உரித்தின் செருக்கைக் களைதல்: மரபுரிமைளுக்கானமக்கள் போராட்டங்களை முன்வைத்து

சனநாயகம் புழக்கத்திற்குரிய வெளியாக திறந்து விடப்பட்ட பிறகு  மக்களின் பங்குபற்றுதலுக்கான வடிவங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சமூகத்தின் கூட்டான மனநிலை, சனநாயக வடிவங்களை எதிர்ப்புணர்வுக்கும், போராடுதலுக்கும் தெரிவு செய்யும் காலத்தை தொடங்கியிருக்கிறது. அசலான சமூக வரலாறு என்பது பண்பாட்டு அடக்கு முறைகளையும் அதெற்கெதிரான போராட்டங்களையும் கொண்டிருக்கிறது. கடந்து சென்ற  நாட்களில் இலங்கையில் நடைபெற்ற சனநாயகப்போராட்டங்களில் நிலம் மற்றும் அதனுடைய மரபுரிமைகள் தொடர்ப்பான போராட்டங்கள் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன

அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் முதலானவற்றினால் கட்டமைக்கப்படும், சமூகத்துக்கும் அதன் பண்பாட்டு அசைவுகளுக்கும் எதிரான நேரடியான, மறைமுகமான அழிப்போ சுரண்டலோ சனநாயகத்தின் சுமூகத்தன்மையை குழப்புவதை இலங்கையில் தெளிவாக அவதானிக்க இயலும். இலங்கையில், குறிப்பாக போர் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து சிங்கள பெளத்த பேரினவாதம் மரபுரித்துக்களை அழித்தல், மாற்றியமைத்தல், தங்களுடையதை பிரதியிடல், கைக்கொள்ளல் முதலான சனநாயக விரோதங்களை மேற்கொள்கின்றது. பூர்வீக நிலம், மரபார்ந்த இயற்கை வளங்கள், கலாசார மரபுரித்துக்கள் என்பவற்றின் மீது அச்சுறுத்தலை மேற்கொள்ளும் பிரதான தரப்பாக பேரினவாதமும் அதன் அரசும் பெளத்த மதவாத பீடங்களும் தீவிரமாகவுள்ளன. இத்தீவிரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் செயலூக்கங்களைப் பற்றிய உரையாடல் மிக முக்கியமானது. எந்தப்போராட்டமும் தொடங்கிய புள்ளியில் நீர்த்துப்போகும், அல்லது பயனற்றுப்போகும் அபாயங்களை நமக்குள் வைத்துக்கொண்டே பெரும் அடக்கு முறைத்தரப்புகளுக்கு எதிராக சனநாயக வெளியில் சென்று நிற்கின்ற சூழல் இந்த உரையாடலிகளின் தேவையை வலியுறுத்துகின்றது.

கடந்த நாட்களில் நடைபெற்ற மரபுரிமைகள் தொடர்பான மக்கள் போராட்டங்களில் கவுணாவத்தை வேள்வித்தடைக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டு ஆதரவுப்போராட்டம், வெடுக்குநாறிமலையை தொல்லியல் துறை மக்களிடமிருந்து கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள், பழைய நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டம், கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம், முல்லைத்தீவில் இருக்கின்ற எல்லையோரக் கிராமங்களை மீட்பதற்கான மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் போராட்டம் முதலானவற்றை கவனத்திற்கொண்டு நாமிந்த உரையாடலைத் தொடருவோம்.

மரபுரிமைகள் தொடர்பானது மட்டுமன்றி எந்த சனநாயகப்போராட்டங்களை மேற்கொள்ளும் போதும்  அவற்றை உரையாடும் போதும்  அவை தொடர்பான சரியான புரிதலை அல்லது அடிப்படையான அறிதலை தனிமனிதர்களும்  திரளும் சனங்களும்  கொண்டிருக்க வேண்டும். இன்றைய சனநாயக வழிப்போராட்டங்களில் பெரும்பான்மையானவை அடிபட்டுப்போவதற்கான பிரதான காரணங்களில் அவை பற்றிய புரிதல் பங்குபற்றுவர்களுக்கு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும். “ஏன் இந்தப்போராட்டத்தைச் செய்கிறோம்?” என்ற விளக்கத்தின் தெளிவிலிருந்து, அதன்  சனநாயக வெளிகள் திறக்கின்றன.  அதிகாரத்தரப்பை எதிர்ப்பதும், மக்கள் அதிகாரத்தை ஒன்று திரட்டுவதும் அறிதலுடன் கூடிய பங்குபற்றுதலில் இருந்தே தொடங்குகின்றது. 

