நீலோசயனி | காளம் 20

நீலோசயனி | காளம் 20

காட்டிற்குள் பகலிரவாக எழுந்த    வெடிச்சத்தங்களையும், அதன் பின் நிகழும்  களேபரங்களையும் கண்டு,  நீலோசயனி என்ற  பெருந்தாய் ஆனை அச்சமடைந்திருந்தது.  அக்காட்டுப்பகுதிக்குள் நீலோசயனியின்  நூறிற்கு குறையாது ஆனைகளைக் கொண்ட பெருங்கூட்டம்  நுழைந்து சில நாட்களே இருக்கும். மழை வேறு ஆரம்பித்திருந்தது. சன்னத மழை. காட்டில்  உறையும் முது விலங்குகளால்  மட்டும் அறியப்படத்தக்க  கொடும் தெய்வங்கள் நீலோசயனியை  சில நாட்களுக்கு முன்பே எச்சரித்திருந்தன. முக்கியமாக  இரண்டு சிறுத்தைகள்  நீலோசயனியின் ஆனைக்கூட்டம் சூழ்ந்து உறங்கும்  கோரை  எழுந்த  வெளிக்குள் நுழைந்து  சண்டையிட்டன.  ஆனைகள் மிரளுமளவிற்கு கொடுங்கூச்சலும் ஆவேசமுமாய் அவை சண்டையிட்டன. புதிதாக ஈணப்பட்ட பத்தொன்பது குட்டிகளையும் அருகணைத்துக் காத்து அன்னை ஆனைகளுக்கு அறிவுறுத்தியது. பெரிய ஆண் யானைகளை  மேய்ச்சல் வெளிகளின் விளிம்புகளில் நிறுத்தியது.  சிறுத்தைகள் ஆனைகளை நெருங்குவதில்லை. ஆனாலும் அவற்றின் வெறிக்கூச்சலும் ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்வதையும்  பெரும்பாலும் மரங்களில் ஏறி ஏறி ஒன்றையொன்று முகத்துல் அறைந்து ‘சொத் சொத்’ என்று  கூடுதவறிய குருவிக்குஞ்சென நிலத்தில் மோதி விழுந்தன. இதோ அதிலொன்று செத்துப்போய்விட்டது என்று நினைக்கும் போது உள்ளிருந்து ஏதோ அருட்டி உலுக்க எழுந்து மீண்டும் பிறதின் மீது  பாய்வதைக் கண்டபிறகு அச்சண்டை, வெறும் காட்டின் அன்றாடம் என்று  வாழாதிருக்க நீலோசயனியால் ஆகவில்லை. அரை நாளுக்குக் குறையாமல் நீடித்த அப்பெரிய சண்டையின் முடிவில் ஒன்று செத்து விழுந்தது. அது செத்து விழுந்த அந்நொடியே எதையோ தனக்குள் கண்டு மிரண்டு நடுங்கிய, வென்ற சிறுத்தை தெறித்தோடி புதருக்குள் மறைந்தது.  அப்பொழுது காரவன் என்ற இளம் ஆண் ஆனை,  புங்கை மர நிழலில்  காம்பிலிருந்து உதிர்ந்து சூடான தரையில் மலரைப் போலக்  கிடக்கும் அச்சிறுத்தைப் புலியைச் சென்று  தன் துதிக்கையால் முகர்ந்து விட்டு நேராக நீலோசயனியிடம் வந்து தப்பிச்சென்றது ஓர் முதிர் நாட் சினை கொண்ட சிறுத்தைப் புலியாக இருக்க வேண்டும், என்றது. நீலோசயனி  வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு, அமைதியாக நடந்து சென்று, ஆற்றங்கரையில் கொஞ்சம் நீரள்ளிக் குடித்தது.  அப்படியே கொஞ்சம் நீரை எடுத்து தலைக்கு மேல்  நஞ்சுப்பாம்பின் மூசலென விசிறி விட்டு கூட்டத்திற் கரைந்தது. 

….

நுள்ளான் எல்லாம் முடிந்தது என்று நினைத்தான்.   வெண் ஊசிகள் லட்சம் லட்சமாக மண்ணை நோக்கி மழையாய் இறங்கிக் கொண்டிருந்தன.  பாமினியும் வாகீசனும் காயப்பட்டு இரத்தப்பெருக்கால் சோர்ந்து விழுந்து இறந்தனர். துர்க்காவின் தலையில் குண்டு பாய்ந்து உடனே செத்துப்போனாள். இறுதியாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட பொறிவெடிகள்   வெடித்து பார்த்தீபனின் உடல்,  துண்டுகளாக காற்றின்  கூர்களாலும் வெட்டப்பட்டு சிதறிய நீரென மழைக்குள் மறைந்து. 

