கொண்டு செல்லும் ஒளி : வெள்ளி வீதி இலக்கியக் கூடுகை 02

0
117

வெள்ளி வீதி இலக்கியக் கூடுகையின்  இரண்டாவது கூடுகை சுவிஸ்லாந்தின் சூரிச் நகரில்  வரும் நவம்பர் முதலாம் திகதி முழுநாள் நிகழ்வாக  நடைபெற இருக்கிறது. உள்ளூரிலும் சரி புலத்திலும் சரி நடக்கும் பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் இருந்து மாறுபட்டதாக வெள்ளி வீதி உருவாகி வந்திருக்கிறது. ஒவ்வொரு  கூடுகையிலும் அது மேம்பட வேண்டும்.  வெள்ளி வீதியின் முதற்கூடுகை சிறியளவில் படைப்பாளிகளை முன் இருத்தி உரையாடும் வகையில் ஒருக்கப்பட்டது.  தொடர்ந்து இலக்கியக் கூட்டங்கள் தமிழில் உரையாடல்கள் தமிழில் வெவ்வேறு முறைகளில் வடிவங்களில்   காலத்துக்குக் காலம்  பரீட்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்றைக்கு தீவிர இலக்கியம் அல்லது நவீன இலக்கியம்  வணிக இலக்கியத்தைத் தள்ளி விட்டு தன்னையோர் பேரியக்கமாக நிலைப்படுத்தியிருக்கிறது. அது இலக்கிய இயக்கங்கள், குழுக்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உரையாடல், விவாதங்களின் வழியே வளர்ந்து வந்திருக்கிறது. சுபக்கமும் பரபக்கமும்  சந்தித்து வளர்ந்த மாபெரும் விருட்சம். 

இலங்கைச் சூழலைப் பொறுத்தவரை,  இன்றைக்கு நாட்களில் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதை பெரும்பாலும் நிறுத்தி விட்டேன்.  இயல்பிலேயே எனக்குப் பகல் தூக்கம் பிடிக்காது. இடையில் இரண்டொரு கூட்டத்திற்குச் சென்று பார்த்தேன் அதே டெம்லெட். புத்தக அறிமுகம், நூல் வெளியீடு, பிரதி கையளிப்பு,  உரையாடல், விமர்சனக் கூட்டம்  என்று தலைப்பை மாற்றிக் கொண்டாலும் மோதகமும் கொளுக்கட்டையும் போல, (அல்லது தேய்ந்த இந்தப் பழைய உவமையைப்போல) கூட்டங்கள்.  பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது  கூட்டம் முடிந்த பிறகு நடக்கும் உரையாடல்களுக்காக மட்டுமே என்ற நிலையிருந்தது. அந்த உரையாடல் மட்டுமே எடுத்துச் செல்லக் கூடியதாகவிருக்கும். நன்றாக இலக்கியம் தெரிந்தவர்களே முகங்களுக்காக திராபைப் பிரதிகளில்  சாக்கடைக்குள் காந்தத்தை இறக்கி எதையாவது துளாவி எடுத்து  வந்து பொன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். யாரும் புத்தகத்தை வாசிக்க வில்லை என்பதால்  சொல்வதை எல்லாம் தவில் வித்துவான் போலத் தலையாட்டிக் கொண்டிருப்போம். ஓரளவுக்கு மேலே மொய் வைப்பது போல் ஆகிவிட்டது. எழுத்தாளர்களும் எழுத்தாளர்களின் உறவினர்களும் மட்டும் கூடி தேனீர் அருந்தி விட்டுச் செல்லும் கூட்டங்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு முதல் தலைமுறையில் இருக்கும் பெரும்பான்மை  எழுத்தாளர்கள் சக எழுத்தாளர் அல்லாத தன்னுடைய வாசகரைச் சந்தித்தே இல்லை. 

எங்களுடைய குமாரதேவன் ஐய்யாவை நாங்கள் வாசகர் குமார தேவன் என்று அழைத்தது மூத்தவர்களில் எழுத்தாளர், இதழாளர்  அல்லாத ஒரே வாசகர் அவர்தான். அவர் சலிக்காமல் ஒவ்வொரு கூட்டத்திற்கும் போவார், எழுந்து பேசுவார்.  ஒரு கட்டத்தில் கூட்டத்தின், நூலின் சுருக்கத்தை  சண்முகம் கடை திண்ணையில் வைத்து அவர் வாயால் கேட்டுக்கொள்வதே பெரிய ஆறுதலாய் அமைந்தது. அவரை இவ்வளவு வேளைக்கு இழந்திருக்க வேண்டாம்.

