இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச இலக்கியக் குழு இவ் வருடத்திற்கான கலை இலக்கிய விருதுகளுக்கான பட்டியலை அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்பி விருதுகளுக்கு விண்ணப்பித்து அதை வாங்கி நெஞ்சோடு அணைத்து விம்முகிறார்கள். மானுடர்கள் செயல்களினால் வெளிப்படுபவர்கள். எண்ணங்களினால் உருவாகுபவர்கள் என்றொரு சொல் உண்டு. இலக்கியத்தில் மெய்யாகப் பொருந்தி இருப்பவர்களின் சொல்லிலும் செயலிலும் அது துலங்கும்.
சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள எழுத்தாளர்களை ‘அற்பர்கள்’ என்று விளித்து அவர்கள் இச்சூழலை எவ்வாறு நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். (கூசாத சோற்றுப் பருக்கைகள்) அதைச் சொல்லி என்னுடைய சொற்கள் மிகைந்து தடித்து விட்டது என்று இலக்கியக் கூட்டங்களில் குத்தி முறிந்திருந்தார்கள். இன்றைக்கு அவர்களில் ஒரு பகுதியினரே அரசின் அருளும் கரங்களை நோக்கி நாக்கைத் தூக்கி இருக்கிறார்கள். தொடர்ந்தும் இவர்களின் போலித்தனத்தை, எழுத்தாளருக்கோ கலைஞருக்கோ அருவருப்பைத் தரத் தக்க ஆளுமைகளாக (personality) தங்களைத் தாங்களே நிரூபித்துக் கொண்டிருப்பதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
இன்றைக்கு அவர்கள் திரும்பவும் அரச விருதின் முன்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். தங்களின் மகத்தான ஆன்மாவை மலத்தில் எறிகிறார்கள். பண்பாட்டு அமைப்புகளிடம் இருந்து விருதுகள் பெறுவது வேறு கொன்ற இரத்தத்தைச் சால்வைகளால் மறைத்துக் கொண்டு நிற்கும் இந்த அரசிடம் விருதுக்கு விண்ணப்பிப்பது வேறு. எழுத்தாளர்கள் கலைஞர்கள் இதைச் செய்யக் கூடாது. அற்பத்தனம் இனிப்பானது ; எளியது. ஆனால் ஆன்மாவை உண்பது. அதை இழந்து விட்டால் இலக்கியமோ கலையோ நீங்கள் வாழும் காலத்திலேயே உங்களை அகற்றும், மறக்கும்.
அரசின் விருதுகளை எழுத்தாளர் கலைஞர்கள் பெறுவது தொடர்பில் எழுத்தாளர் கிரிசாந் இரண்டு கட்டுரைகளை எழுதி இருந்தார். (அரசின் விருதுகள் , அரசின் விருதுகள் – எதிர்வினை) அவற்றில் இவ் விருதுகள் விண்ணப்பங்கள் மூலம் இரந்து பெறப்படுபவை. மெய்யான எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒடுக்கும் தரப்பாகவே இன்னும் நீடிக்கும் இந்த அரசிடம் மண்டியிடுவது போல இழி செயல் எதுவும் இல்லை என்ற தொனிப்பட விரிவாகவே எழுதி இருக்கிறார்.
இங்கே இந்த போலிகள் எவ்வாறு வெளிப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் ஆளுமையில் உள்ள இழிசின இயல்பையும் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஒரு கிட்டிய உதாரணம் சொல்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. எழுதவில்லை. அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை கறி சமைத்து உண்டு விட்டு உறங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் என்றில்லை ரோல்களும் பற்றிசுகளும் இஞ்சித்தேனீரும் பரிமாறப்படும் புத்தகங்களை சகட்டுக்குப் புகழும் இலக்கிய கூட்டங்களைத் தவிர வேறு எதிலும் இப்பெருந்தகையோர் கலந்து கொள்ள மாட்டார்கள். செயல்களினால் வெளிப்படுவது என்று இதைத்தான் சொன்னேன்.
அடிப்படையில் இலங்கையில் எழுத்தாளர் என்று சொல்பவர்கள் எதையாவது ஒப்பேற்றி நூல் வடிவில் கொண்டு வந்து விட்டால் எழுத்தாளர் என்று தம்மை வரித்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எழுத்தாளர் என்ற அடையாளம் திருடர்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்களை மாற்றுவது போன்றது. சாமானியர்களிடையே இவர்கள் தாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதையே அடையாளமாகச் சொல்வார்கள். பள்ளி ஆசிரியர் என்றோ, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் என்றோ, அலுவலக குமாஸ்தாக்கள் என்றோ வெளிப்படுவார்கள். அத்துறைகளிலும் ஏதாவது செய்கிறார்களா என்றால் அங்கேயும் பிருட்டங்களை கதிரைகளுக்கு கொடுப்பதைத் தவிர எதையும் செய்வதில்லை. இலக்கியம் இவர்களுக்கு அற்ப பெருமை. பொழுது போக்கு. தான் மெய்யாக எதுவோ அதில் நிறைந்திருக்கும் சாமானியர் இவர்களை விட மேலானவர் இல்லையா?
