பெருவீதிகளில் இம்முறை பருவ அறுவடைக்குப் பின்னர் நெல்லைக் காயப் போடும் விவசாயிகள் மீது சமூக வலைத்தள கும்பல் தாக்குதல் தொடுத்துள்ளது. வீதியில் பயணிக்க முடியவில்லை, விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புள்ளது, நடக்கிறது என்பதான குற்றச் சாட்டுகளும் குத்தி முறிவுகளும். இதில் இருக்கும் அடிப்படையான பிரச்சினை நெல் காயப்போடுவதோ பயணச்சிக்கல் களோ அல்ல, சமூக வலைத்தளங்கள் தான்.
யாழ்- முல்லைத்தீவிற்கு மாறி மாறி பயணம் செய்வதால் அன்றாடம் வீதிகளில், இறைந்து கிடக்கும் நெல் மணிகளைப் பார்த்துப் பார்த்து பூரித்துக் கொண்டே மோட்டார் சைக்கிளை நிதானமாக ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். தவிர தினமும் காலையில் நடைப் பயிற்சியின் போது அக்காட்சிகளை அருகே நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டு போவேன். கூலியாட்களும் நெல்லைப் பரவி இரண்டு மூன்று நாட்களாக வெறும் கால்களாலும் நெல் வாரிகளாலும் வெய்யிலில் நின்று கிளறி விட்டு, மழை வந்தால் தடுதாளிப்பட்டு அவற்றைக் கூட்டி நெல் அள்ளுவதற்கே வடிவமைத்த கோலியில் அள்ளி மூட்டையிட்டு சணலும் ஊசியும் கொண்டு மூட்டை கட்டி ஏற்றுவதும். ‘மழைக்குணம்’ இல்லாவிட்டால் இரவும் நெற் குவியல்கள் மேலே அரிக்கன் இலாம்புகளை வைத்துக் காவல் இருந்தார்கள்.
நெல் காயும் போது மந்திகளும், தாட்டான்களும், மைனாக்களும், புறாக்களும் அவர்களோடு கண்ணெட்டும் தூரத்தில் வீதிக்கு மிதந்து கொஞ்சம் நெல் எடுத்துத் தின்பதும் அதைக் காவல் செய்பவர்களும் அவற்றின் சிறிய வயிறுகள் கோள்வது அவற்றின் உரித்தே என்பது போல் கண்டு கொள்ளாமல் காய வைப்பதில் மட்டும் கண்ணாய் இருந்தனர். அந்தக் காட்சி இந்த நெல் வெட்டும் இயந்திரங்கள் வந்த பிறகு உருவாகி வந்ததைப் போலில்லை. ஆயிரமாயிரம் வருடங்களாக இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் பருவ நிகழ்வின் பகுதியாகவே தெரிந்தது.
நடைப் பயிற்சியின் போது அங்கு காவல் இருந்து நேரத்திற்கு நேரம் நெல்லைக் கிளறி விட்டுக் கொண்டிருந்த விவசாயிகளிடமும் அது சார்ந்த தொழிலாளர்களிடமும் உரையாடிக் கொண்டிருந்தேன்.
நெல் வெட்டும் இயந்திரம் வந்ததன் பின்னர் அரிவி வெட்டு சடங்குகளும் அது சார்ந தொழில்களும் அற்றுப் போயின. சம்பிரதாயமாகப் புதிர் எடுப்பது மட்டும் பெரும்பாலான இடங்களில் எஞ்சியிருக்கிறது. அரிவி வெட்டுவது, சூடு வைப்பது, சூடடிப்பது, தூற்றுவது போன்ற வேலைகளை இயந்திரங்களே செய்கின்றன. பாரம்பரியமான இது சார்ந்த தொழில் வாய்ப்புகள் அற்றுப் போனாலும் ஒப்பீட்டளவில் விவசாயிகளுக்கு வருவாயுடன் நேர விரயமும் தடுக்கப்படுகிறது. அரிவி வெட்டும் இயந்திரம் வந்த பிறகு சூடு வைப்பதோ, சூடு அடிப்பதோ நின்று போனதால் நெல்லை பெருமெடுப்பில் கார்பெட் வீதிகளில் காயப்போட வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடயூறு என்ற நிலைமை இருக்கிறது. பொருத்தமான ஒழுங்குகள், சமிக்கைகள், ஆட்பிரசன்னங்கள் கொண்ட விதத்தில் நெல் காயப் போடும் போது இந்த பிரச்சினைகள் இருக்கின்றன.
