மரபுரிமைகளின் இலட்சிய வடிவம் என்ன? அவை வெறுமனே புழங்கு பொருளோ, பயன்படு பொருளோ, தொல்லியல் சான்றோ மட்டும் தானா? அவை பண்பாட்டில் பொருள் கொள்ளப்படுகின்றனவா? பருப்பொருட்கள் யாவும் தம்மளவில் அழிந்து கொண்டிருப்பவை என்கிறது பெளத்தம். மரபுரிமைகளின் நிச்சயமற்ற புறவயமான யதார்த்தம் எப்பொழுதும் சிறு உறுத்தலைத் தருவதுண்டு. இங்கே நின்றிருக்கும் மானுட கட்டுமானங்கள் யாவும் என்றோ ஒருநாள் சிதைந்தழியத்தான் போகிறன. நம்மால் இயன்றிருப்பது எல்லாம் அதை முடிந்தவரை பாதுகாக்க முடியுமா என்பதும் ஆவணமாக்கிக் கொள்வதும். ஆனால் இக்கட்டடமும் இதைப்போல் அழிந்து போன பல லட்சம் கட்டுமானங்களும், இந்த மானுடருக்கு எதை வழங்கிச் செல்கின்றன? பெளதீகமான மரபுகள் மட்டுமல்ல, அரூபமான பண்பாடுசார்ந்த நம்பிக்கைகள், வழக்கங்கள், தொன்மங்களும் சரி, இயற்கைசார்ந்த மரபுரிமைகளும், அழியவோ மாறவோ, கைவிடப்படவோ கூடும். அதுவே இயல்பானதும். ஆனால் அவற்றை மரபுரிமை என்று கருதும் தோறும் அவை திரட்டி எடுத்துத் தந்த சாறுதான் என்ன ? அவற்றிற்கு இலட்சியவடிவம் ஒன்று கிடையாதா? புறத்தால் அழிந்த பிறகும் அவற்றுக்கென பண்பாட்டில் நீண்டு நிலைகொள்ளக் கூடிய ‘கருத்து’ அவசியமானதில்லையா?
இலக்கியத்தில் இயங்குவதால் புறபொருட்களை அர்த்தப் படுத்திக் கொள்வது என்னுடைய அடிப்படையான இயல்புகளில் ஒன்று. ஒருவகையில் என்னுடைய கதையின் பாத்திரங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இலக்கியத்தில் அதை ’மீ பொருண்மையியல்’ என்பர். புறத்திலிருந்து அர்த்தப்படுத்தப்படுபவை, படிமங்களாக, உருவகங்களாக சேர்கின்றன. பண்பாடு என்பதே அவ்வாறுதான் நமக்குள் வந்து சேர்கிறது. ஒரு காகம் பித்துருவாகவும், நதி அன்னையாகவும் அவ்வாறுதான் மாறுகின்றன. இயற்கைப் பொருட்கள் இப்படியிருக்க மானுடக் கைகள் வனைந்தவற்றில் பண்பாட்டில் தன்னை ஏதோவொரு பயன்பாட்டுப் பொருளாக ஆக்கிக் கொண்டவை எப்படி பொருள்கொள்ளப்படுகின்றன? குறிப்பாக தொல்லியல், மரபுரிமை சார்ந்த பண்பாட்டு உரித்துகள் எவ்வகையாகப் பொருள் கொள்ளப் படவேண்டியவை?
மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், என்று சொல்லும் போது அவற்றின் பயன்களை மிகவும் புறவயமாகவும் குறுகிய நடைமுறைகள், நோக்கங்கள் சார்ந்தும் , புற உலகின் , குறிப்பாக சமகால உலகின் தேவைகளை ஒட்டியே அவற்றை ஒழுங்குபடுத்தி வைக்கிறோமா என்ற கேள்வி மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயல்வாதங்களில் ஈடுபட்ட காலங்களில் இருந்து உள்ளூர இருந்து வந்தது. ஒடுக்கப்படுகிறோம் , அடையாளங்கள் இல்லாமல் ஆகிறோம், இன, மத பேதங்களில் முரண்களிலும் நம்முடைய தரப்பு ‘நியாயங்களாக’ ஆதாரங்களாக மரபுகளை நிறுத்துகிறோம். ஒருவித பாதுகாக்கும், பெருமைப்படும் நிலைமைகள்தாண்டி இன்னும் தெளிவாகச் சொன்னால், இன முரண்கள், தேசிய வாதம் போன்ற சமகால அரசியல் போராட்டங்கள் , உரையாடல்கள் தாண்டி மரபுரிமைகளுக்கான இடம் என்ன ? இவை மானுட வரலாற்றிலும், பண்பாட்டிலும், அறிவிலும் சேரும் போது வெறுமனே இன அடையாளமாகவும், பெருமிதமாகவும் மட்டுமா சேரப்போகின்றதுன? என்றைக்கோமாறப்போகின்ற, அழியப்போகின்ற ஒன்றில் மானுடர்கள் திரட்டி எடுத்துக்கொள்ளக்கூடியவை எவை? அவை எதில் சென்று சேர்ந்துகொள்ள நிகழ்கின்றன?
