குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில் வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக்காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டிப் பயப்படுத்த ஒடுக்கப்பட்ட சமூகமல்லாத வேறு நபர்கள் இழுக்கப்படுவதில்லை. அதனை அவர்கள் அனுமதிக்கப்போவதும் இல்லை. ஏனெனில் நலிவுள்ளவர்களும், விகாரமுள்ளவர்களும், மாற்றுத்திறனாளிகளும், கறுப்பு நிறத்தவர்களும், ஒடுக்கப்படும் சாதியினரும், மாற்றுப்பாலினத்தவர்களும், ஒடுக்கப்படும் வர்க்கத்தினரும் சிறுபான்மையினருமே வரலாறு எங்கும் பூச்சாண்டிகளாக இருக்கின்றனர். அவர்கள் மீதான அநீதியைச் சமூகம் குழந்தைகளிடமிருந்தே தொடங்கிவிடுகின்றது.

நமக்கு எப்போது சாதி என்பது தெரியவந்தது என்று ஞாபகப்படுத்த முடிகிறதா? அதாவது நம்முடைய பிள்ளைப் பராயத்தில் சாதி என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட நாள், சம்பவம் ஏதேனும் ஞாபகத்தில் இருக்கின்றதா? ஆனால் நாங்கள் சிறுவயதிலேயே சாதியை அறிந்திருந்தோம் என்பதை மறுக்கமுடியவில்லை இல்லையா? சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியார் பாடலை அவ்விடத்தில் அழுத்தம் ஏதும் கொடுக்காமல் ஆசிரியர் பாடிச்செல்லும் போது அல்லது மனனம் செய்யும் போது அது இதர சொற்களும் சந்தமும் உள்ள பாட்டாகவும் மனனம் செய்யப்பட்ட சொற்களின் கோர்வையில் ஒரு சொல்லாகவும் எஞ்சியது. நம்முடைய கல்விமுறை பிள்ளைகளுக்கு அர்த்தத்தை கற்பிப்பதில் காட்டக்கூடிய அசமத்துவமும் அக்கறையின்மையும் அக் கல்வி முறையின் இயல்பும் அப்படித்தான் இருந்து வருகிறது இல்லையா? சமகாலத்தில் அல்லது எழுபது எண்பதுகளின் பின்னரான பாடசாலைக்காலத்தில் சாதி பள்ளிகளில் வெளிப்படையாக சொல்லப்படாத ஒன்றுதான் எனினும் நாம் அச்சாதிய அமைப்பின் மனநிலைக்கு எவ்வளவு செறிவாகப் பழக்கப்பட்டிருக்கிறோம்? அதை எவ்வளவு விபரமாக அறிய வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துப்பார்க்கலாம்.

நேரடியாகப் புகட்டப்பட்ட அறிதலும் நினைவையும் விடவும் ஆழமாக நம்மில் சாதிய மனோநிலை இயல்பு புகுத்தப்பட்டிருக்கிறது. ஓர் ஆதிக்க சாதிப்பிள்ளைக்கு எப்படி ஒடுக்க வேண்டும், புறக்கணிக்க வேண்டும், அந்நியப்பட வேண்டும் என்பதையும், ஓர் ஒடுக்கப்பட்ட சாதிப்பிள்ளைக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் ‘நான் யார்’ என்பதை அறிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்பதுவும் புகட்டப்படுகிறது, அல்லது கையளிக்கப்படுகிறது. நாங்கள் பழகிய வேலைகள் செய்த சூழலில் இருக்கும் ஆதிக்க சாதிப்பிள்ளைகளைக் காட்டிலும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சாதியும் அதன் நடைமுறைகளும் அதிகம் தெரிந்திருக்கிறது. ஏனெனில் ஒடுக்கப்படுபவர்களுக்கு அது பிரச்சினையும் வலியுமாயும் வாழ்க்கையின் பகுதியாகவும் இருக்கிறது.

குழந்தை ஒன்றின் ஞாபகங்களை, அமைப்பை, நம்பிக்கைகளை உருவாக்கும் அனைத்திலும் விரவியிருக்க கூடிய அசமத்துவங்கள் குழந்தையை தனது தந்தை, தாயின் – முன்னோரின் இயல்புடனும் அவர்கள் புழங்கிய சமூகத்தின் அசமத்துவங்களுடனும் வளர்த்தெடுக்கிறது.

