பிரிவெனும் இறப்பும், இறப்பெனும் பிரிவும் | பழம்பாடல் 10

0
100

வன்னியில் நிகழ்ந்த இறுதிப் போருக்குப் பின்னர் நாங்கள் தங்க வைக்கப்பட்ட எங்களுடைய நலன்புரி முகாமின் நடுவில் இருந்த பிளாக்கில் ஒரு கல்லறையிருந்தது.  வெறுங்கையால் மண்ணை அகழ்ந்து  தன் மகளிற்காக ஒரு தாய் கட்டியது.  அதற்குள் அவள் புதைக்கப்பட்டிருக்கவில்லை. நான்கைந்து பிளாக் தள்ளி இருந்த கூடாரத்திற்குள் அவள் வசித்தாள்.  அத்தனை ஆயிரம் பேர் அடைக்கப்பட்ட முகாம் என்பது அன்றாடம் மனுஷ்ய நாடகங்கள்  சாதாரணமாக நிகழும் இடமாகவிருந்தது. அப்படி ஒன்றுதான் அந்தக் கல்லறையும். தாயும் அவளுடைய இளம் பெண்ணும் கூடாரமொன்றினுள் வசித்தனர். தகப்பனும் மூத்த மகனும் திருகோணமலை முகாமில் இருந்தனர்.  தாய்க்காரி மகளை எப்பொழுதும் தன்னருகிலேயே வைத்துக் கொண்டிருப்பாள்.  கழுத்தில்  சங்கிலி ஒன்று போடாத குறைதான். அந்தப் பெண் அழகாக இருப்பாள்.   துடுக்கும் விழைவும் கொண்டவளும் கூட. முகாமில் இருந்த விடலைப் பையன்கள் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். தாய்க்காரி தன்னுடைய பிரசன்னத்தை அப் பெண்ணைச் சுற்றி ஓர் பெரு மதிலைப் போல் எழுப்பியிருந்தாள். போதாதற்கு  ஓர் அழகான பெண்ணைப் பெற்று விட்டேன் என்ற தம்பட்டமும் அவளிடம் இருந்தது. பெண்ணைப் பொதுவில் சிரிக்கக் கூட விடமாட்டாள். பார்வையால் உறுக்கிக் கொண்டிருப்பாள். உண்மை நிலவரத்தை விடவும் சற்று மிகையாகவே அவளுடைய பொன் குஞ்சைச் சுற்றும்  வல்லூறுகள் உண்டு என்று நினைத்துக் கொண்டாள். என்னுடைய அம்மாவிடம் ஒருமுறை கதைத்துக் கொண்டிருக்கும் போது  ’எனக்கு உவளிலைதான் பயம்’ என்றாள். ஒரு தாயின் பயமும், பெண்ணின் எச்சரிக்கையுணர்வும் அவளிடம் இருந்தது.  அதோடு தன்  மகளின் விழைவை  தாய்மாரளவிற்கு யார் அறிந்திருக்க  முடியும். தகப்பனும் மூத்தவனும் இங்கே வந்து சேரும் மட்டும் இந்தக் ’குமரைக்’ கட்டிக்காக்க வேண்டும் என்பது அவளுடைய முழு நேரக் கவலையாகவிருந்தது. எவ்வாறு உடுத்த வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும், எங்கே சிரிக்க வேண்டும் என்று மகளிற்கு ’இடித்துச் சொல்லிக் கொண்டே’ இருந்தாள். கொஞ்ச நேரம் அவர்கள் இருவரையும் பார்த்தால் தாயின் மீது கோபமும் பெண்ணின் மீது பரிவும் எழும். தாய் என்ன சொன்னாலும், அவள் முகம் கோணாமல் அப்படியே இருந்தாள். சம்மதிக்கிறேன் என்ற  இலேசாக ஆடும் தலையைத் தவிர அப்பெண்ணிடம் எந்த  உணர்ச்சிசார்ந்த அசைவுகளும் தென்படாது.  அளந்து சிரிப்பாள், கதைப்பாள். தாய் அவளிற்கு  கொடுத்திருந்த  பயிர்ப்புணர்வு, அவளுடைய முகத்தை புகட்டிய மருந்து பிரக்கேறும் குழந்தையைப் போலாக்கியது.  தாய் அவளைச் சுற்றி எழுப்பியிருக்கும் சுவர்களே அவளிற்கு அங்கிருந்து போ என்று  சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

