தோறை என்பது கெட்ட வார்த்தையா?

0
342

அன்பின் யதா,

உன்னுடைய தோறை நாவல் சுங்கத்திணைக்களத்தினால் தடுக்கப்பட்டதை அறிந்தேன். வருத்தமாக இருந்தது. இந்தப்பிரச்சினகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க,  முக நூலில் சிலர் நாவலுக்குத் தோறை என்று பெயர் வைத்ததை ஒட்டி பெண்களை இழிவுபடுத்தும் சொல்லை பயன்படுத்தியிருப்பதாக திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்குள்ள கேள்வி என்னவென்றால்  அந்தச் சொல்லுக்கு இவர்கள் சொல்லும் ’விலைமாது’ என்ற அர்த்தம் வருகிறதா? சரி வந்தால் என்ன?  நாவலில் அது எப்படிப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறார்கள் ?

–மதுராந்தகி

மது, பொதுவாகவே முகநூல் சூழலுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து விடுவேன். நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  முகநூலில் இவ்வகை ஆவேசக் குரல்களுடன் வருபவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமே இருக்காது. எங்காவது அரசியல் கட்சிகளில், அமைப்புகளில்  தொண்டர்களாகவோ அபிமானிகளாகவோ இருப்பார்கள், அல்லது கட்சியே பொறுக்க மாட்டாமல் விரட்டி விட்டவர்களாக இருப்பார்கள்.  இதற்கு மேலே முகநூல் போராளியாகவோ ஊடகராகவோ, இருக்கக் கூடும். அல்லது அப்படிப் பொருட்படுத்தும் படி  ஒன்றுமிருக்காது, வேடிக்கைக்கும் பொழுது போக்கிற்கும், தங்கள் சொந்தச் சொறிந்து கொள்ளலுக்குமாக  வந்து வம்படிச் சண்டைகளில் கலந்து கொள்ளும் சராசரிகள்.  இலக்கியத்தில் சம்பந்தமே இல்லாமல் வெகு நாட்களாக இந்தக் கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது.  முகநூல் ஒரு திறந்த வீடு. யாரும் நுழையலாம், யாரும் கருத்துச் சொல்லலாம், யாரையும் தாக்கலாம். அது சராசரிகளுக்கு கொடுக்கு முளைக்குமிடம். மற்றபடி அறிவார்ந்த விவாதங்கள் எல்லாம் இவர்களுக்கு எட்டாக்கனி. 

இவர்களுக்கு விவாதிக்க பண்பும் கிடையாது, உழைப்பும் கிடையாது, அறிவும் கிடையாது. தவிர முகநூலில் பொரிந்து தள்ளி விட்டால் அறிவுச்சூழலைத் தாக்கி விட்டோம், அம்பலப்படுத்தி விட்டோம் என்று நினைக்கிறார்கள். செயலூக்கத்தைக் குன்றச் செய்யவோ, ஆளுமைகளை அழிக்கவோ முடியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.  தாங்கள் பெரும்பான்மைத் தரப்பு என்பதால் கும்பலாகச் சேர்ந்து அறிவியக்கத்தைச்  சாய்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.  எளியவர்கள். எனக்கு  இவர்கள் மேல் பெரிய பரிதாபமே உண்டு. பதினைந்து வருடங்களாக  இலக்கியச்செயற்பாட்டில் இருக்கிறேன். முகநூலில் வசைகள், அவதூறுகள், அங்கிருந்து நேரடியான தாக்குதல் முயற்சிகள் எல்லாவற்றையும் எதிர் கொண்டாயிற்று, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலோ, கலை இலக்கியத்திலோ,  நீரில் நுளம்பு விழுந்தால் ஏற்படும் நுண்ணிய சலனத்தைக் கூட இவர்களால் ஏற்படுத்த முடிந்ததில்லை. சொல்லப்போனால் எதிர்மனநிலைகள், கசப்புகள் எப்பொழுதும் எனக்கு  ஊக்கத்தைத்தான் தந்திருக்கிறது. இவர்களின் வயிற்றில் எரியும் நெருப்பில்தான்  சுக்கானை மூட்டிக் கொள்வது.