இராணுவ அணிகள் ஊரை அண்மித்திருந்த காட்டை மொத்தமாகச் சலித்து முடித்திருந்தார்கள். அவர்களுக்கு சில உடல்களும் கிடைத்திருக்கலாம்.  நிகர்நின்று சண்டை பிடிப்பது வேவுக்காரர்களின் வேலையில்லை. ஆனால் நன்கு திட்டமிட்டு, இவர்களுடைய வந்த பாதைகளைக் கணித்து திரும்பக் கூடிய வழிகளை எல்லாம் அடைத்து சூழ்ந்து கொண்டிருந்தது அவர்களின் பட்டாலியன். யாரோ காட்டையும் வேவையும் நன்கறிந்த கேணல் தர தளபதியின்  படை சூழ்தலாக இருக்க வேண்டும்.  எண்ண முடியாத இடங்களில் எல்லாம் பொறிவெடிகளும், கண்ணிவெடிகளும் இருந்தன. புலிகள் அறிந்ததை விட அந்த முகாமின்  பாதுகாப்பு பல அடுக்குகளாக பேணப்பட்டிருந்தது. பாம்புகளைப் போல் சென்று  திரும்பியிருக்கலாம்.  நுள்ளானுள் வாழ்ந்த  ’செட்டு’ பிடித்த ஆணவம் படம் பிழந்த நாகமென அடங்கி விழுந்து கிடந்தது. இப்பொழுது தப்பிப்போனாலும்,  தன் அணியை பலிகொடுத்த கதையை கொஞ்சம் மாற்றிச்சொன்னாலும் ஒன்றும் பாதகமில்லை. மிகமும் கடுமையான பாறையை நெஞ்சென ஆக்கிக் கொண்டவன் என்று தன்னைக் குறித்து நினைத்துக்கொண்டாலும்,  இவனுள் எழுந்த ஆணவத்தின் நிழலென உருவானது,  குற்றவுணர்வு வசிக்கத் தக்க ஓர் எளிய இருள் வெளி. இது வரை நாளும் நுள்ளான் அதை உணர்ந்ததில்லை. கண் முன்னே தன்னுடைய அணியில் இருந்தவர்கள், ஒவ்வொருவராக உதிர்ந்த பிறகு அவ் இருள் எழுந்து நின்றது.   அவ்வெளிக்குள் இன்னும் பெருகிச்செல்லும் என்ற உள்ளுணர்வு இருட்டில் பட்ட காயத்தின் அளவை பெருகும் குருதியின் சூடு முன்னுணர்த்துவது போல் உணர்ந்தான்.  மழை வலுக்க வலுக்க உடல் விறைத்துக்கொண்டே வந்தது, சிராய்புக் காயங்களில் புழுக்கள் ஊர்வது போலிருந்தது. மெல்ல நகர்ந்து அம்மழையோடு ஆற்றங்கரையைப் பிடித்து தவழ்ந்து செல்ல வேண்டும். துவக்குகள்  ஓய்ந்ததால், அவர்கள் ‘கிளியரன்ஸ்’ வேலைகளை மழைக்குள்ளேயே ஆரம்பிக்கவும் கூடும்.   பெரிய பயிற்சி முகாம் என்பதால்  மோப்ப நாய்களும் இருக்கக் கூடும், அல்லது இவ்வளவு நேரத்தில், அநுராதபுரத்தில் இருந்து இன்னொரு பட்டாலியன் ஆமிக்காரர்களையும் நாய்களையும் வரவழைத்திருக்கக் கூடும். காட்டுக்குள் சிறுதிருவிழாவை நடத்தாமல் அவர்கள் மீழப்போவதில்லை. சமாதான காலத்தில்  சலித்துக்கிடக்கும் இராணுவத்திற்கு இச்சிறு சண்டை மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்,  வெட்டைக்காரர்களின்  எல்லைகளுள் காட்டுப்பன்றிகள் நுழைந்தால், சூழ்ந்து கொண்டு அவற்றை விரட்டி, மிரளச் செய்து, ஆத்திரமூட்டி, பின்னர்  தாம் விரும்பும் வழிகளில் எல்லாம் அவற்றைக் கொல்வதுண்டு என்று ‘சுலைமான்’  ஒருமுறை சொன்னதை நினைத்துக்கொண்டான்.  அவன் தன் பங்கிற்கு   அகிழான் வளைக்குள் தஞ்சமடைந்த காட்டுப்பன்றியை  அவ்வளையின் வாசலில் அலவாங்கோடு தனித்து நின்று குத்திச் சரிக்க முடிவு செய்ததை விபரித்தை நினைவு கூர்ந்தான்.

‘காட்டுக்க போறது , வெடி வைக்கிறது, பொறி வைக்கிறது,  விழுந்ததைச் சடவட்டி கட்டி எடுதுக்கொண்டு வந்து கீறிப் பங்கெடுத்து விக்கிறது தொழில் மட்டும் தானே அண்ணை, ஆனால் வேட்டை எண்டது திருவிழா, நாங்கள் ஒரு பத்துப்பன்ரண்டு பேர்தான் இருப்பம்,  ஆளுக்கு ஒரு நாயெண்டு பாத்தால், இருபத்தி நாலு இருப்பத்தைஞ்சு பேர்தான் கணக்கு, அறுப்புக் காலத்திலை, பண்டி விழும்  இரவிலை  காவல் கொட்டிலுக்குள்ள ஆளை இருத்தி வேவொண்டு அடிப்பம்,  எந்தப்பக்கத்தாலை ‘ஒலிப்பு’ இருக்கெண்டு தெரியும், பெரிய தாய்ப்பண்டியள்  கூட்டமாய் வந்து போகும், பத்து பன்ரெண்டு பெரிய தடிச்சியளும் சின்னப்பண்டியளும் இருக்கும்.  ஒலிப்பு பாத்து திசையையும் காட்டுக்குறியையும் இரவு பறணிலை உறங்கிறவன் குறிச்சு வச்சுக்கொள்ளுவான். காலமை இரடுபேர் குறிச்ச திசைக்கு  போய் காட்டுக்கை பாப்பாங்கள், வயலுக்கு தூரமிருக்காமல் தான் வளையள் இருக்கும்.  