மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்தரம் படித்த போது பாடசாலை விவாத அணியில் இருந்தேன். ’சாவிலும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும். ஓடையிலே என் சாம்பல் ஓடும் போது ஒண் தமிழே சலசலத்து ஓடவேண்டும்’ என்று ஆவேசமாகப் பேசக் கூடியவனாக இருந்தேன். குறிப்பாகப் பட்டிமன்ற மேடைகள். எப்படியாவது வென்றெழ வேண்டும் என்பதால் கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்பதான தலைப்புகளின் கீழ் எந்த தரப்பு தரப்படுகிறோ அவளைக் கற்பரசியாகவும் மற்றவளை இல்லை என்றும் நிறுவிக் கொண்டிருதேன். என்னுடைய அப்போதைய வாசிப்பும் அறிவைத் தரவுகளாகச் தேடிச் சேர்க்கும் குணமும், எப்படியாவது வென்றெழ வேண்டும் என்ற மூர்க்கமும் விசை கொண்டவனாக வைத்திருந்தது. பட்டிமன்றப் பேச்சுக்களில் உருவாகி வரும் உடல் மொழியைப் போல் அருவருப்பானது ஒன்றில்லை.
இந்த பட்டிமன்ற முறை அடிப்படையில் மிக மோசமானது, பயனற்றது, வெறும் பேச்சுத்திறனால் அர்த்தங்களையும், நெறிகளையும் கொன்று வெல்லும் பொழுது போக்கும் வடிவம். தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு வரைக்கும் பிற்போக்குத்தனங்களைப் புகுத்துவதில் பட்டிமன்றங்களுக்கு முதன்மையான பங்குண்டு. திண்டுக்கல் லியோனி போன்ற ஆட்களுக்கு எல்லாம் இலங்கையிலும் கூட லட்சக்கணக்கில் இரசிகர்கள் உண்டு. ஒன்று சரி இன்னொன்று பிழை என்று நிறுவக்கூடியது. இந்த இரட்டைத்தன்மை அறிவுச்செயற்பாட்டிற்கு எதிரானது. பாமரர்களின் வழிமுறையது, அவர்களுக்கான கேளிக்கையாகவே உருவாகி வந்தது. தொலைக்காட்சிகள் அதை வளர்த்தன. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறோம் என்று வாய்மொழி வன்செயலில் ஈடுபடும் இலட்சக்கணக்கான சராசரிகளை உருவாக்கியதில் இந்த பட்டிமன்ற மனநிலைக்கு கணிசமான பங்குள்ளது
அன்றைக்குப் பட்டிமன்றங்களில் விவாதங்கள் பெரும்பாலும் எளிய பகுத்தறிவுத் தர்க்கங்களாலும் சபையைச் சிரிக்கவும் கைகொட்டவும் வைக்கத் தக்க பகடிகளாலும் ஆனது. அவையைக் கலகலப்பாக வைக்க வேண்டும் என்பதால் புராண இதிகாசங்களையோ காவியங்களின் தருணங்களையோ பொதுப்புத்தி என்ற சேற்று வாய்க்காலுக்கு இழுத்து வந்து அவற்றின் மீது வம்படிச் சண்டையிடுவது. ஒரு வகையில் இன்றைய பட்டிமன்ற முறையைத் தமிழில் உருவாக்கியவை திராவிட இயக்கத்தினரின் அரசியல் மேடைகள். அவற்றின் தாக்கம் விவாத முறைகளையும் அதன் மலினமான, அதே நேரம் வித்துவத்தை நடிக்கக் கூடிய மேடைப் பேச்சுகளில் இருந்து வந்து சேர்ந்தன. ஏனென்றால் பட்டிமன்றங்களுக்கும் அரசியல் கட்சிகளின் மேடைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இரண்டினதும் அடிப்படை ’எதிர்த் தரப்பைத் தாக்க வேண்டும்’ என்பதுதான். என்னுடைய பட்டிமன்ற மேடைகளில் ‘கண்ணகிக்கும் புருசனுக்கும் இருந்தது எளிய குடும்பப் பிரச்சினை, அதிலை அந்தம்மா என்னத்தும் பப்ளிக் ப்ரோப்பட்டியான மதுரையை எரிச்சது?’ என்பதான மொழியில் இருக்கும். அதே அரசியல் மேடைகளிலும், சினிமாக்களிலும் வரக்கூடிய எளிய பகடிகள். பெரியார் கம்பராமாயணத்தில் இருக்கும் அணிலும் புலுணியும் இராமன் பாலம் கட்ட உதவிய கதையை கேலி செய்த மேடைப்பேச்சு ஒன்று பிரபலமானது. பாலம் கட்டுவதில் உதவிய அணிலை இராமன் தன் கைகளில் ஏந்தி முதுகைக் தடவிக் கொடுத்ததாலேயே அதற்கு முதுகில் மூன்று கோடுகள் இருக்கின்ற என்ற இராம காவியங்களில்; கம்பராமாயணத்தில் மட்டும் இருக்கும் ஓர் உள்ளூர் கதை. அதைப் பெரியார் ‘அப்ப சீதையின் முதுகிலும் கோடுகள் இருக்க வேண்டுமல்லவா’ என்பாராம். இப்படிப்பட்ட மலினமான பகடிகள், சீண்டல்கள். இன்றைக்கு முகநூலில் இருக்கும் பெரும்பான்மையான பகுத்தறிவு கும்பல் இத்தகைய பகடிகளையும் சீண்டல்களையும் நம்பித்தான் சமூக வலைத்தளங்களில் வந்து சேர்கிறார்கள்.