நீராவியடிப்பிள்ளையார் போராட்டத்திற்கு மக்கள் ஒன்று கூடி பதிகங்கள் ஓதி விட்டு குழப்பத்துடன்; குறுகிய நேரத்தில் கலைந்து செல்லும் அளவிற்கு அப்போராட்டம் நீர்த்துப்போகும்போது சனநாயக வெளிக்குள் எதிர்காலத்தில் வந்து சேரவேண்டிய மக்களும் சரி அங்கே வந்துப் சேர்ந்த மக்களும் சரி அவ்வெளியில் இருந்து இன்னும் இன்னும் விலத்திச்செல்லவே நேரும். மரபுரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் நிகழ்தலாகவும் பண்பாட்டு நிகழ்தலாகவும் சமகாலத்தில் இயங்குவன.  ஒரு சமூகக் குழுமத்தின் வாழிடம் சார்ந்ததும், அவ்வாழிட நிலவரங்களினால் காலந்தோறும் உற்பத்தி செய்யப்பட்டு கைமாற்றப்பட்டு வருகின்றதுமான அனைத்தும் அடிப்படையில் மரபுரிமைச் சொத்துக்களாகும். காலத்தினால் கைமாற்றப்பட்ட தொட்டுணரவும் தொட்டுணரமுடியாததுமான மரபுரிமைகள் இயற்கை(nature) பண்பாடு (culture) மெய்ப்போலி(virtual) வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. மரபுரிமைகள் சமூகத்தனியடையாளங்களையும், பண்பாட்டு உரித்துக்களையும் உருவாக்குகின்றதுடன் வரலாற்று தடையங்களாகவும் அறிவூட்டும், கடத்தும் பாங்கையும் கொண்டு இயங்குபவை.

இவ்வடிப்படையில் மரபுரிமை என்பது சமூக வரலாற்றுத்தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியதாயுள்ளது. அரசர்களினதும், பணக்காரர்களினதும், வலியவர்களினதும், ஆண்களினதுமாக எழுதப்பட்ட; இயக்கப்பட்ட சமூக வரலாறு இன்று கீழிருந்து மேற்செல்லும், அனைத்து மக்களினதும் சமூக பண்பாட்டு வாழ்வை எழுதவும் முக்கியம் தரவும் வல்ல சனநாயக பரப்பை மரபுரிமைகளின் மீதும் விரித்திருக்கின்றது. சமகால அரசியல், கலை இலக்கியம் பண்பாடு சமூகம் எல்லாமே சனநாயகத்தின் பாற்பட்டன. சுதந்திரம், சமத்துவம் என்பவற்றின் அடியைக்கொண்டன. எனவே மரபுரிமைகளும் மக்களின் சனநாயக உரித்துக்கள் என்ற அடிப்படையில் இருந்து அவற்றைப்புரிந்து கொள்ளும் போது மேற்படி போராட்டங்களில் உள்ள போதாமைகளை நாம் உரையாட இயலும்.

எவ்வாறு பெளத்த சிங்கள பேரினவாதம் தங்களுடைய இன, மத தனி அடையாளங்களாக மரபுரிமைகளைக் கருதி அவற்றை அடக்கு முறைக்கருவிகளாக சிறுபான்மை இனங்களின் மீது திணிக்கவும், அதிகாரம் செலுத்தவும், சுரண்டவும் அவர்களின் உரிமைகளைக் காவுகொள்ளவும் பயன்படுத்துகின்றன என்பதை அவதானிக்கிறோம். அரசும் அரசகட்டில் உள்ள இனமும் மதமும் திட்டமிட்டு இவற்றை நகர்த்துகின்றன. தம்முடைய மக்களை உணர்வார்ந்து தம் இன, மத, மொழி உணர்வுகளினதும் அவை சார்ந்த மரபுரிமைகளினதும் இருப்பை  தனி அடையாளச்  செருக்காகக் (pride) கருதுமாறு பழக்குகின்றன. “இதுவொரு சிங்கள பெளத்த நாடு” என்பதனை எல்லா வகைகளிலும் நிரூபிக்க முனைவதற்கு மரபடையாளங்களை முன் கொண்டு வருகின்றன.