வந்து போன பாதையள்ள நரி மறிச்சு மூத்திரம் பெய்யாட்டி ஒலிச்சியளின்ர ’முடை’ காத்திலை அப்பிடியே இருக்கும்.  முடை பரவின திக்கெல்லாம்  குறிச்சு  ஆக்களை எவடத்தை சூழோணும் எண்டு பாப்பம்.  முடை மண் எடுத்து வந்து எங்கடை வேட்டை நாயளுக்கு மோப்பங்காட்டினால் போதும்,  காட்டின்ர எந்த மூலைக்குள்ள பதுங்கினாலும், நாயின்ரை மூக்குக்கு தப்பேலுமோ ?  நாயள்  சுத்தி வளைச்சு ‘ரவுண்டப் ’ ஒண்டு அடிச்சு ஆக்களை எழுப்பிக் கலைக்கும்.  வழையிருக்கிற ஏரியாவைச் சுத்தி நரி மூத்திரம் தெளிச்சுப்போடுவம்,   பத்தடிக்கு சுத்திச் சுவர் கட்டினமாதிரி ஆக்கள் எந்த திக்கிலை ஓடினாலும் திரும்பித் தெறிக்க வேண்டியதுதான். பிறகென்ன ஆளாளுக்கு விரும்பின ஆயுதத்தோடையும், கண்ணியளோடையும்  இறங்க வேண்டியதுதான்,  திருவிழாதானே ! சொன்னா நம்ப மாட்டியள் ஒவ்வொரு வேட்டைக்காரனும் தெய்வம் சதிருக்கு இறங்கினமாதிரி நிப்பானவை,  நாயள் எல்லாம் சிங்கம் சிறுத்தை எண்டெல்லோ கிருதி கொண்டு திரியும்.  ஒவ்வொரு பண்டியா விழுத்தும் போது வெறிக்கூச்சல்தான். காடு அதிரும் கண்டியளோ,   அந்த மூத்திர வளையத்துக்க சிக்கிற முயலை எல்லாம் கையாலை உரிச்சு  இரத்தம் சொட்டச் சொட்ட  மாலை மாதிரிப் போட்டுக்கொண்டு ஆடுவம், அதுகள் அந்த வேட்டையிலை கணக்கிலையே வராது, அடுத்தநாள் ஆடின சதிரை நினைச்சால் எங்களுக்கே எங்களைப் பாக்க நடுங்கும், இரவு மடையிலை கலையாடின  பூசாரி காலமை எழும்பி இரவு தான் ஆடின கலையை மனிசிக்காரிட்ட விலாவாரியா இருந்து கேப்பான், தெய்வம் முழுசா தன்னை ஆட்கொண்டாலும், ஆரும் ஏதும் கேட்டால், தனக்கும் தெரியும் எண்ட மாதிரி கொஞ்சம் மிதப்பெண்டாலும் வேணுமெல்லோ ?அதைமாதிரி  அடுத்தொரு பத்துநாளைக்கு மாறி மாறி கதை கேப்பம், சொன்னா நம்ப மாட்டியள் கதைக்கேக்க எங்கடை நாயள் கூட  இருந்து வாய்பாக்கும்’’

கொலையும், வெறிக்கூச்சலும், அவற்றை திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்க்கும் விருப்பமும் மனிதர்களுக்குள் எப்பொழுதும்  துளித்துளியாக சேர்ந்து  பெருகிக்கொண்டே இருக்கிறது,  இந்த சமாதான காலம் அப்படியொரு புரட்டுத்தான் என்று நுள்ளானுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டேயிருந்தது. சமாதான காலம் தானே என்று இவர்கள் வேவை நிறுத்தியிருக்கலாம். இவர்களைச் சரணடையக் கோரியிருக்கலாம். ஆனால்  காட்டைத் தும்புதும்பாய் கிழித்தெடுத்தன கனரகத் துவக்குகள். 

சனங்கள் இனிச்சண்டையில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் சண்டையில்லாமல் இருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா என்ன? அவர்களிடம் என்றைக்கும் விடுதலை உணர்வு இருந்திருக்கிறதா? கொஞ்சம் இருந்தாலும் கூட முதன்மையாக பழிவாங்கத்தானே துடித்துக்கொண்டிருக்கிறார்கள்? சமாதானம், பேச்சு வார்த்தை என்று இருதரப்பும் அதைச் சொல்லிச்சொல்லியே தம்மைப் பெருக்கிக் கொண்டே இருந்தனர். ஆயுதக் கொள்வனவும் ஆட்சேர்ப்புகளும், குறைவில்லாமல் நடந்துகொண்டிருந்தது.  நுள்ளான் என்றைக்கும் சமாதானமுள்ள நிலத்தில் நின்றதில்லை. தன்னைப்போலத்தான் எல்லோரும்  ஆளுள்ளத்தில் யுத்தத்தை மிகவும் விரும்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். அது அவனுடைய இருள் வெளியில் மிகப்பெரிய ஆறுதலை எப்பொழுதும் தருவதுண்டு. ’ஒரு போராளி விடுதலையைதான் விருப்ப வேண்டும் யுத்தத்தை அல்ல’ என்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் தளபதி ஒருவர் உரப்பிக் கொண்டிருக்கும் போது வெடித்துச்சிரித்திருக்கிறான். அதை மீண்டும் நினைக்கும் போது  முகத்தில் இறுக்கம் தளர்ந்து முறுவல் எழுந்தது. உடல் தப்பிச்செல்லும் திட்டங்களுக்காக எங்கிருந்தோ எதையோ உரசி மென்சூட்டை  ஆழத்தில் இருந்து பரவ விட்டது.  மனம் காட்டு ஆனையைப் போல்  சட்டென்று எழுந்து நின்றது. 

