கழிநீரும் இலக்கியமும் | பழம் பாடல் 01

0
127

எனக்கு சில வாசனைகள் ஏன் பிடிக்கின்றன, அவை என்ன செய்கின்றன என்று புரிபடாமலே அவை பிடித்துப் போய் தலைக்குள் ஏறிவிடும். அவை நறுமணமாக இல்லாவிட்டாலும் கூட.  சிறுவயதில்  அம்மா கழிநீர் வாளிக்குள்  சோறுவடித்த நீரை ஊற்றுவார்.  அப்பொழுது அதன் வாசனை ஈர்க்கும்.  தன்னிச்சையாகவே அருகில் போய் நிற்பேன்.  சோற்றுக் கஞ்சியின் ஆவி பறக்க அதற்குள் அன்றைக்குப் பிழிந்த தேங்காய்த் துருவல்களை  இடுவார். கஞ்சிக்குள் தேங்காச் சொட்டை இடும் போது எழும் அதே வாசனை ; சற்றுத் தூக்கலாக வரும்.  அங்கேயே நின்றிருப்பேன்.  யாழ்ப்பாணத்துச் சமையல் அறைகளுக்குள் இருக்கும் கழி நீர் வாளிகள்  பற்றி எழுத வேண்டி வரும் என்று அச்சிறுவன் கனவிலும் நினைத்திரான்.  அது அந்தரங்கமான ஒரு சிறு திளைத்தலாக மட்டுமே இருந்தது.

யாழ்ப்பாணத்து  கிராமத்து  வீடுகளில் சமையலறையில் ஒரு  நீர்க்கலையமோ, வாளியோ இருக்கும்.  காலையில் கொஞ்சம் நீர் ஊற்றி வைப்பார்கள். புகைக்கூட்டிலோ,  காய்கறி வெட்டும் இடத்திற்கு அருகிலோ இருக்கும். அதில் முதலில் சோறு வடித்த கஞ்சியை இடுவார்கள். பின்னர்  காய்கறிகளையோ கீரை வகைகளையோ வெட்டும் போது  எஞ்சும்  தோல், காம்புகள், தண்டுகள்,  இலைகள்,  வெட்டி அகற்றிய காய்கறித் தசைகள்  இடப்படும். கடைசியாக  பிழிந்த தேங்காய்த் துருவல்கள் இடப்படும் தேங்காய்த் துருவல்கள் இடப்பட்டு மிதக்கும் போதுதான் அந்தக் கலவை தன் இரசத்தின் முழுமையை அடையும்.  எங்களுடைய கிராமங்களில் மாடு வைத்திருப்பவர்கள்  மதியத்தில் மாடுகளை அவிட்டுக் கட்டி  தண்ணீர் வைக்கப்போக வேண்டும்.  அப்பொழுது கையோடு   இந்தக் கலையத்தையும் எடுத்துப் போவார்கள். ஊர் வழக்கில் அதற்கு ’கழிநீர்’ என்று  பெயர்.  மதியத்தில் தண்ணீர்  காட்டச் செல்லும் போது அதை எடுத்துசென்று  தண்ணீருக்கு முதல்  மாடுகளுக்கு, குறிப்பாக  சினைப்பசுக்கள், அல்லது பால்  தரும் காலங்களில் உள்ள அன்னைப் பசுக்களுக்கு  ஈணவும் சுரக்கவும்  கழிநீர் அவசியமான நல்லூட்டம்.  கிராமங்களில் இதுவொரு அன்றாட வாழ்க்கைச் சடங்கு. 

தோட்டமோ நெல்லோ விளைந்து  நின்றிருக்கும் காலங்கள் என்றால்  தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளில் கால்நடைகள் பெரும்பாலும் கயிற்றிலேயே நின்று மேய வேண்டும்.  வடமராட்சிப் பகுதிகளில் பருத்தித்துறை போன்ற நகரச்சூழல் கடற்கரை சார்ந்தது. தோட்டங்கள் வயல்கள் வேலிகளும் அறிக்கைகளும் உள்ளவை, மாடுகளோ ஆடுகளோ நுழைய முடியாது. எனவே அவை மேய்ச்சலுக்கு அவிட்டு விடப்படும். காலையில் சென்று பின்னேரம் தாமாகவே   வீடு திரும்பும்.  பருத்தித்துறை தும்பளைப் பகுதிகளில் உள்ள சிறு ஒழுங்கைகளுக்குள்  மதிய நேரங்களில் பெரும்பாலும் எல்லார் வீட்டு வாசலிலும் கழி நீர்  வாளி இருக்கும். மாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்.  மதியம் அங்கே  அவை வைக்கப்படும் நேரத்திற்குச் சரியாக வந்து சேரும்  பசுக்கள் அதை அருந்திச்செல்லும்.