இவ் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலையும் செயலையும் உயர்த்தும் அடக்கப்படும் சமூகங்கள் தங்களுடைய அடையாளங்களைப் பாதுகாக்கவும் நிறுத்தவும் முனைகின்றன. ஆனால் அவை ஆதிக்க சமூகங்கள் கைக்கொள்ளும் அதே “செருக்கை” உண்டாக்கும் வழிமுறைகளையே கையாள்கின்றன. பெரியார், மொழி உணர்வு, இன உணர்வு, சாதி உணர்வு என்பவை இல்லாது இருத்தலே ஈடேற வழி என்பார். இங்கே குறித்த உணர்வுகள் “உணர்ச்சிப்பாங்காக” அல்லது முன்பு சொல்வதைப்போல செருக்காக முன்வைக்கும் போது உள்ளீடற்ற, வெறும் உணர்வுக்கோசமாகவும் அதன் பொருட்டு வன்முறையைக்கூடத்தெரிவு செய்யக்கூடிய மனநிலையை உருவாக்கி விடுகின்றன. இவை எந்த சனநாயகப்போராட்டத்தையும் வழிநடத்த உதவாது. மரபுரிமைகளாகக் கருதப்படக்கூடிய அனைத்தும் சமகால அறிவின் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே  அவற்றின் இருப்புப் பெறுமதி தீர்மானிக்கப்படும். சமகாலம் சனநாயகத்தின்காலம் என்று கருதினால் அதற்கு எதிராக உள்ள, மானுடர்களை குழுக்களாகவோ வன்முறைக்குள்ளோ குறுக்கக்கூடிய எதுவும் மரபுரிமையாக எஞ்சப்போவதில்லை, மாறாக அவை காலத்திற்காக தம்முடைய வாசிப்பை மாற்றியமைக்க வேண்டியதாயிருக்கும்.  

மரபுரிமை சார் செயற்பாட்டாளர்களான அருண்மொழிவர்மன், பா. அகிலன் ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் ஒரு துண்டை இங்கே கவனிக்கலாம்,

தொடர்ந்து பேசுகின்ற அதேவேளை அதனைக் கவனமாகச் செய்யாவிட்டால் ஒருவிதமான வலதுசாரித்தனமான, அதிகாரங்களின் பெருமைகளைப் பதிவு செய்வதாகிப் போய்விடும். எனவே ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான செயற்பாடுகளின் போது சிறுபான்மைச் சமூகம் தொடர்பான அக்கறையும் அவர்களது நோக்கிலான பார்வையும் இணைந்திருப்பது மிக மிக முக்கியமானது அல்லவா? 

-அருண்மொழிவர்மன்

நிச்சயமாக. பொதுவாக தமிழ் சமூகம் எந்த மரபுரிமைகளை பொதுவாக இன்று கொண்டாடுகின்றது என்று பார்த்தால் அவற்றுக்குப் பின்னால் தொழிற்படும் அதிகாரப் பொறிமுறையை எம்மால் இனங்காண முடியும்.    உதாரணமாக நாம் தமிழ் மரபுரிமை என்று எதைச் சொல்லுகின்றோம், எதைக் கொண்டாடுகின்றோம், எது குறித்துப் பெருமிதம் கொள்ளுகின்றோம், எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றோம், எதை இருட்டடிப்புச் செய்கின்றோம் என்ற கேள்விகளை எழுப்பிப்பார்த்தால் மரபுரிமை குறித்த எமது சிந்தனைகளில் நாம் எவ்வளவு தூரம் ஜனநாயகமாக இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.  இதனால் மரபுரிமை பற்றிப் பேசுவதே ஒருவிதமான மேட்டுக்குடிச் சிந்தனை என்று கருதுபவர்களும் இருக்கின்றார்கள்.   அதேநேரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு, அதிலும் குறிப்பாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்களுக்கு மரபுரிமையைக் காத்தல் என்பதும் ஆவணப்படுத்தல் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் செயற்பாடாகவும், தனது அடையாளத்தை பேணுகின்ற ஒரு செயற்பாடாகவும், தனது இருப்பைப் பேணுவதற்காக முயற்சிகளில் ஒன்றாகவும், தனது வரலாற்றைக் காவுகின்ற காரணிகளில் ஒன்றாகவும் பொருளாதாரத்தை மேம்பாட்டைச் செய்வதற்கான கருவியாகவும் காணப்படுகின்றது.  எனவே மரபுரிமை குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஜனநாயகபூர்வமாக தமக்குள் இருக்கின்ற சிறுபான்மையினரையும், சிறுபான்மைக் கருத்தியல்களையும், வெவ்வேறு இனத்துவம், வர்க்கம், சாதி, பால்நிலை, மதம், பாலியல் போன்ற பன்முகத்தன்மைகளை உள்வாங்குபவர்களாகவும் இருக்கவும் வேண்டும் என்பதை மிக மிக முக்கியமான நிபந்தனையாகக் கொள்ளவேண்டும்

