்கள்.

சப்பாத்துக்கள் உள்ளே நுழைந்தன எல்லோரும் பீதியுடன் பார்த்தோம்.

“ஏன் இஞ்ச இருக்கிறியள் அண்ணை”

பிடித்து வைத்திருந்த மூச்சை எல்லோரும் வெளியே விட்டனர்.

வந்தது ஆமி இல்லை: ஐந்தாறு போராளிகள்.

இரண்டு பேர் கிழிந்த வரிச்சீருடையிலும் மற்றவர்கள் சாதாரண ஜீன்சுடன் கோல்சர் கட்டி ஆயுதந் தாங்கி இருந்தனர்.  முகங்களில் கறுப்புக் கரி பூசி இருந்தனர்.

அப்பா முன்னால் போனார்.

“இனி பின்னால போகேலாது தம்பி”

“ஆமீக்க போக போறியளோ, சூடுவாங்கிச் சாகப் போறீங்கள்”

“எங்களச் சுடுவீங்களோ”

”சும்மா கதை வளக்காதேங்கோ, உடன எல்லாரும் வெளிக்கிடுங்கோ”

”துப்பாக்கியை நேராக நிமிர்த்தி, அதிகார தோரணையை செறிவாக்கிய படி சொன்னான்”

அவன் சொல்லி முடிக்க,

ஷெல் ஒன்று நாங்கள் இருந்த வீட்டின் கொங்கிறீட் மேற்தளத்தில் வீழ்ந்து அதிர்ந்தது.  நாங்கள் ஏறக்குறைய வீறிட்டோம்.  சமபொழுதில் வீட்டைச் சுற்றிக் கட்டியிருந்த பெரும் மரக்குற்றிகள் உருளத் தொடங்கின.  எல்லோரும் சிதறி ஓடினோம். எனக்கு அந்த நிமிடங்களில் என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை.  சுய நினைவு வந்த போது  அருகில் இருந்த இன்னொரு காணியின் பங்கருக்குள் அப்பாவும் அம்மாவும் என்னையும் தம்பியையும் அணைத்தபடி இருந்தனர்.  அம்மா அழுதபடி இருந்தாள்.  தம்பிக்கு அழுகை விக்கியது.  நான் கதறத் தொடங்கினேன். அப்பா ஆறுதற்படுத்தினார்.

மறுபடியும் கொஞ்ச நேரம் ஷெல் ஓய்ந்தது,

அம்மா தர்ஷினி அக்கா எங்க ?

அம்மா தெரியாது என்று தலையாடினாள்.  அவள் எங்களைப்போல் அருகில் ஏதோ ஒரு பங்கருக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இருட்டிவிட்டது

மெல்ல மெல்ல பங்கரினுள் இருந்து சனம் மேலே வந்து அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் நுழைந்தோம்.  சுமார் நூறுபேருக்கு மேல் அங்கே கூடினோம்.  எங்களுக்குத் தெரியாமல் எங்களைப் போல் அவர்களும் ஆமிக்குள் போகும் நோக்கத்துடன் இருந்தவர்கள்; வேறு சிலர் வேறு வழி இன்றித்  தங்கி விட்டவர்கள்,

ஒரு பெரியவர்

“எனக்கு பாதை தெரியும் தண்ணி பாலத்தடிக்கு போனா போகலாம் ஆமீட்ட”

“என்னெண்டு தெரியும் அண்ணை ?”

“மத்தியானம்  கொஞ்சச் சனம் பாரடி லேனால போனது நானும் போனான்.  இயக்கம் கண்டிட்டுச் சுட்டவங்கள்;  நாங்கள் ஓடி வந்திட்டம்; நிறைய சனம் அங்க இங்க பதுங்கி உள்ளுக்குப் போட்டுது”

அவர்  உறுதியாகச் சொன்னார்.  வேறு வழி இல்லை, எந்த நேரமும் ஷெல் அடி தொடங்கலாம்.  ஏறக்குறைய சாகத்தான் போகிறோம் என்ற நிலை அனைவருக்கும்.  கடைசியாய் முயன்று பார்ப்போமே என்று கிளம்பினோம்.  என் கையில் ஒரு வெள்ளைக் கொடி தரப்பட்டது. நான் அந்தக் கூட்டத்தில் நன்றாக அலசி விட்டேன். தர்ஷினியை காணவேயில்லை.

தண்ணீர் பாலத்தடி சரியான சேறு, கையில் கிடைத்த பைகளுடன் செருப்பை உதறி விட்டு நடந்தோம்.  15 நிமிட நடைக்குப் பின் ஒரு வளைவில் திரும்பியது அந்த சனப்பாம்பு.  சடாரென ஓர் இயக்கப் பெடியன் கையில் வோக்கியுடன் எதிர்ப்பட்டான்.