என்றாலும் இதில் உள்ள பிரச்சினை பாரதூரமான சமூக அநீதியோ, இடையூறோ அல்ல. அது சமூக வலைத்தள மந்தர்கள் கொண்டு வந்திருக்கும் பிலாக்கணம் மட்டும் தான்.
பொதுப் புத்தியில் இருக்கக் கூடிய கருத்துக்கள் பெரும்பாலும் உதிரிகளின் எளிய பகுத்தறிவுடன் அணுகக் கூடிய விதண்டா வாதங்களும் வெறுமனே தங்களை முன் வைக்க சமூக, பண்பாட்டு விடயங்களை வம்பிழுக்கும் செயற்பாடுகளாக மாறுகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளத்தில் பொழுது போக்க கூடுகின்ற பெரிய கும்பல் இத்தகைய எளிய தர்க்கங்கள், அறிவுரைகளுடனும் ‘சமூக ஆர்வலர்’ போர்வையைச் சுற்றிக் கொண்டும் குவிந்து விடுகிறது.
இந்த நெல் விசயத்தில் எனக்கு முதன்மையாக எழுந்த கேள்வி நெல் காயப்போடுபவர்களையும் சரி அங்கிருக்கும் நெல்லையும் அது சார்ந்த பண்பாட்டையும் இவர்கள் தூரப்படுத்தி அவர்களைச் சத்துருக்களாக ஆக்கிக் கொள்வதன் தார்மீகப் பிரச்சினையும், உளச்சிக்கலும் தான் என்ன ?
நீங்கள் சந்திக்கு சந்தி ஆமிக்காரன் சோதனைச் சாவடியும், மறியல் துலாக்களும் வைத்து மறிக்கும் போது குனிந்த தலை நிமிராமல், சீறிச் சினக்காமல் பம்மிக் கொண்டு போன ஆட்கள் தானே ? போர்க் காலத்தில் இராணுவத்தினது பெரும் ‘கொன்வேக்கள்’ கடந்து போகும் போது மணிக்கணக்கில் காத்திருந்தவர்கள் தானே? இப்பொழுது கடும் சனநாயகமும் சுதந்திரமும் நிலவுவதால் இந்த எளிய விவசாயிகளையும், நீங்கள் அள்ளித்தின்னும் சோற்றை தனக்குள் வைத்திருக்கும் நெல்லும் உங்கள் பயணத்தை இடையூறு செய்து விட்டதா ?
இந்த இணைய மந்தையர் கண்ணைத் திறந்து பார்க்கட்டும். அங்கே கிடப்பது பொன். நம்முடைய செல்வம். நம்முடைய உணவு. நம்முடைய தெய்வங்களில் ஒன்று. இந்தப் பண்பாட்டின் அடிப்படையான உற்பத்தி. அதைப் பார்க்கும் போது பொற்குவியலைப் பார்க்கும் உள எழுச்சியும் மகிழ்வும் வரவில்லையா? இறங்கி அப் பொற் குவியலை ஒரு பிடி எடுத்துப் பார்க்கத் தோன்றவில்லையா? வாழும் போதே செத்துப் போகாதீர்கள்.
ஏன் நாங்கள் மெதுவாகப் போனால் தான் என்ன ? பெரு நகரங்களில் வாகன நெரிசலில் காத்திருக்காமலா போகிறோம்? போருக்கு முன்பு இந்த வீதிகள் இருந்த நிலைமைகளை அறியாத தலைமுறைகளும் இதே பேச்சு. இராணுவ செயின் புளக்குகளுக்கான வீதிகளவை. அதில் தான் பேரூந்திலும் சைக்கிளிலும் பயணித்தோம். அன்றைக்கு இந்தக் கசப்பு வரவில்லை. ஏன்?
வருடம் முழுவதும் நடக்கப் போகும் நெல் அறுவடைகளா இவை ? ஒரு சில மாதங்களுக்கு நம் பயணங்களை இந்த விவசாயிகளுக்கும் சேர்த்து திட்டமிட்டால் தான் என்ன?