ஒரு சனிக்கிழமை அதிகாலைக் கருக்கிருட்டில்  எழுந்து  இளைஞன் ஒருவனுடன் சென்று விட்டிருந்தாள். அங்கிருந்து நான்கைந்து பிளாக்குகள் தள்ளி அவனுடைய கூடாரம் இருந்தது.  உலகின் மிகக் குறுகிய தூரமுள்ள உடன்போக்கு  அதுவாகத்தானிருக்கும்.  அந்தப் பிருத்விராஜனை எங்கே சந்தித்தாள், எப்படிக் காதலில் விழுந்தாள், எப்படி அவ்வுறவை வளர்த்தெடுத்தாள்,  எப்படி  அவளைக் கொண்டு போனான் என்பதெல்லாம்  முகாம்  மூடப்படும் வரைக்கும் அவர்கள் இருவரும் மட்டும் அறிந்ததாயிருந்தது. முழுக்க முழுக்க அவளுடைய லீலையாகத்தானிருக்க வேண்டும் என்று அவளுடைய தாய்க்காரி மண்ணள்ளித்தூற்றினாள். அது எவ்வாறு என்று வெகுநாட்கள் பிடிபடாமல் இருந்தது. நான்   வளர்ந்து வந்து ஒரு பெண்ணைக் காதலிக்கும் மட்டும்  அதுவொரு பெரிய மர்மாகவே நீடித்தது. 

அன்றைக்கு அப்பெண், முகாமில் இருந்த  மரத்தடிச் சூலம் ஒன்றின் முன் மஞ்சள் முடிந்த கயிற்றைக் கட்டிக்கொண்டு  அன்றைக்குக் காலையில் தாயை எதிர் கொண்டது வேறொருத்தி. அன்றைக்கு அவள் தாய் மேல் கொட்டிய சொற்களின் வெப்பியாரத்தோடு தன்  கூடாரத்திற்கு வந்தவள்,  செந்நரி நண்டுப்பொந்தை அகழும் மூர்க்கத்துடன்  மண்ணை அகழ்ந்து  அக்கல்லறையைக் கட்டினாள். இரண்டு சலாகைகளை எடுத்து வந்து  சிலுவையாக்கி நட்டாள். காட்போட் மட்டை ஒன்றில் மகளின் பெயரை எழுதி அதில் தொங்க விட்டாள். பக்கத்தில் இருந்தவர்கள் தடுக்கப்போய், சமாதானம் செய்யப் போய் மொக்கேனப் பட்டுத் திரும்பி வந்தவனர். அவமானங்களின் தெய்வம் அவளில் எழுந்திருந்தது. அவளிடம் போய் காதைப் பொத்திக் கொண்டு திரும்பி வரவேண்டியிருந்தது. ஆட்கள் யாரும் நெருங்காவிட்டால் வானத்தை வைது கொண்டிருந்தாள். தலையில் வாளி நிறையத் தண்ணீரை மொண்டு வந்து மூன்று முறை ஊற்றி முழுகிப் தன் பெண்ணைக் காடாற்றினாள். தன் ஒரே பெண் பிள்ளை செத்துப் போனதை  அறிவித்தாள். அவளும் ஆழமாக அதை நம்பத்தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் தவறாமல்  தன்  கல்லறைக்குப் பூ வைத்து கண்கலங்கும் தாயை  தண்ணீர் அள்ளப்போகும் வழியில் சில நிமிடங்கள் நின்று மகள்காரி பார்த்து விட்டுச்செல்லும் காட்சியே கொஞ்ச நாளில் சாதாரணமாகிப் போனது.  முகாமின் அடிப்படை இயல்பே எவ்வளவு  பெருஞ்சிக்கலும், நாடகமும் மிக இயல்பென ஆகிவிடும் என்பதுதான். 

….

கடைச் சங்க காலத்தைச் சேர்ந்த  இலக்கியமான ஐங்குறு நூறு  எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இதில்  அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த நூறு  பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டன. அதில் பாலைத்திணைக்குரிய பாடல்களை ஓதலாந்தையார் என்ற புலவர் பாடியுள்ளார். உடன்போக்கு பாலைத்திணைக்குரிய ஒழுக்கம். ஓதலாந்தையார் அதைப்பாடும் போது மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து என்ற பகுதியில் உடன்போக்கில் சென்ற தம் மகளை எண்ணி  ஈன்ற அன்னையும், வளர்த்த செவிலியும் வருந்துமாறு பாடல்களை அமைத்திருக்கிறார். அதிலொரு பாடலில் தாயின் நெஞ்சணல் இவ்வாறு சொல்லப்படுகிறது.

என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை

நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு

அழுங்கல் மூதூர் அலரெழச்

செழும்பல் குன்றம் இறந்த என் மகளே. 

