நானொருமுறை கொழும்பில் வெள்ளவத்தை வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது ஓர் ஆண் முகம் மறித்தது. அரைக்காற்சட்டை, டீசேட், கையில் பற்ற வைக்காத சிகரட். ஆள் வெளிநாட்டில் இருந்து திரும்பியிருக்கிறார். முகம் எங்களூரினுடையது. முப்பத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வாகு. இன்னார் என்றுதான் மட்டுப்பிடிக்க முடியவில்லை. ‘நீங்கள் கலாக்கான்ர மகன் தானே?’ இதென்ன தாய் வழிச் சமூகம் திரும்பி வந்து விட்டதா? வழமையாக ‘குணமண்ணேன்ரை பெடியன் தானே?’ என்றுதான் கேட்பார்கள். அம்மா வழியில் தெரிந்தவர்கள் என்றால் அம்மப்பாவின் பெயரைச் சொல்லித்தான் கேட்பார்கள். நான் குழப்பத்துடன் ‘ஓம்’ என்றேன். என்னைத் தெரியேல்லையோ என்று கேட்டு தன்னை அறிமுகப் படுத்தினார். அம்மா,அப்பாவை விசாரித்தார். இரண்டாயிரங்களின் பின்னர் போர்ச்சூழலால் புலம்பெயர்ந்து போகும் மட்டும் ஊரில் மரமேறும் தொழிலாளியாக இருந்தவர். எங்களுடைய வீட்டில் தேங்காய் பறிக்க வருபவர். ‘நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலங்களிலை இருந்து அம்மான்ர கையாலை சாப்பிடுறனான். வீட்டிலை சரியான கஸ்ரம். இரண்டு வேளைதான் சாப்பாடு. எனக்கு வக்கு வயிறு, நல்லாச் சாப்பிடுவன். சிலநேரம் கடும் பசி பசிக்கும் வீட்டிலை தேங்காய் முத்தி இருக்காது எண்டு தெரியும், எண்டாலும் குணமண்ணை கூப்பிட்டவர் எண்டு சொன்னவங்கள் என்று தேங்காய் பிடுங்கப் போவன், சொன்னால் நம்ப மாட்டியள் தம்பி தேங்காய் பிடுங்காட்டியும் சாப்பிடாமல் போனதில்லை, நீங்கள் போங்கோ நான் யாழ்ப்பாணம் வரேக்கை வீட்ட வாறன்’ என்றார்.
எங்களுடைய ஊரில் பெரும்பாலான குடும்பங்களில் உலைக்கு அரிசி போடும் போது குடும்ப உறுப்பினர்களுக்கும் வளர்ப்பு நாய்க்கும் பூனைக்கும் போக, மேலதிகமாக இரண்டு பேர் சாப்பிடும் அளவில்தான் அரசியிடுவார்கள். வீட்டிற்கு விருந்தாளிகளோ, தொழிலாளிகளோ வந்தால் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார் அம்மா. போர்க்காலத்தில் இரவில் இரகசியமாக ஊருக்கு வரும் போராளிகள் சாப்பிட்டதும் அந்தச் சோற்றைத்தான். குறிப்பாகப் புலிகள். ’அண்ணை தன்ர பெடியளை தாய்மார்கள் பசிக்க விடமாட்டினம் எண்டதை நம்பித்தான் போராட்டத்தைத் தொடங்கினவர்’ என்றொரு முறை பள்ளிக்கூடப் பிரச்சாரக் கூட்டத்தில் போராளி ஒருவர் சொன்னது உண்மைதான். இரவிரவாகப் புட்டவித்துச் சம்பலிடித்துப் போராளிகளுக்கு கொடுத்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நூறு தாய்மார்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்.
