நண்பர்களும் எழுத்தாளர்களுமான கிரிசாந், தர்மு பிரசாத் ஆகியோரின் இரண்டு படைப்புகள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியிடப்படுகின்றன. கிரிசாந்தினுடைய நாவலான ‘கல்விரல்’ தர்மு பிரசாத்தின் குறுநாவலான ‘சிறகை’ ஆகிய படைப்புகள் சென்ற வருடத்தின் இரண்டாம் பாதியில் எழுதி முடிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்பு போன வருடத் தொடக்கத்தில் ‘கொடிறோஸ்’ என்ற குறுநாவலை கிரிசாந் எழுதியிருந்தார். அதை தர்மு பிரசாத் தன்னுடைய ஆக்காட்டி பதிப்பகம் மூலம் வெளியிட்டிருந்தார். சொல்லப்போனால் கல்விரல் கிரிசாந்தின் இரண்டாவது நாவல். அதற்கு முன்பு தத்வமசி என்ற நாவலை எழுதி முடித்திருந்தார். சமகாலத்தில் என்னுடைய ‘தோறை’ என்ற நாவலையும் எழுதத் தொடங்கி சென்ற வருட இறுதியில் முடித்திருந்தேன். தத்வமசியும், தோறையும் வரும் வேனில் காலத்தில் வெளியாகின்றன. இப்படைப்புகளில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ‘எடிட்டர்களாக’ இருந்தோம். தனிப்பட்ட எழுத்தும் கூட்டான வாசிப்பும், கூட்டான விவாதங்களோடும் இந்நாட்கள் செறிவாக மாறின. நிறைவாக அமைந்தன.
இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பொது நிகழ்வொன்றில் கிரிசாந்துடன் பழக்கம் ஏற்பட்டது. அன்றைக்கு அவர் ’தஸ்தெயவெஸ்கி வாசித்திருக்கிறாயா?’ என்று கேட்ட கணத்தில் இருந்து எனக்கு தீவிர இலக்கியம் அறிமுகமானது. கிரிசாந்தை நான் சந்திக்கும் போது அவருடைய மேம்பட்ட வாசிப்பும் அவருடைய கவிதைகளும், சுபாவமும் என்னை அவருடன் இணைந்து பயணிக்க வைத்தது. சாண்டில்யன், சுஜாதா என்று வாசித்துக் கொண்டிருந்த என்னுடைய வாசிப்பின் எல்லைக் கற்களை அகட்டி ஒரு சகதோழனாக ஒரு வகையில் ஆசிரியராக உடனிருந்தார். இருக்கிறார். எங்களுடையது சகமார்க்கம்.
இலக்கியத்தின் அடியாக தொடங்கிய எங்களுடைய பயணம் பின்னர் சமூக செயற்பாட்டுதளங்களில் விரிந்தது. போராட்டங்கள், பண்பாட்டு இயக்கங்கள், இலக்கிய இதழ்கள், மரபுரிமை, கிராம நூலகங்கள், பிரசுரங்கள் சார்ந்த வேலைகளோடு இணைந்து பயணித்தோம். கிரிசாந் அடிப்படையில் கவிஞர். இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவருடைய புனைவுகளை வாசிக்கும் போது இப் புரிதல் வாசகர்களுக்கு சிறுமஞ்சாடியேனும் உதவக்கூடும்.
தர்மு பிரசாத்துடன் சாதியம் பற்றிய இணைய விவாதத்தில் இருந்து அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் ஆக்காட்டி இதழாசிரியராக. என்னுடைய கதைகளை, கட்டுரைகளை அவர் பிரசுரித்து வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அவருடன் இலக்கிய உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. குறிப்பாக புனைவுகள் பற்றி அன்றைக்கும் இன்றைக்கும் இருவரும் மணிக்கணக்கில் பேசுவோம். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ’மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ தொகுப்பை தர்மு பிரசாத் ஆக்காட்டி மூலம் வெளியிட்டார். பின்னர் என்னுடைய முதல் நாவலான ‘நகுலாத்தையை’ எழுதும் போதும் என்னுடன் உரையாடலில் இருந்தார். அப்பொழுது நாவலைப் படித்து விட்டு சில அபிப்பிராயங்களைச் சொன்னார். குறிப்பாக ஆசிரியரின் மொழியை எழுத்து வழக்காக மாற்றி செறிவாக்கினால் நாவல் தன் பரிமாணங்களை இன்னும் அகட்டிக் கொள்ளும் என்று சொன்னார். முதல் நாவலை எழுதி முடித்த மிதப்பிலும் எடிட்டிங் பற்றியோ நாவலின் வடிவம் பற்றியோ பெரியளவில் பரிச்சங்கள் குறைவாக இருந்ததாலும் நாவலை இன்னும் மேம்படுத்தத் தோன்றவில்லை. நாவல் நான் நினைத்ததை விடவும் பரவலாக வாசிக்கப்பட்டது. கவனப்படுத்தப்பட்டது. அப்படியொரு