நிறுவனமயமாக இயங்கும் பொறிமுறைகள் மனித ஞாபகங்களுக்குள்ளும் அதன் வாழ்க்கைக்குள்ளும் அறிதலுக்குள்ளும் ஆழமாகச் செல்கின்றன. சமூகத்தில் இருக்கின்ற மிகவும் பலமான அமைப்பாக குடும்பமே இன்னும் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கீழைத்தேசங்களின் குடும்ப அமைப்புகளில் தனிநபர் கொண்டிருக்கும் சனநாயகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தன்மையே குடும்ப அமைப்பில் உள்ள அசமத்துவங்களை காலாதிகாலமாக ஒடுக்கும் பண்பை பயில்விக்க உதவுகின்றது. சாதியை உருவாக்கிய, பாதுகாக்கின்ற பொறிமுறையாக அகமண முறையை அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். அகமண முறை மூலம் உருவாக்கப்படும் குடும்பங்களின் கட்டமைப்புகளும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் குழந்தைகளை சாதிய அமைப்பிற்குப் பழக்குகின்றன. குழந்தைகள் தந்தைமார்களிடமிருந்து அன்பையும் அரவணைப்பையும் விடவும் அவர்களின் அதிகாரம் மிக்க இடத்தினால் செலுத்தப்படும் ஒடுக்குமுறையையே அதிகம் பழகுகின்றார்கள். ஏனெனில் குழந்தை ஒன்றின் மீறல்ககளை தந்தையே ஒழுக்கம் என்ற பெயரினால் ஒழுங்குபடுத்துகின்றார். தனிப்பட்ட ஞாபகங்களில், அப்பாவிடமிருந்தே நான் நேரடியாக சாதியை அறிந்து கொண்டேன். ஏனெனில் அப்பாவிற்கே வசைகளை, தூசணங்களை, நேரடியாக வெளிப்படுத்தக் கூடிய அதிகாரமிருந்தது. தமிழில் இருக்கும் வசைகளில் பெண்களை இழிவாக ஒடுக்ககூடிய வசைகளும் சாதிய வசைகளுமே செறிவாக இருக்கின்றன. ஆகவே அப்பாவின் மொழியினால் குழந்தை சாதியை அறிந்துகொள்கிறது. ஒடுக்குகின்ற சாதியில் பிறக்கும் குழந்தை ஒடுக்கப்படும் சாதியால் வசைபாடக் கற்றுக்கொள்கிறது. நான் என்னுடைய அப்பாவிடமிருந்தும் அவர் அவருடைய தலைமுறைகளிடமிருந்தும் வாங்கிய ஒடுக்கும் மனநிலைகள் இவை எல்லாம். ஆணாதிக்க மனநிலையின் காலாதிகாலக் கையளிப்புகளில் ஒன்று. அதேபோல இடைநிலைச்சாதியில் இருக்கும் குழந்தையும், தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த குழந்தையும் ஒடுக்கப்படும் சாதிகளுக்குள் இருக்கக்கூடிய ஒடுக்கும் படியொழுங்குகளின் ஊடாக ஒடுக்குமுறையைக் கற்றுக்கொள்கிறது.

பிள்ளை ஒன்று இன்னொரு பிள்ளையுடன் சேரும் வெளியை பெற்றோரும் அப்பிள்ளையின் குடும்பம் பங்கேற்பில் இருக்கின்ற சமூகமுமே தீர்மானிக்கின்றன. கதைக்க, விளையாட என்று குழந்தைகளின் அடிப்படை உரிமைகளையே பெற்றோர் சிறுவயது முதல் ஒடுக்குகின்றார்கள். குழந்தைகளின் பிறப்புரிமையான சுதந்திரத்தை கரிசனை, ஒழுக்கம் முதலானவற்றினால் ஒடுக்குகின்றார்கள். நாங்கள் கிராமமொன்றில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தோம், அந்நூலகம் ஆதிக்க சாதியைச்சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்குரியதாக இருந்ததை நாங்கள் முன்பு கவனிக்கவில்லை. உரையாடலுக்கும் கதை சொல்லவும் வருகின்ற பிள்ளைகளை ஒன்றாகவே பார்த்தோம். ஆனால் பின்னாளில் ஒடுக்கப்படும் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகளை அந்நூலகத்தினை பயன்படுத்த விடாமல் செய்கின்ற பண்பு இயல்பாகவே அங்கே நிலவியதைத் தெரிந்துகொண்டோம். ஒரு பொதுவெளிக்கு, விளையாட்டின் மூலமும் கதைகளின் மூலமும் அவர்களைக் கூட்டி வந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகள் புழங்கும் இடங்களுக்கோ, மைதானங்களுக்கோ மற்றப்பிள்ளைகளை அழைக்கும் போது ‘அம்மாவிடம் கேட்க வேண்டும்’ ’அப்பா பேசுவார்’ என்று நழுவிச்சென்று விடுவார்கள். ஒடுக்கப்படும் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் ‘அவர்கள் எங்களுடன் சேர மாட்டார்கள்’ என்பதை அறிந்திருக்கிறார்கள்.