தென்மராட்சி – வடமராட்சியை இணைக்கும் வழித்தடங்களில் மந்திகையில் தொடங்கி யாக்கரூ, கப்பூது, குருவிக்காடு , சரசாலை முதலான இடங்களை இணைத்துச்செல்லும் வீதி யாழ்ப்பாணத்தின் மிகப்பழைய வீதிகளில் ஒன்று. அதன் இரு மருங்கிலும் அமைந்துள்ள வயல் நிலங்களும், கண்டல் காடுகளும், புல்வெளிகளும், கிராமங்களும் கொண்டிருக்கக் கூடிய மரபார்ந்த தொகுதித்தன்மை வியப்பூட்டக் கூடியது. பழைய உள்ளூர் கோவில்கள், நாட்டார் தெய்வங்கள், குளங்கள், கேணிகள், துரவுகள், கிணறுகள், ஆவுரஞ்சிக் கற்கள், சீரான இடைவெளிகளில் வீதியோரங்களில் இன்னும் நின்றிருக்கும் சுமைதாங்கிகள், பெருமரங்கள், இவற்றோடு ஊடும் பாவுமாகப் பின்னியுள்ள கதைகள் தொன்மங்கள், இக்கிராமங்களின் மனிதர்கள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், வலசைப் பறவைகள் என்று அதன் பெளதீக, உயிர்த் தொகுதியை சிறுகச்சிறுக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் அணுக்கமாகி அறிந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக சிறு கட்டடஅமைப்பைப் காணும் போது, கதைகள், நம்பிக்கைகளைக் கேட்கும் போது அவற்றின் மரபுரிமைத் தன்மைகள் பற்றிய கேள்விகளை எழாமல் இருப்பதில்லை. தினமும் அவ் வீதியால் போய்வரும் போதும் ஒவ்வொரு இடமாக இருந்து பார்ப்பேன். நண்பர்களுடனும் தனியாகவும். தனிய இயற்கைச் சூழலாக மட்டும் இல்லாமல் ஓர் தொகுதியாக அமைந்திருப்பதாலேயே இவ்வீதி என்னுடைய் கனவு வரை நீளக்கூடியதாகவும் புனைவாக்கங்களின் போது எழுந்துவரக்கூடிய நிலக்காட்சிகளாகவும் மாறியிருக்கிறது. மீண்டும் மீண்டும் செல்லும் போதும் புலப்பாடும், மெய்ப்புகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
கப்பூது முடிந்து யாக்கரு (உள்ளூர் வழக்கில் யாக்கரை) தொடங்கும் போது ஒரு சிறு குளம் கண்ணில்படும். யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமான கேணி அமைப்பில் சுற்றிக்கட்டப்பட்டு படித்துறைகள் அமைந்த மிகச்சிறிய நீர்நிலை. பொதுவாக யாழ்ப்பாணத்தில் கேணிகள் என்று கோவில்களில் உள்ள புனித நீர் நிலையை அழைக்கிறோம். அதன் கட்டட அமைப்பையும் பொறிமுறையையுமே குளங்கள், துரவுகள் என்று அழைக்கும் நீர் நிலைகளுக்கும் பாவிக்கிறோம். சொல்லப்போனால் யாழ்ப்பாணம் பெருங்குளங்களை அமைப்பதற்குரிய நிலமோ, நீர் மூலங்களோ இல்லாதது. பருவ மழையைத் தேக்கக் கூடிய சிறு துரவுகளே இங்குள்ளன. வன்னியில் இருந்தோ, இலங்கையின் பிற சமவெளி மாவட்டங்களில் இருந்தோ வருபவர்களிடம் இவற்றைக் ‘குளங்கள்’ என்று சொன்னால் வேடிக்கையாகப் பார்ப்பார்கள். ஆயினும் சிறு புல்லோ சிறுகல்லோ அதனளவில் முழுமையானது இல்லையா? நீர் நிற்கக் கூடிய ஒவ்வொன்றும் நிறையக்கூடியவையே .