தோறை என்ற  என்னுடைய நாவலின் தலைப்பின் பிரச்சினைக்கு வருவோம்.  

இலக்கியத்தோடு,  நான் மொழியியல் துறையில் கற்றவன். மொழியியல் எழுத்து மொழியை விட பேச்சு மொழிக்கு முக்கியம் கொடுக்கும் நவீன அறிவுத்துறை. குறிப்பாக கிளை மொழிகள் எனப்படும் வட்டார வழக்குகள் மீது அதிக கவனம் செலுத்தும்.  இது தவிர ஒரு இலக்கிய உபாசகனாக மொழி என்னுடைய முதல் கருவி. அதை நுண்மையாக அவதானிக்கவும், கையாளவுமான பயிற்சியே இலக்கியத்தின் பால பாடம். இந்தக் கும்பல் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது போகிற போக்கில் நாவலுக்குப் பெயர் வைத்திருப்பேன் என்றா? 

தோறை நாவலுக்கு முதலில் இராக்கினி என்று பெயரிட்டேன். பின்னர்  எழுதிக் கொண்டிருக்கும் போதே தோறை என்ற சொல் வந்து விழுந்தது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள, சென்ற வருடம் சிறு ஆய்வையும் களப்பயணங்களையும் செய்திருக்கிறேன். தோறை இலங்கைத் தமிழில்  மட்டும் புழங்கும் ஓர் பேச்சு மொழிச் சொல்.  அகராதிகளிலோ,  கலைக்களஞ்சியங்களிலோ பார்க்க முடியாது. ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக வசைச்சொற்கள், இழிவரல் சார்ந்த சொல்லாடல்கள் அகராதிகளில் இருக்காது. அது பழைய இலக்கண இலக்கியங்களுக்குத்தான் பொருந்தும். ஏனென்றால் நவீன மொழியியலும் நவீன இலக்கியமும் தோன்றும் வரை பேச்சு மொழி இலக்கியத்தில் இரண்டாம் பட்சமானது. பெரிதாகப் பொருட்படுத்தப் படாதது.  நீங்கள் சங்க காலத்தில் இருந்து உரைநடை தொடங்கிய கொலனிய காலம் வரை அவதானித்தாலே தெரியும். எந்த இலக்கியப் பனுவலிலும் பேச்சு மொழி இருக்காது.  எழுத்து மொழியே முதன்மையானது, உயரியது, சரியானது என்ற நிலைமைதான் இருந்தது.  நவீன இலக்கியமும், மொழியியலும் உலகெங்கும் உருவான சனநாயக தன்மையில் இருந்து உருவானவை.  அவை பேச்சு மொழியினை முக்கியப் படுத்தின, அதன் விளைவாக நாட்டாரியல் போன்ற பெரும் பண்பாட்டுப் பொக்கிசங்கள் திறக்கப்பட்டன. பேச்சு மொழியின் ஒலி, சொல், பொருள், வாக்கியம் எல்லாம் பொருட்படுத்திக் கவனிக்கப்பட்டன. மொழியியலும் நவீன இலக்கியமும் பேச்சு மொழியை உள்வாங்கின. இந்தப் பேச்சு மொழியில்தான் கெட்ட வார்த்தைகள், வசைச்சொற்கள் எல்லாம் வாழ்ந்து வந்தன. 

