நாங்கள் அன்றாடம் தொட்டு அளையும் ஒவ்வொரு கருவிகளுக் குள்ளும் அவற்றின் எதிர் வடிவமும் இருளும் உள்ளுறைந்துள்ளது. தினமும் காய்கறி நறுக்கும் கத்திக்குள் பல்லாயிரம் கொலை வாள்களின் இருள்வடிவும் புதைந்திருக்கிறது.
வேட்டைக்காரனின் வில்லும் அம்பும் வெறும் உணவு வேட்டைக் கருவி மட்டும் தானா? புராணங்களிலும் வரலாற்றிலும் அவை நிகழ்த்திய கொலை ஆட்டங்களைக் கதைகளாகக் கேட்டுக் கொண்டெல்லவா நாம் வளர்ந்தோம். வெறும் தடிகளை வளைத்தும் கூராக்கியும் வில்லும் அம்பும் செய்து ஒரு கணமேனும் காண்டீப தாரியாக நின்றிருக்கிறோம் இல்லையா? எல்லாக் கருவிகளையும் ஆக்கும் போதே அவற்றின் எதிர் வடிவத்தையும் சேர்த்தே இம்மானுட குலம் உருவாக்கி வந்திருக்கிறது. அவர்கள் திட்டமிடாவிட்டாலும் கற்பனை கூடச் செய்திரா விட்டாலும் காலப் போக்கில் அது நிகழ்ந்துவிட்டது. அவை எவ்வளவு ஆக்கத்திற் குரியவையோ அவ்வளவு அழிவிற்கும் உரியவையாகின்றன.
முதற் கொலையைச் செய்த கொலைக்கருவி வெறும் கல்லாயுதமாக இருந்தாலும் கூட அது அதற்காகச் செய்யப்பட்டிருக்காது. நம்முடைய மானுட குலத்தின் சாரத்தில் அதுவொரு விழைவாக இருக்கவில்லை. இத்தனைக்கும் பிறகும் நாம் இன்னும் பிழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அதற்குச் சான்று. கொலைக் கருவிகள் மானுடர் சமைத்துக் கொண்ட இருளினால் அதன் எதிர் வடிவமான அதிகாரத்தினால், குரோதத்தினால் ஆக்கி அளிக்கப்பட்டவை. நம்ப முடியாதபடிக்கு அது மிக சொற்ப ஆட்களாலேயே அவர்களின் சொந்த அதிகார வெறிக்காக, ஆதிக்க உள்ளத்திற்காக ஆக்கப்பட்டது. நல்லெண்ணமே அவற்றின் மூலமானது. இயல்பானது. இருள் வடிவமோ அதில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கும் போது அதைக் கொண்டு குண்டு மழை பொழியலாம் என்றோ , ஹிரோஷிமா நாசயாகி என்ற இரண்டு நகரங்கள் எரிந்தழிவதையோ கற்பனை செய்து பார்த்திருப்பார்களா என்ன?
டிலுக்சன் மோகன் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கும் கனவுடன் இரத்மலானை விமானப் பொறியியல் பல்கலைக் கழகத்தில் தன் முதல் விமான மாதிரியை பேராசிரியர்களுக்கு முன் வைக்கும் போது அவருக்கு நிகழவிருப்பது தொடர்பில் எந்த முன் அனுமானங்களும் இருக்கவில்லை. அவரில் நிறைந்து இருந்ததெல்லாம் இந்த நாட்டின் கைகளால் ஆக்கி ஓடுபாதையில் ஓடி ஆகாயத்தில் எழும் தன்னுடைய அலுமினியப் பட்சியைப் பற்றிய கனவு ஒன்றே. அம்முன் வைப்பில் சிங்களப் பேராசிரியர்கள் அவருடைய விமானம் புலிகளுக்காகச் செய்யப்பட்டதா என்று கேட்கும் போதுதான் அக்கனவும் இலட்சியமும் கொண்ட வாலிபனுக்கு அதற்கொரு எதிர்வடிவமும் உண்டு என்ற உண்மை அகத்தைத் தைக்கிறது. அவரை சிறைக்கும் சித்திர வதைக்கும் தள்ளுகிறது. உடலால் அல்ல அகத்தினால் ஆன்மாவினால் அழிவதே வியாகுலம். அவ் அழிவும் மீட்சியும் பாவோடும் கதையையே புனைவாக்கியிருக்கிறார்.
டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’ என்னும் தற்புனைவு கருப்பு பிரதிகள் பதிப்பகத்தால் இவ்வருடம் (2025) பிரசுரமாகி இருக்கிறது. அது கையில் கிடைத்தது. அதிகாலையில் தொடங்கி விடியலில் வாசித்து முடிக்கும் போது இருந்த உணர்வினால் தள்ளப்பட்டு மேற்படி பந்தியை எழுதி விட்டு உறங்கிப் போனேன். வெளியே சாம்பல் வானம் கொட்டிக் கொண்டிருந்தது. புதிய அரசாங்கம் மாவீரர் தினத்திற்கு இம்முறை அனுமதி அளித்திருந்ததால் முள்ளியவளைச் சந்தியில் புலிகளின் காலத்திற்குப் பிறகு ஒலிபெருக்கியில் ‘இயக்கப்பாட்டு’ போட்டிருந்தார்கள். ‘இராஜ கோபுரம் எங்கள் தலைவன்… இன்று ‘திகதி நவம்பர் 26.
வெளிச்சத்தம் எல்லாம் செவியோடு போயின. நெஞ்சில் படுபட்சியில் உச்சமான இடங்களும் சொற் சேர்வுகளும் மிதந்து கொண்டிருந்தன.
எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் போது, ஓர் இரவில் அம்மா என்னைைக் கூப்பிட்டு எனது கையில் ஒரு சமையல் கத்தியைைக் கொடுத்தார். “வீட்டுக்குள் யார் நுழைந்தாலும் வெட்டிவிடு மகன்” என்றார். நான் அதிர்ந்து போனேன். நான் திரைப் படங்களில் இரத்தத்தைக் கண்டாலே கண்களை மூடிக் கொள்ளும் ஆள். என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகமும் வெறுத்தது ஆயுதங்களைத்தான், சண்டையைத்தான், இரத்தத்தைத்தான்! (பக் 41 )
பின்னர் நிதானமான என்னைத் தொகுத்துக் கொண்டு எழுந்தேன். வேலைகளை முடித்து விட்டு இக்கட்டுரையை எழுத அமர்ந்தேன். பரந்தனில் வசிக்கும் போது முதல் முதல் இலங்கை விமானப்படை பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் தாக்குதல் நடத்தும் போது விழுந்தடித்துப் பதுங்கி பயந்ததையும், குண்டுச் சிதறல்கள் பள்ளிக்கூடத் தகரக் கூரையில் ஆலங்கட்டி மழையைப் போல் பொழியும் சத்தத்தையும் நினைத்துக் கொண்டேன். அந்தப் பேரிரச்சல், நிலத்தைக் குலுக்கும் குண்டுப் பொழிவு. பெரும் சத்தம். ஐய்யொ என்கின்ற அலறல்.
சில மாதங்கள் கழித்து புலிகளின் விமானங்கள் வன்னியில் இருந்து புறப்பட்டுப் போய் கொழும்பில் தாக்குதல் நடத்திய அன்று நாங்கள் பள்ளிக்கூடம் முழுவதும் அவ் உள்ளூர் தயாரிப்பு விமானங்களைப் பற்றி அக்கூரைக்குக் கீழ் இருந்து மகிழ்ந்து கதை கதையாக அடித்து விட்டும் பெருமைப் பட்டுக் கொண்டும் இருந்ததையும் கூடவே நினைத்துக் கொண்டேன். எல்லோரும் அன்றைக்கு புலிகளின் வான்படை வானோடிகளாக ஆகி மீண்டு கொண்டிருந்தோம். ஓர் புதிய கனவு பிறந்திருந்தது. மாலை ஈழநாதம் விசேட பதிப்பில் கலர் படங்களாகப் புலிகளின் விமானங்களைச் செலுத்திய ‘வானோடிகள்’ கண்கள் மறைக்கப் பட்டிருக்க அச்சிறிய வகை விமானங்களில் அமர்ந்திருந்தார்கள். அவற்றின் மடியில் நீண்ட குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன அன்றைக்கு அக்கணத்தில் எங்களில் பலருக்கும் ‘நான் விமானியானால்’ என்ற கற்பனை விரிந்தது. தமிழீழம் கிடைத்தால் நாங்களும் விமானி ஆகலாம் என்று சொல்லிக் கொண்டோம். நல்ல வேளையாக போர்க் காலம் முடியும் முன்பே நான் எக்காரணம் கொண்டும் போரில் பங்குபற்றும் சிறு தோட்டாவாகக் கூட ஆகக் கூடாது என்று முடிவுக்கு வந்து விட்டேன். தருமபுரத்தில் இடம்பெயர்ந்து இருக்கும் போது கிபிர்களும் மிக்குகளும் சரமாரியாக வானில் தோன்றிக் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கும் போது என்னுடைய முதல் நாவலை எழுதினேன். நாவலின் பெயர் ‘அலுமினா – Al2O3’ அது ஒரு விமானத்தைப் பற்றியது. மாயாஜாலமும் அறிவியலும் சந்திக்கும் புனைகதை. ஐந்து கட்டு அப்பியாசக் கொப்பியில் கையால் எழுதியிருந்தேன். மாய மந்திர உலகிற்கு அழைத்துச் செல்லும் அவ் விமானத்தின் கதை இருந்த பையை சுதந்திரபுரத்தில் நாங்கள் பிழைத்திருந்த பதுங்கு குழிக்குள் ஷெல்லடி காரணமாக விட்டு விட்டு வந்த போது நாம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன்.