எல்லோரும் வெலவெலத்துப் போனோம்.  அவன் எங்களை சுடப்போகின்றான் என்று ஸ்தம்பித்து போய் நின்றோம்.

அவன்,

“என்ன அண்ணை ஆமிக்க போறியளோ ?” சாதாரணமாகக் கேட்டான். அவன்  வோக்கி மெதுவாகக் கரகரத்துக் கொண்டிருந்தது,

“ஓம் தம்பி இனி பின்னால போகேலாது”

யாரோ ஒரு அம்மா கெஞ்சினாள்.

“சரி அடுத்த பெண்டில தான் ஆமி நிக்கிறான்” என்றான் அதே சாதாரண குரலில்.

அப்பா

“தம்பி இனிச் சரிவராது.  நான் சறம் ஒண்டு தாறன். உதை எல்லாம் கழட்டிப் போட்டிட்டு வாவன் எங்களோட”  என்றார்.

அவன் சிரித்துக் கொண்டே,  “போங்கோ வாறன்”  என்றான்.

நான்கைந்தடி நடந்ததும் அம்மா, “போக விட்டு சுட போறானோ” என்றாள்.  எனக்கு ஒரு முறை முதுகு கூசியது.

சுடவில்லை.

அவன் சொன்ன இரண்டாவது வளைவில் திரும்பினோம்.

திடீரென்று இருட்டுப் பற்றைகளுக்குள் இருந்து யாரோ வெளியே தட தடவென குதித்தார்கள்.  யாரோ “ஆமிகாரங்கள்! வெள்ளைக்கொடிய காட்டுங்கோ” என்றனர்

நாங்கள் தூக்கிக் காட்டினோம்.  நாற்பது, ஐம்பது  ஆமிக்காரர் எங்களை சூழ்ந்து நின்றனர்.

“வெள்ளக் கொடி வேணாம், கீழ போடுங்க” என்றான் ஒரு உயரமான ஆமி.

“சத்தம் போடாம  வாங்க என்றான்” இன்னொருவன்.

“சிங்களம் தெரிஞ்ச யாரும் இருந்தா வாங்க”

யாரோ ஒருவர் முன்னால் போனார்.

சுமார் இரண்டு மூன்று கிலோ மீற்றர்கள் தள்ளி எங்களை அழைத்து வந்து ஒரு வெட்டை வெளிக்கு அனுப்பினர்.  நாங்கள் வந்த பக்கம் மறுபடியும் துப்பாக்கிகள் உறுமத்தொடங்கி விட்டன.

“ஒருவரையும் பயப்பட வேண்டாம்,  காலையில் கொண்டு போவதாகச்” சொன்னார்கள்.  ஆனால் எல்லோரும் பயந்தபடியே தான் இருந்தோம். மேலே  முக்கால் நிலவு  சங்கடப்பட்டு வெளிச்சத்தை இறைத்துக்கொண்டிருந்தது.  அப்போதுதான் நான் தர்ஷினியின் அன்ரியை கண்டேன். எங்கள் அருகில் தான் அமர்ந்திருந்தாள்

நான் அவரை மெதுவாக தட்டி

“தர்ஷி எங்க ?”

“யார் தம்பி? ”

“உங்களோட இருக்கிற அக்கா ”

“ஆர் அந்த வெள்ளைப் பிள்ளையோ ?”

“ஓம்”

“எந்த பக்கம் ஓடினது எண்டு தெரியாது தம்பி, அவாட பேர் தர்ஷி இல்லை”

“இல்லை தர்ஷி தான்”

“இல்லைத் தம்பி அவாட பேர் காயத்ரி”

“என்ன சொல்லுறீங்கள் நீங்கள் அவான்ர அன்ரி தானே!”

“இல்லத் தம்பி! அந்த பிள்ளை எங்களோடதான் தங்கினது. ஆரோ அங்க கொண்டுவந்து விட்டவை எண்டு சொன்னவை.  என்னோடதான் நல்லாக் கதைக்கும் அவான்ர பாக் கூட என்னட்டதான் இருக்கு.”

ஒரு தோல் பையை எடுத்து நீட்டினாள்.

வாங்கி திறந்தேன்

உள்ளே சில வங்கிக் கணக்குப் புத்தகங்களும் ஓர் அடையாள அட்டையும் மேலே மிதந்து வந்தன.  அடையாள அட்டையை நிலவொளியில் நீட்டினேன்.  பளபளத்தது. முகம் நன்றாகத் தெரிந்தது. 92 இல் தொடங்கி v யில் முடியும் அடையாள அட்டை இலங்கை நாட்டின் முத்திரையுடன் இருந்தது.  படத்தில் அவள் இருந்தாள்; பாடசாலை உடையில்.