நவீன இலக்கியத்திற்கும் சரி, மொழியியலுக்கும் சரி  மொழி உருவாக்கும் அனைத்துக் கூறுகள் மீதும் அக்கறையுண்டு. அதற்கு கெட்ட வார்த்தை, வசை வார்த்தை என்று ஒன்றும் இல்லை. அது அச்சொல் உருவாகி வந்த சொற்பிறப்பியல், அதன் பண்பாட்டுப் பின்னணி, பிரயோகம், அர்த்த மாறுபாடுகள், மொழி அழுத்தங்களைக் கவனிக்கும். இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழ், மன்னார் தமிழ், மலையகத் தமிழ், கிழக்குத் தமிழ், முஸ்லீம் தமிழ் போன்ற ஏராளமான கிளை மொழிகள், அல்லது வட்டார மொழிகள் உள்ளன. நுண்மையான வேறுபாடுகளுடன் அதற்கமைந்த பண்பாட்டுப் பின்னணியுடன் வட்டார மொழி உருவாகி வருகிறது.  எழுத்து மொழியைக் காட்டிலும் வட்டார மொழி நுட்பமானதும் விரிவானதுமான நெகிழ்ச்சியுடையது. அது ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டும் பெருகிக் கொண்டும் இருக்கும்.  சொற்களை உருவாக்கும், அர்த்தமளிக்கும், அர்த்தங்களை மாற்றும்.  வட்டார மொழி என்பது ஒரு நிகழ்வு (a phenomenon). எழுமாற்றாக ஒருவரிடம் கடந்த பத்துவருடங்களுக்குள் உருவாகி வந்த, திரிபடைந்த புதிய சொற்கள் குறைந்தது பத்தாவது தெரிந்திருக்கும். வசைச்சொற்கள் உட்பட. உதாரணத்திற்கு ’ஆத்தல்’ என்று ஒரு சொல் ஈழத்தில் உருவாகி வந்திருக்கிறது. போதைப்பொருட்களைப் பாவிப்பவர்கள் அதன் போதையையும், உச்சத்தையும் குறிப்பிட உருவாக்கிய சொல். இன்று சாதாரணமாக மகிழ்ச்சியைக் குறிக்க பயன்படுகிறது. இது கடந்த பத்து வருடங்களில் உருவாகிப் பயன்பாடு திரிந்த சொல். இன்றைக்கு அதைப் பயன்படுத்தும் பெரும்பான்மையினருக்கு அதன் நதிமூலம் தெரியாது. இச்செயன்முறை பண்பாட்டின் ஒரு பகுதிதான். முன்பு இலக்கியங்களும் இலக்கணங்களும் இவற்றை கொச்சை என்றோ, வசை என்றோ, தூஷணம் என்றோ தவிர்த்து விடும். பொதுப்புத்தியும் சராசரிகளும் கூட தங்களுடைய ஒழுக்கவாத சால்யாப்புகளை முன்னிட்டு இவற்றைக் கண்டவுடன் பதறத்தான் செய்வார்கள்.

தோறை  என்பது  இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புழங்கும் சொல்.  யாழ்ப்பாணத்தில் தோறை என்பது, துடுக்கான, வாயாடிப் பெண்களையும், பொதுப்புத்தியில் இருக்கக் கூடிய ஒழுக்க நியமங்களை மீறக்கூடிய பெண்களைச் சொல்லும் ஓர் வசைச்சொல். சில சமயங்களில் அதைச் செல்லமாகவும் அதைச்சொல்லிக் கூப்பிடுவதுண்டு. குறிப்பாக குழப்படிக்காரச் சிறுமிகளைக் கூட அப்படிக் கூப்பிடுவார்கள். எங்களுக்கு முந்தைய தலைமுறைகளிடம் இச்சொல்லின் அர்த்தங்களைக் கேட்டிருக்கிறேன். அதிலேயே நுட்பமான வேறுபாடுகள் அழுத்தங்களைக் காண முடிந்தது.  வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழில் பெண்களின் பாலியல் நடத்தை சார்ந்த  இழிவரல்களுக்காக  ’வேசை’ என்ற சொல்லே அதன் முழு அழுத்தத்தோடும் பயன்பாட்டில் இருக்கிறது. இச் சொல் முழுக்க முழுக்க பெண்ணின் பாலியல் நடத்தை சார்ந்த சொல்லாகும். அதுக்கு அடுத்தபடியாக தேவடியாள் என்ற சொல் உள்ளது. இச் சொல் தேவரடியார் மரபு பரத்தமையாகக் கருதப்படத் தொடங்கிய பிறகு திரிந்து அர்த்தம் கொண்டது. இலங்கையில் தேவரடியார்  மரபோடு ஒட்டியவர்கள் ஆடக்கூடிய ’சதிர்’ என்ற நடனத்தின் அடியாக பெண்களை சதிர் என்றோ ஆட்டக்காரி என்றோ இழிந்து சொல்லும் வழக்குண்டு. இந்த இரண்டு சொல்லாலும் குறிப்பிடப்படும்  அர்த்தம் வேசை அளவிற்கு அழுத்தப்படுவதல்ல. சமூக நியமங்களில் உள்ள பாலியல் ஒழுக்க மீறல்களைச் செய்யக் கூடியவள் என்ற அர்த்தப்படும். யாழ்ப்பாணத் தமிழில்  சதிர், ஆட்டக்காரி வரிசையில் இறுதியில் நிற்பதுதான் தோறை என்ற சொல்.   இந்த நுண்மையான அழுத்த – அர்த்த வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும். ஒரே பொருளிலும் அர்த்தத்திலும் வருமென்றால் மொழி இத்தனை சொற்களை  உருவாக்கி அளிக்காது.  ஒரு சொல் உருவாகி வர அதற்குப் பின்னால்  வரலாறும் பண்பாடும் இயங்க வேண்டும். அது விழுந்த மாட்டிற்கு குறிசுடும் செயலல்ல. 