-பா. அகிலன்

பொதுவில் மத, நிறுவனங்கள், அமைப்புகள் மரபுரிமைகள்  தொடர்பில் கரிசனை எடுக்கும் போது கடைக்கொள்ளும் தெரிவின் அரசியல் சனநாயகத்தன்மையற்ற வெறும் மதத் தூய்மைவாதப் பண்டமாக மட்டும் குறுக்கக்கூடிய மரபுரித்துகளைத் தெரிவு செய்கின்றன. உதாரணமாக சைவ மகாசபை போன்ற அமைப்புக்கள் கவுணாவத்தை வேள்வி என்ற உணவுப்பண்பாட்டை மரபுரித்தாகக் கொண்ட திருவிழாவை   “பலியிடல்” என்ற  சொல்லுக்குள் அடக்கி நீதிமன்றம் மூலம் தடையுத்தரவு வாங்குகின்றன. அதேவேளை பூநகரி மணித்தலைச்சிவன் கோவில் பாழ்படுவதை கண்டிக்கிறன. இம்முரண்பாடு அடிப்படையில் மரபுரித்துக்களையும் மானுட வாழ்வையும் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்து தொடங்குகின்றது.

வெடுக்குநாறிமலை, தொல்லியல் பிரதேசமாகவும் மதவழிபாட்டு இடமாகவும் இருக்கின்றது. அதைத் தொல்லியற்துறை மக்களின் புழக்கத்தில் இருந்து தள்ளிவைப்பதுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பிரதேசமக்கள் ஒன்று திரண்டு ஏனைய மக்களுக்கு விடயத்தைத் தெளிவுபடுத்திப் போராட்டங்களை  ஆரம்பித்து திருவிழா மற்றும் சடங்குகளை  ஓர் எதிர்ப்பு வடிவமாக  மேற்கொண்டனர். அதேவேளை மக்கள் அந்தமலை தங்களிடமிருந்து தள்ளி வைக்கப்படும், சிங்கள ஆதிக்கம் வந்து சேரும் என்று அஞ்சி, குறித்த மலையில் இருந்த தொல்லியற் குகையை மூடி மேலேபிள்ளையார் சிலையை வைப்பதற்கும், அங்குள்ள இயற்கையான கூர்ப்பாறையை சிவலிங்கமாக செதுக்கப்போவதாகவும் அங்கு சென்ற போது தெரிவித்தனர்.  ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக இயங்கிய இப்போராட்டத்தின் பலவீனமாக தொல்லியலின் முக்கியத்துவத்தையும், இயற்கை மரபுரித்துக்களை “சிவலிங்கமாக” வடிப்பதற்கு கருதியதையும் குறிப்பிடலாம்.. மரபுரிமைகள் சமகால நிலவடிவங்களுக்காக, இன, மத, நிலமைகளை வலிந்து திணிக்க வேண்டியவை இல்லை. அவை எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறே பாதுகாக்கப்படவும் சமகால வாசிப்பிற்கு உட்படுத்தப்படவும் வேண்டப்படுபவை. மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் இவை பற்றிய அறிவும், கவனமும் முக்கியமானவை.

போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும், உரையாடுவதற்கும் அமைப்பாய்த் திரளுவதும் செயற்படுவதும் வடக்குக் கிழக்கில் நிகழ்வதை அங்காங்கே அவதானிக்கிறோம். ஆனால் அவை இன, மத, மொழிச் செருக்குகளைக் கடந்து ஒடுக்கப்படுதலுக்கு எதிரான சிறுபான்மையினரும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடிய பெரும்பான்மைச் சமூகத்தைச்சேர்ந்த சனநாயகக் குரல்களும் இணைந்ததாக மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் இனவாதத்தையோ, மதவாதத்தையோ கொண்ட தரப்புக்களை எதிர்க்கவோ நம்முடையவற்றைப் பாதுகாக்கவோ முடியாது போகும்.