விமானப் பொறியியல் படித்து விமானத்தை ஆக்கும் கனவில் இருந்த டிலுக்சன் இன்றைக்கு விமானியாக இருக்கிறார். அவர் ஒரு புனைவை எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் அது பிரசுரமாகி இருக்கிறது. நான் தமிழ் இலக்கியத்தில் ஒரு வாசகனாக இருக்கிறேன். அதில் எழுதவும் செய்கிறேன். இந்த தருணம் ,இந்த வாழ்வு எல்லாவற்றையும் விட அர்த்தமுள்ளதாக, நிறைவுள்ளதாக இருக்கிறது. அது குண்டு போடும் விமானங்களைக் காட்டிலும் எங்களை உயரத்தில் சஞ்சாரப் படுத்துகிறது.
….
தன்வரலாற்றுக்கும் தன்வரலாற்றுப் புனைவுக்குமான வேறுபாடுகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் இவ்விரண்டு வகைகளுமே சிறப்பாக நிகழ்ந்துள்ளன. தன் வரலாற்றுக்கும் தன்வரலாற்றுப் புனைவிற்கும் நடுவில் பொதுவாக முயங்கும் பண்புகள் இருக்கலாம். ஆனால் குறித்த படைப்பின் ஆசிரியர் அதை ‘புனைவு’ என்று குறிப்பிடும் பட்சத்தில் பிறகதை தன் வரலாறு என்று கொள்ள முடியாது. கொள்ளவும் கூடாது. அதன் பின்பு அது அது புனைவிலக்கியத்தின் மதிப்பீடுகளாலேயே அணுகப்படும். அதன் கருவிகளாலேயே தொட்டெடுக்கப்படும்.
தமிழில் புகழ்பெற்ற தன் வரலாறுகளான எஸ் பொன்னுத்துரையின் நனவிடைத் தோய்தல், சி.புஸ்பராஜனின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஸ்பராணியின் அகாலம், தனுஜா சிங்கத்தின் ‘தனுஜா’ போன்றவை முழுக்க முழுக்க தன் வரலாறுகள். அதே சமயம் கோவிந்தனின் புதியதோர் உலகம், அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் முதலியவற்றை தன் வரலாற்றுப் புனைவுகள் என்று வகை மாதிரியாகச் சொல்ல முடியும். அவ்வகையில் டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’ தன்வரலாற்றுப் புனைவுகளில் ஒன்றாக வந்து சேர்ந்திருக்கிறது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவரான டிலுக்சன் மோகன் போர்ச்சூழல் இத்தீவை சிப்பிலி ஆட்டிக் கொண்டிருந்த போரின் சாவுகளும் கொடுமைகளும் மலிந்து கிடந்த காலத்தில் இலங்கையின் முதல் விமானமொன்றைச் செய்துவிட வேண்டும் என்ற கனவோடு எழுந்து வந்த போது அக்கனவை இப்போர்ச்சூழல் நசுக்கி எறிந்த தன் கதையை புனைவாக ஆக்கி அளித்துள்ளார். டிலுக்சன் மோகன் இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் அவ்வளவு பரிச்சமானவர் அல்ல. அவருடைய நோக்கம் தன்னுடைய கதையை; ஒரு வகையில் யுத்தத்தின் இன்னுமொரு கதையைச் சொல்ல வேண்டும் என்பது. அதன் பொருட்டு அவர் தமிழின் முக்கியமான கதை சொல்லிகளில் ஒருவரான எழுத்தாளர் சோபாசக்தியின் ‘இலக்கியப்படுத்தல்’ என்ற பணியைத் துணையாக வரித்துக் கொண்டு, ‘படுபட்சியைப்’ புனைவாக ஆக்கிக் கொண்டுள்ளார். சோபாசக்தியின் இப்பணி பற்றிய விசயங்களை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் பார்க்கலாம். அதற்கு முதல் படுபட்சியின் மீதான இலக்கிய மதிப்பீட்டை தொகுத்துக் கொள்ளவும் அது சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தில் எத்தகைய இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதையும் துணிய முயல்கிறேன்.
