சமீபத்தில் நண்பர் ஒருவர் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் புதிதாக உருவாகி வந்த இரண்டு வாசிப்பு வட்டங்களைப் பற்றிய முக நூல் பதிவுகளை அனுப்பியிருந்தார். அதில் கொழும்பிலிருந்து அய்யை வாசிப்புக் குழு, அஃகேனம் வாசிப்பு வட்டம் ஆகியவற்றையும் யாழ்ப்பாணத்தில் வெண்பா நூல்மனையில் தொடங்கப்பட்டிருக்கும் வாசகர் வட்டம் ஆகியவற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். இணைய வெளியில் உதிரியாக இருந்து வாசிப்பு இலக்கியத்தில் ஆர்வம் மிக்க இளையவர்கள் சந்தித்துப் புத்தகங்களைப் பற்றி உரையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இக்குழுக்களில் இயங்கும் நண்பர் கன்சாவுடன் பேசும் போது தாம் எவ்வாறு ஒன்றிணைகிறோம், செயற்படுகிறோம் என்பதைப் பகிர்ந்து கொண்டார். வாசிப்பிற்குப் புத்தகங்களைத் தெரிவு செய்து அவற்றை வாசிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அந்த நூல் எப்படியான அனுபவத்தைத் தந்தது, அதில் இருந்து தாங்கள் உருவாக்கிக் கொண்ட சொந்தப்பார்வைகள் என்ன? எவை அதில் தங்களைப் பாதித்தன, சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் போன்றவற்றை முன்னிட்டு உரையாடுவதாகச் சொன்னார். ஒரு நூலை சொந்த வாழ்வோடு இணைத்து அகவயப்படுத்திக் கொள்வது வாசிப்பின் அடிப்படை. அதை இளையவர்கள் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளித்தது. அவர்கள் மெல்ல மெல்ல ஒரு சுற்றமாக ஆக வேண்டும் என்பதும் இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக நிகழ வேண்டும் எனபது இங்குள்ள இலக்கியச் சூழலில் அடுத்த தலைமுறைக்கான ஆளுமைகளும் சிந்தனையும் உருவாகி வருவதற்கான அடிப்படைகளை வழங்கும்.

ஒவ்வொரு முறையும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் மூத்த எழுத்தாளர்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள், புதிதாக வாசிப்பு, எழுத்தில் ஆர்வமாக இருக்கும் இளையவர்களைக் கேட்கும் போது ஒரு சில பெயர்களை மட்டும் சிறு அவநம்பிக்கை கலந்தே சொல்ல வேண்டியிருக்கும். வாசிப்பில் , இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இளையவர்கள் மெய்யாகவே உருவாகி வருவதில்லையா என்று யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அது உண்மையில்லை. எல்லாக்காலங்களிலும் இலக்கியத்தை நோக்கி வரக்கூடிய இளையவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். வாசிப்பு, எழுத்தில் ஆர்வத்துடன் எழுந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சலித்து அவற்றைக் கைவிட்டு சராசரிகளாக ஆகி சனப்பெருக்கில் மறைந்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கான முதல் காரணம் அவர்களுக்கு தங்களைப்போன்று சிந்திக்கின்ற சுற்றம் ஒன்று கிடைக்கவில்லை என்பதுதான்.

பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்களில் எனக்கொரு வாசிப்புச் சுற்றம் இருக்கவில்லை, என்றாலும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தொடர்ந்து நூலகங்களோடு புழங்கிக் கொண்டிருந்ததால் வாசிப்பும், எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. என்றாலும் வணிக இலக்கியம் சார்ந்த வாசிப்பும் ஆர்வமுமே மிகையாக இருந்தது. தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களாக சாண்டில்யனும், சுஜாதாவும் மட்டுமே இருந்தார்கள். மிகுதிப் பேர் எல்லாம் சுஜாதா கைகாட்டுபவர்கள் மட்டும் தான். பள்ளிக்கூடம் முடிந்து ஊடகவியல் கற்கைக்குள் சேர்ந்த நாட்களில் ஒரு நாள் யாழ் இந்துக் கல்லூரியில் ஓர் நிகழ்வை