இரு உலகங்கள் | பழம்பாடல் 11

0
224

மதியம் மிதமான சாரல் மழை. குடையை எடுத்துக் கொண்டு வயல் பக்கம் சிறு நடை கிளம்பினேன். ஏற்கனவே கறுத்துக் கிடந்த மேகங்கள் இன்னும் இறங்கி வந்து பெருமழை ஒன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தன. வயல்களுக்கு நடுவிலிருந்த   சிறு குளங்கள் நிரம்பி வயல்களுக்கு ஏறிய  உபரி நீர் வெளியேறிச்செல்லும் வாய்க்காலில் நீரோடிக் கொண்டிருந்தது. வரம்புகளை வெட்டி தங்களின் வயல்களில் இருந்து மேலதிக நீரை வெளியேற்றும் ஓரிரு உருவங்களை தூரத்தில் காணக் கிடைத்தது. இலேசான மைமல் மழைப் புகாரில்  யார் எவர் என்று பிடிபடவில்லை. ஏழு  வண்ணத்தில் பெரிய குடையோடு செல்லும் என்னை அவர்கள் மட்டுப்பிடிக்கலாம். ஏனெனில் எங்களூரில் வயல் வெளிகளில் அகாலங்களில் திரிவது ’இன்னாற்ற பெடியன்’ என்று அவர்களுக்குத் தெரியும்.  குருவிக் காட்டுப்பக்கமாகத் திரும்பி வாய்க்கால் கரையைப் பிடித்து நடந்தேன்.  நிரம்பிய வரப்புக்கு மேலே தலைகாட்டிய இளம் நாற்றுக்கள் கடும் ஐதாக நின்றிருந்தன. இம்முறை கடும் வறட்சியும், அதன் பின்னர் வந்த பிழைத்த மழையும் பயிரில் தெரிந்தன. ஊர்க் கொக்குகளைக் காணவில்லை. நாரை வகையறாக்கள்  வாய்க்கால் கரைகளில் நத்தையோடுகளைக் குத்திக் கொண்டிருந்தன. ஊர்க்கொக்குகள் மழைபெய்து குளங்களின் மடிகளில் பெருகும் மீன் குஞ்சுகள் வாய்காலுக்கு வரும் போதுதான் அங்கே வந்தமரும். நடக்க நடக்க என்னுடைய செருப்பின் கீச்சொலி  முதலில் மறைந்தது.  அவ்வளவு நேரமும் குடைக்குக் கீழே கதகதப்புடன் இருந்த உடல் மெல்லக் குளிரத்தொடங்கியது. மேகங்களின் விம்மல்.   என்னை அறியாமலே ஓர் புன்னகை முகத்தில் வந்தமர்ந்தது.  நெஞ்சத்தகம் நகுவது அது. 

ஆளுருவங்கள் தெரியும் வயல்களைக் கடந்து வந்து விட்டேன். மழை பக்க வாட்டில் இலேசான காற்றோடு வலுத்துக் கொண்டிருந்தது. இடிமுழக்கம் ஒன்றுமில்லை. எங்கோ மையச்சூல் சுழன்று கொண்டிருக்கும் மேகத்தின்  விளிம்புகள் எனக்கு மேலே நின்று பொழிந்து கொண்டிருந்தன. இறங்கி நின்றாலும் கனமில்லாத மேகம்.  தூரத்துக்  காற்றழுத்தத்தின் வாற்பகுதி.  காதுமடல்கள் குளிர்ந்தன. சட்டென்று திரும்பிப்பார்த்தேன். பின்னால் தூர வானம் இன்னும் கறுத்து  இறங்கியிருந்தது. கொக்குகள் அகன்று விட்டன. மழைச்சத்தம் மறைந்து வெறும் காற்றுக் கூவலும் இருட்டும் அங்கே பரவிக்கொண்டிருந்தது.  குருவிக்காட்டுக்கும் கல்லுமூலை வயல்களுக்கும் நடுவில் பற்றைகளும், புதர்களும் மழைப்புகாருக்குள் மறைந்து கொண்டிருந்தன. அவற்றின் பச்சை எழுச்சிகள் கரைந்து நனைந்த  பழைய புகைப்படங்களைப் போலாகியிருந்தன. மனம் பதட்டமடைவதைக் கவனித்தேன். கவனித்தால் தான் அடங்கும். எனக்குப் பழக்கப்பட்டதுதான். எந்த இயற்கை நிகழ்விற்குள்ளும் தன்னந்தனியாக நிற்பதற்கு அசாதாரணமான மனப்பயிற்சி வேண்டும். சலிக்காத பெருகிச்செல்லும் இரசனையிருக்க வேண்டும். பெரிய மலைத்தொடர்களில், பாலை வெளிகளில்,  அடர்ந்த பெருங்காடுகளில்,  நடுக்கடலில்  எல்லாம் நிற்கும் போது ஏற்படும் பதட்டம். மனம் அங்கே எதைக் கண்டு அச்சமடைகிறது குழம்புகிறது என்றால் தன்னுடைய தனிமையையைக் கண்டு. இப் பேரியற்கையின் முன்னால் தான் ஒன்றுமே இல்லை, என்ற அகங்காரத்தின் அழிவிலும் நிகழும் பதட்டம். எனக்கு இயல்பிலேயே அளிக்கப்பட்டது அது. 