கவனம் கண்டிப்பாக ஏற்படும், என்றாலும் இன்னும் செறிவாக்கி இருக்கலாம் என்று தர்மு பிரசாத் சொன்ன வார்த்தைகள் பின்னர் நாவல் பற்றிய கூட்டு உரையாடல் தீவிரமான வாசிப்பு என்பவை மேம்படும் போது ‘சரிதான்’ என்றே தோன்றியது. நகுலாத்தைக்குப் பிறகு திரும்பவும் சமூக செயற்பாடுகளில் மூழ்கிப்போனேன். அவற்றில் இருந்து வெளியேறும் மட்டும் வாசிப்பும் எழுத்தும் எங்களுடைய அடித்தளமாகவே இருந்தது. எனக்குள் இருப்பது, கனிந்தது எல்லாம் எழுத்தாளருக்குரியது என்று அறிந்த பிறகு சமூக செயற்பாடுகளில் இருந்து விலகி வாசிப்பிலும் எழுத்திலும் முழுச் செயலையும் அளிக்கும் போது கிரிசாந் தன்னுடைய இணையத்தளத்தில் ‘அழிகளம்’ என்ற நாவலைத் தினமும் எழுதினார். அதனோடு ஒட்டி மீண்டும் மூவரும் கூட்டு வாசிப்பு, கூட்டு விவாதங்களில் இறங்கினோம். அப்பொழுது இலக்கியத்தில் என்னுடைய ஆசிரியர் நிரையை சரியாக வகுத்துக் கொண்டிருந்தேன். நாவல் பற்றிய உரையாடல்களை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் ஜெயமோகன் தமிழில் மிக விரிவாக விரித்தெடுத்து வந்திருக்கிறார். அவருடைய நாவல் கோட்பாடு, எழுதும் கலை, இலக்கிய முன்னோடிகள், விமர்சனக் கட்டுரைகள் என்பனவும் அவர் பரிந்துரைக்கும் பி.கே பாலகிருஷ்ணன் போன்ற நாவல் பற்றிய விரிவாக எழுதிய முன்னோடிகளும் அவருடைய எழுத்தின் மூலம் வந்து சேர்ந்தனர். தவிர புனைவிலக்கியத்தில் ஜெ அளித்த பட்டியல்கள், அவருடைய இணையத்தள விவாதங்கள் என்பன எங்களுடைய உரையாடலுக்கும் வாசிப்பிற்கும் துணையாக மிகப்பெரியளவில் உடனிருந்தன.
முக்கியமாக சிறுகதை, நாவல், குறுநாவல், நீள் கதை போன்றவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றியும், அவை தமிழ்ச் சூழலில் பெரும்பாலும் வேறுபடுத்தப்படாமலே ‘நாவல்’ அல்லது ’சிறுகதை’ என்ற இரண்டு தொட்டிகளுக்குள் மட்டும் கூட்டிக் குவித்து வைக்கப்படுவது அவற்றின் எழுத்தினதும் வாசிப்பினதும் சாத்தியங்களை இரத்துச் செய்து விடுவதைப் பற்றி தொடர்ந்தும் பேசினோம். ஓர் எழுத்தாளர் நாவலைப்பற்றி ஆழமாக, அணுக்கமாக அறிந்து கொள்வதற்கு அடிப்படையானது அவர் அதை எழுதத் தொடங்குவதுதான். அப்பொழுதுதான் நாவலைக் குறித்த அறிதலும், புரிதலும் விரிபடும். எனவே மூவரும் சமகாலத்தில் நாவல்களை எழுதும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினோம். ஏன் நாவலை எழுத வேண்டும் என்று யாரும் கேட்டால், அது அன்றாடம் உங்களை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைக்கும். எந்தக் கசப்பும் அண்டாது அதில் வாழமுடியும். எப்பொழுது யார் உங்களை அழைத்தாலும் நாவலில் இருந்து கிளம்பி வந்தே பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பேன்.
இக்காலத்தில் நாவலின் வடிவம் தொடர்பான விரிவான விவாதங்களைச் செய்யும் போது பெருநாவல்களை, வாசிக்கவும் முடிந்தது. இக்காலத்தில் தஸ்தெவெஸ்கியின் படைப்புகளை மீள்வாசிப்புச் செய்து முடித்தேன். இந்திய கிளாசிக் வரிசையில் இருக்கும் அக்னிநதி, ஆரோக்கிய நிகேதனம், விசக்கன்னி, நீலகண்ட பறவையைத் தேடி போன்றவையும் வாசித்துக் கொண்டிருந்தேன். தவிர வெண்முரசு நாவல்களை வாசித்து நிறைவு செய்தேன். ஜெ வினுடைய பட்டியல்களில் இருக்கும் பெரும்பான்மையான குறுநாவல்களையும் வாசித்து முடித்தேன். இக்காலத்தில் எனக்கு மிக முக்கியமாக வெளிச்சப்பட்டது நாவல், குறுநாவல் போன்றவற்றின் வடிவமும் அதை எவை எல்லாம் அந்நாவலின் அகவிரில் இருந்து தீர்மானிக்கின்றன என்ற புரிதலும் கைவரப்பெற்றது. மிக அடிப்படையானவை தெளிவாகும் போது இயல்பாகவே நுட்பமானவையும் விரிவானவையும் பிடிபடத்தொடங்கி விடுகிறது.