அப்பெரிய முகாமை வழிநடத்தக்கூடிய  அதிகாரியும் அவன் பரிவாரங்களும்   இப்பொழுது எவ்வகையான நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருப்பார்கள் என்று தன்னை அவனில் பொருத்தி  ஒவ்வொன்றாகப் பார்த்தான்.   துவக்குச்சன்னங்கள் வந்த உடல்கள் விழுந்த இடங்களைத் தவிர பிற இடங்களின் பாதுகாப்பையும் ரோந்துகளையும் இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும். முதலில் எல்லைகளிலும் காட்டுக்குள்ளும் யாரும் மிச்சமில்லை என்பதை அறிய ஆமிக்காரர்களை பொருத்தமான இடைவெளிகளில்  அறுந்து போகாத தொடர்பாடல்களோடு  காடுகளுக்குள் அனுப்ப வேண்டும்,  அருகில் இருக்கும் ஏனைய முகாம்களுக்கும்,  எல்லைப்பாதுகாப்பு அரண்களுக்கும் எச்சரிக்கப்பட்டிருக்கும்.   முட்கம்பிகள், வலைக்கம்பிகள்,  மற்றும் கண்ணி வெடிகளால் பாதுகாக்கப்படும்   இடங்களை மீண்டும் உறுதிப்படுத்த கட்டளைகளிட்டிருக்கலாம். மழை பெய்வதால், குறைந்தபட்சம் இவை கொஞ்சம் தாமதிக்கலாம். இயக்கத்தின் அணிகள் எப்பொழுதும் மழையைப் பயன்படுத்திக்கொண்டே சண்டையையோ வேவையோ தொடங்குபவர்கள்.  திறமையும் கூர்மதியும் உள்ளவன் எனில் அப்பொறுப்பதிகாரி இப்பொழுதே ரோந்து அணிகளைக் காட்டிற்குள் இறங்கி பதுங்கச்செய்திருப்பான். எனவே  காட்டை ஊடறுத்து புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டு நகர நேரமில்லை. அவனிடம் இருந்தது அவனறிந்த  இந்தக் காடும் நிலமும்.  காட்டில் உருவான முதல் தொல்பாதை ஆறுகளும் நீரோடைகளும் உருவாக்கியவைதான். எனவே ஆற்றுப்படுக்கையைப்  பிடித்துத் தப்பிச் செல்வதே இப்போதைக்குள்ள வழி.  கிராமத்திற்குள் தொடங்கிய களேபரம் இவர்களைத் தொடர்ந்து  காட்டுக்குள் வந்த போது ஏறக்கூறைய நுள்ளானின் கட்டுப்பாடு தவறிப்போனது, முன் அனுபவம் இல்லாதவர்களை அதிகமாகக் கொண்ட அணி முதலில் திக்குமாறி முகாமைச் சுற்றி  தெற்கு திசையில் சுழன்று நகர்ந்து பதுங்கியது.  ஆளாளுக்குத் தனியன் என்றே ஆனார்கள். அவர்கள் அதை நன்கு உய்த்துணர்ந்து சூழ்ந்த போதுதான்,  மீண்டும் ஒருங்கி  அணியென்ற உணர்வை அடைந்தது. அது யுத்தகளம் இல்லை. வேவு நிலம். வீம்புக்கு நிலத்தை விட்டு நிமிர்ந்து துவக்குகளால் அவர்களை எதிர்கொள்ள வேண்யிருந்தது துரதிஷ்ரமே.  இராணுவ அணிகளில் ஒன்று இவர்களைப் பார்த்து  விட்டது. அவர்கள் அக்காடுகளை நன்கறிந்திருந்தனர்.  மிதிவெடிகளுக்குள்ளும் கன்னி வெடிகளுக்குள்ளும் சிக்கட்டும் என்றுதான்,  ஒரு திசையில் தொடர்வது போல ஆரவாரப்பட்டு சன்னங்களைத் தீர்த்துக்கொண்டு அணியொன்று இறங்கி வர, தூரத்தில் இருந்த காவலரண்களை ஒன்றாக்கி உருவான புதிய அணியொன்று அடர்ந்த காட்டுக்குள் இருந்து முறையான கட்டளைகளைப் பின் பற்றி இவர்களைப் பின்பக்கமானவும் வந்து சூழ்ந்து கொண்டது.  அவ் அணியை கண்ட பிறகுதான் நுள்ளான்  அப்பயிற்சி முகாமில், விசயகாரன் யாரோ  அமர்ந்து முழுக்காட்டையும்  பார்த்துக்கொண்டே கட்டளைகளையிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.  அவன்  நினைத்திருந்தால் சூட்டுச்சத்தம் ஓய்தவுடன் அணிகளை இறக்கி காட்டைச் சலித்திருக்கலாம்.   இரவோடு எல்லாம் முடிந்திருக்கும், ஆனால்  அவர்களின் எல்லைக்குள் பெரும் பன்றிக்கூட்டங்கள்  நுழைந்ததையிட்டு களி கொண்டவன் போலிருந்தான்.   நுள்ளான் தங்களை மீண்டும்  இரண்டு அணிகளாக்கி  வெவ்வேறு திசைகளில் நகர்ந்து செல்ல திட்டமிட்டான்.  இரண்டு திசைகளில் பிரிந்து  குறித்த இடமொன்றில் மீண்டும் சேர்ந்து கொண்டு மீண்டு செல்வது. நல்ல திட்டம்தான். அபோதுள்ள வாய்ப்புகளில் அதைத்தவிர மேம்பட்ட  திட்டமொன்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால்  இவர்களைக் குழப்பிச் சிதற வைக்க சட்டென்று காட்டுக்குள் இருந்து ஒரு ’ பீல்ட் பைக் ‘ மோட்டார் சைக்கிள் அணி ஒன்று பேருறுமலுடன் நுழைந்து இவர்கள் இருந்த திசையில் சுட்டுக்கொண்டு சென்றது.   