இயற்கை என்பது மாபெரும் தனிமையும் கூட.அது ஒரு ஒற்றைப் பெருநிகழ்வு அதன் மிகச்சிறுபகுதியில் வாழ்கிறோம். அதன் ஒரு பகுதி நாங்கள். என்னுடைய பதட்டத்தைக் கவனிப்பதாலும், அதை இன்னதென்று அறிந்திருப்பதாலும் மட்டும் அதை எதிர்கொள்ள முடியாது. எனக்கிருப்பது அவ்வளவு பெரிய பயிற்சி என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் எவ்வளவு நேரம்  அங்கே தனித்து இருக்க முடிகிறது என்று கவனிப்பேன். அதைக் கூட்டப்பார்ப்பேன். எனக்கு  இரண்டு வகையான மன அமைப்பு உண்டு, ஒன்று இப்படித்தனிமையை விரும்பக் கூடியது. இன்னொன்று  பதட்டமடைவது. இப்பொழுது பெரும்பங்கு பதட்டத்தைக் குறைத்து விட்டேன். ஒரு பிடி கிடைத்திருக்கிறது. ஒரு சமநிலை என்று சொல்வேன். ஏதோவொரு வகையில் மனம் இதை இயற்கையின் முன் வைத்தே சமநிலைப்படுத்திக் கொள்கிறது என்று தோன்றுவதுண்டு. இந்தச் சமநிலை இலக்கியத்தினால் எனக்குக் கிடைக்கப்பெற்றது. 

சில இயல்புகள் குருதியில் இருந்து உருவாகி வரக்கூடியவை. பிறப்பியல்புகள். உள்ளுணர்வு சார்ந்த, ஆழ் மன அமைப்பு சார்ந்த விசயங்கள்.  என்னுடைய பதட்டம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். நான் வயிற்றில் இருந்த நாட்கள்  போர்க்காலம். அம்மா கடுமையான அலைக்கழிப்புகளும் பதட்டமும் அடைந்திருக்கலாம்.  என்னுடைய பதட்டம் அங்கிருந்து வந்திருக்கலாம். தவிர பள்ளிக்கூட வயதில் மிகுந்த தாழ்வுணர்வு கொண்டவனாக இருந்தேன்.  எல்லோரிடமும் பழகமாட்டேன். பயப்படுவேன்.  விசித்திரம் என்னவென்றால் எவற்றுக்கெல்லாம் பயப்படுவேனோ அதை ஒரு முறை தொட்டுப்பார்த்துவிட்டால் அதைப் பிறரை விட வேகமாகக் கடந்து விடுவேன். என்றாலும் என்னுடைய தாழ்வுச்சிக்கல்  என் உயிரியல்பான பதட்டத்தின் மீது  உண்ணியைப் போல வாழ்ந்தது.  இன்றைக்கு மீட்டுப்பார்க்கும் போது அத்தாழ்வுணர்விலிருந்து தப்பிச் செல்லவே தனிமையை விரும்பியிருக்கிறேன்.  அம்மாவிடம் இருந்து  வாசிப்பு என்னிடம் வந்தது. அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். அது என்னை இன்னும் தனிமைப்படுத்தியது. 