இங்கே பிரச்சினை என்னவென்றால் ஒடுக்க கூடிய வாய்பினை எதிர்காலத்தில் அடையக்கூடிய பிள்ளைகள் அதை அவர்களின் பிறப்புரித்தாக இயல்பாகக் கிடைக்ககூடிய ஒன்றாக நம்பிவிடுகிறார்கள். குழந்தை ஒன்று வசைச்சொல் ஒன்றை எங்கேனும் கேட்கும் போது அதை ஞாபகம் வைத்துக்கொண்டு சந்தர்பங்களுக்குப் பொருத்திக்கொண்டு அதைச் சொல்கிறது. அப்போது தாயோ தந்தையோ அல்லது மூத்த குடும்ப உறுப்பினர்களோ அதன் ‘சொண்டில்’ சுண்டியோ உறுக்கியோ பேசக்கூடாது என்கிறார்கள். அங்கே கண்டிக்கப்படும் குழந்தை அதை ஏன் பேசக்கூடாது என்று அறிந்துகொள்வதற்குப் பதிலாக யாருக்கு முன்னால் எச்சந்தர்ப்பத்தில் பேச வேண்டும் என்பதான தந்திரங்களைச் சென்றடைகிறது. ஏனெனில் அதை ஏன் பேசக்கூடாது என்கின்ற அறிவும் புரிதலையும் வாழ்வதற்கான ஏனைய தந்திரங்களும், அதிகாரமும் வாய்க்கப்பெற்று வன்முறையான கதையாடல்கள் நிறைந்த சமூகத்தின் பங்குபற்றக்கூடிய அங்கத்தவர் ஆனதன் பிற்பாடு அறிந்துகொள்ளும் போது அதனை மாற்றிக்கொள்வது எளிதாக இருப்பதில்லை. சாதி, ஆணாதிக்கம், பலத்தைக் கொண்டு அடக்கும் இயல்பு போன்றவற்றினை குடும்பத்திலேயே கற்றுக்கொள்கின்ற குழந்தையின் குடும்பச்சூழலில் இயங்கும் மொழியும் அறிவும் வன்முறையற்ற, தண்டனைகளற்ற, ஆண் பெண் சமத்துவமுள்ள ஒன்றாக இயங்கும்போதே எல்லாவகையான வன்முறைகளையும் கூடாது என்பதைப் புரிந்துகொண்ட ஆரோக்கியமான மனிதக்குழந்தைகள் சமூகத்திற்கு வருகிறார்கள்.