இலக்குகள் அற்றுக் காட்டைப்பாட்டு சகட்டு மேனிக்குச் சுட்டும் கூச்சலிட்டும் செல்வதை பதுங்கியிருந்து கேட்டார்கள்.  அது வெறும் சுற்றி வளைப்பல்ல அதுவொரு களிக் கூத்தென்று தொடங்கியிருந்தது. எதிர்பார்த்தது போல் அப்பீல்ட் பைக் அணியே இவர்களை இனங்கண்டு சுட்டது.  பதில் தாக்குதலுக்கு நேரமில்லாமல்  பின் வாங்கும் போது பின்னால் வந்த அணியை எதிர்கொள்ள ஒவ்வொருவராக உதிர்ந்தனர்.  நுள்ளான்  ஆற்றங்கரைக்கு வழுக்கி பாறை இடுக்குகளில் நுழைந்தும் பதுங்கியிரும் வந்தான், அதிகாலை நெருங்கிக் கொண்டிருந்தது. விடிந்து விட்டால் ரோந்து அணிகளுக்கு  இன்னும்  விரிவு கிடைக்கும். அவர்கள் வளையத்தை செப்பனிட்டுக் கொண்டே இறுக்கிக்கொண்டு வந்திருப்பார்கள். ஒவ்வொரு புதரையும் விடாமல் சலிப்பார்கள்.  உடல்கள் கிடைத்து விட்டது, சண்டை ஓய்ந்து விட்டது என்று  அவர்கள் திரும்பிப் போக மாட்டார்கள். ஒவ்வொரு புதரையும்  திறந்து மூடாமல்  ஓயப்போவதில்லை. சமாதான காலத்தின் அன்றாட சலிப்பில் இருந்து மீள சிப்பாய்களுக்கு அவனொரு திருவிழாவைக் காட்டில்  ஏற்படுத்திக் கொடுக்கிறான்.  மீண்டால் இந்தப் படையக பயிற்சி முகாமின் பொறுப்பதிகாரி யார் என்று அறிய வேண்டும்.  

ஆற்றங்கரையைப் பிடித்து நகர்ந்து சென்றான்.  உடல் நீருறிய கழியென நெழிந்து கொடுத்தது. வேகமாக முன்னேறிச்சென்றான், அப்பகுதி சிறு குன்றுகளாலானது,  அவற்றின் பக்கவாட்டில் வளர்ந்தெழுந்த புதர்களின் ஊடே நகர்ந்து நின்றான். மழை  நேரடியாக உடலைத் தொடவில்லை,  இயங்கும் உடலுக்கு மழையோ குளிரோ பாதகமில்லை,  ஒடுங்கிப்போய் கிடந்தாள் குளிர்காய்ச்சல் கண்டு செத்துப்போக வேண்டியதுதான்.  மழையின் இரச்சலுக்கு மத்தியில் சட்டென்று தூரக்குரலொன்று நிறுத்தியது. அக்காட்டுப்பன்றி வேட்டையில் மிச்சமிருந்தவை, நாய்கள்தான். சந்தேகமே இல்லை. மோப்ப நாய்கள் இறங்கி விட்டன. அவற்றின் ‘லொள்’ என்ற குகைக்குள் அதிரும் சத்தம். நீருக்கும் வெய்யிலுக்கும் வாசனையைக் காவிச்செல்லும் பழக்கமிருந்தது. காடு மழை பெய்யவே பூக்களாலும், நிலத்தாலும் நிறைத்த வாசனையை அடையும்.  மோப்ப நாய்கள்  அவற்றை மீறி மானுட வாடையை அண்டுவது கொஞ்சம் சிக்கல்தான், ஆனால் அவற்றுக்குள்  அவை பிறந்த ஆதியான காடும் இருக்கிறது. வேவுக்காரர்களுக்கு நாய்கள் பற்றிய வகுப்புகளில் இலங்கை இராணுவம் புதிதாக கொள்வனவு செய்த சைபீரிய ஜேர்மன் கலப்பு நாய்களைப் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது, அவற்றில் சிலவாகவும் இருக்கலாம்.  நுள்ளான் அவற்றின் நாசிக்கு எட்டாத  இடமொன்றில் இப்பொழுது மறைய வேண்டும்.  பாறை முடிவுகளை  ஒட்டிக்கொண்டு நகர்ந்து சென்றான்.   குடை போல் நீண்ட பாறை விழிம்புகளுக்கு கீழே அகழான் பொந்துகளோ, நரி வளைகளோ இருப்பதுண்டு.  அவற்றின் மூத்திர வாடை இருக்கும் இடங்களில் பதுங்கும் போது மானிட வாடை அடிபட்டுப் போகும். காடு என்றைக்குமே மானிடர்களைப் பொருட்டென்றே கண்டதில்லை.  ஏனென்றால் அவர்கள்தான் முதலில் காட்டின் மீது  போரை அறை கூவியவர்கள்.  இரண்டாவது அவர்களின் முதன்மைப் பிராணிகளான நாய்கள்.    நாய்கள் நெருங்குமோசை கேட்டுக்கொண்டிருந்தது.   நீரோடு நீராக பாறைச்சரிவுகளின் புதர்க்குவைகளை விலக்கிக்கொண்டு முன்சென்றான், நிலம் நீரோடு சரிந்து பொறிந்து சென்றது,  நிலத்தில் தோன்றிய  சரிவை உணர முதலே இவனை உறுட்டி புதருக்குள் விழுத்தியது, பெரிய நிலவாயொன்று தோன்றி இவனை நீரோடு உள்ளிழுத்துபோட்டது.  