கழி நீர் என்று கூகிளில் அடித்துத் தேடினால், கழிவு நீர்,  மாசுள்ள நீர்,  என்று பொருள் தருகிறது.  அன்னைப்பசுக்கள் பால் சுரக்க வந்து அருந்தும் இந்த நீர் கழிவு நீரா ?  எவ்வளவு முரண் இது. மொழி எதையோ தவற விட்டதால், பொதுமைப்படுத்திக் கொண்டதால் நிகழ்ந்த பிழையோ என்று தோன்றியது. சட்டென்று ஒரு பண்பாட்டு நிகழ்த்தல் அதன் அர்த்தத்தை அமுதென ஆக்கி விடுகிறது. அது கழிவு நீராக பொருள் கொள்ளப்படவே கூடாது. ஒரு எழுத்தாளன் அந்த நியாயத்தை நிறுவாவிட்டால் பிறகேன் வாழ வேண்டும்.  கூகிளைத் திறந்து  கழி நீர் என்று அடித்து எழுமாற்றாகத் தேடினேன்.  கழி நீரைத் தேடும் போது சட்டென்று  ஒத்த ஓசை, வரிவடிவம் கொண்ட சில சொற்களை  கூகிள் காட்டியது. முக்கியமாக ஒரு  சங்கப்பாடலுக்கு இணைப்பைத் தந்தது.  அது   ஐங்குறுநூறில் உள்ள கபிலரின் பாடல். 

அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத்  தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு  உவலை கூவல் கீழ  மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே

பாடல் குறிஞ்சிக்குரியது.  தலைவி தன் தாய் வீட்டிற்குத் திரும்புகிறாள்.   தாய்  அந்நாட்டில் அவள் அருந்திய நீரின் திறத்தை தங்கள் வீட்டின் நீரோடு ஒப்பிடுகிறாள்.   அதில் ஒரு நுண்மையான கேலி இருக்கிறது. ஏனென்றால்  சங்கப்பாடலில்  பாலை நிலம் சார்ந்த  காதல் ஒழுக்கமான  உடன் போக்கில் செல்லும் பெண்ணிடமோ, தலைவனோடு காதல் வயப்பட்ட பெண்ணிடமோ தாயோ செவிலியோ  அவனுடன் போகாதே என்பதை  அவனுடைய  ஊரும் பயணமும் எவ்வளவு கடினமானது என்று நைச்சியமாக இடித்துரைப்பார்கள். கேலியும் இழவும் காட்டுவார்கள். அப்படியான நிறையப்பாடல்கள் இருக்கின்றன. கல்லும் முள்ளும் காடும்  பாலையும் விரிந்த கொடும் பயணம், உன் வாழ்வை அழித்துக் கொள்ளாதே என்று அவளை மடைமாற்றப் பாப்பார்கள்.  இன்றைக்கும் ஊரில் பெண் பிள்ளைகள் காதலித்தால் அத்தைமாரோ, மூத்த பெண்களோ முதலில்  எடுக்கும்  போர்க்கருவி அவன் வீடும் சுற்றமும் ஊரும் பற்றியதுதான்.  ’இஞ்ச ராசாத்தி மாதிரி இருந்தனி அங்கை போய்  துன்பப்படப்போறாய்’ என்று காதுக்குள் ஓதுவார்கள் அவர்கள் வென்றால் அப்பெண் சட்டென்று வெளிநாட்டுக்கு  வரன்பார்த்து அனுப்பப்படுவாள்.  அங்கு பெய்யும் கசட்டுப் பனியும் துன்பமும் அவளுக்குப் புன்னகையுடன் காத்திருக்கும்.  ஆனால் புத்தியுள்ளவள், அல்லது தன் காதலில்   உறுதியாக நிற்கும் பெண் அச்சொற்களை மவுனமாகவோ சொல்லாடியோ வெல்வதும் உண்டு.  இப்பாடலில் இருக்கும் தலைவி அப்படி வென்று சென்றவள். அவள் திரும்பி வந்த போது அவளிடம்  இகழ்சித் தொனியில் எங்கள் வீட்டுத்தண்ணீரை  நினைந்தாயா என்று கேட்கிறாள்.  அதற்கு தலைவி ‘கேள் என் அன்னையே, அவனுடன் செல்லும் போது  அவனுடைய  காடுகளில்  சருகுகள்  விழுந்து மூடிக்கிடக்கும்  சிறிய நீர் கூவல்களில் (சிறு நீர் தேங்கிய பள்ளம்)  மான் நீருந்திச் சென்ற  நீரை எடுத்து அருந்தினேன்.  நம்முடைய தோட்டத்தில் தேனும் பாலும் கலந்த நீரைக் காட்டிலும் சுவையுள்ளது அந்த உவலைக் கூவலில் நின்றிருந்த  ‘கழிலி நீர்’ என்று ஒரே போடாகப் போடுகிறாள்.  கழிலி என்றால் விலங்குகள் நீரருந்திய  சிறு பள்ளத்தை நேரடியாகக் குறிக்கும் பழஞ்சொல்லொன்று. 