உயர்தரத்தில் மானசீகமான தமிழாசிரியர் திரு. சத்திய வேந்தனிடமும் தமிழ் படித்துக் கொண்டிருதேன். சத்திய வேந்தன், பேராசிரியர் சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோருடைய பிரியமான மாணவர்களில் ஒருவர். அவ்விரு இணையர்களும் கொண்டிருந்த கம்பன் மீதான ஆர்வம் அவருக்கும் அவரிடமிருந்து எனக்கும் வந்தது. நாங்கள் உயர்தரம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தோம். பட்டிமன்றம் என்பதன் விவாத முறைமை பற்றிய உரையாடல்களை பேராசியர் சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் போன்றோர் தங்களுடைய அணுக்கமான மாணவர்கள், விவாதக் களத்தில் இருந்தவர்களோடு முன்னெடுத்தனர். தீர்ப்பிடக் கூடிய பட்டிமன்றங்களுக்குப் பதிலாக ‘சொல்லாடு களம்’ என்ற முறையைக் கொண்டுவந்தனர். எந்த தீர்ப்புகளும் இல்லாமல் வாத விவாதங்களை தரப்புகளாக இல்லாமல் ஒரு சுழற்சியாக முன்னெடுப்பது அதன் முறை. சொல்லப்போனால் அதை அவர்கள் நம்முடைய மரபில் இருந்து எடுத்துக் கொண்டனர். அதாவது நம்முடைய தத்துவ மரபில் இருந்து. நம்முடைய தத்துவத்தின் மைய இடங்களான இந்து, சமண, பவுத்த மதங்கள் வளர்த்தெடுத்த விவாத முறைகளின் அடிப்படையான வடிவத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
நம்முடைய மரபில் ‘தண்ட விவாத’ முறைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஒரு அறிஞன், தன் தண்டத்தை அறிவுளோர் உள்ள சபையில் ஊன்றி, தன் ஆசிரிய நிரை, மூல நூல், தன் எந்த அறிவுப்பள்ளியைச் சேர்ந்தவன் என்றெல்லாம் தன்னை வரையறுத்து தன் வாதத்தை முன் வைக்க வேண்டும், அவனுடன் அறிஞர்கள் தம் தரப்பை முன்வைத்து வாதிட்டு வெல்ல வேண்டும். அப்படி வெல்லாவிட்டால் அவன் அந்த தண்டத்தை அங்கேயே அடையாளமாக நிறுத்தி விட்டுச் செல்வான், அவன் அங்கு வென்ற மெய்மையின் பிரதிநிதியாக அறிவுச் சூழலில் அந்த தண்டம் நின்றிருக்கும். முறையற்ற வாதங்களை ‘விதண்டா வாதம்’ என்று குறிப்பிடுவது இதிலிருந்துதான் வந்தது. பட்டிமன்றச் சூழலைப் பொறுத்தவரையில் அது விதண்டாவாதங்களைக் கொண்டே இயங்குவது. சொல்லாடுகளம் நெடு நாட்கள் நீடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அவற்றால் சாராசரிகளின் கேளிக்கைகளுக்கு தீனளிக்க முடியாது. அறிவியக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கானது. சமதையானவர்களிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது நம்முடைய மரபு.