எதனுடைய பொந்தென்று தெரியவில்லை, நரியோ, அகழானோ இருட்டில்  பதுங்கியிருக்கலாம். ஓரளவுக்கு மேல் அச்சரிவிற்குள் நீர்ப்போக்குத் திசை மாறிச் சென்றது. அதைத்தோண்டிய அகழான் நீர் வரத்தை மறுத்து உள்வரமால் திருப்புமாறு வாசலைச் சரித்து இறக்கியிருக்க வேண்டும், அதைக் கரைத்துக்கொண்டு நீர் செல்ல  காடுமொத்தமும் வெள்ளங்கண்டு உயர்ந்தெழும்ப வேண்டும். இவன் சறுக்கி விழுந்ததும் வாசலுக்குத்திரையென எழுந்திருந்த பெரும் புதர்கள்  தங்களை ஒன்றோடு ஒன்று  விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து மீண்டும் அதன் வழியை அடைத்தன.  சிறிய வாசலில் தொடங்கிச்செல்லும் பெரிய குகை,  ஒருவாறு சுதாகரித்து உடலை குறுக்காக திருப்பிக்கொண்டு மேலும்  உள்ளிளுக்கப் படாமல் தன்னை நிறுத்தினான்.  வேர்களின் வாடை நிரம்பியிருந்தது. அதன் வாசல் மேலும் பெருத்துக்கொண்டே சென்றது,  மணல் அடைந்த பாறை இடுக்கு போலும், சிறு குகை போன்றது. பொக்கற்றுக்குள் தேடி டோச் லைட்டை எடுத்துக்கொண்டான்.  அதற்குள் விழுந்த பிறகு தான் இன்றைக்குச் சாகமாட்டோம் என்ற உறுதி எழுந்தது.  குகைக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.  ஒளித்தூண் ஆழத்திற்கு விழ  ‘இர்ர்ர்’ என்று கொடுப்பு உறுமல் எழுந்தது, நரி போலும் என்று நினைத்தவன் எதற்கும்  இருக்கட்டுமே  என்று மற்றக்கையால் துவக்கை ஆழத்திற்கு திருப்பிக் கொண்டான்.  டோச் வெளிச்சம் அதைத்தேடியது.   குகையின் சரிந்த  அடியாளத்தில்  இரண்டு நீலப்பொட்டுகள் இருட்டில் மிதந்து இவன் பக்கம் திறந்திருந்தன.  வெளிச்சத்தைத் திருப்பி  அதன் முகத்தில் நிறுத்தினான்.   முகத்தின் குறுக்கே நகத்தால் குதறப்பட்டு இரத்தம் காய்ந்திருந்த  சிறுத்தைப்புலி  கண்ணையோ புருவங்களையோ சற்றும் மாற்றாமல்  ஊர்ர்ர் என்ற ஒலியோடு கோரைப்பற்களை தன் தாடைத் தசைதோலைச்சுருக்கியும் விரித்தும் காட்டியது.  நுள்ளான்  டோர்ச்சை எடுக்கவில்லை. இப்போதைக்கு கூடும் அதனொளிதான் அவனைக் காத்து நிற்கிறது. நுள்ளான் அசைந்தானில்லை.  துவக்கு தயாராக இருந்தது,  அது இவனைப் பாய்ந்து நெருங்கும் கணத்தில் துவக்கை லோட் செய்து அதன் மேல் குண்டைப் பொழிய வேண்டும்.  இப்போதைக்கு நடைமுறைக்கு இவன் கைதான் ஓங்கியிருந்தது, என்றாலும் துவக்குச்சத்தம் ஆமிக்காரரையும் நாய்களையும் அங்கே சூழச்செய்துவிடும், நாய்களின் சத்தம் நிற்கவில்லை, வலுத்துக்கொண்டே வந்ததை இருவரும் கண்டார்கள், தலைக்குமேல் விடைத்து நிற்கும் அச்சிறுத்தைப்புலியின் காதுகளில்  அந்நாய்களின்  சத்தம் விழாமலிருக்காது, அதற்கேற்றால்போல் அதன் காதுகள் துடித்துக்கொண்டிருந்ததையும் டோர்ச் வெளிச்சத்தில் நுள்ளான் தெளிவாகக் கண்டான். மூச்சு எழுந்து தாழ்ந்தது. டோர்ச் வெளிச்சத்தின் நீலப் புகாரில் தூசு துணிக்கையெல்லாம் எழுந்து பறப்பதை இவனால் மிக நுணுகிப் பார்க்க முடிந்தது.  அவ் ஒளி உருளையை, நீல நிற மூங்கிலின் இரண்டு அந்தங்களையும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் போல நுள்ளானும் சிறுத்தையும் அசையாது இருந்தார்கள், அது எழுந்து இவனை நோக்கி வரும் எண்ணத்தில் இல்லை என்பதை நுள்ளான் அது தன்னைப்பரவிக் கிடக்கும் தினுசை வைத்தே கணித்திருந்தான். பேசில் இரண்டொரு சிறுத்தைக் குட்டிகளைத் தூக்கி விளையாடியிருக்கிறான்.  அன்னைச் சிறுத்தைகளுக்கு பிரியமான  பிள்ளை வளர்ப்பு முறை ‘அவற்றைக் கைவிடுவதுதான்’  காட்டை எதிர்கொண்டு பிழைப்பவை மட்டும் வாழ எழும்.  அப்படிக் கைவிடப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை காட்டில் உள்ள போராளிகள் எடுத்து வளர்ப்பார்கள்.  ஓரளவுக்குமேல் அவர்களையும் உண்ண உகந்த மாமிசங்கள் என்று உணரத் தொடங்கும் போது அடர் காட்டில் சென்று விட்டு விடுவார்கள். 