கிரிசாந் கொடிறோசை எழுதி முடித்த பிறகு அதன் செம்மையாக்குனர்களாக நானும் தர்முவும் விவாதிக்கும் போது மூவரும் கற்றுக்கொள்ளத் தொடங்கினோம். கொடிறோசை ‘குறுநாவல்’ என்று அட்டையில் குறிப்பிட்டே ஆக்காட்டி வெளியிட்டது. அதனுடைய அறிமுகக் குறிப்பில் அதை தர்மு பிரசாத் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அதே போலவே சிறகையிலும். கொடிறோஸ் ஆரம்பத்தில் ‘தின்னவேலி மார்கெட்’ என்றே தொடங்கப்பட்டது. அது கொடிறோசாக மாறி, நிறைந்தது. அது போலவே கல்விரல் தொடங்கும் போது ‘மொட்டு’ என்றும் ‘பப்பரக்கொப்பான்’ என்றும் பெயரிடப்பட்டது. இறுதியில் கிரிசாந் தான் ’தானே’ எண்ணியிராதவாறு அது கல்விரலாக ஆகியது, குறுநாவல் என்று தொடங்கியது தன் அகத்தையும் வடிவத்தையும் விரித்துச் சென்று நாவலாக ஆனது.
இக்காலத்தில் என்னுடைய வலைத்தளத்தில் ‘காளம்’ என்ற பெயரில் நாவல் ஒன்றைத் தொடராக எழுதினேன். இருபது அத்தியாயங்கள் வரை. அதை எழுதும் போதே நிகழ வேண்டிய ஒன்று நிகழாமலே இருக்கும் உணர்வு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. நாவலைப்பற்றிய வாசிப்பை இன்னும் விரிவாக்கினேன். இவ்வருட ஆரம்பத்தில் வேலையை விட்டேன். முழுநேரமாக வாசிப்பும் எழுத்தும். கிரிசாந்துடனும் , தர்மு பிரசாத்துடனும் உரையாடல்கள் மெல்ல மெல்ல வளரும் போது காளத்தை இணையத்தில் இருந்து நிறுத்தினேன். தொடக்கத்திற்கு திரும்பி வந்து அதைத் திரும்ப எழுதத் தொடங்கினேன். இம்முறை அது அங்கே வந்திருந்தது. நாவலின் நுட்பமான இடங்களை, மொழியை எப்படிச் சுழற்றுவது , ’சொல்லாமல் காட்டுவது’ போன்ற அடிப்படைகளை விளங்கிக் கொள்ள முடிந்தது. சொந்த உதாரணங்களைச் சென்றடைய வைத்தது. அகத்தில் நிறைவு கூடியது. வேகமாக எழுதிக் கொண்டிருந்தேன். அது ’தோறையாக’ மாறியது. நாங்கள் மூவருமே எழுதி முடித்ததும் சொல்லிக் கொள்வது போல ‘நானே நினைக்காத இடங்களை எழுதினேன், அதைக் கண்டு திகைத்தும், மகிழ்ந்தும் நிறைந்தும் போனேன்’
தோறையை முடித்து தர்முவிற்கும் கிரிசாந்திற்கும் அனுப்பினேன். நாவலின் ஒருமையும், இணைவும் சரியாக கூடவில்லை என்று இருவருமே தங்கள் நுண்மையான அவதானிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விவாதித்தோம். திரும்பவும் அதற்குள் இறங்கி திருத்தி முடித்தேன். எங்களுடைய பரஸ்பர செம்மையாக்குனர் பணி பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். கூட்டு வாசிப்பு, கூட்டு உரையாடல் போலன்றி அப்பணி மூவரும் எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் எவ்வகைக் கற்றலையும், எவ்வகை எல்லைகளையும் அளித்தது, என்பதைப் பற்றி அதில் விவாதித்திருக்கிறேன்.
சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் இருந்து நாவலுக்கான பயணத்தை தாமே தெரிவு செய்து கொண்ட களத்தினாலும் மொழியினாலும் நிகழ்த்தியிருப்பவை. இவ்விரண்டு படைப்புகளையும் தமிழ் வாசிப்புச் சூழல் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது அதன் உளவிரிவைப் பொறுத்தது. நவீன இலக்கியத்தில் வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அந்தரங்கமானது. நாம் ஒவ்வொருவரும் ஒரு நாவலில் எங்களுடைய நாவலைத்தான் வாசிக்கிறோம். மேம்பட்ட வாசகர் அங்கிருந்தே தன்னுடைய வாசிப்பை முழுமை செய்கிறார். இவ்விரு படைப்புகள் மீதும் அது நிகழட்டும்.
இருவருக்கும் வாழ்த்துகள் !