’இரவு சோத்துக்கு தண்ணி ஊத்தும் மட்டும் அகப்பை அடியிலை தட்டுப்படக்கூடாது’ என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். நானொருமுறை பெண்ணொருவரிடம் இதைச் சொன்ன போது ஊதாரித் தனம் என்றார். உணவை வீணடிக்கிறீர்கள் என்றார். இரவு தண்ணீர் உற்றிய சோறு காலையில் ‘பழஞ்சோறு’ குழைத்து பூவரசமிலையில் கவளம் உருட்டி வைக்கப்படும். நம்முடைய மரபில் அன்னம் வீணாவதில்லை ஏதோவொரு வாய்க்கு அளிக்கப்படும். வன்னியில் இறுதிப்போர் நிகழும் போது எனக்குத்தெரிந்து புதுக்குடியிருப்பு இராணுவத்திடம் விழுந்த பிறகுதான் மெல்ல மெல்ல உணவுத் தட்டுப்பாடு வரத் செல்லத்தொடங்கியது என்று நினைக்கிறேன். வன்னி ஒரு மாபெரும் விவசாய நிலம். சேனைப்பயிர்செய்கை மூலம் உருவானது. இரண்டாயிரத்து ஒன்பது முற்பகுதியில் கிளிநொச்சி வீழ்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் இராணுவம் நுழைந்து விட்டிருந்தது. சுதந்திரபுரத்தில் இருந்து நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அழைத்துவரப்படும் போது பிரம்மந்தனாற்றில் வயல்களைப் பார்த்தேன். இரட்டைக் கொழிப்பு, நெல்லுயர்ந்து அசாதாரணமான உயரத்தில் நின்றது. கதிர்களில் பொன்நிறம் மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது. யாரோ பெரியவர் ‘இந்த முறை சா விளைச்சல்’ என்றார். ஏதேனும் இயற்கை அனர்த்தங்களோ, மானுட அழிவுகளோ வரப்போகிறது என்றால் நெல் வயல்கள் அபரிவிதமாக கொழிக்கும் என்றொரு உள்ளூர் நம்பிக்கையிருந்தது. அதைத்தான் சா விளைச்சல் என்றார்கள்.
போர் உச்சம் பெறும் போது வன்னியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இன்றைக்கு ஓர் போர்கால நினைவாக அளிக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அத்தட்டுப்பாட்டினால் வந்தது. எனக்குத்தெரிந்து கடைசி மூன்று மாதங்களில் இந்த பஞ்சம் வந்திருக்கிறது. ஏனென்றால் சனங்களும் போராளிகளும் மிகச்சிறிய, கடற்கரை நிலத்திற்குள் குறுக்கி அடைக்கப்பட்டிருந்தார்கள். தரைக்கு மேலே தலை காட்ட முடியாதபடிக்கு குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. வரலாறு முழுக்க உணவுப்பஞ்சங்களின் போது பசி மானுடர்களின் விலங்கியல்பைத் தூண்டிவிட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே தாதுவருடப் பஞ்சங்கள் நடக்கும் போது மனிதர்கள் இன்னொருவரைக் கொன்று உண்ணுமளவிற்குச் சென்றார்கள் என்கின்றன ஆவணங்கள். எழுத்தாளார் ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை நாவல் இந்தியாவில் வெள்ளைக் கொலனியர்கள் உருவாக்கிய செயற்கைப் பஞ்சம் பற்றி விரிவும் ஆழமும் கொண்ட சித்திரத்தை அளிக்கிறது. பேரழிவு அது. முள்ளிவாய்க்கால் நாட்களைப் பொறுத்த வரையும் இன்றைக்கு வரைக்கும் அப்படியேதும் உணவினால் நிகழ்ந்த மானுட வன்முறை எதுவும் பதியப்படவில்லை. சுதந்திரபுரத்தால் வெளியேறிச் செல்லும் மட்டும், சில விசயங்களை அவதானித்திருக்கிறேன். இடம்பெயர்ந்து வரும் சனங்களை மறித்து உணவும் நீருமளித்து, கொட்டிலோ கூடாரமோ போட்டுக்கொள்ள இடமளித்தவர்கள், நெல் மூடைகளைக் கொடுத்தவர்கள், வீட்டில் விழும் மேலதிக தேங்காய்களைக் காய்கறிகளை வாசலில் அடுக்கு வைத்தவர்கள், அவர்களுக்கு உணவிட்டவர்களைக் கண்டிருக்கிறோம். இப்பொழுது நினைத்தாலும் அவை உச்சமான மானிடச் சித்திரங்கள் என்றுதான் தோன்றுகிறது. போரின் கதை என்று எழுத வேண்டியது இதைத்தானில்லையா? போர் என்ற உச்சமான அழிவின் நாடகம் நிகழும் போது மானுடர்களின் அறத்தின் உச்ச தருணங்களும் நிகழும்.
புறநாநூற்றில் ஒரு பாடல் உள்ளது (பாடல் எண் 319) ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடியது.