நுள்ளானின் கண்கள் அதன் மேல் நிலைத்திருக்க, அவன் பின்னால் நாய்களின் சத்தம் காட்டை உலுக்கிக் கொண்டே வந்தது. மழை நின்றிருக்க வேண்டும், அல்லது குறைந்திருக்க வேண்டும், நீர்ச்சத்தம் என்று ஒன்று காட்டுக்கு உண்டு,  மழை நாட்களில் பறவை, விலங்குகளின் ஒலியின் எதிரொலிகள் வெவ்வேறு அடுக்குகளில் பட்டுப் பெருகும்.  எத்தனை நாய்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு அவற்றின் அவ் இராட்சத குரைப்புச் சத்தமெழுந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு முறை நாய்கள் குரைக்கும் போதும்  சிறுத்தையின் உடலில்  அதிர்வொன்று பரவி அடங்குவதைக் கண்டான். டோர்ச் வெளிச்சம் முகத்தில் இருந்து கரைந்து அதன் பிற உடலிலும் மெல்லிதாகப் படுவதால் கண் பழக அதன் முழு உடலும் மெல்ல கண்வயப்படத்தொடங்கியது. வயிற்றுப்பகுதி அசாதாரணமாக உப்பியிருந்தது . முலைக்காம்புகள் தடித்திருந்தன. இப்பொழுது நுள்ளானுக்கு இரண்டாவது சிக்கல் வேறு. சினைப்பட்ட புலியை அடித்தா பிழைக்கப் போகிறோம்?  இந்த எளிய பச்சாதாபங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது நுள்ளானுக்கு எப்பொழுதும் புதிர்தான்.  தான் எந்த எல்லையையும்  குருதியால் மீறிச் செல்லத் தக்க பேய்தனம் கொண்டவன் என்பதை அவனே நன்கறிந்ததால், இப்படி யோசனையெழும் , வருத்தப்படும் இடங்களில் மனம் எல்லாவற்றையும் உதறிவிட்டு அதில் மட்டும் சில கணங்கள் நின்று போகும். அத்தருணங்கள் முடியும் போதெல்லாம், எங்கிருந்தவை இவை என்ற  நினைப்பின் பாம்புத்தடங்களை வெகுநாழுக்குப் பிறகும் தொட்டெழுப்பிப் பார்த்து வியப்பதுண்டு. எனெனில் அது அவனுடைய உண்மை கிடையாது என்ற துணிபை அவன் என்றென்றைக்கும் நம்பவே விரும்பினான்.

நாய்கள் நன்கு நெருங்கி விட்டன. சிறுத்தையின் வாடைக்கோ, இவனின் வாடைக்கோ  முகர்ந்து பிடித்து புதரை விலக்கி அவர்களுக்கு இருவரையும் காட்டிக்கொடுக்கவோ கவ்விச்சென்று கொடுக்கவோ கூடும்.  சிறுத்தை  எழுந்து தலை குனிய சில கணம் நின்று காதுகளை  எழுப்பு, கிர்ர்ர் கிர்ர் என்று கொஞ்சம் மாறுபட்ட மூசலை உடலினுள் இருந்து வெளிப்படுத்தியது. பின்னர் நிமிர்ந்து ஒளியை மேவி இவன் கண்களைத் தேடித் தன் தீர்க்கப்பார்வையை எறிந்தது. இருவரும் பொருந்தினார்கள்.  அதன் கண்பட்டதும், அதைத் தவிர்க்க முடியாதபடிக்கு கட்டியது ஏதோவொன்று. அச்சிறுத்தையில் வசிக்கும்  அதன்  இளமைக்குரிய கன்னித் தெய்வமாகவோ, சினைக்குரிய தாய்த்தெய்வமாகவோ இருக்கலாம்.  நுள்ளானால் அசைய முடியவில்லை.  இப்பொழுது அந்த சிறுத்தை அவனைத் தாக்கினாலும், துவக்கின் விசைய  நுள்ளானால் இழுத்துவிட முடியாது. இனி தன்னையளிப்பதைத் தவிர மனம் எதனையும் சிந்திக்காது என்று பட்டது. இவ்வுண்மையும் இப்பொழுதான் தனக்குள் நுழைந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.  வெளியே நாய்கள்  இவர்கள் இருந்த சிறுபிலத்தை நெருங்கியிருந்தன.  இதோ ஒன்றோ இரண்டோ உள்ளே வரப்போகின்றதுபோல், நாய்ச் சந்தடிகளும் மூச்சிரைப்புகளும் நெருங்கி வந்தன. சிறுத்தை தன்னுடைய முதற் காலடியை இவனை நோக்கி வைத்தது.  அதன் நீலமணிக் கண்கள் மேலும் தீக்கொண்டு எரிந்தன.  இவனை நெருங்கிவர டோச்சை சிறிதும் அணைக்காமல் நெற்றியை நிலத்தில் முட்டி  ஏறக்குறையப் புதைத்துக்கொண்டான். அச்சிறுத்தையின் வாசனை முதலில் நுள்ளானை நெருங்கியது. நாசியை நிறைக்க, மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டான்.  