அவளுடையதுதான்!

திருப்பிப் பெயரை பார்த்தேன்.  “ஷண்முகநாதன் காயத்ரி” என்று இருந்தது.

எனக்குத் தலைசுற்றியது.

மறுபடியும் பாக்கைத் துழாவினேன்.  அப்போதுதான் என் நெஞ்சை உலுக்கிய அவை இரண்டும் என் கையில் ஏறி வந்தன, ”ஒரு தகடும் குப்பியும்”

பள பளவென  மின்னின.

நான் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க அந்த அன்ரியின் முகம் ஏறத்தாளக் கல்லாகி விட்டது.

“என்ன தம்பி இது”

குரல் உதறக் கேட்டாள்.

நானும் தெரியாது என்று தலையாட்டினேன்.

எனக்குச் சிந்திக்கும் சக்தி அற்றுப்போனது. என்னை அந்தக்  குப்பி, தகட்டுடன் ஆமி பார்த்தால் எனக்கு மட்டுமல்ல அங்கே இருக்கும் அனைவருக்கும் பரலோக ராஜ்ஜியம் கிட்டக்கூடும்.

மெல்ல சுதாகரித்தோம்.  இருவரும் கையில் இருந்த தகட்டையும் குப்பியையும் அருகில் இருந்த பற்றைக் காட்டிற்குள் நிலமட்டத்தில் கைகளை வீசி எறிந்தேன்.  அந்தப் பையையும் அப்படியே சுருட்டி அதே பற்றைக்குள் எறிந்தேன்.

கொஞ்ச நேரத்தில் விடிந்தது!  நேராக நாங்கள் பிரமந்தநாறு மகாவித்தியாலயத்திற்குக் கொண்டுவரப்பட்டோம்.  எங்களைப்போல  ஆயிரகணக்கானவர்கள் அங்கே கொண்டுவரப்பட்டனர்.  எல்லாப் பக்கங்களில் இருந்தும் போரின் உக்கிரம் தாங்க முடியாத மக்கள் இப்படி வந்துகொண்டிருந்தனர்.  அங்கே வைத்து எல்லோரும் சோதனையிடப்பட்ட பின்னர்  கிளிநொச்சி வீதி ஊடாக ஓமந்தைக்குக் கொண்டுவரப்பட்டோம்.  முகாம்களுக்கு அனுப்ப முதல் ஓமந்தையில்  சோதனைகளையும் பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  சனத்திரள்  லைனில் நின்றது.  எங்கள் முறைவர எப்படியும் விடிந்துவிடும் போல் இருந்தது.  அங்காங்கே   ராணுவத்தினர் பிஸ்கட்களைப் பெட்டியில் கொண்டுவந்து,  எஜமானர்கள் நாய்களுக்கு எறிவது போல எறிந்தபடியிருக்க சிறுவர்கள், முதியவர்கள் என பலர் அதனைப் பிடிப்பதில் மும்முரமாய் அடிபட்டுக் கொண்டிருந்தனர்.  நான்  தர்ஷினி என்ற காயத்ரி பற்றிய் யோசனையுடன் லைனில் இருந்த அம்மாவின் மடியில் படுத்திருந்தேன்.

“அண்ணா வா, பிஸ்கட் குடுக்கிறாங்கள்” என்றான் தம்பி

“உதுக்க அடிபடேலாது”

“நான் வாங்கிறன் வா”

“ம்ம்”

என்று புறப்பட்டேன்

அப்போது  திடீரென வீதியில் நான்கைந்து அம்புலன்ஸ்கள்  கூவிக்கொண்டு போயின.  தொடர்ந்து அம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருந்தன. அங்கிருந்த ஒருவர்,

“எங்கையோ இயக்கம் நல்லா அடிச்சுப் போட்டாங்கள்”

“ஐயோ கோவத்த எங்களிட்ட காட்ட போறாங்கள்”

பலர் பதறினர்.

சில மணிநேரம் கழித்து உண்மைத் தகவல் கசிந்து வந்தது

பிரமந்தனாறு பள்ளிகூடத்தில கரும்புலி வெடிச்சதாம்!

“சனம்தான் நிறையச் செத்ததாம்”

“சனம் ஆமிக்க வருது எண்டு இயக்கம் செய்தவேலை”

“சின்னப் பெட்டை ஒண்டாம் பிள்ளை தாச்சி போல வந்து வெடிச்சதாம்”

எனக்கு தீடீரென்று உள்ளே ஏதோ  மின்னல் வெட்டியது.

சட்டென்று இரைந்தே சொல்லி கொண்டேன், “சீ, சீ அப்பிடி ஒண்டும் இருக்காது”

யதார்த்தன்

(நன்றி -காலம்)

Share this Post

Leave a Reply