பள்ளிக்காலங்களிலேயே பெரிய தடித்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு திரிவேன். ஒன்று அது ஒரு வித என்னளவிலான பந்தா, உண்மையில் அதனால் எந்த ’படமும்’ போட முடியாது. அது வெறும் எளிய ஆணவ நிறைவுதான். என்றாலும் என்னுடைய தாழ்வுணர்வை அது சரிசெய்தது. அறிவு அளிக்கக் கூடிய ஆணவத்தைச் எந்தச் செல்வமும் அளிக்க முடியாது. என்னுடன் அதன் பொருட்டே யாரும் சேர்வதில்லை என்பது அதற்கான முதன்மையான சமாதானம்.  அடுத்தது மெய்யாகவே  எனக்கு வாசிக்க பிடிக்கும். கதைகளில் என்னைப்போலில்லாத, பதட்டமும் தாழ்வுச்சிக்கலும் இல்லாத கதாநாயகர்களுடன் வாழ்ந்தேன். ஆரம்பத்தில் கொமிக்ஸ் புத்தகங்களில் வந்த ஆர்வம் அப்படி வந்ததுதான். டெக்ஸ் வில்லருடன்  அமெரிக்கப்  பாலை நிலங்களில் அலையும் ஒரு தேர்ந்த கெளபாயின் அனுபவம் எனக்கு அளிக்கப்பட்ட தாழ்வுச்சிக்கலும் தனிமையும் கொண்ட வாழ்வில் இருந்து என்னை மீட்டுத்தந்தது.  என்னுடைய நோய்கள் எதுவும் என்னைத் தீண்டாமல் கதைகள் குறுக்கே நின்றன. 

என்னுடன் பெரிதாக யாரும் சேர மாட்டார்கள் என்பது என்னுடைய அன்றாடம் என்றானது. எனக்கு நண்பர்களே மிகக் குறைவு. பள்ளிக்காலத்தில்  பரந்தன் இந்துவில் படிக்கும் போது யூட் சபின்சன் என்றொரு நண்பன் இருந்தான். அவனும் வாசிப்பான். இருவரும் சைக்கிளில் முரசுமொட்டை , விசுவமடு, கிளிநொச்சி நூலகங்களுக்கு மாறி மாறிச் சென்று கொண்டிருப்போம். குளங்கள், காடுக்கரைகளில் ’நல்ல சீனரியான’ இடங்களைத் தேடிச்செல்வோம். வெகுநேரம் அமர்ந்திருந்து கதைப்போம். கதைகளைப்பற்றி, புத்தகங்களைப் பற்றி,  சினிமாக்களைப் பற்றி எல்லாம் அவ்வளவு பேசுவோம்.  நாங்கள் பேசிப்பேசி மேம்படுத்தியதுதான் அன்றைக்கு எங்களுடைய இரசனையும் உலகமும். யூட்டிற்கு பயணங்களில் ஆர்வமும் கனவுமிருந்தது. இலங்கை முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும், மலைகளில் ஏற வேண்டும், அருவிகளிலும் ஆற்றிலும் விழுந்து குளிக்க வேண்டும்.  எங்கள் சிறுவயதில் இணையம் கிடையாது. தொலைக்காட்சிகளில் வரும் படங்களில் தமிழ்நாட்டையும், ஐரோப்பிய சீனரி உலகங்களையுமே பார்க்க முடியும். நாங்கள்முதலில் இந்தத் தீவைப் பார்க்க விரும்பினோம்.கதைகளில் வரும் தீவு. இதிகாசங்களில் வரும் தீவு.  நானும் யூட்டும் பள்ளிக்கூடத்தில் நூலகத்தில் அமர்ந்திருப்போம். விளையாடவோ, கண்டிப்புக்குறைந்த டீச்சர்கள் பாடங்களுக்கோ போவது அரிதினும் அரிதாகவிருக்கும்.  என்சைக்கிளொபீடியாக்கள் எனப்படும் கலைக்களஞ்சியங்கள் எங்களுக்குப் பிடித்தமானவை. பெரிய படங்களுடனும் விளக்கங்களுடன் இருக்கும். எதையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய உலகமது. பல்கலைக்கழகத்திலும் எனக்கு நண்பர்கள் மிகக் குறைவு. வகுப்பை விடப் பல்கலைக்கழக நூலகத்தில்தான் எப்பொழுதும் தனியே அமர்ந்திருப்பேன். இந்தத் தனிமை நானே எடுத்த முடிவுதான். என்னுடைய தெரிவுதான்.