படுபட்சியில் குறிப்பிடப்படுவது போல் அதன் வகைமை Auto fiction எனப்படுவது. இங்கே டிலுக்சன் குறிபிடும் ‘இது என்னுடைய கதையை அடிப்படையாக கொண்ட புனைவு’ என்பதை நாம் அவ்வளவு சிக்கல்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் எல்லாவகைப் புனைவுகளும் ஏதோவொரு வகையில் உண்மைகளும் கூடத்தான். அவை எழுத்தாளருக்கு நடக்காவிட்டாலும் நடந்திருந்தாலும் கூட. எங்கிருந்தோ அவரை வந்தடைந்த மானுடர்களின் கதைகள் தானில்லையா? அவர் அறிந்தும் அறியாமலும் அவருக்குள் வந்து சேர்ந்ந்து அவருடைய கற்பனையாலும் உள்ளுணரினாலும் வளர்த் தெடுக்கப்பட்டவை. ஆகவே டிலுக்சன் மோகன் இதைத் தன்னுடைய கதை என்று அடிக்கோடு இடுவதன் மூலம் வாசகர்கள் அது யாருக்கு நடந்தது என்ற மட்டும் அறிந்துகொள்கிறாரே ஒழிய ஏனைய புனைவுகளில் இருந்தோ அவற்றின் நோக்கம், முறைமைகளின் மீதான வாசிப்பில் இருந்தோ படுபட்சி தனிமைப் படுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றில்லை. எல்லாப் புனைவு களையும் போல எங்கோ ஒருவருக்கு இது நிகழ்ந்திருக்கிறது என்றே இதையும் படிக்கும் போது கற்பனையில் விரித்தெடுத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால் தன்வரலாற்றைத் தெரிவு செய்யாமல் டிலுக்சன் இதைத் தற் புனைவாக ஆக்கி இருப்பது கற்பனையால் அவ்வாழ்வை நாம் வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை அளிப்பதற்குத்தானே! புனைவிலக்கியத்தின் முதன்மை நோக்கம் இதுதானில்லையா?
டிலுக்சனுக்கு தன் கதையைச் சொல்ல இலக்கியத்தில் இரண்டு வழிகள் இருந்தன. அவை பொதுவாக மானுடர் இன்னொரு மானுடருடன் தொடர்புகொள்ளும் வழிகள். ஒன்று தர்க்கம் இன்னொன்று அழகியல்.
தர்க்கம் என்பதைத் தெரிவு செய்யும் போது அவருக்குண்டான பணி தன்வரலாற்றைச் சொல்வது. அதற்கு அவருக்கு வெறும் கதையும் தகவல்களும் மட்டும் தேவைப்படும். அதற்கு போர்க்காலத்தில் நடந்த கதை என்ற மட்டில் ஒரு பத்திக்கோ கட்டுரைக்கோ உண்டான தர்க்க பூர்வமான வாசிப்பு மட்டுமே கிடைத்திருக்கும். அவர் அதை விரும்பவில்லை. அவரிடம் அதை சினிமாவாகவோ நாவலாகவோ ஆக்கும் விருப்பே நிறைந்திருக்க வேண்டும். அதனாலேயே அழகியலை தன் உரையாடல் முறையாகக் கொண்ட உணர்வுகளும் ஒருங்கிசைவும் நிகழும் கொஞ்சம் செறித்துக் கூறினால் கலையின் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அது நல்லதொரு முடிவே. அவ்வகையில் டிலுக்சன் ஒன்றும் தெரியாதவரோ வெள்ளந்தியோ அல்ல. கூருணர்வும் செயல்புரியும் விழைவும் கொண்ட இளைஞர். ஏன் இதை அழுத்திச் சொல்கிறேன் என்பதைப் பின்னர் கூறுகிறேன்!
தமிழில் புனைவிலக்கிய வகைகளில் கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் ஆகியன பிரதானமானவை. அவை தாம் நிகழ்த்தும் பணிகள் மூலம் இவ் உருவ உள்ளடக்கங்கள் சேர்ந்து கட்டிய இலக்கிய பிரதிகளாகப் பெயரிடப்படுகின்றன. இவற்றில் எவ்வகை இலக்கிய பிரதிக்கு அணுக்கமாகப் படுபட்சி நிகழ்கிறது என்பதை வரையறுத்துக் கொள்வது அது பற்றிய இலக்கிய மதிப்பீடுகளை தெளிவாக முன்வைக்கவும் தொகுத்துக் கொள்ளவும் துணை செயயும் என்று நினைக்கிறேன். படுபட்சியை அதன் கருப்பொருள் , அமைப்பு , சார்ந்தும் ஆற்றும் பணி சார்ந்தும் குறுநாவல் என்னும் வகைமைக்கு நெருக்கமாய் வாலயப் படுத்திக் கொள்ள முடிகிறது.