தோறை என்ற சொல்லைக் கிழக்கில் விசாரித்த போது அது பெண்ணின் பாலியல் ஒழுக்கக் கேட்டைக் குறிக்கக் கூடிய ’கெட்ட வார்த்தையாக’ பயன்பாட்டில் உள்ளது என்று தெரிந்தது. வடக்கிலும் எங்களுக்கு முந்தைய ஓரிரு தலைமுறைகள் அதை கடும் அழுத்தத்தோடும் புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். நான் நடுத்தர வயதினரில் சிலரிடம் இந்த வகையான நிலைப்பாட்டை அவதானித்தேன்.  அப்படியே நேராக எனக்கினியோரான ஆச்சிகளிடமும் அப்புமாரிடமும் போனேன். அவர்கள் தங்கள் பேரக்குழந்தையைச் செல்லமாக ’செல்லத் தோறை’ என்று அழைத்தார்கள்.  மேலே பேச்சு வழக்குகளை ஒரு நிகழ்வு என்று அழைத்தேன். அவை மாறிக்கொண்டிருப்பவை. அர்த்தம் செறிவாக்கப்படவும்,  மாற்றப்படவும் கூடியவை. ஒரு சொல்லின் பேச்சு மொழி அர்த்தம் என்பது இடத்துக்கு இடம், சமூகத்திற்குச் சமூகம் மாறக்கூடியது. குறிப்பாக அதன் அர்த்தத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம்.  தோறைக்குரிய அர்த்தம் கடந்து இருபது வருடங்களுக்குள் அழுத்தம் பெற்றிருக்கிறது. மாறிக் கொண்டிருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரையில் கெட்ட வார்த்தை என்று ஒன்று இருக்குமானால் அது தனிநபரையோ, குழுவையோ ஒடுக்கக் கூடிய இழிந்து சொல்லக் கூடிய காயப்படுத்தக் கூடிய எந்தச் சொல்லாகவும் இருக்க முடியும். நாவினால் சுடும் எதுவும் கெட்ட வார்த்தைதான். இலக்கியத்திலும் புனைவிலும் பயன்படுத்தும் சொல் என்பது முழுக்க முழுக்க அந்தப் புனைவு சார்ந்தது. அதில் இருந்து அச்சொல்லை வெளியே எடுத்து வைத்தால் அது வெளியே என்ன பொருளில் என்ன பிரயோக சந்தர்ப்பத்தில், என்ன உணர்வு நிலையில்  பயன்படுகிறதோ அதன் அர்த்தம் மட்டுமே பெறும். ஏனெனில் மொழி நிரந்தரமான அர்த்தம் கொண்டதல்ல. அது குறியீடு மட்டுமே, பொருள் என்பது அதைப் பயன்படுத்தும் சூழல் ஏற்படுத்துவது. இலக்கியத்திலோ அறிவுச்சூழலிலோ இதுவும் பாலபாடமே. முகநூல் சாராசரிகளுக்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்க முடியாது.  விவாதிக்க இறங்கக் கூடாது. அது  தற்கொலை.

