ஆறு கால்களால் நடக்கும் பெண்
இரண்டு வாரங்களாக பயணத்திலேயே இருக்கிறேன். பெரிதாக எழுதவில்லை. வாசித்தேன் .பெரும்பாலான பயணங்களை குறிப்புகளாக சுருக்கி விட முடியாது, இந்த ஆறு மாதங்களில் பயணம் செய்த சில இடங்கள் பற்றிய பயணக் கட்டுரைகள் கிடப்பில் இருக்கின்றன. கொழும்பின் இரவுத்தெருக்களில் , உட்சந்துகளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து அலைந்தேன். நானொரு கிராமத்தான். நகரமென்றாலே அலுத்துக்கொள்பவன். பதட்டத்தில் வழிமாறக் கூடியவன். நகரம் என்பது வெளியில் எவ்வளவு விரிந்து உயர்ந்து கிடக்கிறதோ அதைவிட பல படிவுகள் உட்புறமும் இருட்டில்லும் பரவிக் கிடக்கிறது. தெற்கிலிருந்து புறப்பட்டு கிழக்கில் சில சடங்குகளைப் பார்க்கப் போயிருந்தேன். அன்றாடம் அவற்றை எழுத வாய்ப்பிருந்தும் தவிர்த்து விட்டேன். சொல்லும் அளவிற்கு முக்கியமானது சொல்லாமல் இருப்பதும் என்றார் நகுலன். கிழக்கு இலங்கையில் இருந்து திரும்பும் போது பேரூந்தில் சில மனிதர்களைச் சந்தித்தேன். அவற்றை குறிப்பாக எழுதி விடலாம் என்று தோன்றியது.
மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்படும் மாலைப் பேருந்தில் ஏறும் போது தொடர்ச்சியான பயணங்களால், களைப்பு இருந்தாலும் முன்னிரவுப் பயணத்தில் உறங்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். விசாகப் (வெசாக் )பூரணைக்கு அன்றைக்கு விடுமுறை. பேரூந்து பொலநறுவையின் சிங்களக் கிராமங்களை கடந்து செல்லும். வெசாக் தோரணங்கள், வெளிச்சக் கூடுகள், கொண்டாட்டங்கள் என்று கோலாகலப்படும். பார்த்துக்கொண்டே போகலாம்.. நாங்கள் சிங்கள பண்பாடுகளையும் அன்றாட சடங்கு சம்பிரதாயங்களையும் அறிந்து கொள்ள அவர்களுடன் போய்த்தான் வாழ வேண்டும். சிங்கள நண்பர்களிடம் கூட சிலவற்றைக் கேட்டால் தான் சொல்வார்கள். அதுவும் ஆர்வமற்று மேலோட்டமாக. அனேகரிடம் இந்த இயல்பை அவதானித்திருக்கிறேன். பெளத்தம் சார்ந்த வழிபாடு, நடைமுறைகள் அவர்கள் அளவில் தூய்மையானது` என்ற எண்ணம் உள்ளோடி இருக்கிறது. அதை அவர்கள் அளவளாவுவதோ , விவாதித்தோ கண்டதில்லை. தவிர எனக்கு மொழி தெரியாதது கூட ஓர் இடர்பாடாக இருக்கலாம். சிங்களம், சிறு பிராயம் முழுவதும் `ஆமிக்காறற்ற மொழி` யாக இருந்து விட்டது. நெஞ்சிலிருந்து அதைக் கற்கத்தோன்றவில்லை. முயற்சி செய்தேன். முடியவில்லை. இடைக்கிட நண்பர்களிடம் சில வார்த்தைகளையும் தொடர்களையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் எப்பொழுதாவது தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன்.