இந்தக் கள்ள நம்பர் பிளேட்டுக்கள் இலக்கியத்திற்கு வந்து, மழைக்கால நீரில் வாற் பேத்தைக் குஞ்சுகள் தங்களை மீன்கள் என்று நினைத்துக் கொள்வதைப் போல் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல அரச வேலை, சமைத்துப் போட மனைவி, ஆஸ்திக்கு வாரிசு, விரிவுரையாளர், அதிகாரி என்ற போகங்கள் போதாது என்று கலை இலக்கியத்திற்கு வந்து விருதுக்கு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். கூச்சமில்லை, வெட்கமில்லை.
இன்றைக்கு விருது அறிவிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நூலையேனும் எடுத்து வாருங்கள். வாசிக்க உகந்தவையா அவை? ஒரு சொல்லேனும் அதில் இலக்கியமாக ஆகி இருக்கிறதா ? பல்கலைக்கழகத்தில் எத்தனை புத்தகம் எழுதி இருக்கிறோம் என்று கணக்குக் காட்டுவதற்குப் போடப்பட்ட சழக்கு எழுத்துகள். வெறும் பெருமைக்கு ஒப்பேற்றிய சொற்கள். கிஞ்சித்தும் வாசிப்போ சிந்தனையோ இல்லாமல் விழுந்த மாட்டுக்கு குறி சுட்ட கவிதைகள், கதைகள், ஆய்வுகள். எளிய பெருமைகள், பட்டாடோபங்கள், இரந்து பெறும் இப்படியான அரச விருதுகளுக்கும் முதல் துவைப்பிற்கே சாயம் போகும் பொன்னாடைகளுக்குமாக சொந்த ஆன்மாவையும் சூழலையும் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள். எரிச்சலும் கோவமும் அடங்கி பரிதாபத்தோடே நானிதைச் சொல்கிறேன்.
ஓர் எழுத்தாளனாக இலக்கியத்தில் வாசகராக இருப்பதே நிமிர்வும் பெருமையும் என்பவர்களுடன் இருப்பவன். அவர்களின் பேரன்பே எனக்கு நிறைவும் பெருமையும் என்று நினைக்கிறேன். அவர்கள் அளிக்கும் ஒரு சிறுமலரையும் பொன்னெனச் சூடிக் கொள்வேன். கோடி கொடுத்தாலும் விண்ணப்பித்துப் பேற வேண்டிய ஒரு விருதின் முன், அரசின் ரொட்டித் துண்டுகளின் முன் எக்காலத்திலும் போய் நிற்கமாட்டேன்.
இந்தப் புதிய அரசு ஏதோ தூய கரங்ளுடன் எழும் தோற்றம் இவர்களுக்குள் உருவாகி விட்டதோ தெரியவில்லை. இனவாதம் ஒழிந்து விட்டது, நீதி நிகழ்கிறது என்ற தோற்றத்தை நம்பத் தொடங்கி விட்டார்களா? அதுவும் எழுத்தாளர்கள் கலைஞர்கள்! இதை விட வரலாற்று வெட்கக் கேடும் அறிவின்மையும் உண்டா? காலையில் யாழ்பாணத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவை அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிக அதாரிகள் திறந்து வைத்த படங்களைப் போட்டு இந்த இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பெருமையடித்துக் கொள்வதைப் பார்க்கக் கிடைத்தது. அவர்கள் வருவது திறப்பது எனக்கு ஒன்றும் இல்லை. இவர்கள் அதைப் பெருமையாக போட்டுக் கொள்வதைத்தான் என்னவென்று சொல்ல முடியவில்லை.
ஒன்றை அறியுங்கள், இந்த நிலம் கவிதைக்காக சிந்தித்தற்காக குண்டுகளை வாங்கிச் செத்துப் போன கலைஞர்கள், சிந்தனையாளர்களுடையது. அவர்கள் உருவாக்கி அளித்தது. நீங்கள் இரந்து நிற்கும் இந்த அற்ப விருதுகள் அடுக்கியிருந்த ராக்கைகளில் முன்பு அவர்களைச் சுட்ட துவக்குகள் அடுக்கப்பட்டிருந்தன. “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்“ என்றோரு குறள் உண்டு. நினைக்கப்படும் என்ற சொல்லில் உள்ள கனத்தை உங்களால் என்றைக்காவது அறிய முடியுமானால் அன்றைக்கு உங்களுடைய இலக்கியம் தொடங்கும். இல்லை என்றால் பேத்தைகளின் வாழ்வைத் தவிர ஏதுவும் எஞ்சாது.