இந்த முரண்களுக்கு மத்தியில் எழுத்தாளன் தன்னுடைய மொழியைக் கையாள வேண்டியிருக்கிறது.  இலக்கியத்தின் மொழி என்பது நம்முடைய அன்றாட பேச்சில் உள்ள மொழியல்ல. அது மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழி. அதில் இருக்கும் பேச்சும் எழுத்தும் அந்தப் புனைவிற்குரிய மொழி மட்டுமே. நல்ல வாசகர்களுக்கு இந்தத் தெளிவு முக்கியம். அந்தப்புனைவு ஒவ்வொரு சொல்லையும் எவ்வாறு பொருள் கொள்கிறது என்பதை நல்ல வாசகர்கள் அதனோடு இசைந்து வாசிக்கிறார்கள். வட்டார வழக்குகள் இன்றைக்குச் சூழலில் அவ்வளவு கடினமாக இல்லை. பெரும்பாலும் இணையத்தளங்களில் தேடிப் பொருள் பிடித்துவிடலாம். ஆனால் அங்கே காண்பது மொழியின் பொது அர்த்தம் மட்டுமே என்ற  புரிதல் வேண்டும். பேச்சு வழக்கிலோ எழுத்து வழக்கிலோ அப்புனைவு நிகழும் நிலம், சூழல், பண்பாடு என்பவற்றோடு பாத்திரங்களின் குரல், இயல்பு என்று அனைத்தின் பின்னணியிலும் வைத்தே வாசிக்க வேண்டும்.  வாசிப்பு என்பது உழைப்பும்தான். 

தமிழில், உரைநடையில்  எழுதப்பட்டிருக்கின்றது என்பதற்காக இலக்கியம் எல்லோராலும் வாசிக்க முடியும். புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த சராசரி வசையாளர்கள் இலக்கியவாதிகளுடன் வம்புக்கு வருகிறார்கள்.  இலங்கையில் எங்கோ ஒரு பிரதேச செயலகத்தில் சீற்றுத் தேய்த்துக் கொண்டிருக்கும் குமாஸ்தா  விஞ்ஞானிகளுடன்  விவாதிக்கப் போகிறேன் அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள் என்று சொல்வது போன்றது இது. ஒரு துறையின் அடிப்படைகள் கூடத் தெரியாமல், அதை அறியும் உழைப்பைக் கொடுக்காமல் முழு நேரமும் முகநூலில் கோடை மாடு கடதாசிகளைத் தின்பது போல் முகநூலை மெய்ந்து கொண்டு அறிவுச்சூழலுடன்  வம்பிற்குச் செல்வது. கும்பலாகச் சேர்ந்து வசைபாடுவது, கேலி செய்வது. மூளைக்குள் மடிப்பு மடிப்பாக மலமுள்ளோர் செய்யும் செயல்களிவை. தோறை மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வசைகள்  இந்தச் சராசரிகளின் வழமையான வசைகள்தான். கல்லில் நாருரிக்கும் அவர்களுடைய அன்றாடம்.  நாவலை வாசிக்காமலே  இப்படிச் சொற்களைப் பிடித்துத் தொங்கும் சிறு மூளைகளை சர்கஸ் பார்ப்பதைப்போலப் பார்த்து விட்டு சிரித்து விட்டு வந்து விட வேண்டும். அவர்களிடம்  விவாத அடிப்படைகளை எதிர்பார்ப்பது நம்முடைய மடத்தனம். 

நன்றி

தோறை தடுப்பு – அசட்டுத்தனத்தின் அநீதி

புத்தகத்தடுப்பும் யாவாரமும் 

இடதுசாரி அரசாங்கமும் எழுத்தாளரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here