பேருந்து செல்லச் செல்ல ஒவ்வொரு நிறுத்தமாக சனங்கள் ஏறினார்கள், இறங்கினார்கள். உள்ளூர் வாசிகள் நிரம்பினார்கள். இடையில் ஓர் நிறுத்தத்தில் காவி உடை அணிந்த நான்கைந்து ஆண்கள் குடும்பங்களுடன் ஏறினார்கள்,அந்தக்கூட்டம் கொஞ்சம் விநோதமாக இருந்தது, ஆண்கள் காவி வேட்டியும் சட்டையும் அணிந்திருக்க, பெண்கள் ஜீன்ஸ் . டொப், டீசேட் முதலானவை அணிந்து இருந்தார்கள். பேப்பர் சுற்றிய பெரிய ப்ரேம்களுடன் அவர்கள் ஏறினார்கள். ஓர் பஜனைக்குப் போய்வரும் குழு சுற்றுலாக்கு போய்வரும் பெண்கள் குழுவுடன் இணைந்து கொண்டதைப்போலிருந்தது. ஆனால் அவர்கள் ஒரே குழுவினர், அனேகமாக ஒரே குடும்பத்தினர். பத்துப்பேர் வரை இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆசனங்களை முற்பதிவு செய்திருந்ததால் பஸ்ஸில் பெரிய குழம்பம் தோன்றியது. ஆட்களை அடைந்து ஏற்றிய பேரூந்தில் இவர்களை முற்பதிவு ஆசனத்தில் இருத்த வேண்டும். அவர்களின் பெரிய – புதிய வெளிநாட்டு ரவலிங் பைகளையும், சூட்கேஸ்களையும் பின்னால் ஏற்ற வேண்டும். பதினைந்து நிமிடம் எடுத்தது. இவ்வளவு ஆரவாரப்பட்டு , ஏற்கனவே நின்ற சனத்தை நசித்து, நெழித்துக் கொண்டே ஏறி ஒருவாறு தங்களின் இடங்களில் அமர்ந்து கொண்டார்கள். மொத்தப் பேரூந்தும் `அப்பாடா` என்றது. அவர்கள் யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோதான் இறங்குவார்கள் என்று நினைத்தேன். அதுவும் முற்பதிவு செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த 45 நிமிடத்தில் அத்தனைபேரும் அதே குழப்பத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டிவிட்டு இறங்கிக்கொண்டனர். மொத்தப் பேரூந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றது.
அந்தக் கோஷ்டி இறங்கிச்சென்றதும் பேருந்தில் சனங்கள் குறைந்தார்கள். மெல்ல இருட்டுகின்ற நேரம். மீண்டும் அது போல் சிவப்பு கொஞ்சம் தூக்கலான செம்மஞ்சள் நிறத்தில் இன்னொரு பெண்களின் பெருக்கு இரண்டு பக்கமிருந்தும் ஏறிவந்தது. முன்னால் வந்தவர்கள் இளம், நடுத்தர வயதுள்ள முஸ்லீம் தாய் மார்கள். அவர்களுடன் கைக்குழந்தைகளும் தாய்மாரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் பிள்ளைகளும் இருந்தார்கள். ஒரு சில இளம் பெண்களும் இருந்தார்கள். அப்பெண்கள் தற்பொழுது இயல்பாக்கப்பட்டிருக்கும், பர்தாக்களை அணிந்திருந்தார்கள். முதிய பெண்கள், அவர்கள் காலத்தில் இயல்பாயிருந்த சீத்தைச் சேலையும் முக்காடும் மட்டும் அணிந்திருந்தார்கள். அம்முதிய பெண்கள் இருவரும்தான் செம்மஞ்சள் நிறத்தில் சிவப்புத்தூக்கலான சேலை அணிந்து முக்காடிட்டிருந்தனர். அவர்களோடு ஏறிய மற்றப் பெண்களுக்கும் சேர்த்து தாங்களே அப்பெருக்கின் நிறமாகியிருந்தார்கள். எனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கைகளை, நிறைத்தார்கள் . அங்கே ஏறிய நடுத்தர / இளம் பெண்கள் அம்மூதாட்டிகளின் பேத்திகளாகவோ, மகள்களாகவோ இருக்க வேண்டும். நான் அவ்விரண்டு ஆச்சிகளையும் கவனித்தேன். தசை வற்றித் தோலுர்ந்து சுருங்கிய தேகம். கண்களில் ஒளி. உற்சாகமாய் இருந்தார்கள். ஊன்றிக்கவனித்தால் மட்டும் மற்ற இளம் பெண்களின் கண்ணில் பயமோ, வருத்தமோ பரவியிருந்தது தெரிந்தது. அவர்களின் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு, எள்ளல் கதை சொல்லிக்கொண்டும் இருந்தவர்கள் அம்முதிய பெண்கள்தான். முன்பு சொன்னது போல் அந்தப் பெண் பெருக்கின் நிறமும் தோற்றமுமாய் அவர்களே தெரிந்தனர். தமிழில் முதிய பெண்களைப் `பேரிளம் பெண்` என்றே சொல்லும் வழக்கமுள்ளது. ஒரு பெண் எப்பொழுது முதுமையடையத் தொடங்குகிறாள் என்பதை யாரும் நினைவினால் அறிய முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் முதியவளாகவே நெடுங்காலம் வாழ்கிறாள்.