2
முன்பள்ளி ஆசிரியர்களுடன் அவர்களுக்கான வலுவூட்டல் வேலைகளைச் செய்யும் நிறுவனமொன்றில் பணியாற்றிவருகிறேன். அவர்களுடைய பிரச்சினைகளை உரையாடக்கூடிய ’முன்பள்ளி ஆசிரியர் குழுக்கள்’ ‘முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்க கூட்டங்கள்’ போன்றவற்றில் பங்கேற்பதுண்டு. ஒரு முறை முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் வருகின்ற முன்பள்ளிக் குழந்தைகள் சிலர் அவர்களுடைய வீடுகளின் அருகில் இருக்கக் கூடிய இரண்டு முன்பள்ளிகளைக் கடந்து தன்னுடைய முன்பள்ளிகளுக்கு வருகின்றார்கள் என்றார். அம்முன்பள்ளிகளை நடத்தக்கூடிய சனசமூக நிலயங்கள் ‘சாதிச் சனசமூக நிலயங்களாகவே இருக்கின்றன’ ஆதிக்க சாதி, அல்லது இடைநிலைச்சாதியைச் சேர்ந்த பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் அந்நிறுவனங்களும் ’தங்களுடைய’ பிள்ளைகளை தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த பிள்ளைகளுடனோ ஆசிரியரிடமோ கற்பதை விரும்புவதில்லை என்ற தகவலைச் சொன்னார். இங்கே எழக்கூடிய அடிப்படையான கேள்வி குழந்தை முன்பள்ளிகளை, ஊரில் அதற்கு கிடைக்கக் கூடிய அருகான நண்பர்களைக் கடந்து செல்லும் போது அதனுடைய சூழலை அது அவதானிக்கிறது. பின்னர் அது வேற்றுமையை இயல்பென்று விளங்கிக்கொள்கிறது முன்பு சொன்னதைப்போல ஆதிக்க சாதிப்பிள்ளைகள் ‘அவர்களுடன் சேரக்கூடாது’ என்பதையும் ஒடுக்கப்படும் சாதியைச்சேர்ந்த பிள்ளைகள் ‘அவர்கள் எங்களுடன் சேரமாட்டார்கள்’ என்பதையும் ஒரு சமூக இயல்பாகப் பயின்று கொள்கிறது. அதாவது குழந்தைப்பராயத்திலேயே அதனிடம் வேற்றுமைகளை அந்நியத்தை விதைக்கிறோம்.

சமூக நிறுவனங்களில் பாடசாலைகளிலேயே குழந்தைகள் தம்முடைய பிள்ளைப்பருவத்தினைக் கழிக்கிறார்கள். பாடசாலைக்கல்வியைப் பொறுத்தவரையில் அங்கு பாடங்களில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பது இருந்தாலும், காலனியகாலத்தில் பாடசாலைக் கல்வி தொடங்கிய காலம் முதல் இருந்துவந்த ‘சாதிப்பாடசாலை’ ச் சூழல் கட்டாயக்கல்வி, இலவசக்கல்வி முறைகள் மூலம் மாறிவந்திருந்தாலும் அதற்குள் பங்பற்றக்கூடிய ஆசிரியர்களிடம் காணப்படக்கூடிய சாதிய மனோநிலையை என்னுடைய பள்ளிக்காலம் முழுவதும் கண்டிருக்கிறேன். போர்க்கால இடம்பெயரும் சூழ்நிலைகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம் மாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் படித்திருக்கிறேன். இராணுவக்கட்டுப்பாட்டினுள் இருந்த தமிழ்ப் பாடசாலைகள், புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருந்த பாடசாலைகள், தமிழ் முஸ்லீம் பிள்ளைகள் படிக்கக்கூடிய பாடசாலைகள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் பின்பற்றக்கூடிய பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகள் என்று நான் கல்வி கற்ற பாடசாலைகளில் யாழ்ப்பாணம், வன்னி, மன்னார் பிரதேசங்களில் இருந்த பாடசாலைப்பிள்ளைகள் சாதியை அறிந்துகொண்ட நிலைமைகள் வெவ்வேறானவை. எனக்கு சிறுவயதிலிருந்தே அறிமுகமான பெண் பிள்ளையொருத்தி கிளிநொச்சியில் இருந்தா. அவருடைய தாயார் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர், கிறிஸ்துவத்தை பின்பற்றக் கூடியவர். தந்தை கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சைவப் பின்னணியைச் சேர்ந்தவர். குடும்பத்தில் பிள்ளைகள் பிரதானமாக கிறிஸ்துவ வழிபாட்டு முறைகளையும் பகுதியளவில் திருவிழா, பண்டிகைகள் விசேட சடங்குகளில் சைவ நம்பிக்கைகளையும் பின்பற்றுவார்கள். அவருடைய தாயார் இந்திய வம்சாவழியில் வந்த சாதிய முறையைப் பின்பற்றுவதில்லை. கிறிஸ்தவ தமிழர்களிடையே நிலவும் சாதிய வேறுபாடுகள் கொண்ட நிலங்களிலும் சூழலிலும் அவர் வசித்ததில்லை. நம்புவதும் இல்லை. தந்தை இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை, சாதிய நம்பிக்கை அற்றவர். இப்படியான குடும்பப் பின்னணியில் வளர்ந்த அப்பெண் பிள்ளை சாதியை எதிர்கொண்ட இடமாக பள்ளிக்கூடத்தையே குறிப்பிடுவார். கிளிநொச்சிக்கு சிறுவயதில் வந்து சேரும் வரை தான் சாதி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை, பள்ளிக்கூடத்தில் தன்னுடைய சாதியை அறிந்துகொள்வதில் இருந்த குழப்பத்தினாலும் அதைத்தானே அறியக்கூடிய சூழல் ஏற்படாததாலும் அது ஒரு பிரச்சினையாக தன்னுடைய பள்ளி நாட்களில் வந்து சேரவில்லை என்பார். ஆனால் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் மீது ஆசியர்கள் காட்டக்கூடிய பாராபட்சங்களைத் தான் விளங்கிக்கொள்ளச் சிரமப்பட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்வார். சில பிள்ளைகள் கலை நிகழ்வுகள், போட்டிகள், ஆற்றுகைகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை. ‘படிக்கக் கூடிய’ பிள்ளைகள் என்று ஆசிரியர்கள் கருதும் பிள்ளைகள் புத்தகப்பூச்சிகளே தவிர குறித்த ஆற்றுகைகளில் திறனுள்ள பிள்ளைகள் அவற்றில் ஆர்வமாகப் பங்கேற்பதில்லை, வகுப்பில் அன்றாடம் நன்றாகப் பாடக்கூடிய பிள்ளையொன்று பாட்டுப்போட்டிக்கோ, நிகழ்வுகளில் பாடவோ செல்வதில்லை. பிள்ளைகளிடம் கேட்காமலே வகுப்பாசிரியர்கள் சில பிள்ளைகளின் பெயர்களை அந்தந்த ஆற்றுகைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். அன்றைக்கு ‘படிக்க கூடிய’ ‘படிக்க மாட்டாத’ பிள்ளைத் தகுதிகளே அதனைத் தீர்மானித்தன என்று தான் எண்ணியதாகவும், பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பிறகு சாதியை அறிந்துகொண்ட பிறகு ஆசியர்கள் சிலரின் தெரிவுகளில் உள்ள சாதிய மானோநிலையைப் புரிந்துகொண்டதாகவும் சொல்லியிருந்தார்.