அவன் தலைமேல் அதன் இடது முன்காலின் மென்மை பரவியது. அது எந்த நகத்தையும்  விரல் இடுக்குகளில் இருந்து சீறவிடவில்லை. அதன் மிருதுவான பாதங்களையும், எடையையும் உணரத்தொடங்கும் போது நிதானமாக ஏனைய காலடிகளை வைத்து இவன் மேல் ஏறியது,  கால்கள் நடக்க வயிற்றுப்பகுதியில் புடைத்திருந்த முலைக்காம்புகள் ஒவ்வொன்றும் இவன் காதுமடல்கள் இரண்டிலும்  கீறிச்சென்றன. ஒவ்வொரு முலைப்பொட்டின்  மென்சூடும், மடியில் இருந்து இவனுடலில் பரவிச்செல்ல உடல் சிலுர்த்தது.  முதல் முதலில் காமத்தின் உச்ச கணத்தின் நீள் நிகழ்வென அம்முலைக்காம்புகள்  உடலை உள்ளிருந்து நரம்புகளை இழுத்து நாணேற்றி விடுவித்துச் சென்றன. இவனைக் கடந்து முடியும் இடத்தில் சிறுத்தை தன்னை அம்பென ஆக்கிக்கொண்டு விருட்டென வெளியே சென்றது. நாய்கள் பாய்ந்து நெருங்க வாலைக்குழைத்து உறுமலொன்றை வெளிப்படுத்தி அவற்றைக் கடந்து சென்றது.  நாய்கள் வெருண்டு பின் சுதாகரித்துக்கொண்டு சிறுத்தையைத் துரத்திக்கொண்டு ஓடின. சிறிது நேரத்தில் சப்பாத்துகளின் சந்தடிகள் கேட்டன, உரத்த சிங்களக் குரல்கள் வேகமாகக் கடந்து சென்றன.  சிறிது நேரத்தில் அவ்விடம் முழு அமைதிக்குத் திரும்பியது.  நுள்ளான் தவழ்ந்து மேலேறி வந்தான்.  அவன் அடித்தொடைகள் வெடவெடத்துக் கொண்டிருந்தன.  மேலேறியவன்,   புதருக்குள் இருந்து சுற்றிப்பார்த்தான், ஆற்றுச்சத்தம் கேட்டது அதன் கரைப்பக்கமாக சரிந்து இறங்கி எழுந்து ஓடத்தொடங்கினான், நீர்ப்பெருக்கோடு கரையில் வேகமாக ஓடினான்.   எங்கே ஓடுகிறோம் என்று எந்த துணிபும் இல்லாமல் வெறுமனே ஓடிக்கொண்டே இருந்தான். ஊழ் அன்றைக்கு இரவுக்குரிய உச்ச நிகழ்வை அடைந்தது போல தன்னை அசுவாசப்படுத்திக்கொள்ள, தீடீரென எழுந்த பீல்ட் பைக்குளின் உறுமல்கள்,  எங்கிருந்தோ வந்த சன்னங்கள்  பின் முதுகில் ஏறி நெஞ்சினால் வெளிப்பட்டு ஆற்றைக்கடந்து போயின.  தூக்கி எறியப்பட்டு ஈரச்சருகுகளின் மெத்தை மீது  நுள்ளானின் குருதி பீறிடும் உடல்  விழ, அவனை  ஈரச்சருகுகள் முழுவதும் மூடின. மீண்டும் மேகங்கங்கள் சூழ்ந்து கொண்டு கொட்டத்தொடங்கின.

சில மணிநேரங்கள் ஈரச்சருகுக்குள் நுள்ளான் தடமின்றிப் புதைந்து கிடந்தான்,  அப்பொழுது தன்னுடைய  பெருங்கூட்டத்தை அழைத்துக்கொண்டு நீலோசயனி ஆற்றுப்படுக்கையை சூழ்ந்து இறங்கியது.. தாய்ப் பிடிகளின்  பக்கவாட்டில் புதுக்குட்டிகளும், இளமானைகளும்  நன்கு நெருங்கி பாதுக்காப்பாக நடந்தன. நீலோசயனி ஆற்றின் கரையோரம் தன் திரளை பரவி இருட்டில் அசையாது நிறுத்தியது. அவை இனி விடிந்த பின்னர்தான் நகர்ந்து செல்ல வேண்டும் என்று  மூத்த ஆனைகளுக்கு அறிவுறுத்தியது.  நுள்ளான் நெஞ்சில் மிதந்துகொண்டிருக்கும் கரும்பாறைகளைக் கண்டான்.  வேங்கைமரக்குற்றிகள் நிலத்தில் அசைவதுபோல்  அக்கரும்பாறைகளின் அந்தரத்தை அவை கீழிருந்து தாங்கிக்கொண்டிருந்தன. கொஞ்சம் நகர்ந்து ஆனைகள் காலடிகளை இவன் பக்கம் வைத்தாலும் தசைக்கூழென மழையோடு ஓடிக்கரைந்து போகவேண்டியதுதான்.  இவ்வளவிற்கும் பிறகும்  நுள்ளான் செத்துப்போனால் உண்மையிலேயே சாவு எல்லாவற்றையும் விட வலிய தெய்வம் என்று ஆகிவிடும்.  அவன் உள்ளெழுந்த கொடும் தெய்வம் ஒன்று. இன்றைக்கு இல்லை  என்ற சொல்லில் கனமென ஏறி அமர்ந்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here