சிறுகதைக்குரிய ஒருமையும் நாவலுக்குரிய ஆழமும் குறுக்கிட்டு இணைந்து பயணிக்க கூடியது குறுநாவலின் வடிவம். ஒரு மையக் கதையும் அதனுடைய ஓட்டத்தில் அக்கதையுடன் உரையாடக் கூடிய அம்சங்களை உள்ளே அனுமதிக்க கூடியது குறுநாவல். அதேநேரம் மொழி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விடாமல் தன் ‘மூலக் கதையை’ சிதைத்துக் கொள்ளவோ பொரும விடவோ அனுமதிக்காமல் தன்னுடைய உச்சங்களையும் நாடகீயத் தருணங்களையும் உரையாடல்களையும் நிகழ்த்தியபடி தீர்மானிக்கப்பட்ட தரிசனம் நோக்கியோ கதையுச்சியை நோக்கியோ சென்றடைவதை பொதுவாகக் குறுநாவலின் வடிவம் என்போம். நாவலைப் போன்று பெருகி விரிவதோ நுண்தகவல்கள், பெரு விவவரணைகள் ஏதும் இல்லாமலும் சிறுகதைக்குரிய ஒற்றைக் கதைத் தன்மை இல்லாமலும் தன்னை நிகழ்த்திக் கொள்வதால் எழுத்தில் கட்டுப்பாடும், உரையாடலும் சமநிலையில் பயணிக்க வேண்டி இருப்பதே நல்ல குறுநாவலை எழுதுவதில் உள்ள சவால். டிலுக்சன் தன்னுடைய கதையை இவ்வடிவில் எழுதுவதற்கு கொரில்லா, ம் போன்ற மிகச்சிறந்த நாவல்களையும் அதற்கான தனி வடிவங்களையும், மொழியையும் கண்டடைந்த, தமிழ்ச் சிறுகதைகளில் நம்காலத்தின் ‘மாஸ்டர்’ களில் ஒருவருமான சோபாசக்தியைத் துணைப்படுத்திக் கொண்டது ஒரு வகையில் நல்லூழெனவே படுபட்சிக்கு அமைந்துள்ளது.
படுபட்சி சொல்லக் கூடிய டிலுக்சனின் கதை தன்னளவில் ஓர் வடிவச் சீர்மைக்குள் பொருந்துகிறது. நல்ல தொடக்கம், சீரான வளர்ச்சி, கவித்துவ உச்சங்களுக்கு அனுமதிக்கும் மொழியுடன் முடிவையும் அடைகிறது. ஒரு பழங்குடிப் பெண்குழந்தையுடன் அவுஸ்ரேலிய விமான நிலையமொன்றில் ஆரம்பிக்கும் கதை அவளிலேயே முடியவும் செய்கிறது. இடையில் பல மனிதர்கள் வருகிறார்கள், உறவுச் சிக்கல்கள், அகப்போராட்டங்கள் நிகழ்கின்றன. புற உலகம் அழுத்துகிறது. கதையில் டிலுக்சனின் அப்பா , அம்மா , தங்கை, நண்பர்கள் , காதலி , பாலன் , மனைவி , மகள் இராணுவம், இயக்கம், விமானம் என்று கதைமாந்தர்கள் தங்களின் சொந்த வாழ்க்கை நிகழ்தலோடு குறுக்கிடுகிறார்கள். என்றாலும் எல்லாப் பாத்திரங்களும் டிலுக்சனின் கதையிலேயே பொருதுகிறார்கள். மையக் கதையில் பின்னப்பட்டிருக்கும், அக்கதைக்கு உணர்வையும் அர்த்தம் கோடலையும் வழங்கும் கதைகளாக ஆகிறார்கள். இது குறுநாவலுக்கே உரிய பண்பு. படுபட்சியில் அது நிகழ்ந்திருக்கிறது.