திரும்பவும் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தேன். கழிலி நீர்.  அது அசுத்தமான நீராக இல்லை,  மான் உண்ட நீராக, இவள் எடுத்து அருந்தும் நீராக ஆகிறது.  அப்போது அது  சருகுகள் விழுந்த அசுத்தமான குட்டையல்ல, மான்கள் அருந்தும் அவற்றுக்கு அமுதூட்டும் நீர்நிலை. அதற்கு ஒரு தனிச்சொல் இருக்கிறது தமிழில். அது இலக்கியத்தில் வாழ்ந்து  கிடக்கிறது. 

அன்னைப்பசுக்கள்  அருந்தும் கழிநீர் அதற்கு இணையானது தானே என்று தோன்றியது.  கழி நீர் என்பது கழிவு நீரில் இருந்தல்ல, கழிலி நீரில் இருந்தே தன்னைச் சொல்லாக்கியதாகக் கருத வேண்டும் இல்லையா?  அதாவது வெறும் காரணப் பெயராக அல்ல. கவிஞன் தொட்டுச் சொன்ன அவன் தன் அணியை ஏற்றியளித்த நீராக ஆக வேண்டியது இல்லையா?  ஆச்சரியமாக  தமிழில் கலங்கிய நீர் அல்லது கழிவு நீருக்கு இன்னொரு சொல் இருக்கிறது பழந்தமிழில்.  அது கலுழி நீர்.   வெள்ளமோ காட்டாறோ கூழாக்கி எடுத்து வரும் கலங்கிய நீர்.  சேற்று நீர்.  அதற்கு கண்ணீர் எனும் பொருளும் இருப்பது சட்டென்று அந்தச் சொல்லும் கவிதையால் தொடக்கூடியதுதான் என்று தோன்றியது.   இலக்கியம் எல்லாச் சொற்களுக்கும்  எல்லாத்திசைகளுக்கும் வாசல்களைத் திறந்து அளிக்கிறது. 

நெருப்புக்குத்தான் அசுத்தம் இல்லை என்ற சொல் உண்டு.  நமக்கு என்ன இழைக்கிறது என்பதைப் பொறுத்தே நீரின் குணம் அறுதியிடப்படுகிறது.   ஆனால் நீரானது,   தீயிற்க்கும் ஒளிக்கும் இணையான அற்புதம் இல்லையா?  அது  கலங்கலாம், தெளிந்து ஓடலாம், நின்று தேங்கலாம்,  கனத்து இறுகலாம்,  ஆனாலும் அதன் பரிசுத்தம் அதன் பயனில் இருக்கப் போவதில்லை.  இலக்கியம் நீரைத் தெய்வத்துள் வைக்கிறது.  அதைப் புனைந்து விளையாடுகிறது. அணிசெய்து அழகாக, படிமமாக ஆக்கிவிடுகிறது. பண்பாட்டிற்கு அளிக்கிறது. அதற்குச் சொல்லிட்டு அர்த்தங்களால் பெருக்கிக் கொள்கிறது.   சொற்களை பண்பாடு பயன்பாட்டில் இருந்து இழக்கும் போது அதன் வேறுபாடுகளும் பொருளும், அதனால் நிகழ்த்தக் கூடிய அழகும் கவிதையும் தூரம் போய்விடுகின்றன. தாய்ப்பசு  சுரக்கும் பாலுக்கென அளிக்கப்படும்   நீர் எனும் போது அது  கழிவு நீர் என்ற பொருளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து பறக்கிறது. இலக்கியம்  என்பது இந்தப் பறத்தல் பற்றியதுதானே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here