இன்றைக்குத் தொகுத்துப் பார்க்கும் போது என்னுடைய உலகியல் வாழ்வு சார்ந்து எடுத்த முடிவுகளைக் காட்டிலும் இலக்கியம் சார்ந்து எடுத்த முடிவுகள் மட்டுமே சரியாக இருந்திருக்கின்றன. எனென்றால் அவை அனைத்துமே  உலகியல் வாழ்விற்கு, குறிப்பாக பொருளாதாரம், சம்பாத்தியம், உத்தியோகம், போன்றவை பற்றி பொதுச்சமூகம் நம்பும், விரும்பும் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் நேர் எதிரானவை. ஒருவகையில் என்னுடைய இயல்பை எனக்கு அளித்த ஊழே எடுத்த முடிவுகள் என்றே தோன்றுகிறது.

பாடப்புத்தகங்களை விட கதைப்புத்தகங்களை சார்ந்திருப்பது என்ற முடிவை,  இத்தனை பதட்டமும் தாழ்வுச்சிக்கலும் உள்ள சிறு பயல் தனித்து எடுத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. சாதாரண தரப் பரீட்சைகள் முடிந்து  உயர்தரத்திற்குப் போகும் போது   உயிரியல் பிரிவைச் தெரிவு செய்தேன்.  டொக்டர் ஆக வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து வகுப்புகளுக்குப் போகத்தொடங்கினேன். எனக்கு எல்லாம் புரிந்தது. இலகுவாக இருந்தது. நோட்ஸ்களை எப்படியோ சப்பித் தள்ளிவிடலாம். நினைத்தால் டொக்டர் ஆகி விடுவேன்.  போகங்களில் திளைக்கும் வாழ்வு. கொஞ்ச நாளிலேயே  அந்த இடம் என்னை மென்று வெளியே துப்பியது. எனக்கு தொடர்ந்து படிப்பேன் என்று தோன்றவில்லை. கடமைக்குச் செய்த எதையும் நான் ஒப்பேற்ற மாட்டேன். அம்மா தரும் பணத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இலக்கியம் படிக்க வேண்டும். அம்மாவிடம் சென்று சொன்னேன். ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. பாடம் மாற வேண்டும். கலைப்பிரிவிற்குப் போக வேண்டும். வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அம்மா என்னுடைய கண்ணில் அதைப் பார்த்திருப்பார். நான் மேலும் மேலும் தனிமையையே தேர்ந்தெடுத்தேன்.

திருக்குறளில்  ஊழ் என்ற அதிகாரத்தில் இரண்டு குறள்கள் இருக்கின்றன் அடுத்தடுத்த குறள்கள். குறளை வாசிக்கும் போது அவை எங்கே எதற்குப்  பிறகும் எதற்கு முதலும் வைக்கப்பட்டிருக்கின்றன என்று கவனிக்க வேண்டும். 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும் 