ஓர் அந்தி சிவந்து கிடந்த பின்னணியில் அக்குளத்தின் கரைச்சுவரில் இருந்து கொண்டு அக்குளத்தின் அமைப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தடுத்து இரண்டுபடித்துறைகள் கட்டப்பட்டிருந்தன. ஒன்றில் படிகள் வெட்டப்பட்டிருந்தன. இன்னொன்று கரடுமுரடாக படிகள் இல்லாது சரிந்து இறங்கி நீரைத் தொட்டது. முதலாவது மனிதர்களுக்காகவும் இரண்டாவது கால்நடைகளுக்காகவும் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பொதுவான கேணி/ குள அமைப்பு முறை. இச்சிறு அமைப்பு முறை வெறுமனே யாழ்ப்பாணத்தின் குள அமைப்பு முறையைன் தனித்துவத்தையோ, இங்குள்ள மனிதர்களுக்கும் கால்நடைகளுக்குமான உறவின் விளைவாக ஏற்பட்ட நடைமுறையாகவோ மட்டும் குறுக்கிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது. இப்படித்துறைகள் பற்றிய ‘எண்ணத்தை’ எவற்றோடு கோடிட்டு இணைத்து, திரட்டி கதம்பவடிவில் காணும் போது அது தரக்கூடிய ’தரிசனம்’ அல்லது மேலான புரிதலை எங்கே கொண்டு சென்று வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
நமக்கொரு கால்நடைப் பண்பாடு இருக்கிறது அவற்றைப் பராமரிக்கவும், பயன் பேணவுமான ஒரு தொகுதித்தன்மை இருந்து கொண்டிருக்கிறது. இப்படித்துறை விடயத்தில் இருந்தே தொடங்குவதென்றால். இந்த வடமராட்சி வீதியின் இருபக்கமும் உள்ள நிலத்தில் இது சார்ந்து என்னென்ன மரபுகளும் , வழக்கங்களும் இணைந்திருக்கும் என்று பார்க்கத் தொடங்கினேன். ஆறுகளோ பெரு நீர் நிலைகளோ இல்லாததால் கோடையில் பெரும்பாலும் நெல் வேளான்மை நடப்பதில்லை. இச்சிறு குளங்கள் துவைப்பது, குளிப்பது தவிர, தோட்டங்களுக்கும், கால்நடைகளுக்கும் உரியது. கோடையை முடிந்தவரை தாங்கி மாரி தொடங்கும்மட்டும் சனங்கள் பயன்படுத்த உதவாவிட்டாலும் கால்நடைகள் நீரருந்த இக்குளங்களே பிரதான நீர் மூலங்கள். வெறுமனே ‘பயன்’ கருதிமட்டுமா கால்நடைகள் மனிதர்களினால் பேணப்படுகின்றது என்ற கேள்வி இருக்கிறது. மரபுரிமைகள் பற்றிய எண்ணக்கருவின் அடிப்படையே பயனைத் தாண்டிய, கொடுக்கல் வாங்கல்களைக் கடந்த ஓர் மானுட நிலையை கண்டு திரட்டிக் கொள்வதுதான். கால்நடைகள் வெறும், பாலும் இறைச்சியும், எருவும் மட்டும்தானா? இத்தனை ஆயிரம் வருடங்களாக ‘வீட்டு விலங்குகள்’ மனிதர்களுடன் இருக்கின்றன. இப்பயணத்தில் மானுடர்கள் அவ்விலங்குகளுடன் கொண்டிருக்கும் உறவுதான் என்ன ? அது பயன்களை விடவும் முக்கியமானதில்லையா? .
யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய கால்நடைப்பண்பாட்டின் பல்வேறு கூறுகளைக் கவனிக்கலாம். இந்த நிலத்துக்கே உரிய கால்நடை இனங்கள் உள்ளன, கலப்பினங்கள் உள்ளன. வறண்ட ஒரு பருவ நிலம் என்பதால் இங்கு பெரும் பசும் புல்வெளிகளோ ஆற்றுப்படுக்கைகளோ கிடையாது, அதனால் இங்குள்ள ஆடுகளோ மாடுகளோ உள்ளூர் சிற்றினங்களைச் சார்ந்தவை மட்டும்தான். சமகாலத்தில் பெரும்பால் தரும் வெளிநாட்டு பசுக்களின் உயிரணுக்கள் கொண்டுவரப்பட்டு கலப்பினங்கள் உருவாக்கப்பட்டன. பெரும்பாலும் இந்த நிலதின் தன்மையோடு அவற்றினால் இன்னும் பொருந்தவோ நீண்டு நிலைத்துவாழவோ முடியவில்லை. இன்றைக்கும் உள்ளூர் கோடைப் புல்வெளிகளில் திரிந்து மேய்ந்து வாழக்கூடிய தகைமையை கொண்டவை உள்ளூர் இனங்களே. கால்நடை மரபு என்று ஒரு தலைப்பின் கீழ் அதுசார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்தும் போது,
அவற்றுக்கான உணவு, நீர், கைவைத்தியங்கள், மரபார்ந்த வைத்தியங்கள், அவற்றோடு இணைந்து உருவான சடங்குகள், கால்நடைகள் தொடர்பான சோதிடங்கள், குறிசுடுதல், சவாரி, உழவு நடைமுறைகள், பலியிடல், தெய்வ நம்பிக்கைகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று வெறும் கால்நடைகளாக இல்லாமல் அவை மொத்த சமூகத்தின் பண்பாட்டிலும் இணைந்து நிற்கின்றன. இவை அனைத்தும் இணைந்து பெருவடிவென ஆவதற்குப் பின்னால் இருப்பவை வெறும் ‘புற உலகு சார்ந்த’ பயன்கள் மட்டுமா? வரலாறு, மரபுரிமை போன்ற பண்பாட்டின் முக்கிய பகுதிகளின் மூலம் திரட்டி எடுத்துக்கொள்ளும் அறிதல் ‘புற உலகப் பயன் சார்ந்ததாக’ மட்டும் இருந்துவிட முடியாது. அவற்றில் மானுட ‘நிகழ்வு’ ஒன்று திரண்டு எழாமல் இருக்குமானால் அவை என்றைக்கும் நிலைப்பவையாக இருக்கப்போவதில்லை. அறிவினுடைய அடிப்படையான இயல்பு என்பது அது அறியப்பட்டவுடன் மொத்த மானுடருக்குமானதாக ஆகிவிடுவதுதான். இது தமிழருடையது, இது சைவருடையது, இது வெளாளருடையது என்ற குறுக்கங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மேலெழுவதே மெய்யறிவு.
மாடுகளும் ஆடுகளும் மிகுந்த வலிமையான கால்களைக் கொண்ட விலங்குகள், மனிதர்களின் படிகளில் இறங்கிச்சென்று நீருந்தி மீளக்கூடியவைதான். ஆனால் அவற்றுக்கென ஓர் படித்துறை இடறாது இறங்கி நீரருந்தும் படி அமைக்க வேண்டும் என்ற ’எண்ணம்’ முதலில் இதைக் கட்டியவரின் தலைக்குள் உதித்தது ஓர் அற்பமான நிகழ்வா என்ன? மொத்த மானுட குலம் அடைந்த சால்பிலிருந்து திரண்டெழுந்த ஒன்றல்லவா இது. வெறுமனே யாழ்ப்பாணத்தவர்களின், அல்லது அதிக பட்சமாக தமிழர்களின் பண்பாடு மாண்பு என்று மட்டும் இதைக் குறுக்கிக்கொள்ள வேண்டுமா? இந்த அறிதலும் சால்பும் நம்மிடம் மட்டுமா இருக்கிறது ? எங்கோ ஓர் அமெரிக்க பாலை நிலத்தில் நீரில்லாமல் தவிக்கும் பைசன் எருதுகளுக்காக கற்தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று சிந்தித்த செவ்விந்திய பழங்குடிக்கும், உடல் தினவும், கடியும் போக கால்நடைகளுக்கு ஆவுரஞ்சிக் கல்லொன்றை நாட்டும் யாழ்ப்பாணத்தின் சிற்றூர் ஒன்றில் இருக்கும் குடியானவருக்கும் நாமொரு கோட்டை இழுத்து இணைக்க முடியுமில்லையா?