இப்புனைவின் மொழி கொண்டிருக்க கூடிய சிதறாத தன்மையும் அதே வேளை தன்னுடைய எல்லைக்குள் அது தன்னால் அடையக் கூடிய ஆகச்சிறந்த கவித்துவத்தையும் அடைந்து கொள்கிறது. இங்கே நான் சொல்லும் கவித்துவ உச்சம் என்பது நிகழ்வுகள் மோதி, உரையாடல்கள் திரண்டு எழுந்து அடையும் நிலைகள். பெருநாவல்களில் இவை நிறையவே நடக்கும். சிறுகதைகளில் பெரும்பாலும் ஒரு உச்சமே நிகழும். குறுநாவல்களில் இரண்டிற்கும் இடையில் சில உச்சங்கள் நிகழலாம்.கதையில் தன் அன்னையின் முன்பும் தங்கையின் முன்பும் நிர்வாணப்படுத்தப்படும் போது, அவமானத்தின் சொற்களைச் சொல்கிறார். அங்கே நின்றிருப்பது டிலுக்சனின் அந்தரமான தருணம் மட்டும்தானா ? அங்கே நின்றிருப்பது டிலுக்சனின் அன்னை மட்டும்தானா? அங்கே நின்றிருப்பது போரின் , மானுடக் கீழ்மையின் இன்னொரு உண்மை. போர் என்பது அவமானங்களின் உண்மையும் கூட என்ற தரிசனம். மானுட வரலாறு முழுவதும் எல்லாப் போர்களிலும் எத்தனை இலட்சம் பேரை நிர்வாணப்படுத்தினோம். கொலையை விடக் கொடிய ஒன்றை நாம் கண்டுபிடித்தோம் என்றால் அது அவமானப்படுத்துவதுதானே? சிறுமைப்படாமல் செத்துப்போவதே போர்க்காலங்களின் பெரிய தவிப்புக்களில் ஒன்று. பெண்ணுக்கும் ஆணுக்கும் போராளிக்கும் சிப்பாய்க்கும் அதுவே முதன்மையான வேண்டுதல்.
இப்புனைவு அவமானத்திற்கும் ஒடுக்குதலுக்கும் எதிராக ஓர் உண்மையைச் சாரப்படுத்திக் கொண்டு நிற்கிறது. அதை நிகழ்த்திக் காட்டுகின்றது.
நாவல் என்பது வரலாறு, தத்துவம், பண்பாடு இவை மூன்றும் ஒச்சும் வெளி. எழுத்தாளர் ஜெயமோகன் நவீன நாவல் என்பதே தத்துவத்தின் கலைதான் என்கிறார். குறுநாவல்கள் பெரிய வரலாற்றுப் பின் புலங்களோ, அதன் செல் நெறிகளோ உரையாடக் கூடிய களங்களைக் கொண்டிருப்பதில்லை. அது நிகழும் காலத்தின் வரலாறும், தத்துவமும், பண்பாடும் அங்கே ‘தேவையான அளவே’ நிகழ முடியும். அதிகப்படியான ஒரு சொல்லும்கூட அதன் புனைவுச் சீர்மையைக் குலைக்கக் கூடும் என்பதால் எழுத்தாளரும், பிரதி செம்மையாக்கும் செயற்பாடும் அதில் கவனப்படுத்த வேண்டியிருக்கும். படுபட்சி போர்க்காலத்தில் கிழக்கு, தெற்கு இலங்கையிலும் அவுஸ்ரேலிய புல நிலத்திலும் நிகழும் கதை. இலங்கையின் போர்க் காலத்துக்குரிய வரலாற்றுப் பின்புலமும், கதைகளும் மிகையும் குறைவும் இல்லாமல் நிகழ்கின்றன. குறிப்பாக ‘புஷ்பக விமானம்’ போன்ற தொன்மங்களையும், அவுஸ்ரேலிய பழங்குடிகளையும் வெள்ளை இனவாதத்தையும் கதை தன்னுள் இணைத்துக் கொள்ளும் போது கூட தன் சீர்மையை மொழி கைவிடாமல் இருப்பது முக்கியமானது.
கிழக்கு மாகாணத்தைக் களமாகக் கொண்ட நாவலில் பொதுவான உரையாடல் மொழியே கையாளப் பட்டு இருக்கிறது. மட்டக்களப்பில் இப்படி யாரும் கதைக்க மாட்டார்கள் என்று வந்து நிற்கிறார்கள். இவர்கள் இன்னுமா ஒழிய வில்லை. புனைவு தனக்கான மொழியை சுதந்திரமான தெரிவு செய்கிறது. அது ஒன்றும் வட்டார வழக்கு அகராதியோ ஆய்வோ கிடையாது. தேர்ந்து கொள்ளும் மொழி புனைவின் நோக்கத்தையோ சரட்டையோ குலைக்கிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. ஆழ்படிமங்களோ, உள்ளுறைகளோ மிகக் குறைவாக இயங்கினாலும் வாழ்க்கை மீதான அங்கதமும் விமர்சனமும் தன்னோக்கம் குலையாமல் நிகழ்வதை இம்மொழிதான் புனைவில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஏதாவது சொல்ல வேண்டும் என்று தனக்கொவ்வா பெண்டாட்டியில் நொட்டை பிடிப்பதை என்றைக்கும் இலக்கியம் பொருட் படுத்துவதில்லை.