வெறுமனே அங்கே அவர்கள் நெல்லைப் போட்டு விட்டு போய் விட வில்லை. அங்கேதான் நிற்கிறார்கள். அவர்கள் முறையாக அதைச் செய்ய வில்லை என்றால் இறங்கி அவர்களுடன் கதையுங்கள். அங்கே மேய வரும் குரங்குகளுக்கும் அச்சனங்களுக்கும் உள்ள புரிதல் கூட உங்களுக்கு இல்லை என்றா எடுத்துக் கொள்வது ?
அங்கே சினந்து கொண்டு உள்ளே கசந்து கொண்டே வீட்டிற்குச் சென்று சமூக வலைத்தளங்களில் தோன்றி பகுத்தறிவுப் பாடம் எடுக்கிறோம். சமூக வலைத்தளம் இப்படியொரு மனநிலையை ஒவ்வொன்றிலும் உண்டு பண்னிக் கொண்டே இருக்கிறது. அது ஒரு பெருந்தரப்பை மந்தர்களாக ஆக்கிக் கொண்டு தன் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது நம்முடைய வீதி. நம்முடைய நெல். அது இங்கேதான் காய வேண்டும். இங்கே ஏன் கமக்காரர்கள் பெரிய பிரதான வீதிகளைத் தெரிவு செய்கிறார்கள் என்றால் பிரதான வீதிகள் மட்டுமே கார்பெட் போடப்பட்டுள்ளன. உள்ளூர் வீதிகள் ஒழுங்கைகளில் காயப்போடுவது சாத்தியமில்லை.
குடும்பங்களாக வீதிகளில் நெற்காவல் இருக்கும் சனங்களுக்கு தாங்கள் வீதிகளின் பக்கமொன்றைப் பிடித்து இவற்றைப் போடுவது சட்டப் படி பிழை என்றும், இடைஞ்சல் என்றும் தெரியும். ஆனால் அவர்கள் இந்த உலகிடம் கேட்பது அதன் தார்மீகமான சகிப்பையும் உதவியையும் தான்.
நுண்மையான எளிய பண்பாட்டு இசைதல்களின் அழகே அதில் எந்த சட்டமோ, அதிகாரத் தரப்போ தலையிடாமல் மானுடப் புரிதலில் நிகழ்வதுதான். இதற்கு அதிகாரிகள் எங்கே சட்டம் எங்கே என்று கூச்சல் போடாதீர்கள். நாகரீகமடைதல், பண்படுதல் என்பதெல்லாம் இந்த இசைவுதான்.
தவிர இந் நெற்காவல் மிகக் குறுகிய காலத்துக்குரியது. வருடம் முழுக்க அவர்கள் வீதிகளில் பாதியைப் பிடித்துக் கொள்ளப் போவதில்லை என்பதும் கூட நாம் அறியாததல்ல. நண்பர் கிரிசாந்தும் நானும் இந்தக் காட்சிகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது. ‘இப்ப இந்த வீதிகளிலை ஒண்டில நெல் திருவிழா எண்டு அறிவிச்சு ஒரு பந்தலைப் போட்டு ஒரு பண்பாட்டு அமைப்பு இறங்கி இந்த விசயத்தை விழிப்புணர்வூடுற ஒரு நிகழ்வாய், கொண்டாட்டமாய் நிகழ்த்த வேலை செய்ய வெணும் எண்டார். செய்யத்தான் வேணும். ஆனால் இன்றைக்கு போருக்குப் பிறகு தோன்றி வந்த பண்பாட்டு அமைப்புகள் ஏராளம் சமூக வலைத்தளங்களின்ர கேளிக்கைப் பொதுப் புத்திக்குள்ள கரைஞ்சு போய் விட்டன. அல்லது அரசசார்பற்ற அமைப்புகளாக மாறி அதே வலைத்தளங்களிலை தமது வியாபாரத்தைப் பார்க்கின்றன.
தன்னியல்பான அறிவியக்கம் சார்ந்த பண்பாட்டு அமைப்புகளின்ர நிலை என்ன ? அவை தோன்ற வேண்டியதும் இயங்க வேண்டியதும் சமூக வலைத்தளங்களுக்கு வெளியில். இதுதான் அடிப்படையான முதல் நியதியா இருக்க வேண்டும். மெய்யான பண்பாட்டைப் பார்க்கிற கண்களுக்கு சமூக வலைத்தளங்களிலை எந்த இடமும் இல்லை. அதுக்கு எடுபடுவது சந்தேகமே இல்லாமல் ஒருவகையில் நம்முடைய பண்பாட்டுத் தற்கொலை.