அவர்கள் சிந்தித்ததில் வெறுமனே தர்க்கமும், அறிவியலும் மட்டுமா இருக்கிறது. அதில் மாபெரும் ஈகையும், கருணையும் இருக்கிறது இல்லையா? தன்னை பிற உயிர்களிலும் காணும் ஒருமை தரிசனத்தின் பிறிதொரு பகுதியில்லையா? எழுத்தாளர் ஸ்ரமகோவ் தன்னுடைய நோபல் உரையில் மனிதர்கள் தங்களுடைய சக சீவராசிகளுக்குரிய மரியாதையை என்று இழந்தார்களோ அன்றைக்கு அவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள்‘ என்கிறார். விலங்குகளுடனான மானுடரின் உறவு என்பது ‘அர்த்தம்’ இல்லாது என்று யாரும் மறுக்க முடியாது.
மரபு, வரலாறு என்பவற்றின் மூலம் நாம் திரட்டிக்கொள்ளும் அறிவென்பது வெறுமனே நடைமுறையும் புற உலகும் சார்ந்த பயன்களோடு மட்டுப்படத் திரண்டவை அல்ல. இன்றைக்கு மரபுரிமைகள் என்பவை தேசியம், அடையாளம், வரலாற்றுத்தரவு, பெருமிதம் தாண்டி எந்த பயன்பாடும் இல்லாமல் கிடக்கின்றன. இது மத்தை வைத்து ஆணியடிப்பது போன்றது. சொல்லப்போனால் இந்தப்பிரச்சினைகள் தீர்ந்தாலோ மறக்கப்பட்டாலோ மரபுகள் வெறும் தரவுகளாக இருக்கும், அல்லது கைவிடப்படும். ஒவ்வொரு அறிதலும், கண்டடைவும் தனக்கு முன்பே உருவான ‘இலட்சியமான’ ஓர் மானுட உச்சத்தை நோக்கிச் செல்பவை. மானிட அறிவிற்கு மேலே அவர்கள் திரட்டி எடுப்பது மானுடத்தின் ‘அறவுணர்வு’ சிந்தித்துப்பார்த்தால் உருவமானதோ, அரூபமானதோ எவ்வகை அறிதலும், பண்பாட்டு வடிவங்களும் திரண்டு திரண்டு எழுந்து மானுட அறத்தினை நோக்கியே செல்கின்றன.
நாம் கால்நடைகளோடு ஏற்படுத்திக்கொண்டது ‘பயனை’ நோக்கமாக கொண்ட உறவுதான், ஆனால் மானுட வாழ்வென்பது சடப்பொருளாக இருந்தால் கூட அது வாழ்வுடன் எதோ ஒருவகையில் பங்குபெறும் போதே அதனால் ‘அர்த்தம்’ கற்பிக்கப்படுகின்றது. உயிர்களாக இருப்பின் ஒரு படி மேலே சென்று அவற்றுக்கான அன்பு, பராமரிப்பு, நேறிகள் எல்லாம் உருவாகி அவை மானுட அறங்கள் என்றே ஆகின்றன. ஓர் பூனைக்குட்டியை வளர்ப்பதில் தொடங்கி ஆனையொன்றை வளர்ப்பது வரை பிணைப்பும் அறமும் உருவாகாமல் இவ்வுறவு தொடரச் சாத்தியமில்லை.
அறமே மானுடர்களின் உச்சமான மரபுரித்து. அது சதா நிகழ்ந்துகொண்டே இருப்பது. எல்லா அறிதல்களும், வாழ்வும் அதன்மேலேயே நிற்கின்றன. மானுடர் நேரே நின்றறிய கூடிய ஒரே பெருந்தெய்வம். இல்லையென்றால் ஒரே படித்துறையில் யார் நீரருந்துவது என்று மாடுகளுடன் மல்லுக்கு நின்றிருக்கும் பிறிதொரு கொல் விலங்கென்று ஆகியிருப்போமில்லையா.


