யதார்த்தன்,
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் “மூன்று ஈழத்து நாவல்” மற்றும் “தோறை சுங்க விதிப்பு” கட்டுரைகளின் வாயிலாக உங்களை அறிந்தேன். தங்களின் பழம்பாடல் கட்டுரைகளை படித்து கொண்டிருக்கிறேன். ஜெ.யின் “சங்க சித்திரங்கள்” நூலை நினைவுப்படுத்தியது. ஒரு வகையில் “சங்கசித்திரமும்” “பழம் பாடலும்” சங்ககவிதைகளின் விழுமியத்தை முற்றிலும் இரு வேறான நிலம், வாழ்வு, அறம் என இரு மானுட வாழ்வுகள் தனக்கான தன்னறத்தை மீட்டுகொண்டதை காட்டுகிறது.
எப்போதும் பத்து மணிக்கு எல்லாம் உறங்கி போவேன். இன்று மணி பன்னிரண்டு தாண்டியும் உறக்கம் பிடிபடவில்லை. காரணம் உண்டு. அதை பற்றி எழுதிவிட்டால் தூக்கம் வருமென நினைக்கிறேன் .
எங்கள் வீட்டில் நீண்ட வருடங்களாக இருந்த ஒரு கண்ணாடி உடைந்து போனது. நான் தான் கைத்தவறி உடைத்து விட்டேன். பத்து வருடத்திற்கு மேலிருக்கும் . அப்படி பார்த்தால் எங்களை விட அதிக நாள்கள் இந்த வீட்டில் குடியிருந்தது இந்த கண்ணாடி தான். பத்து வருடங்களுக்கு முன்பு பிழைப்பு, எங்களின் கல்வி என இன்னும் சில காரணங்களுக்காக இந்த கிராமத்தை விட்டு திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தனர் என் பெற்றோர். அங்கு வாடகை வீட்டில் குடியிருந்தோம். இந்த பத்து வருடத்தில் ஐந்தாறு வீடுகள் மாறியிருப்போம். எந்த வீடும் எங்கள் கிராமத்து வீடு அளவுக்கு பிடித்து போனதில்லை. இந்த வருடத்தின் மத்தியில் தான் சொந்த ஊருக்கே மீண்டும் வந்தோம். இனி நிரந்தரமாக இங்கே தான்.
இந்த வீட்டில் உள்ள மிக அழகான பொருள்களில் இந்த கண்ணாடியும் ஒன்று. நீள்வட்டத்தில் வெள்ளை நிற சட்டத்திலான கண்ணாடி. புனேவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என் அத்தை வாங்கி வந்தது. என் தலை உயரத்திற்க்கு ஆணியடித்து மாட்டினால் மார்பளவு வரை காட்டும். என் அப்பாவின் உயரத்திற்கு ஆணியடித்து மாட்டியிருந்தால் எனக்கு தோள்பட்டை வரைதான் பார்க்க முடியும். கொஞ்சம் நீளமான கண்ணாடிகள் நிறை அதிகமிருக்கும். இந்த கண்ணாடி மற்ற கண்ணாடிகளோடு ஒப்பிடும் போது மிக மிக இலேசானது. ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு கழட்டி மாட்டுவதும் எளிது.அப்படி செய்ய போய்தான் உடைந்து விட்டது.
என்னால் இப்போது கூட நம்ப முடியவில்லை அது உடைந்து போனதை.
இந்த வீட்டின் நடந்த அனைத்திற்கும் கால நேர சாட்சியாக இருந்தது.இப்போது இல்லை. என்னுடைய இந்த இருபத்தைந்து வருடத்தில் கண் முன்னே தெரியும் ஒன்று என்னை ஏதோ செய்கிறது. அது என்ன வென்றால் என் கண்ணெதிரிலே நான் மறைந்து கொண்டே வருவது. இது வரை திருவண்ணாமலையில் இருந்த வீட்டிலோ பள்ளியிலோ நடந்த சாலையிலோ எங்குமே நான் இல்லை. என்னை நினைவுப்படுத்தும் எதுவும் இல்லை. எனக்கு நினைவுப்படுத்துவதற்கு இந்த கண்ணாடி மாதிரியான பொருள்கள் தான் உண்டு. பத்தாம் வகுப்பில் முதன்முதலாக இங்க் பேனா வாங்கி, அழகான கையெழுத்துகாகவும் விரைவாக எழுத வரவும் எழுதி எழுதி தீர்த்து , பள்ளியில் முதலிடம் பெற்ற கதைகள் எல்லாம் என் பேனாவிற்கும் எனக்கும் தானே தெரியும். அதை என்னிடமிருந்து பிடுங்கி என் தம்பிக்கு கொடுக்க அதை அவன் தொலைத்து போனான். இப்படி பொருள்கள் தொலைய தொலைய நினைவிலிருக்கும் ஏதோவொன்றின் தொடர்பை துண்டித்து விட்டது போல் ஒரு உணர்வு
இப்படி அனைத்தும் மறைந்து கொண்டும் மறந்து கொண்டும் வருகிறது. நான் கதைகளில் கூறும் “முன்னொரு காலத்தை” நோக்கி கணம் கணம் நகர்ந்து கொண்டிருக்கிறேன். முன்னோரு காலமாகவே மாறி கொண்டேயிருக்கிறேன்.