 “மரபுரிமைகளைப்பாதுகாப்பதும் ஓர் அரசியல் செயற்பாடு” என்ற அடிப்படையில் அவை அறிவு மற்றும் செயற்பாட்டு தளங்களை சமபொழுதில் கோருவன. ஏனெனில் மரபுரிமைகளை வாசித்தலும் தெரிதலும் பரந்த அறிவார்ந்த தளங்களைக் கோருகின்றன.  மரபுரிமைகள் காவிவந்திருக்கும் மூடநம்பிக்கைகள், பிறழ்வுகளை அறிவின் மூலம் விசாரணை செய்யும் போது அவற்றிற்கான பாதுகாப்பையும் சரி பொது நிலமைகளையும் சரி எடுத்தாள்வது, மேம்பட்ட வழிமுறைகளை ஏற்படுத்தும்.

சிவசேனை போன்ற மத அமைப்புக்கள், மாட்டிறச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும், யமுனா ஏரி போன்றவற்றை மதவயப்படுத்தவும் பழைய மன்னர்களின் பெருமைகளைச் செருக்காக உருவாக்கவும் முனைகின்றன, இந்திய இந்துத்துவ சக்திகளின் பிற்போக்கான மதவாதத்தின் செல்வாக்கு சிறுபான்மையினரின் பூர்வீக நிலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதைப் போல “அநாமதேய தீடீர் லிங்கங்களை முளைக்கச்செய்து ” அதற்குப் புதிய தலவரலாற்றைப்புனையுமளவிற்கு மதவாதக்குழுக்களை எடுத்துச்செல்கிறது. காரைநகர் வாசலில் சிவலிங்கம் வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட “ராவணேஸ்வரம்”, செம்மணியில் வைக்கப்பட்டிருக்கும் தீடீர் லிங்கம் என்பன. சமூக வாழ்க்கைக்குள் இருக்கும் வழிபாட்டு முறைகளின் மரபுரித்துக்களுக்குள் அடங்காது. மாறாக அவை இந்துத்துவ, வைதீக இறக்குமதிகளாகவே பார்க்கப்படவேண்டியவை. இவற்றைச் செய்பவர்கள் சிங்கள பௌத்த பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இவற்றைச் செய்கின்றாதான நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றனர், ஆயினும் அந்த எதிர்ப்பு நடவடிக்கை பிரக்ஞையின்றியே நடக்கின்றது. இது சனநாயக விரோதமான தன்மைகளுக்குள்ளேயே நியாயமுள்ள தரப்புக்களையும் வழிநடத்திச்செல்லும்.

அறிவுச்செயலாக மரபுரிமைச்செயற்பாடுகள்.

மரபுரிமைகளைப் பாதுகாப்பது, அவை அழிக்கப்படும் போதும் காவுகொள்ளப்படும் போதும் போராடுவதற்கு அடிப்படை அவை மீதான அறிவார்ந்த உரையாடலும் செயற்பாடும் என்பதை முதற்கொண்டு, இன்று அவ் அறிவார்ந்த செயற்பாட்டு வெளியை எங்ஙனம் உருவாக்கி வளர்ப்பது என்பதையும் இங்கே உரையாட நினைக்கிறேன்.

பொதுசன அபிப்பிராயத்தையும் சனங்களையும் ஒன்று திரட்டுதல் அறிவூட்டுதல் என்பன மரபுரிமைகளைப்பாதுகாக்கும் செயற்பாடுகளின் அடிப்படையான விடயங்கள். அமைப்பாய்த் திரளும் போது ஏற்படும் கருத்தியல் பன்மைத்துவமும் செயற்பாடுகளும் சனநாயக வழிப்போராட்டங்களில் முக்கியமானவை. 

மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கலைவரலாற்றுத் துறையினர், தென்னிலங்கை வியாபாரிகள் தொல்சின்னங்கள், கலைப்பொருட்களை கொண்டு செல்வதற்கு எதிராகவும், போருக்குப்பின்னர் யாழ்ப்பாண அபிவிருத்தியின் பொது வீதிகளை அகலமாக்குகையில் காவுகொள்ளப்படும் பழைய கட்டிடங்கள் மரபுரிமைச்சின்னங்களைப் பாதுகாக்கவும், முன்னெடுத்த செயற்பாடுகள் மரபுரிமைகளைப்பாதுகாக்கும் போராட்டச் செயற்பாடுகளின் முன்னோடி முயற்சிகளாகவுள்ளன. அதன்பிறகு மரபுரிமைகள் தொடர்பான செயற்பாடுகள், ”தொன்மயாத்திரை” போன்ற மரபுரிமை நடை சார் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. மரபுரிமை தொடர்பான உரையாடல்கள் இலங்கை சமகால கட்டிடக்கலைகள் மற்றும் ஆவணக்காப்பகத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதனை இன்னும் விரிவாக்க பாடசாலைகளில் மரபுரிமைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அறிவார்ந்த உரையாடலும் வாசிப்பும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மரபுரிமைகள் தொடர்பான அறிதலே அவற்றைப்பாதுகாக்கக் கூடிய வழிமுறைகளைக் காட்டும். பாடசாலை மாணவர்களிடையே இவ்வுரையாடல் மேற்கொள்ளப்படும்போதே அது பொருத்தமான தளத்திற்கு ஆழமாக எடுத்துச்செல்லப்படும்.

மேலும் மரபுரிமை நடைகள், மரபுரிமைகளைக்கொண்டாடுதல் சமூகவயப்படுத்தல் மரபைப்புழங்கு பொருட்களாகவும் ஆற்றுகைகளாகவும் தொடர்ச்சியாக மக்களிடையே வைத்துக்கொள்ளுதல் என்பன அவசியமான செயற்பாடுகள். மரபுரித்துக்கள் “தங்களுடையவை” என்ற நம்பிக்கையும் அக்கறையும் மக்களிடையே வரவேண்டும். அரசோ அதன் சட்டங்களோ அன்றி மக்களின் புழங்கு பண்பாட்டின் அறிதல் மற்றும் செயற்பாடுகளே மரபுரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய ஆகச்சிறந்த அணுகுமுறையெனலாம். அப்போதுதான் அச்சுறுத்தல் என்பது வரும் போது மக்கள் தங்களுடையதன் பொருட்டு இதயத்திலிருந்து தோன்றும் உணர்வுடன் போராட்ட வெளிக்கோ செயற்பாட்டு வெளிக்கோ வந்து சேருவர். 

திருவிழாக்கள், சடங்குகள், ஆற்றுகைவடிவங்கள், கதைகள், செய்திகள் என்று மக்கள் செயல்களே மரபுரிமைகளின்  உள்ளோட்டமான அசைவுகளை விரிக்கும். மரபுரிமைகள் சமநேரத்தில் கலைகளாகவும்,  இருக்கின்றன. தொல் சின்னங்களாகட்டும், சடங்குகளாகட்டும், மொழியாகட்டும், எல்லாமே கலைகளாகவும் இருப்பவை. எனவே கலைத்தன்மையினதான வாசிப்பும், அறிதலும் ஆற்றுகையும் மரபுரிமைகளின் தொடர்ச்சியில் பங்கெடுக்கின்றன.

மரபுரிமையைப்பாதுகாப்பதற்கான முக்கிய செயலாக இருப்பது ஆவணமாக்கல். ஆவணப்படுத்தல் என்பது சேகரித்தல், பாதுகாத்தல், பகிர்தல் என்கிற மூன்று படி நிலைகளைக் கொண்டது என்று எளிமையாகக் குறிப்பிடலாம்.  ஆவணமாக்கல் என்பது எண்ணிம வடிவத்தில் வளர்ச்சியடைந்து இருக்கிறது. இன்று அவ்வகை எண்ணிம ஆவணமாக்கல்கள் தனியான மரபுரிமை வகையாகவும் கருதப்படுகின்றன. மெய்போலி (virtual ) மரபுரிமைகள் எதிர்காலத்தில் மரபுரிமைகளை எடுத்துச்செல்வதற்கான தனி அலகாக முறைமையாக்கப்படுகின்றன. தனிப்பட்ட முறையிலும் சரி அமைப்பாகவும் சரி சுயாதீன அமைப்புக்களோ, அரசோ தன்னுடைய இயங்கு முறைகளுக்குள் ஆவணமாக்கலை தனி மரபுரிமை அலகாகக் கொண்டு உள்ளூரளவில் தொடங்கி பொருத்தமான மானுடவளத்தை செயற்படுத்தி ஆவணமாக்கலைச் செய்வது  வேண்டப்படுகின்றது. நூலகம் நிறுவனம்,  போன்றன இன்று மேற்கொண்டிருக்கும் ஆவணமாக்கல் பணி இங்கே உதாரணப்படுத்தவேண்டியதாயும் முன்னோடி முயற்சிகளாகவும் உள்ளன.