யாழ்ப்பாணம் , வன்னி, முதலான பிரதேசங்களில் இருக்கக் கூடிய பெரும்பாலான பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் இக்கல்வி முறையின் மதிப்பிடல், போட்டி மனோநிலைகளின் பின்னணியில் ‘கெட்டிக்காரப்பிள்ளைகளின்’ பட்டியலில் முதல் இடங்களை காலம் காலமாக ஆதிக்க சாதியைச்சேர்ந்த பிள்ளைகளும், ’குழப்படிக்காரர்’ பட்டியலில் தாழ்தப்பட்ட சாதியைச்சேர்ந்த பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். இதற்குப்பின்னால் இருக்கக் கூடிய சமூக காரணங்கள் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும் அல்லவா? காலம் காலமாக யார் எப்படி இருக்க வேண்டுமென்பதை எவையெல்லாம் தீர்மானிக்கின்றன? படித்தால் விடிந்துவிடும், விடுதலை வந்துவிடும் என்பது காலம்காலமாக மனோரதியப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டு வந்திருக்கிறதா? சாதிகள் இல்லையடி பாப்பா என்பது ஏட்டில் மட்டும் இருக்கக்கூடிய புள்ளிகள், போட்டிகள், அதிகார ஒழுங்குபடுத்தல்கள் மூலம் கற்பிக்கப்படும் தகவல்கள் மட்டும் அறிவாக மாறுமா, அது விடுதலையை வழங்குமா?
ஒடுக்கபப்ட்ட சமூகங்கள் வாழக்கூடிய காட்டுப்புலம், பாண்ட வெட்டை கிராமத்தில் குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் களப்பணிகளின்போது சந்தித்தோம். மூன்று தலைமுறைகளாக சாதிய ஒடுக்கு முறைகளினால் பாடசாலையை இடைவிலகியவர்களைச் சந்திக்க முடிந்தது. இதனைப்பற்றிய சமகாலக் குறிப்பொன்றையும் விதை குழுமத்தின் இணையத்தளத்தில் பகிர்ந்திருந்தோம். அதனோடு சமீபத்தில் கிளிநொச்சி பெரிய பரந்தனில் கோயில் ஒன்றிற்கு தோத்திரம் பாடச்சென்ற மாணவர் ஒருவருக்கு அவ் உரிமை சாதியினால் மறுக்கப்பட்டதும், அவருடைய குடும்பத்தவர்களும் தலைமுறைகளாக சாதியால் ஒடுக்கப்பட்ட நிகழ்வையும் அறிக்கைப் படுத்தியிருந்தோம்.