பூவல் படுவில் கூவல் தோண்டியசெங் கண் சில் நீர் பெய்த சீறில்முன்றில் இருந்த முது வாய்ச் சாடியாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;படலை முன்றில் சிறு தினை உணங்கல்புறவும் இதலும் அறவும் உண்கெனப்பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்துஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண!
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
திருக்குறள் நம்முடைய தமிழ்ப் பண்பாட்டில் தானெழுந்த காலம் வரை உருவாகி வந்த நெறிகளையும் அறங்களையும் தொகுத்து அளிப்பது. அதன் பிறகு அதன் செல்வாக்கு காவிய காலம் கடந்து இன்றைக்கு வரைக்கும் நிலைக்கிறது. நிலமானிய சமூகங்களில் உருவாகி வந்த எல்லாம் நிலைப்பதில்லை. ஆனால் அடிப்படையான அறங்கள் நிலைப்பது மட்டுமல்ல அவை வளர்த்தெடுக்கவும்படுகின்றன. முக்கியமாக தமிழ் இலக்கியங்கள் முதன்மையான கொடையாகச் சொல்வது உணவளித்தலையே. காவியங்கள் ஒரு பண்பட்ட சமூகத்தின் தரிசனங்கள் திரண்டு எழும் உச்சமான நிகழ்வு. உணவளித்தல் என்ற நெறி பண்பாட்டில் வளர்ந்து பவுத்த காப்பியமான மணிமேகலையில் தன் தரிசன உச்சத்தைப் பெறுகிறது. மணிமேகலை ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’ என்கிறது. ’பசிப்பிணி என்னும் பாவி’ என்கிறது. (பாத்திரம் பெற்ற காதை) பிக்குனியான மணிமேகலை, தெய்வத்திடம் இருந்து தருவிக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கொண்டு ‘பசிப்பிணி’ போக்குகிறாள். அன்னைத்தெய்வங்கள் கனிந்தளித்த அந்தப் பாத்திரம் எல்லாக்காலங்களிலும் நம்முடைய பண்பாட்டில் வாழும் பேரரறம் ஒன்றினைத் திரட்டிக் காவியத்தில் வைக்கப்பட்ட படிமம்.
போர் போன்ற பேரழிவுகளின் போது மனிதர்கள் திரும்பவும் விலங்குகளாகக் கொன்றுண்ண இறங்காமல் எவ்வளவு மானுட அறங்களைப் பற்றிக் கொண்டு தாக்குப் பிடிக்கின்றார்கள் என்பதை இலக்கியம் எல்லாக் காலங்களிலும் கவனிக்கிறது. அதற்கான இலட்சிய வடிவங்களை மொழிக்கு அளிக்கிறது. கவிதையில் நிலைபெறச் செய்கிறது. குறிப்பாக அது அன்னையரை அன்னத்தின் தெய்வங்களாக ஆக்கியிருக்கிறது. ஒருவகையில் அன்னையரை நோக்கி அல்லது பெண்களை நோக்கி உணவை அழுத்துவது அவர்கள் வெறுமனே சமையலுக்கானவர்கள் என்ற பழைய ஆண்மைய ஒடுக்குதலை நியாயப்படுத்துகிறதோ என்ற துணுக்குறல் எழலாம். அந்த வகையான விடுதலையும் இதனுடன் இணைந்ததுதான். அன்னையரிடம் இருப்பது ‘அளித்தலின்’ அறவுணர்ச்சி. பெற்று அளிப்பதால், முலையூட்டுவதால் அவர்களுக்கு இயல்பிலேயே வந்து சேரும் பேருரித்து. அதன் பொருள் அவர்கள் சமைப்பவர்கள் என்பதல்ல. மணிமேகலை சமையல்காரியல்ல. காவியத்தின் தலைவி. இலக்கியம் இலட்சிய வடிவமாக அவளையே நிறுத்துகிறது. பிருத்வி ஏவ மாதா (Prithivi eva Mata) என்றொரு வேதகாலச் சுலோகம் உள்ளது. பூமியே முதல் அன்னை என்பது அதன் பொருள். புல்லுக்கும் புழுவிற்கும் கூட அவளே உணவளிக்கிறாள். அன்னமே அவளுடைய முதன்மையான மொழி. அதனாலேயே அவள் அன்னை.