எனக்கு `ஆச்சிகளுடன்` நன்றாக ஒத்துப்போகும், சட்டென்று ஒட்டிவிடுவேன். இதை எழுதும் போதுதான் யோசித்து வியந்தேன், எனக்கு குறைந்தது முப்பது `ஆச்சிகளைத்` தெரியும். பெரும்பாலனவர்களை நானும் என்னை அவர்களும் நினைவில் வைத்திருக்கக் கூடிய அளவு அவர்களுடன் இருந்து `சமா` வைத்திருக்கிறேன் கதை கேட்டிருக்கிறேன்.. புறணி பேசி இருக்கிறேன், விடுப்புக் கதைத்திருக்கிறேன். பாக்கு இடித்து வாய்க்குள் அதக்கி இருக்கிறேன். சுற்றித்தந்த சுருட்டை இழுத்து தலை சுற்றிச் சத்தியெடுத்திருக்கிறேன். அதனால்தான் என்னவோ பெண்கள் பெருக்கில் முது பெண்கள் சட்டென்று கண்ணில் பரவி விடுகிறார்கள். கதை கேட்பதற்கு ஆச்சிகள்தான் சரியானவர்கள். கிழவர்கள் சாராயமோ, பீடியோ கேட்பார்கள், அல்லது நாலுவரியில் நறுக்கென்று முடித்துகொள்வார்கள். ஆச்சிகள் அப்படியில்லை. அவர்களின் எப்பொழுதும் சொல்லெழுந்து கொண்டே இருக்கும். அவர்கள் வேண்டுவதெல்லாம். கேட்கும் செவிகள் மட்டும்தான்.
இளம் பெண்கள், எவ்வளவு சுவாரசியமாக ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு புள்ளியில் சலிப்பெழும். ஒரே சுழலுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள். இளம் பெண்களில் பெரும்பான்மையானோர், சலிப்பானவர்கள்தான். அவர்களுக்கு முதுமையில்தான் கதை சொல்ல வாய்க்கிறது. இளமையில் பெண்களுக்கு கதை கேட்கத்தான் பிடிக்கும், அவர்களுக்கு கதை சொல்லத்தெரியாது. விதி விலக்காக கதை சொல்லும் பெண்களுக்கு அணுக்கமாக ஒரு முதிய பெண் இருப்பாள். பெரும்பாலும் பேத்தியாரோடு நெருக்கமான இளம் பெண்கள் சலிப்பைத்தராமல் கதைப்பார்கள். ஆண்கள் இளைமையில்தான் கதை சொல்வார்கள், முதுமையில் வதைப்பார்கள். ஊரில் `அறளை பேயருதல்` என்றொரு வழக்கிருக்கிறது. பெரும்பாலும் ஆண்களுக்கு நாற்பதைத் தாண்டினாலே பெயர்ந்து விடும். முப்பத்தைந்தில் பெயர்ந்தவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படி ஆகாமல் தப்பிக்கும் சராசரி ஆண்கள் கடைசிக்காலத்தில் குழந்தையைப் போல் ஆகிவிடுவதும் உண்டு. `பிள்ளையில்லாவீட்டில் கிழவன் துள்ளி விளையாடினான்` என்றும் ஒரு உள்ளூர் வழக்கிருக்கிறது. நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். பேருந்து கொஞ்சம் விரைவு கண்டது. அந்தி மங்கத் தொடங்கியது.
அப்பெண்களின் பெருக்கை, பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நான் கவனிப்பதைக் கண்டு விட்டு என் இருக்கைக்கு நேர் எதிரில் இருந்த மூன்று ஆசனங்களின் விழிம்பில் ஊன்று கோலுடன் இருந்த முதிய பெண் சினேகமாகப் புன்னகைத்தாள். நானும் சிரித்து விட்டு இருந்தேன்.