இன்றைக்கு வரைக்கும் பட்டி மன்றங்கள் அதே சீத்துவக்கேட்டில் தான் கிடக்கின்றன. சினேகிதி ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். பட்டி மன்றங்களில் பேசக்கூடியவர். நெடு நாட்களுக்கு பிறகு விவாதங்கள் பற்றிப் பேச்செழுந்ததால் என்ன தலைப்பு, என்ன குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டேன். சில பக்கங்களைப் புகைப்படமெடுத்து அனுப்பியிருந்தார். இலக்கியங்களில் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதிகள், அவர்கள் தொடர்பான பிற்போக்குத் தனங்களைக் கொண்ட பாடல்கள் சில இருந்தன. பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புப் பகுதியை எனக்கு அனுப்பியிருந்தார். திருக்குறளோடு, கம்பராமயணத்தில் சில பாடலடிகளும் இருந்தன. பிரபலமான குறளது.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”
எனக்குக் குறளைப் பார்த்தவுடன் ஓடி விளங்கியது. அடுத்து அக்னி பிரவேசம்தான் என்று நினைத்துக் கொண்டு கீழே கம்பராமாயணப் பாடல்களுக்குச் சென்றேன். ஆச்சரியமாக வேறு ஒரு விசயத்தைத் தொட்டிருந்தார். விலை மகளிர் பற்றியது. யாழ்ப்பாணத்தமிழில் ‘வறுகுதல்’ என்றொரு சொல் இருக்கிறது. ஒருவரை நாசூக்காக அன்பினாலோ, பரிவினாலோ, காமத்தினாலோ ஏமாற்றி அவரிடம் உள்ளவற்றைச் சுருட்டிச் செல்வதை வறுகுதல் என்பார்கள். கம்பர் பல இடங்களில் விலை மகளிரை ‘வறுகும் தன்மையினர்’ எபதற்கான உவமையாகப் பயன்படுத்துகிறார்.
தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது – அவ் வெள்ளமே
ஆற்றுப்படலத்தில் உள்ள இப்பாடலில், சரயு நதியின் வெள்ளத்தை விலைமாதரோடு ஒப்பிடுகிறார். எல்லாவற்றையும் சுருட்டிச் செல்லும் இயல்புள்ளவர்கள், என்ற பொருளில் இப்பாடலை அமைக்கிறார். தாடாகை வதைப்படலத்தில் அவ் விலை மகளிரின் உள்ளத்தை பாலை நிலத்திற்கு உவமிக்கிறார். ‘பொன் விலைப் பாவையர் மனம் போல் பசையும் அற்றதே ’ என்கிறார். மேலே வள்ளுவன் தெய்வம் தொழாதவள் கணவனைத் தினமும் தொழுதால், அவள் சொன்னால் மழை வரும் என்ற அளவிற்கு கற்பரசியாக நிறுவுகிறார், கம்பர் எளிய பாலியல் தொழிலாளிகளை மோசமாகச் சித்தரிக்கிறார் என்று பட்டிமன்ற மேடைகளில் சொன்னால் எதிர்த் தரப்பு வாயடைத்துப் போகும். பகுத்தறிவைப் போல் கூராக வெட்டக் கூடிய வாளும், கண்கள் மறைக்கைப்பட்ட பந்தையக் குதிரையும் வேறில்லை. அதற்கு சமகலாத்தில் எது முற்போக்கோ அது மட்டுமே தெரியும். அதனாலேயே அது பழந்தமிழ் இலக்கியங்களையும் காவியங்களையும் வம்புச்சண்டைக்கு இழுத்து சமகாலத்தில் கொண்டு வந்து வீசி, தொடையில் அறைகிறது. அதன் மாபெரும் வடிவத்தையும் மேன்மையையும், எளிய தர்க்கங்களால் தாக்கி சிறுமைப்படுத்துகிறது. அப்படியொரு வாசிப்பு உள்ளதுதானே, அப்படியொரு விமர்சனம் தேவைதானே ? ஆம், அவசியம்தான். ஆனால் பழம் இலக்கியங்களை சமகாலத்தில் அளிக்கப்பட்டிருக்கின்ற பகுத்தறிவினாலும், முற்போக்கினாலும், இன்றைக்குள்ள மேம்பட்ட தர்க்கங்களாலும் அணுகும் போது நாம் காலத்தை மறந்து விடுகிறோம். அல்லது ‘இக்காலத்தின்’ அறிதலைக் கொலைக் கருவியாக மாற்றுகிறோம். அது நம்முடைய கண்களைத்தான் முதலில் குத்திக் குருடாக்கிவிடுகிறது.