ஆதிக்கசாதிப் பிள்ளைகள் ஒடுக்கப்படுகின்ற சாதியைச்சேர்ந்த பிள்ளைகளையும் அவர்தம் பெற்றோரையும் இழிவாகக் கருதும் வண்ணம், அவர்கள் படிக்கமாட்டாத பிள்ளைகள், குழப்படிக்காரர், குற்றச்செயல்களில் ஈடுபவர்கள், குற்றத் தொழில்களில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள், முரடர்கள், விகாரமானவர்கள், அழுக்காக உடுத்தக்கூடியவர்கள், நாகரீகமற்றவர்கள் என்பதான கற்பிதங்களால் வளர்க்கப்படுவதும் அக்கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் பழக்கப்பட்டுக்கொண்ட தாழ்த்தப்படும் பிள்ளைகள் அவற்றை ஏற்றுக்கொண்டு தங்களுடைய சூழலுக்குள் தங்களை மட்டுப்படுத்திக்கொள்கின்றனர். யார் ஒடுக்கப்படும் சமூகங்களை ஏழைகளாக கல்வியறிவோ சமூக அங்கீராகமோ அற்று வைத்திருந்தவர்கள் என்பதைப் பிள்ளைகள் அறிவதில்லை, ஏன் குறித்த சமூகங்கள் மட்டும் உடல் உழைப்பிற்கு மட்டும் உட்படுத்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள் என்பதோ, அவர்களின் தோற்றம், தொழில் என்பவற்றின் பின்னால் இருக்க கூடிய காலம் காலமான ஒடுக்குமுறையின் சமூக வரலாற்றையோ ஒடுக்கப்படும் சமூகத்தின் குழந்தைகளும் சரி ஒடுக்கும் சமூகத்தைச்சேர்ந்த குழந்தைகளும் சரி அறிந்துகொள்ளும் வாய்ப்பு நம்முடைய நடைமுறைக் கல்வி மட்டங்கள் அறவே கிடையாது. வெறும் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாட்டினால் சமூக வரலாற்றை, ஒடுக்குமுறையை பிள்ளைகள் அறிந்து கொள்ள முடியாது இல்லையா?


3
பாடசாலைச்சூழலைவிட குழந்தைகள் புழங்கக் கூடிய இதர சமூக வெளிகள் அவர்களுக்குள் சாதிய ஒடுக்குமுறையை கொண்டுவந்து சேர்க்கின்றன. கோயில்களில் காட்டப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், நடைமுறைகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்கள் சாதிய சங்கங்களைப் போலச்செயற்படும் அதேவேளை, பிள்ளைகள் அவற்றின் கலைநிகழ்வுகள், விளையாட்டுக் கழகங்களில் பங்குபற்றுனர்கள் ஆகும்போது சாதிய மனநிலையின் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். ஒரு சமூகத்துப்பிள்ளை இன்னொரு சமூகத்துப்பிள்ளையோடு ஏற்படுத்திக்கொள்கின்ற வேற்றுமை அதன் வாழ்க்கையில் ஏன் எதற்கு என்று அறிபடமால் இயல்பாக்கப்படுகிறது.