இப்புனைவின் மொழி இது எவ்வகை நாவல் வடிவம் என்பதில் இருந்தே உருவாகி வருகிறது. முன்பு குறிப்பிட்டது போல விவரணைகள் ஆலாபனைகள் விரியாமல், படிமங்கள் உள்ளுறைகள் போன்றவை மிகக் குறைவாக நிகழ்த்தப்படுவது. அப்படியானால் இது எவ்வகை இலக்கிய சொல்லல் முறையைக் கையில் எடுக்கிறது? மொழியின் வடிவம் மொழி முறை என்று பார்த்தால் ஒரு வணிக திரில்லர் வகை நாவல்கள் உலகம் முழுவதும் வளர்த்தெடுத்த கச்சிதமும் வேகமும் கொண்ட மொழி. ஆனால் அது நிகழ்த்தும் உரையாடலும் உருவாக்கும் களமும் அது கொண்டிருக்க கூடிய அங்கதமான அணுகுதலும் அதற்கு அழகியல் பொருத்தப்பாட்டை. சீர்மை மிகு மொழி இசைத்தன்மையை வழங்கி விடுகிறது.
எள்ளல் அல்லது அங்கதம் என்பதை எளிய பகிடியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது வரலாற்றின் மீது எழும் எள்ளல். வாழ்கையின் மீது செய்யப்படும் விமர்சனம். மானுட கீழ்மைகளை நோக்கி சொல்லப்படுக் இழிவரல் என்ற பொருளில் இலக்கியத்தில் சொல்லப்படும் ‘உன்னதமாக்கல்’ (sublimation) வழியாக நிகழும் எள்ளல் அது. ஒரு மகத்தான அங்கதம். இவ்விடத்தில் டிலுக்சன் மோகனுடன் சோபாசக்தி இணைந்து இப்புனைவாக்கத்தில் பங்கெடுத்து இருக்கிறார் என்பதும் மனம் கொள்ள வேண்டியதுதான்.
படுபட்சி வெளியான நாட்களில் இருந்து சமூக வலைத் தளங்களில் உள்ள சராசரி அன்றாட அரசியலுடன் புழங்கும் இணைய மந்தர்கள் சோபாசக்தி இப்புனைவில் எடுத்துக்கொண்ட வேலையைப் பற்றி வசைகளையும் அவதூறுகளையும் வழமைபோல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் ஒரே நல்ல விசயம் இவ்விடயம் பற்றிய உரையாடலைத் தமிழ்ப்பரப்பில் செய்ய வைப்பதுதான். எங்களுக்கு இவர்கள் சிறு ஊக்கிகள்.
சோபா சக்தி ஏற்கனவே, மறைந்த எழுத்தாளர் புஸ்பராணி அவர்களின் அகாலம் என்ற தன்வரலாற்று நூலிலும், திருநங்கையான தனுஜா சிங்கத்தின் தன் வரலாற்றை ஆக்குவதிலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவ்விரண்டும் தமிழின் மிகச்சிறந்த தன் வரலாற்று நூல்களின் வரிசையில் கட்டாயம் இடம் பெறும். அவ்வகையில் அவருடைய பணி முக்கியமானது. டிலுக்சன் மோகனின் தன்வரலாற்று புனைவில் சோபாசக்தி அதை இலக்கியப்படுத்தும், செம்மை ஆக்கும் வேலையில் இணைந்துள்ளார். அப்பணி மிக நன்றாகவே ஆக்கி அளிக்கப்பட்டுள்ளது.
சோபா சக்தியின் இப்பணிகளை மேற்கோள் காட்டி சோபா சக்தி, புஷ்பராணி, தனுஜா, டிலுக்சன் ஆகியோரை தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் என்று இணைய மந்தர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் அறிதாத குழந்தையை தமிழ் இலக்கியத்தின் உச்சத்தில் இருக்கும் சோபாசக்தி பயன்படுத்திக் கொண்டார் என்று டிலுக்சனைச் சொல்லி கதறி அழுகிறார்கள்.
நான் அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். நீங்கள் அடிப்பதோ அவமானப்படுத்துவதோ சோபாசக்தியை அல்ல ஒரு விடுதலைப் போராளியும் எழுத்தாளருமான புஸ்பராணியையும், ஒடுக்கப்பட்டு அதில் இருந்து வென்றெழுந்த தன் கதையை இப் பண்பாட்டிற்கு அளித்த தனுஜாவை, தன் கையால் இலங்கையின் முதல் விமானத்தைச் செய்ய எழுந்த கைகளைக் கொண்ட டிலுக்சனை.
இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்களின் கதையையும் வாழ்வையும் சமூகத்திடம் கையளிக்க இலக்கியத்தை நாடமுடியும் என்று பெரு முடிவு ஒன்றைத் துணிந்து எடுத்தவர்கள். நம்பியவர்கள். தம் வாழ்வை முன் வைக்க கலையைத் தெரிவு செய்த அவர்கள் மெய்வாழ்க்கையில் செயல் வீரர்களும் கூட. அவர்கள் ஏதோ ஒரு பொருட்படுத்தும்படியான கதையை வெற்றிகரமாகச் சொன்னவர்கள். கசப்பையும் வயிற்றெரிச்சலையும் தவிர எதையும் அறியாத மந்தர்கள், மூன்றாம் தர இலக்கியமும் காழ்ப்பும் நஞ்சுமாக வலைத்தளங்களில் அலையும் நச்சர்கள் மெய் வாழ்வை எதிர் கொண்டு நிமிர்ந்தோரை, ஒன்றும் தெரியாதவர்கள், சோபாசக்தியின் கைப்பாவைகள் என்பது எத்தனை வேடிக்கை மிகுந்த சழக்கு.
இலக்கியப்படுத்தல்,செம்மையாக்கம் அல்லது எடிட்டிங் இலக்கியத்தில் முக்கியமான பணிகளில் ஒன்று. மேலைச் சூழலில் இலக்கியத்தில் அவர்களுக்கு முக்கியமான கவனம் இருக்கிறது. இலக்கியப் பரிச்சமும் தனக்கென்ற கூர் பார்வைகளும் மிகுந்த அணுக்கமும் கொண்ட திறந்த மனதுள்ள , கடுமையான இலக்கிய மதிப்பீடுகளும் கொண்ட எடிட்டர் ஒருவர் எழுத்தாளருக்கு வாய்ப்பது அரிதானது. அதுவொரு மகத்தான இணைவு. ஒரு உடைந்த பாலத்தில் இருவர் கைகளைப் பிடித்துக்கொண்டே பயணித்து முடிப்பது. முக்கியமாக இருவரும் கற்றுக்கொள்வது. முன் செல்வது. பொருட்படுத்தும் படியான பிரதியை மீட்டெடுப்பது. அது ஒரு மேன்மையான உரையாடல். திழைப்பு.
நிர்வாணமும் முத்தமும் பிறவியிலேயே மனிதர்களின் இயல்பான குணங்கள் எனஎப்போதும் போலவே அவர் நினைத்திருக்கக் கூடும் . பிற்காலத்தில் நான் கைது செய்யப்பட்டுக் காட்சிப் பொருளாாக முழு நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, ஏனோ அப்பாவைை நினைத்துக் கொண்டேன். நிர்வாணம் மனிதரின் இயல்பு மட்டுமல்ல. அது மனிதர்களைக் கொன்று போடக்கூடி ஆயுதமும்கூட. அணுகுண்டாால் கூட உங்களது ஆன்மாவை அழித்துவிட முடியாது. ஆனால், நிர்வாணம் அழித்துப்போடும். அது குறித்துப் பின்னர் சொல்கிறேேன். (பக் 37)
மேற் கண்டவாறு ஒரு பந்தி எழுதப்படவும் அவை பொருத்தமான இடத்தில் வைக்கப்படவும் சோபாசக்தி போன்ற ஒரு எழுத்தாளரின் துணை தன் கதையுடன் தமிழ் இலக்கியத்திடம் வந்த டிலுக்சனுக்கு அவசியம் தானில்லையா? அவர் நிறைவு கொள்ளட்டும்.
எடிட்டிங் பற்றி இவ் உரையாடலை ஒட்டி அதைப்பற்றி இரண்டு கட்டுரைகளை எழுத்தாளர்கள் கிரிசாந்தும் தர்மு பிரசாத்தும் எழுதியுள்ளனர். என்னுடைய இக்கட்டுரை படுபட்சி தொடர்பிலான மதிப்பீட்டை முன் வைப்பது மட்டும் என்பதால் மேற்படி ‘எடிட்டிங்’ பற்றிய உரையாடலை விரிவுபடுத்தவில்லை. எனினும் தொடர்ந்தும் இவ்விடயம் பற்றி உரையாடலைத் தமிழில் வளர்த்தெடுக்க விழைகிறோம். அதற்கான தருணம் கனிந்துள்ளது. இனி வரும் நாட்கள் முக்கியமானவை. ஏன் என்பதைப் பின்னர் சொல்கிறேன்.
27.11.2025