அறிக்கையிடச் சென்றிருந்தேன். அப்பொழுது நண்பர் கிரிசாந் என்னிடம் வந்து பேசினார். என்னை முகநூலில் பார்த்திருக்கிறேன் என்றார். அவருக்கு நான் வாசிப்பேன் என்று தெரிந்திருந்தது. ‘தஸ்தெயவெஸ்கி படித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நவீன இலக்கியத்தில் எனக்குச் சொல்லப்பட்ட முதல் பெயரே உலகின மகத்தான எழுத்தாளருடையது. சில நாட்கள் கழித்து கிரிசாந் என்னை ஒரு இடத்திற்குப் போவோம் வா என்று அழைத்தார். கொடிகாமம் மினிபஸ்சில் ஏறினோம். டவுனில் ஏறி அரியாலையில் இறங்கினோம். அங்கிருந்து நடந்து முன்பள்ளி ஒன்றிற்கு சென்று சேர்ந்தோம். அங்கே வேலணையூர் தாஸ் அண்ணாவை அறிமுகப்படுத்தி வைத்தார். தாஸ் அண்ணா யாழ் இலக்கியக் குவியம் என்ற அமைப்பை நிறுவியவர். தொழில் முறையாக ஓர் ஆயுள்வேத வைத்தியர். வாசிப்பிலும் கவிதையிலும் ஆர்வமுள்ளவர். அவர்காலத்தில் அவர் வயதிலிருந்த இலக்கியவாதிகள் எடுக்காத ஓர் முடிவை அவர் எடுத்திருந்தார். அது இளையவர்களைத் தேடிச் சேர்ப்பது. தாஸ் அண்ணா முகநூலில் அவதானிக்கக் கூடிய இலக்கியத்தில், வாசிப்பில் ஆர்வம் கொண்ட இளையவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை இலக்கியக் குவியத்தின் உரையாடலுக்கு அழைத்து, அவர்களில் கவிதை எழுதக் கூடியவர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘நாம்’ என்ற சிறிய தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். பின்னர் தொடர்ச்சியாக இலக்கியக் குவியத்தின் கூட்டங்களிற்குச் செல்லத் தொடங்கினேன். என்னுடைய ஞாபகத்தில் இருந்து, என்னுடைய முதலாவது பெரிய இலக்கியக் கூட்டம் எழுத்தாளர் கர்ணணின் கொலம்பசின் வரைபடங்கள் நூல் அறிமுகக் கூட்டம் என்று நினைக்கிறேன். இலக்கியக் குவியம் மூலம் எனக்கு முதலாவது இலக்கியச் சுற்றம் அறிமுகமானது. நவீன இலக்கியம் அறிமுகமானது. என்னுடைய வாசிப்பு விரியத் தொடங்கியது. அன்றைக்கு இலக்கியக் குவியத்தில் இருந்த கிரிசாந், ஆதிபார்த்தீபன், நெடுந்தீவு நேதாமோகன், மதுசா மாதங்கி, பிறைநிலா என்று தொடங்கிய சுற்றம். அன்று இலக்கியக் குவியத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் இன்றைக்கும் கலை இலக்கியத்தில் ஏதோ ஒருவகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இலக்கியக் குவியத்தில் இருந்து சமூக செயற்பாட்டு அமைப்புக்குச் சென்ற பிறகும் அதன் ஒரு பகுதியாக இலக்கியம் இருந்து வந்தது. இலக்கியமே எங்களுடைய முகமாகவும் இருந்தது. விதைகுழுமத்தின் முக்கிய பகுதியாக இலக்கியம் இருந்தது. அதன் பகுதியாகவே புதிய சொல் இதழை நடாத்தினோம். புதிய சொல் இதழ் மூலம் புது இளையவர்கள் உள்ளே வந்தார்கள். அதன் சுற்றம் விரிந்தது. சமூக செயற்பாடுகளில் இருந்து முழுமையாக விடுபட்ட பிறகு இலக்கியம் மட்டுமே என்னுடைய பணி என்று ஆனபிறகும் அமைப்பற்ற ஓர் சுற்றம் எங்களுடன் இருந்து கொண்டிருந்தது. குறிப்பாக கிரிசாந், தர்முபிரசாத், மார்க்கி, மதுபாலா போன்ற நண்பர்கள் தினமும் உரையாடிக் கொண்டிருக்கக் கூடிய என்னுடைய சுற்றமாக இருக்கிறார்கள். இவை தவிர இன்றைக்கு இணையம் ஏற்படுத்தித் தந்திருக்கிற வாய்ப்பில் மிகப்பெரியது. அங்கே நம்மால் ஓர் சுற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது தான். முக நூல் போன்ற தளங்களை வெறும் வம்படிச் சண்டைகளுக்கும், பொழுதுபோக்குக்கும் பயன்படுத்துவதில் இருந்து விலகி இணைய வழியே இலக்கிய உரையாடல்களைத் தொடர்ந்து செய்யக் கூடிய இலக்கிய வட்டங்கள் சிலவற்றுடன் அங்கே கிடைக்க கூடிய நண்பர்களுடன் உரையாடலில் இருக்க முடிகிறது.