மேலும் தேசிய, சர்வதேச அளவில் இயங்கும் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள், பற்றிய அறிவும் சரி இவை தொடர்பான தேசிய சர்வதேச இயங்கு பொறிமுறைகளையும் சரி அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றை மக்கள் மயப்படுத்துவதையும் அமைப்புக்கள் செய்ய வேண்டும். சர்வதேச ரீதியாக  ICCOMs (international council of monuments and sites), IUCN (international centre for the study of the preservation and restoration of cultural property) முதலான அமைப்புக்கள் முக்கியமானவை. தேசிய அளவில் இலங்கையில் அரசு மரபுரிமைகளுக்கான அமைச்சினை தாபித்துள்ளதுடன். சாசனத்தில் Antiquities Ordinance of 1940 (revised in 1956 and 1998), Cultural Property Act 1998  ஆகிய சட்டங்கள் மரபுரிமைகளைப்பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளவை.

மேலும் சுற்றுலாத்துறைய மரபுரிமைகளை மையப்படுத்தி விரிவாக்குவதும் மரபுரிமைகளை அறியவும் பாதுகாக்கவுமான வழிமுறைகளில் முக்கியமானது. சர்வதேச, தேசிய அளவில் முக்கியம் பெறும் சுற்றுலாத்துறையினை கிராமங்கள் வரை அழைத்துவருவதற்கு மரபுரிமைகள் பாதைகளை ஏற்படுத்துகின்றன. மரபுரிமைகள் மீதான ஆய்வுகள், கதைகளை அவ்வெளிகளில் எளிமையாக வழங்குவதன் மூலமும் ஆற்றுகைகளை நிகழ்த்துவதன் மூலமும் அவற்றை இன்னும் வினைத்திறனாக மாற்ற இயலும்.

மரபுரிமை  என்பது அடையாளமாக, வரலாறாக, கலையாக, கொண்டாட்டமாக எதிர்ப்பு வடிவமாக பல்வேறு சாத்தியங்களைத் தோற்றுவிக்கின்றது. மதவாதம் பேரினவாதம் போன்றவற்றுக்கு எதிராக மக்களை சனநாயகமயப்பட்ட அறிதலூடான போராட்டத்திற்கும் விடுதலைக்குமாக வழிநடத்த மரபுரிமைகளையும் பயணவழிகளில் ஒன்றாகத் தெரிவு செய்ய முடியும். இலங்கைத்தீவு போரின் காட்சியில் இருந்து வெளியேறி இன, மத, பேதங்களைக்கடந்து எல்லோருக்குமான சுதந்திரமும் சமத்துவமுமான வாழ்வை நோக்கி நகர  வேண்டும்.  அதிகாரத்தின் கோர வடிவங்களுக்கு எதிராக எல்லா மக்களும் எதிர்நிற்கவேண்டும் இனவாதம், மதவாதம் என்பவற்றினாலன்றி மானுட வாழ்கையால் மரபுரித்துக்களை பார்க்கும் கண்களை நாம் அனைவருமே பெறவேண்டும். அவற்றைச் “செருக்காகவன்றி” வாழ்வுக்கூறாகக் கருதும் எல்லோருடைய அடையாளங்களையும் மரபுகளையும் சமமாக மதிக்கும் சமூகங்களை உருவாக்குவதின் அடிப்படையில் இருந்துகொண்டே அடக்கு முறைக்கு எதிராக நாம் மரபுரிமைகளை நிறுத்தவேண்டும்.

 

உசாத்துணைகள்

அகிலன்.பா, காலத்தின் விளிம்பு – யாழ்ப்பாணத்தி  மரபுரிமைகளும் அவற்றைப்பாதுகாத்தலும், பேறு வெளியீடு,2015.

சிவசுப்பிரமணியன்.ஆ,வரலாறும் வழக்காறும், காலச்சுவடுபதிப்பகம்,2008.

Pushparatnam.P, Tourism and monuments of archaeological heritage in northern srilanka. Dip.of history university of Jaffna,2014.

பக்தவதசலபாரதி,வரலாற்றுமானிடவியல்,அடையாளம் பதிப்பகம்,2013.

சிவசுப்பிரமணியன்.ஆ, அடித்தளமக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு 2002.

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’