என்னை  நினைத்தாளோ இல்லையோ? அவன் ஒருவாறு அவள் நெஞ்சைத் தேற்றிக் கொண்டு காளையைப் போன்றவனான அவன் காதலனுடன் சென்று விட்டாள். இப்பொழுது இந்த ஊர் புறம் பேசத்தொடங்கும் போது அவளோ இந்த மலைநாட்டை நீங்கிச் சென்றுவிட்டாள்.  என்று தாய் புலம்பும் இடத்தில் ’ குன்றம் இறந்தவ என் மகளே’ என்றவள் விழிக்கிறாள். இங்கே இறத்தல் என்பது நீங்கிச் செல்லல் என்ற பொருளில் வருகிறது. இப்பாடலில் மட்டுமல்ல வேறு சில பாடல்களிலும் இப்படி அமைவதை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.  இணையத்தின் உதவியுடன் அவற்றை மீண்டும் தேடினேன். கிடைத்தன. அள்ளூர் நன்முல்லையார்  தலைவன் நாடு நீங்கிச் சென்றதை நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே என்றும் ஊண் பித்தையார் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே என்கிறார். எல்லாப் பாடல்களிலும்  நீங்குதலையோ பிரிதலையோ சொல்லும் போது இறந்தோர் என்றே பாவிக்கப்படுகிறது. இன்றைக்கு மொழியில் இறப்பு என்பது சாவையே குறிக்கிறது.  நீங்குதலில் இருந்து சாவு என்ற அர்த்தத்திற்கு  ஒரு சொல் வந்து சேர்வது என்பது அது பயின்று வந்த அத்தனை காலத்தின் பண்பாட்டின் அலைகளினால் மோதி மோதி  கரைத்து வரப்பட்டிருக்க வேண்டும். நாம்  இன்றைக்குப் பயன்படுத்தும் எந்தப் பழைய சொல்லும், மொழியில் நிலைக்க வேண்டும், குறிப்பாக அன்றாட  மொழியில் நிலைக்க வேண்டும் என்றால் அது வரலாற்றின் பெருக்கை எதிர் கொண்டு மீண்டதாகவே இருக்கும்.  அவ் ஒற்றைச் சொல்லில் அம்மொழி நிகழ்ந்த சமூகத்தின்  பண்பாட்டு வரலாறும் பொதிந்து இருக்கிறது.  எனவே பிரிவை எது சாவாக மாற்றியது  என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது.  அன்றைக்கு அந்தத் தாய் தன் பெண்ணின் பிரிவை ஒருவகை மரணமாகவே பாவனைப்படுத்தினாள். வேறு காரணங்கள் இருந்தாலும் முதன்மையானது பிரிவின் உள நிலைதான் அங்கே நிகழ்ந்தது.

சங்கப் பாடல்களில் ஏதேனும் அருட்டுணர்வைத் தரும் விசயங்களைக் கண்டால் நேரடியாக சங்கமருவிய காலத்தில் அற நூல்களிலும் , நீதி நூல்களிலும் குறித்த சொல்லோ, கருத்தோ எவ்வாறு பயன்பட்டிருக்கிறது என்று சென்று பார்ப்பேன். முதன்மையாகத் திருக்குறளில் ஐய்யன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். காமத்துப் பாலில் பிரிவாற்றாமைக்கு  தனியதிகாரம் உண்டு.  அதுவும் முதல் குறளே நெஞ்சைக் கரைத்து விடும்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

தான் காதல் கொண்டவரிடம் சொல்லுமாறு அமைந்த குறள்.  உறுதியான தெளிவான  ஒரு குரலில், நீ என்னைப் பிரிந்து செல்லமாட்டாய் என்றால்  என்னிடம்  சொல்,  அப்படியில்லை  போகத்தான் போறேன் என்றால்  நீ திரும்பி வரும் போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சென்று சொல்லிவிட்டுப் போ  என்கிறது. 

முதல் குறள் இவ்வாறிருக்க கடைசிக் குறள்

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

பிரிந்த துயரையும் , நோயையும்  பொறுத்துக் கொண்டு, கடந்து சென்று வாழ்பவர் பலர் இருக்கின்றனர், என்று  குறளை முடித்து விடுகிறார். பலர் அப்படியிருக்கலாம்.  ஆனால் நான் நிச்சயமாக செத்துத்தான் போவேன் என்பதுதானே சொல்லாமல் விட்ட இடைவெளிக்குள் நிரப்ப வேண்டியது. 

இங்கே இப்படியிருக்க  காவியங்களில் என்ன நிலைமை என்று பார்க்கத் தேடினேன்.  தமிழின் பெரும்பாலும் எல்லாக் காவியங்களிலும் பிரிவு உண்டு.  கம்பராமாயணத்தில் வாலிவதைப்படலத்தில் இராமன் போர் நெறி தவறி தன் மேல் அம்பு தொடுத்ததை  வாலி இவ்வாறு சொல்கிறான். 

ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த

தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை

ஏன் இவ்வாறு செய்து விட்டாய், இத்தகைய ஓர் அநீதிப் போரை ஏன் நிகழ்த்தினாய்?  உன்னுடைய  உயிரைப் போன்றவளான  சனகன் பெற்ற அன்னத்தை; உன் தேவியைப் பிரிந்த திகைப்பினால் இவ்வாறு செய்து விட்டாயா? என்கின்றான்.   

பிரிவைச் சாவாக இலக்கியம் உருவகிக்கிறது. மெலோட்டமாக மரணமும் ஒருவகைப் பிரிவே அதனால் அப்படி மாறியிருக்கலாம் என்று வாதிட முடியும்.  ஆனால் ஒரு சொல்லை அப்படி இலகுவாக அசைத்து விட முடியாது. ஒரு கடும் பாறையை  ஆற்றுப்பிரவாகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மோதித் தேய்து தன் போக்கிற்கு ஏற்றால் போல் மாற்றி எடுப்பது போன்றது அது. ஏனெனில் ஒரு சொல்லை பேச்சு மொழியினால் பயிலமட்டுமே முடியும். அதன் பயன்பாடு சார்ந்த பிரயோகத்தை நிகழ்த்தும் வல்லமை அதற்குண்டு. ஆனால் ஒரு சொல்லுக்கு  பொருளோ, படிம நிலையோ அளிக்கக் கூடியது இலக்கியம் ஒன்றே.   அது வாய் மொழி சார்ந்த நாட்டார் பாடலாகவும் இருக்கலாம்,  அணியிலக்கணத்தில் அமைந்த காவியமாகவோ இருக்கலாம். 

நவீன மொழியியலில் லாங் (Langue) மற்றும் பரோல் (Parole)  என்ற இரண்டு அம்சங்கள் கவனப்படுத்தப்படும். லாங் என்பது  மொழியின் அடிப்படையான வடிவம், ஒருவகையில் மொழி இலக்கணம் என்று சொல்லலாம். அதாவது மனித மூளையில் இருக்கும் ஒரு கருத்தியல் வடிவம் (Abstract System) பரோல் என்பது அதன் பிரயோக வடிவம் பேச்சு மொழி என்று சொல்லலாம்.  பேச்சு மொழியை அன்றாட பாவனையே தீர்மானிக்கவும் மாற்றவும் முடியும்.  அது தனி நபர்கள், அவர்களுக்கிடையிலான தொடர்பாடல்கள் சார்ந்தது. ஆனால் லாங் என்பதைச் சுலபமாக மாற்ற முடியாது. அதை மொழி மாற்றிக் கொள்ளவோ புதிய அர்த்தங்களைப் பெறவோ அம்மொழி நிகழும் பண்பாட்டினை உருவாக்கி அளிக்கக் கூடிய ஒன்றினாலேயே சாத்தியம். இன்றைக்கு நாம் வாழும் பண்பாட்டின் எல்லாக் கூறுகளிலும்  இலக்கியம் உருவாக்கி அளித்த அடிப்படைகள் உண்டு. எனவே சங்ககாலத்தில்  பிரிதல் அல்லது நீங்குதலுக்குப்  அர்த்தமாக்கப்பட்ட சொல் சாவு என்ற  பயன்பாட்டுப் பொருளை அடைவதற்கும் நிலைப்பதற்கும் அது தொடர்ச்சியாக லாங்கைக் கையாளும் இலக்கியத்தினால் தீண்டித்தீண்டி தன் புதுப்பொருளை ஏற்றிருக்கின்றது. ஏனெனில் தனிமனிதர்கள் தமக்குள் கதைத்து விட்டுப் போகும் எதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பொருள் கொண்டு நிற்பதில்லை. அப்படி நிற்க வேண்டும் என்றால் அவை இலக்கியத்தினால் அதற்கேயான மொழியினால் பொளிந்தெடுக்கப்பட வேண்டும்.  அப்பொழுதுதான் அது மானுட நனவிலிக்குள் செல்கிறது. லாங்கின் பகுதியாக நிலைக்கிறது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் ஒன்றை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம் என்றால் அது  தொடர்ந்து இலக்கியத்தில் பயன்பட்டிருக்கிறது என்றே பொருள். அதில் நம்முடைய வரலாறு, மரபு, தத்துவ விவாதங்கள், என்று பண்பாட்டின் எல்லா வளர்ச்சிக் கூறுகளின் பங்களிப்பும்  நிகழ்ந்திருக்கும். 

பழம்பாடல் 01

பழம்பாடல் 02

பழம்பாடல் 03

பழம்பாடல் 04

பழம்பாடல் 05

பழம்பாடல் 06

பழம்பாடல் 07  

பழம்பாடல் 08

பழம்பாடல் 09

பிரிவெனும்  இறப்பும்,  இறப்பெனும் பிரிவும் | பழம்பாடல் 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here