குழந்தைகளுடன் விளையாடினாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நானோ, அவளோ உரையாடலைத் தொடங்கலாம் என்ற இடத்திற்கு வரும் போது அம்முதிய பெண்களுடன் இருந்த தாய்மார்களும், அவர்களின் தங்கைகளின் சாயலில் இருந்த இளம் பெண்களும் பரபரத்தனர். பேரூந்து இன்னொரு தரிப்பிடத்தில் நின்றது. அத்தரிப்பிடத்தில் சில ஆண்கள் நின்று பேருந்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இப்பெண்களைத்தான் அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டு விட்டு அவ் முது பெண்கள் தங்களுக்குப் பின்னால் அவர்களை விட்டு விட்டு முன்பக்கம் வந்து அமர்ந்தார்கள். எட்டி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் இவர்களைக் கண்டு விட்டார்கள், குழுவில் அதிகம் கண்கள் சிவந்து நின்றிருந்தவன் ஏறி வந்தான். அவன் வரவும் ஆச்சிக்குப் பின்னால் இருந்த பெண் தன் பிள்ளையை அணைத்துக்கொண்டு வெருண்டாள். வேகமாக வந்தவன் சீற்றை நெருங்க உட்பக்கம் காலை விட்டிருந்த ஆச்சி திரும்பி அவனை மறித்து வெளிப்பக்கம் காலை வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். வேகமாக வந்தவன் அப்படியே நின்று, நின்ற இடத்திலேயே குலைந்து என் அருகில் இருந்த ஆசனத்தில் ஆச்சிக்கு எதிரில் அமர்ந்தான். ஆவேசமடங்க அப்பெண்ணை அழைத்துப்போகப் போவதாகச் சொன்னான். அவளே எல்லாவற்றுக்கும் காரணம் என்றான். ஆச்சியின் கண்களைச் சந்திக்காமல் அந்தப்பெண்ணை முறைத்து முறைத்துப்பார்த்தான். அவன் என்ன சொன்னாலும் அதற்கு ஆச்சி பதில் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் அவனுடன் யாரையும் அனுப்பத்தாயாரில்லை. முடிவாக அடுத்த இறக்கத்தில் சோர்வாக இறங்கிப்போனான். அவன் ஆச்சியை எதிர்கொண்ட கணத்திலேயே முடிவை உணர்ந்திருப்பான். மிச்சமெல்லாம், ஆணின் பாவனைகள் அவ்வளவுதான். எனக்கு எளிய குடும்பச் சிக்கல்கள் மீது கவனம் படிவதில்லை. ஆனால் என்னை அக்கணத்தில் சீண்டியது , ஆவேசமாக வரும் எவரையும் எதிர்கொள்ளக் கூடிய பேருரு எப்படி இந்த முதிய பெண்களுக்கு வாய்க்கிறது ? அவர்களின் காலுக்கோ உடலுக்கோ வலுவில்லை. ஊன்று கோலில்லாமல் எழுந்து நடக்க மாட்டார்கள் கத்திக் கதைக்கவோ சண்டையிடவோ கூட தெம்பில்லாதவர்கள். எந்த அதிகாரத்தரப்பாகவும் கூட இருந்திருக்க மாட்டார்கள். ஆயினும் எழுந்து நின்றதும் , தெய்வம் இறங்கியது போலாகிவிடுகிறார்கள். எதிர் கொள்பவருக்கு ஓர் அச்சத்தையும் பெரும் தயக்கத்தையும் உண்டுபண்ணுகிறார்கள். இதைப்போல் நிறையப் பேரிளம் பெண்களைக் கண்டிருக்கிறேன். என்னுடைய மூத்த அப்பம்மா அப்படிப்பட்டவள். அவளுக்கு அய்யாவும் (அப்பப்பா), அவருடைய ஆறு ஆண் தடிமாடுகளும் அவ்வளவு பயப்பிடுவார்கள். என்னுடைய அப்பா பெரியப்பா எல்லாம் ஊர்ச் சண்டியர்கள், அவர்கள் கிழவிக்கு அச்சப்பட்டுப் பார்த்திருக்கிறேன்.