இதை பற்றி எல்லாம் நினைக்கும் போது வள்ளுவரின்
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”
என்னும் குறள் நினைவில் வந்து வாய் திறந்து மிக சத்தமாக சிரிப்பதை போலிருக்கும். இதை எழுதி முடிக்கும் பொழுதில் மற்றொரு குறளும் நினைவுக்கு வருகிறது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
ஜெ. க்கு எழுத நினைத்து … எழுதியும் எழுதாமாலும் சில கடிதங்கள் உண்டு . அவருக்கு இதையெல்லாம் எழுதாலாமா என்று நினைத்து அப்படியே விட்டு விடுவேன். நேற்று உங்களுக்கு எழுத வேண்டும் என்று தான் எழுதினேன்.
சுவாதி, விழுப்புரம்
சுவாதி,
ஜெ, தமிழிலக்கியத்திற்கு அளித்த பெருங்கொடைகளில் ஒன்று சங்கச் சித்திரங்கள். அதன் அடிப்படையே ஆய்வாளர்கள், பண்டிதர்கள் சொல் நயந்து பொழிப்புரை எழுதி பள்ளிப்பாடங்களிலோ, பல்கலைக்கழகங்களிலோ வைத்துக் கொண்டிருந்த சங்கப் பாடல்கள் மீது நவீன இலக்கியத்தின் வெளிச்சத்தைப் பாய்ச்சியது சங்கச்சித்திரங்கள். ஒருவகையில் தமிழின் முதன்மையான வணிக இதழ் ஒன்றில் இத்தொடரை எழுதியதால் மொத்த தமிழ்ச் சூழலுமே சங்கப்பாடல்களோடு அல்லது மரபிலக்கியத்தோடு கொண்டிருந்த, இடை வெளியைப் பெருமளவு குறைத்துக் கொள்ள முடிந்தது. அதனால்தான் இன்றைக்கு வரைக்கும் சங்கச்சித்திரங்கள் நூல் ஒவ்வொரு தலைமுறையினராலும் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. விஷ்னுபுரத்தையோ, வெண்முரசையோ, அறியாதவர்களிடம் கூட சங்கச் சித்திரங்கள் நூலைப் பார்த்திருக்கிறேன். சொந்த வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த தத்துவங்களும் தரிசனங்களும் பயனற்றவை. ஜெ சங்கச்சித்திரங்களில் ஒரு பாட்டுக்கு பொழிப்புரை எழுத நினைக்கவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களோடு அவற்றை விவாதிக்க விடுகிறார். அதன் மூலம் அவற்றைப் புரிந்து கொள்ளவோ, அர்த்தமளிக்கவோ பார்க்கிறார். அதனால் தான் சங்கச்சித்திரங்கள் முன்னோடி முயற்சியாகத் தமிழில் நிலை கொண்டது. அதற்குப் பிறகு அவ்வகையான வாசிப்பு முறையை ஏராளமானோர் செய்திருக்கிறார்கள். அதே போல நம்முடைய வாழ்கையின் செறிவான, உச்சமான தருணங்களில் எப்படியோ ஒரு பாட்டோ, குறளோ, படிமமோ வந்து விழும் போது அந்த அனுபவம் எழுந்து பறக்கிறது. அது துக்கமோ, களிப்போ எதுவென்றால் அவ்வரி வந்து விழுந்தவுடன் எளிய சிற்றுணர்வுகளை அது பெருந் தரிசனங்களுடன் இணைத்துவிடுகிறது. மரபிலக்கியங்கள் மீதான ஆர்வத்தை என்னுடைய தமிழாசிரியர் ந. சத்திய வேந்தன் எனக்கு அளித்தார். அவர் பொருள் கொள்வது எப்படி என்பதோடு மரபிலக்கியத்தை எப்படி வரலாற்றிலும் பண்பாட்டிலும் வைத்துப் பார்க்கும் போது அதன் பொருள் விரிந்து செல்கிறது என்று கற்பித்தார். என்னுடைய இலக்கிய ஆசிரியர் ஜெ. அவர் அதை சொந்த வாழ்க்கையை பெருக்கி அர்த்தமளிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், அழகுணர்வை மேம்படுத்தவும் பழந்தமிழ் இலக்கியங்களை எப்படி வாசிக்கலாம் என்று கற்றுத்தந்திருக்கிறார்.