நம்முடைய இலக்கியக் கூட்டங்களில் செறிவான உரைகள், மெய்யாகவே புத்தகத்தை வாசித்து உள்வாங்கி, அழகியல் சார்ந்த விமர்சனப் பார்வைகளையோ, அபிப்பிராய பேதங்களையோ முன் வைத்து உரையாடத்தக்க சந்திப்புக்களை உருவாக்கும்  கனவு எங்களுடைய வட்டத்திலும் இருந்தது. யாழ் இலக்கியக் குவியத்திலும் பின்னர் விதை குழுமத்திலும் இப்படியான வாசிப்பு, உரையாடல் வெளிகளை உண்டுபண்ண முயன்றோம். அப்படிச் சில சந்திப்புக்களைச் செய்து பார்த்திருக்கிறோம். கோதே நிறுவனத்திற்காக   ஒரே நிலவுருவில் மூன்று மொழியுடல்கள் என்ற உரையாடல்  பயனுள்ளதாகவிருந்தது. வெவ்வேறு மொழிகளில் எழுதும் ஈழத்தில் பிறந்த எழுத்தாளர்கள் ஐவரைக் கொண்டு முழு நாள் உரையாடலாக அதைத் திட்டமிட்டோம். அதற்காக நிலங்களைத் தன்மை, முன்னிலை படர்க்கை என்று பிரித்தோம்.  ஜேர்மன் மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா, ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் அனுக் அருட்பிரகாசம், தமிழில் இலங்கையின் வெவ்வேறு நிலங்களை எழுதும்  கிரிசாந், யதார்த்தன், பிருந்தன் ஆகியோருடனான உரையாடல் வெளியாக அதை வடிவமைத்தோம். அதை புதியசொல்,கோதே,யாழ் பல்கலைக்கழகம் இணைந்து சிறு நூலாகவும் வெளியிட்டிருந்தோம். அதுவொரு நல்ல மாதிரியாக இருந்தது.

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

எங்களுடைய சுற்றத்தில் எழுத்தாளர்களும் வாசகர்களும் உரையாடும் ஒரு வெளி காத்திரமாக உருவாக வேண்டும்,  மேடைகள் கரைந்து  போன ஒரு வெளி உருவாகி வரவேண்டும் என்ற  எண்ணமும் கனவுமிருந்தது. தர்மு பிரசாத் முதலில் இப்படி ஒரு சந்திப்பு வெளியினை உண்டு பண்ணுவதற்கு  தீர்மானித்திருக்கிறோம் என்றும், சங்கப் பெண் புலவரான வெள்ளிவீதியாரின் பெயரைச் சூட்டியிருக்கிறோம் என்று சொன்னார். முதல் சந்திப்பு முடிந்த பிறகு தர்முப் பிரசாத் உற்சாகமாகவிருந்தார். இந்த வகை உரையாடல் பயனளிக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். சென்ற மாதம்   எழுத்தாளர் சோபாசக்தி யாழ்ப்பாணம் வந்த போது பரீஸ் வெள்ளி வீதியின் சந்திப்புப் பற்றி  இருந்து கதைத்தோம். சோபா நம்பிக்கையுடன் இருந்தார். அவரிடம் என்றைக்கும் அவநம்பிக்கைத் தோற்றம் இருப்பதில்லை. அதையும் தாண்டி அவருடைய சொல்லில் ஒரு நன்னம்பிக்கை சூடப்பட்டிருந்தது. அடுத்த சந்திப்பு  சுவிசில்  என்று பரிசிலேயே முடிவாகியிருந்தது.  எழுத்தாளர் சயந்தன் அதைப் பொறுப்பேற்றிருந்தார். நான் சந்தித்த நாட்களில் இருந்தே சயந்தனுக்கும் இப்படியொரு கனவிருந்தது. இலங்கையில் தன்னுடைய ஆதிரை பதிப்பகம் மூலம் அப்படியான இரண்டு சந்திப்புக்களை நடத்தவும் செய்திருந்தார். குறிப்பாக சிங்கள தமிழ் மொழிகளின் இலக்கிய வெளிகள் சந்திக்கும் ஒன்று. நம்முடைய இலக்கியச் சூழலில் தனிநபர்கள் பலரும் காலத்துக்காலம் இப்படி ஒன்றைச் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சூழல் கொடுக்கக் கூடிய சலிப்பை அவர்கள் தாங்கி நிற்க வேண்டும்.  அதற்காகத் தான் ஒரு சிறு குழு என்றாலும் கூட்டாக அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அமைப்பு அல்லது குழுவேலை என்பது தாங்கும் திறனை முதன்மையாக அளிக்கிறது. திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது, நிகழ்வை நடத்துவது, ஆவணப்படுத்துவது என்று வேலைகள் பிரிக்கப்படுவதோடு தனி உடல்களைப் பீடிக்கும் சூழலின் சலிப்பு கூட்டு நிலைமைகள் மீது தணிந்து போகும்.  அமைப்பற்ற அமைப்பு, அதிகாரம் குவிக்கப் படாமல் இருப்பது  போன்றவற்றில் நியாயங்கள் உண்டு. ஆனால் ஒரு அமைப்பு என்பது  பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளும், கனவுள்ள  நபர்களின் கூட்டு உழைப்பினாலேயே சாத்தியப்படும்.  சோபா அண்ணரிடம் குவர்னிகா, இமிழ் போன்ற தொகுப்புகள் அல்லது எழுத்துப் பிரதிகள் எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.  உரையாடல் வெளிக்கு நிகராக  ஆவணமாக்கலோ, படைப்புக்களைத் தொகுப்பதோ, இதழ்களோ  அச்சில் வருவது முக்கியமானதென்றே நினைக்கிறேன். ஒளியை ஏற்றுவது மட்டுமல்ல கொண்டு செல்வதும் முக்கியமானது. அது நிகழ்க. 

வெள்ளி வீதி 2 தர்மு பிரசாத் குறிப்பு

ஒரே நிலவுருவில் மூன்று மொழியுடல்கள் – கிரிசாந்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here