இப்பேருரு முதுபெண்களுக்கு எங்கிருந்து தோன்றிவருகிறது ? வயதானவள், தாய் என்பதால் தோன்றும் மரியாதை மட்டும் உள்ளுறைந்து இருக்கின்றது என்று முடித்துவிடமுடியாது. இதற்குள் வேறொரு ஆதி அச்சம் இருக்கிறது. பெண் தன்னுடைய கருச்சுழற்சியை முடித்துக்கொண்ட பிறகு அவளை விட்டு சமூகத்தினதும், சடங்கினதும் எல்லாத்தீட்டும் நீங்கி விடுகிறது. தாய்மையில் இருந்து கூட அவள் விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு ஏறிவிடுகிறாள். பெண் தன் சொந்த உடலின் காமத்தையும், கருவளத்தைக் கடந்து தாய்மையில் இருந்து வெளியேறும் போது பேரன்னையாக மாறுகிறாள். நம்முடைய பண்பாட்டில் உள்ள பெரும்பாலான பெண் தெய்வங்கள் பேரன்னை வடிவில்தான் கொலுவிருத்தப்பட்டு இருக்கிறார்கள். கொற்றவை, காளி, கண்ணகை இப்படியாக. கண்ணகியின் கதைப்படி அவள் இலங்கைக்கு வரும் போது கிழவியாகத்தான் வருகிறாள். இலங்கையில் உள்ள தமிழ்ப் பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான கண்ணகி கோவில்களில் பேரிளம் பெண்ணே அமர்ந்திருக்கிறாள். எல்லோருக்குமான தாய்மையை அடைந்தவள். உக்கிரமும் கனிவும் ஒருங்கே கூடியவள். முதுமையை அடையும் போது பெண்களிடம் அவர்களை அறியாமலே ஆதி இயல்பு கூடிவருகிறது, அவற்றோடு சமூகத்தின் நனவில் இருக்கும் அவ் ஆதி அச்சமும், தெய்வ நனவும் எழுகிறது.
திரும்பத் திரும்ப என்னுடைய கதைகளில் இவ் இயல்புகளுள்ள, முது பெண்கள் வந்து நிற்கிறார்கள். எப்பொழுதும் பெண்கள் பெருக்கிலோ, சனப்பெருக்கிலோ அவர்களே எனக்கு முதன்மையான தோற்றமாக இருக்கிறார்கள். இவை எல்லாவற்றில் இருந்தும் கோடுகளை இணைத்துப் பார்க்கிறேன். வெவ்வேறு பேரிளம் பெண்கள், 2008 இல் எங்கள் வீட்டின் அருகில் கட்டாய ஆட்சேர்ப்பில் இயக்கத்தில் இணைக்கப்பட்டு , களத்தில் வீழ்த்தப்பட்ட பெண் போராளியின் சவப்பெட்டி அவள் வீட்டிற்கு வந்திருந்தது. உடல் சிதறியிருந்தால் உடற் பாகங்களை வைத்து பெட்டியைச் சீல் செய்திருப்பார்கள். அப் பெண் போராளியினுடைய பேத்தியார், அச்சாம்மா என்று அவளை அழைப்போம். எண்பது வயது இருக்கும். கூன் விழுந்து மெலிந்து சுருங்கியவள். பேத்தியின் சவப்பெட்டியைத் திறக்கச்சொல்லி அழுதாள். அவர்கள் மறுத்துவிட்டனர். யார் தேற்றியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆவேசமானவள் கைகளை வானத்திற்கு ஓங்கி பெட்டியை ஓங்கி அறைந்தாள். அது இரண்டாகப் பிளந்து உள்ளிருந்த வாழைத்தண்டும், நிணவாடையும் வெடித்துப்பரவியது. தடித்து வளர்ந்த ஆணால் கூட அதை கோடாலி கொண்டுதான் அப்படிப் பிளந்திருக்க முடியும். கைகளை ஓங்கியபடி ஆவேசமாக நிற்கும் அவளுடைய பேருரு என்றைக்கும் என்னை விட்டு அகலப் போவதில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் தடியை ஓங்கும் இராணுவத்தின் முன்னால் அடி என்று முன்னால் செல்லும் முது தாய்மாரைப் பார்த்திருக்கிறேன். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு மட்டும் எழுந்து வந்ததல்ல அப்பேருரு. இவர்களுக்கு முன்பும் பின்பும் இருப்பது.
பேரூந்து நின்றது, நன்றாக இரவு ஏறிவிட்டது. காட்டுப்பிராந்தியம் போலிருந்தது. சிறு ஒழுங்கை மட்டும் தெரிந்தது. அப்பெண்களின் பெருக்கு இறங்கிச்செல்ல ஆரம்பித்தது. அவர்களை முன்னுக்கு விட்டு இவ்விரு முது பெண்களும் எழுந்தனர். ஆச்சி தன் ஊன்று தடியை ஊன்றி எழுந்தாள். இப்பொழுது கடைகளில் கிடைக்கும் ஊன்றுகோல் அடிப்பக்கம் நான்கு கால்களாக விரிந்து தரையில் அழுந்தும். பழைய ஊன்று கோல்களை விட மேம்பட்டது. ஆச்சி ஆறு கால்களால் நடந்து போனாள்.