இன்றைக்கு வாரம் ஒரு சிறுகதையை வாசித்து உரையாடக் கூடிய சுக்கிரி இலக்கியக் குழுவில் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறோம், அங்கிருந்து உருவாக்கிக் கொண்ட கம்பராமாயணம் வாசிப்புக் குழு, அபபுனைவு வாசிப்புக் குழு என்பவற்றோடு உரையாடல் மேம்பட்டுச் செல்கிறது. இலக்கியத்தில் விசை குன்றாது இருக்கவும், சிந்திப்பதற்கும் இச்சுற்றமே என்றைக்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. நாம் என்றைக்கும் தனியே சிந்திக்க முடியாது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொல்வது போல சிந்திப்பர்களுடன் இருப்பதே சிந்திப்பதற்கான அடிப்படை. ஏனென்றால் சிந்தனைகளை புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் சிந்திப்பதை சிந்திப்பவர்களுடன் இருந்தே கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர் ஜெயமோகன். சிந்திப்பது என்பது மானுட குலம் ஒருவருக்கு ஒருவர் உரையாடி உரையாடி வளர்த்தெடுத்து வந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு, அது ஒருவரில் உருவானதல்ல. அதுவொரு கூட்டுச் செயற்பாடு, கூட்டுப் பிரக்ஞை. இன்று கற்பது என்பது அந்தரங்கமாக இருக்க முடியும். ஒரு புத்தகத்துடன் தனிமையில் இருந்து கற்க முடியும், ஆனால் தனியே சிந்திக்கப் பழகி விட முடியாது. அதற்காகத் தான் நம்மைப் போலச் சிந்திக்கக் கூடிய, நம்முடைய ஒத்த இரசனை, தேடல், பார்வைகள் இருக்கக் கூடிய சுற்றம் மிக அவசியமானது.
புத்தகங்களோ, கருத்துக்களோ பற்றி நாம் உருவாக்கிக் கொள்கின்ற சுற்றத்துடன் விவாதிக்கும் போதே நாமே வியக்கும்படி நமக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்த விசயங்களைத் தர்க்க பூர்வமாக ஒழுங்குபடுத்திக் கொள்ள முடிவதைக் கண்டிருக்கிறேன். முக்கியமாக தொகுத்துக் கொள்வது என்ற செயற்பாடு அறிந்ததைப் பிரயோகிக்கும் போதே நிகழ்கிறது. அதனால் நாம் உரையாடல வேண்டும். சரி தவறுகளுக்கு அப்பால் நமக்குக் கிடைக்கப்பெற்றவற்றை நம்முடைய கருத்தாக வளர்த்தெடுத்துக் கொள்ளும்படி அவற்றைச் சொல்லிப் பெருக்கி, ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும், என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் (திருப்பொற்சுண்ணம்) அறிதல் முறைகளில் பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல். மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை. தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல. தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு உட்படுத்துவது. விவாதிப்பது, கண்டடைவது. என்று சொல்லியிருக்கிறேன். இச்செயன்முறையின் முதல் படிநிலை உரையாடுவதே. கூட்டு உரையாடல்கள் ஒரு கருத்தை, எண்ணத்தைப் பற்றிய வெவ்வேறு கதவுகளைத் திறக்கின்றன.
இன்றைக்கு நாம் காணும் அத்தனை அறிவுக் கூறிலும் ஒரு தனிநபர் மட்டும் இல்லை என்ற மகத்தான உண்மையை எப்பொழுதும் எண்ணிக் கொள்ள வேண்டும். நாம் சிந்திப்பதற்கும் கண்டடைவதற்குமான வாசல்களாக நாம் அமைத்துக் கொள்ளும் சுற்றமும் நட்பும் இருக்கின்றன. சிந்திப்பதன் அடுத்த படிமுறைகளான கற்பனை, உள்ளுணர்வு , என்பவற்றைச் சென்றடைய நாம் முதலில் பயில வேண்டியது தர்க்கத்தை. அதைத் தொகுத்து அகவயப்படுத்திக் கொள்ளும் செயன்முறைக்கான பயிற்சியை கூட்டு உரையாடல்களே செறிவாக அளிக்கின்றன. அதனால் கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்தும் தம்மைப்போல் சிந்திப்பவர்களையும் உரையாடுபவர்களையும் தேடிச்செல்ல வேண்டும், சிறு வாசிப்புக் குழுக்கள், இலக்கியக் கூட்டங்களுடன் தொடர்ந்து பொருந்தியிருக்கவும், அவற்றில் அங்கமாக ஆகி உரையாடவும் விவாதிக்கவும் பழக வேண்டும். எதை அறிந்தாலும் அதை நம்முடைய சொந்த வாழ்கையாக, சொந்தக் கருத்தாக வளர்த்தெடுக்கவும், அனுபவப்படுத்தவும் முயலாமல் அக்கருத்தில், அந்த அறிவில் எந்தப் பயனும் இல்லை. வெறுமனே தகவல்களைச் சேகரித்துக் கொள்வது சிந்தனை அல்ல, அவற்றை அகவயப்படுத்துவதும் பிரயோகிப்பதுமே சிந்தனை. இம் மாபெரும் மானுட வாழ்வும் அறிவும் அப்படிச் சிந்தித்தவர்களால் சிறுச் சிறுகச் சேர்க்கப்பட்டதுதான்.
அறிவின் ஒவ்வொரு துளியிலும் ‘பெருகுக’ என்றொரு சொல் உண்டு.
சிந்திப்பதற்கான வழிமுறைகள் என்ன? – ஜெயமோகன்