ஜெ சங்கச்சித்திரங்கள் பற்றிச் சொல்லும் போது அந்நூலின் சாராம்சமான வரி ஒன்றே. கவிதை இசை போல ஓர் அழகியல் சட்டகம் அல்ல. வாழ்க்கையைக்கொண்டே அதை வாசிக்கவேண்டும். அத்தகைய வாசிப்பு அமைக’ என்றார். பழம்பாடல் அச்சொல்லில் இருந்து எழுதத் தொடங்கியதுதான். என்னளவில் மிகப்பெரிய பயிற்சியாகவும் அமைகிறது.
மரபிலக்கியங்களில் இருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய கொடைகளில் முதன்மையானவை அழகியல் அறவுணர்வு, இரண்டும். அழகியல் என்பது ஒருவகையில் நம்முடைய அன்றாடத்தை செறிவாக்கிச் செறிவாக்கி அதற்கு ஒரு அர்த்தத்தை அளிப்பதும் தான். ஏனென்றால் காலத்திற்கும் இலக்கியத்திற்குமே அந்த தகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. காலம் ஒன்றை அருந்தல் பெறுமானமாக மாற்றுகிறது. இலக்கியமோ அதற்கு அர்த்தங்களை அளிக்கிறது. வாழ்கையாக மாற்றுகிறது. அதன் நேரடி அர்த்தம் சுருங்கி வேறொன்றாக மாறுகிறது. காபோ தனிமையின் நூறாண்டுகள் நாவலில் ஓரிடத்தில் பொருட்களுக்கு அவற்றுக்குரிய உயிர் இருக்கிறது, அவற்றின் ஆன்மாக்களை எழுப்புவதே விசயம்’ என்று எழுதுகிறார். வாழ்க்கை நுண்மையாகவும், பிரமாண்டமாகவும் ஆவது கலை, இலக்கியத்தால் தொடப்படும் போது.
எங்களுடைய வீட்டில் ஒரு சுவர் மணிக்கூடு இருக்கிறது. என்னுடைய அம்மாவின் சகோதரி என்னுடைய முதலாவது பிறந்த நாளுக்கு பரிசளித்தது. இன்றைக்கு அதற்கு முப்பத்து மூன்று வயது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஏராளமான இடப்பெயர்வுகள் நடந்தன. அம்மா ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் எதைப் பத்திரப்படுத்துகிறாரோ இல்லையோ மணிக்கூட்டை ஒரு துவாயில் சுற்றி எங்களுடைய ஆவணங்கள் வைக்கும் பையில் வைத்து எடுத்து வருவார். யாழ்ப்பாணத்தில் இருந்த போது மட்டுமல்ல போர் நிகழ்ந்து முடிந்த மைய நிலமான வன்னிக்கும் எடுத்து வந்தார். அங்கே நான்கைந்து முறை இடம்பெயர்ந்தோம். கடைசியில் போர் முடிந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு கையில் தூக்கக் கூடிய பைகளுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் போதும் எங்களுடைய ஆவணப் பையில் அந்தக் கடிகாரம் இருந்தது. முகாமிலும் பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய வீட்டிற்கும், அது 1993 இல் எங்கே மாட்டப்பட்டதோ அதே இடத்திற்கும் திரும்பியது. இன்றைக்கும் வீட்டில் இருக்கும் ஒரே சுவர் கடிகாரம் அதுதான். இன்றைக்கு அது மணிகாட்டும் தன் பணியைச் செய்து கொண்டிருந்தாலும், எங்களுக்கு அது வேறொன்றாக மிகப்பெரியதாக ஆகி விட்டிருக்கிறது.