சாதியை தலைமுறைகளுக்கு கையளிக்க தக்க இன்னொரு பெரிய வாழ்க்கை அலகாக மொழி இருக்கிறது. குழந்தையொன்று தன்னுடைய வாழ்வுக்கான அடிப்படைப் புரிதல்களை, கல்வியை தனது சிந்தனையை, மொழியின் மூலம் பெற்றுக்கொள்கிறது. சமூக அமைப்பின் கூட்டு உருவாக்கங்களில் ஒன்றான மொழி கொண்டிருக்க கூடிய அதிகார ஒழுங்குபடுத்தல்கள், சாதிய இயல்புகளை குழந்தை இலகுவாகக் கற்றுக்கொள்கிறது. கதைகள், நகைச்சுவைகள், விடுகதைகள், துணுக்குகள், விளையாட்டுகள், திரைப்படங்கள், வசைகள் என்று குழந்தையிடம் சாதியத்தை பழக்கமாக மாற்றக்கூடிய மொழியின், காட்சியின் செறிவு அதிகமாகும். புத்தாக்க மனமுள்ள, எல்லாவற்றையும் ஆர்வத்துடனும் நுண்ணுணர்வுடனும் மனதை திறந்துவைத்திருக்கும் பிள்ளைப்பராயம் சாதிய நடைமுறைகளை, மதவாதத்தை, ஆணாதிக்கத்தை எல்லாவழிகளிலும் வாங்கிக்கொள்ளும் வகையில் பிள்ளையொன்று பிறந்தவுடனேயே இச்சமூகம் அவர்களுக்காக தயாராக இருப்பது சமூக அநீதியில்லையா?

குழந்தைகள் இயல்பிலேயே கூட்டாக இருக்கவும் இயங்கவும் விரும்புபவர்கள், அவர்களிடம் அவர்கள் எவ்வாறு தங்களின் சகபாடிகளை உருவாக்க வேண்டும் யாரோடு சேர வேண்டும் யாரோடு சேரக்கூடாது, என்பதைப் பழக்குவதன் ஊடாக இச்சமூகம் குழந்தைகளின் சுயமரியாதையையும் சமத்துவப்பண்பையும் மீறும்படி பழக்கி எடுக்கின்றது.

குழந்தைகளின் வாழ்கைமுறையை, அவர்களின் நடத்தைகளை, உளவளத்தைப் பாதிக்ககூடியவை அவர்கள் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கின்ற விடயங்களை, சூழலை மாற்றியமைப்பதற்கு நாம் குழந்தைகளின் சூழலைப் புரிந்துகொள்ளவும் அவதானிக்கவும் வேண்டியிருக்கிறது. சாதி போன்ற பிற்போக்குத்தனங்களை நடைமுறையில் குழந்தையிடமிருந்து விலக்கி வைப்பது அவ்வளவு சாத்தியமில்லை, அதாவது சாதிய மறைப்புச் செய்து சாதியுடன் கணக்குத்தீர்க்க இயலாது. ஒடுக்குவதும் ஒடுக்கப்படுவதும் குறித்து குழந்தைகள் அறிய வேண்டும்.


நாம் எல்லா வகை ஒடுக்கு முறைகளையும் கற்பிக்க வேண்டும். அதுவே ஒடுக்கு முறையை அறியவும் மீறவுமான வழி. அதனால் குழந்தைகளுக்கு சாதியத்தைக் கற்பிக்க வேண்டும். சாதி எவ்வாறு உருவானது, அதனுடைய சமூக வரலாறு என்ன? அது ஏன் தீயது? எப்படி ஒடுக்குகின்றது? என்பதைப் பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும்.
. நாம் பின்பற்றக்கூடிய பழைய பெருமிதங்கள், ஆதிக்க மனநிலைகளுக்கு எந்தக்காலத்திலும் சனநாயத்தினதோ சமூக நீதியினதோ பண்புகள் இருக்கப்போவதில்லை. அதனால் குழந்தைகளிடமிருந்து சாதியை மறைப்புச்செய்யும் பொறிமுறைகளை விடுத்து பிள்ளைகள் ஒரு சமூகப்பிறழ்வினை நன்கு அறிந்துகொண்டே வளரட்டும். அவர்களுக்குச்சொல்லும் கதைகளில், பாடும்பாட்டில், புழங்கும் மொழியில், விளையாட்டில், கூட்டு வேலைகளில் என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கான கற்றல்முறைகள் இருக்கின்றன. நாம் நம்முடைய குழந்தைகளை சனநாயகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய அறிவு ஒடுக்கு முறைகளை அனுமதியாத சுயமரியாதையும் சமத்துவமும் மிக்க வாழ்க்கையை வழங்க வேண்டும்

 

-யதார்த்தன்

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’