ஒரு இலக்கியம் எழுதப்படும் காலத்தக் கடந்து வரக்கூடிய ஆறு. நீங்கள் நின்றிருக்கு படித்துறைக்கு முந்தைய படித்துறையில் கிடந்த சருகை அது அடித்துக் கொண்டு உங்களிடம் வருகிறது. அப்பொழுது நீங்கள் அப்பேராற்றின் பிரவாகத்தைக் காண்பதற்குப் பதிலாக அந்தச் சருகை மட்டும் காட்டி ஆறு மொத்தமும் மாசுள்ளது பயனற்றது என்று சொல்வது போலாகும். காவியங்களில் குறிப்பிடப்படும் தொன்மங்களை, நெறிகளை, பழக்கங்களை, நம்பிக்கைகளை அந்ததந்தக் காலத்திற்குரியவையாகவும் கருதியே வாசிக்க வேண்டும். ஏனென்றால் வள்ளுவரை, கம்பரை விடவும் நீங்கள் முற்போக்கானவர்தான், பகுத்தறிவுள்ளவர்தான். ஆனால் அது அந்தச் சருகை வாசிக்க மட்டுமே பயன்படுகிறது. அப்பேராறும் அவர்களேதான். காலங்களைக் கடந்து என்றைக்கும் நிற்கும் தரிசனங்களை அவர்கள் அக்காவியங்களில் எழுதியிருக்கிறார்கள். நெறிகளை வகுத்திருக்கிறார்கள், மொழியினால் கவிதையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆற்றைப்புரிந்து கொள்பவர்கள் சருகையும் சேர்த்துப் புரிந்து கொள்கிறார்கள். வெறும் சருகை மட்டும் பார்ப்பவர்கள், சருகை மட்டுமே அறிகிறார்கள்.
காவிய வாசிப்பில் அது சொல்லும் நெறிகளை, அதன் பிறகு ஒவ்வொரு தலைமுறையும் அக்காலத்திற்கு உரியதாக்கி வாசிக்க வேண்டும், வளர்த்தெடுக்க வேண்டும். அவை எழுதப்பட்ட காலத்தை வரலாற்றிலும், தத்துவ மரபிலும் நிறுத்திப் பார்க்க வேண்டும். நிலவுடமைச் சமூகத்தின் முதன்மை அமைப்பான குடும்பம் தந்தைவழித் தலைமையோடு உருவாகி வந்து கொண்டிருந்த காலத்தைச் சேர்ந்தது திருக்குறள், அக்காலத்து உலகியல் நெறிகளை வகுக்கும் போது அக்கால நம்பிக்கைகள் அதற்குள் இயல்பாகவே வந்து சேர்கின்றன, என்று வாசிக்க வரலாற்றில் நிறுத்தி வாசிக்கப் பயில வேண்டும். கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி மதுரை மாநகரத்து மக்களின் நெஞ்சங்களும் அறவுணர்வும் எரிந்தது என்று வாசிக்கும் போது எளிய பகுத்தறிவினால் அதன் முன் நிற்க முடியாதில்லையா.
விலை மகளிருக்கு ‘பாலியல் தொழிலாளிகள்’ என்று பெயரிட்டு வாழ்வதற்கான அவர்களின் உரித்தையும் அவர்களுக்கான மானுடக் கவுரவத்தையும் நாம் ஓரளவேனும் அளித்து ஒரு இருபது வருடங்கள் இருக்குமா? நம்முடைய முற்போக்கே இதோ இப்பொழுது பிறந்தது. கம்பராமாயணத்திற்கு பிறகு ஓராயிரம் வருடத்திற்குப் பிறகுதான் இப்பொழுது இங்கே வந்திருக்கிறோம். இக்காலம் மேம்பட்ட ஒன்றுதான். நாம் வாதில் வெல்ல வேண்டும் என்பதற்காக எளிய தர்க்கங்களையு பகிடிகளையும் போட்டு சராசரிகளைச் சிரிக்க வைக்க எதை வேண்டுமானாலும் சொல்வதா? பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பிற்போக்கானவை என்று அறுதியிட முடியுமா? கம்பரைப் பிற்போக்கானவர் என்பதா? அவர் தன் காலத்தின் மாபெரும் அறிவியக்கத்தோடு நிகர் நின்று விவாதித்துக் கொண்டிருந்தவர். தன் தண்டத்தை ஊன்றி வென்றவர். உலகின் மிகப்பெரிய காவியத்தை இயற்றியவர். அவர் பட்டிமன்றப் பேச்சாளர் அல்ல. முகநூலில் குளாயடி சண்டை பிடிப்பவர்களும், பட்டிமன்றப் பேச்சாளர்களும் அவரைத் தெருச்சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கும் அற்பத்தனத்தை அறிவுச் செயற்பாடாக, இலக்கிய வாசிப்பாக எல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது.
கம்பரைத் தெருச்சண்டைக்கு அழைத்தல் | காவிய வாசிப்பு 05