என்ற குறள் முதல் வருகிறது. எவ்வளவு நுட்பமாக நூல்கள் பலவற்றைக் கற்றிருந்தாலும், நம்முடைய உண்மையான அறிவே ’மிகும்’ என்கிறார் வள்ளுவர். மிகுதல்  என்பது இயல்பானதே எல்லாவற்றையும் மீறி வெளிப்படுதல்  என்று பொருள்படுத்திக் கொள்ளலாம்.  மெய்யறிவு என்பது எங்களுடைய இயல்பின், இயற்கைத் தன்மையின் அறிவாகும் என்று வள்ளுவர் சொல்வது நம்முடைய அகம் எதுவோ அதைத் தொட்டுப் பயின்று வெளிப்படுவது. நம்முடைய தன்னறம் இன்னதென்று கண்டடைவது.  எதில் நான் முழுமையாகவும் நிறைவோடும் வெளிப்படுகிறேன் என்பது.  அதைத் தேர்ந்தெடுக்கும் போது தனிமை நம்மைச் சூழ்கிறது. அதை நம்முடைய மரபில் ஏகாந்தம் என்கின்றனர். ஒருவர் மட்டும் எஞ்சுவது என்ற நேரடிப் பொருளும்,  மகிழ்ந்து நிறைந்திருப்பதற்கான குறியீட்டுப் பொருளும் இணைந்த சொல்.  கலை என்பது அகத்திலும் புறத்திலும் தனிமையேதான். இரண்டு வெவ்வேறு உலகங்கள்.  இரண்டிலும் வாழ வேண்டும். இந்த அன்ன உடல் வாழ்வதற்கு உணவும், இருப்பிடமும் வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் வேண்டும். நான் இங்கு பேசுவது வாழத்தேவையான பணத்தைப் பற்றியல்ல. செல்வத்தைப் பற்றியது.  உலகியலில் மட்டும் முழுவதும் பொருந்தியிருப்பவர்கள், அதன் பின்னால் ஓடலாம். அதில் வெல்லலாம். நிறைந்தோம் என்று சொல்லலாம். உண்மையில் அவ்வகை நிறைவுகளின் மேல் எனக்குச் சந்தேகம் உண்டு. முன்பு அதைக் கடுமையாகக் கேலி செய்வேன். ஒரு பெரும்பான்மைத் தவறு என்றும் துயரம் என்றும் சொல்வேன்.  இப்பொழுது அதைத் தெரிவு செய்பவர்களை அதில் முடிந்த வரை நிறைவாகவும் மகிழ்வோடும் கனவோடும் இருங்கள் என்றுதான் சொல்கிறேன். உலகியலை வெறுப்பது என்பது சக மனிதர்களை வெறுப்பதாக ஆகிவிடவே கூடாது.  

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு. 

செல்வத்துடையவராக ஆவதும், தெளிவாக சிந்திப்போராகவோ படைப்பவராகவோ ஆவதும்  வேறு வேறு உலகங்களின் இயற்கை நிலை என்பது பொருள். இவை இரண்டும் வெவ்வேறு உலகங்கள். இரண்டு வகை இயற்கை நிலைகள்.  வள்ளுவர் இக்குறளில் ஊழ் என்ற சொல்லைத் தவிர்த்து விடுகிறார். ஏனென்றால் சமண மரபில் ஊழுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு. வள்ளுவர் இயற்கை என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். தமிழில் இருக்கும் மிக அழகான, தத்துவார்ந்தும் கச்சிதமான சொல் இயற்கை. இயல்வது இயற்கை என்று பொருள் சொல்லலாம். 

என்னுடைய சிறு வயதில் இருந்து இந்த இரண்டு உலகங்களுக்கு இடையில் அலைந்தவர்க்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாசிப்பில் ஆர்வமாக வந்தவர்கள், ஆரம்பத்தில்  உருப்படியாக கவிதையோ, கதையோ எழுதியவர்கள் உண்டு.  பலர் வேலைக்குப் போனவுடன் எழுத்தை விட்டுவிட்டார்கள். வாசிப்பை மாமாங்கப் படுத்திக் கொண்டார்கள். கைவிட்டார்கள்.  சிலர் இலக்கியத்தில் இருக்கிறேன் என்று தங்களைத்தாங்களே  ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களில் காதலிலோ, திருமணத்திலோ வாசிப்பு, எழுத்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டவர்கள் உண்டு.  பொதுப்புத்தியில் அவர்கள் எல்லோரும் பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வை அடைந்தவர்கள்.  நடந்து போகும் போது குறுக்கே வந்தமரும் வண்ணத்தியை நின்று சில கணங்கள் பார்ப்பவர்கள், சமூகத்தின் புறநடைகள். உலகியலில் தோற்றுப்போனவர்கள். பொறுப்பற்றவர்கள்.

செல்வம் அல்லது உலகியலோடு உடன்போய்விடுவது  என்றைக்கும் நிறைவைத்தரும் என்று என்னால் நம்ப முடியவில்லை.  செல்வத்தின் இயல்பே நிறைவின்மைதான். அதற்கு ஏகாந்தம் தெரியாது. அது கடைசியில் அளிப்பது தனிமையை. அதிகாரத்திலோ,சோகுசிலோ அமர்ந்திருக்கும் தனிமை. நிறைவின்மையின் கொடும் தனிமை.  ஆன்மா தன்னை அறியும் விழைவைக் கொண்டது. அதற்கு தன்னுடைய அகப்பயணமே  வேண்டியது. 

நண்பன் யூட் ஒரு கட்டத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டான். அவனைப் போர் எல்லாம் முடிந்து வெகுநாட்களுக்குப்பிறகு சந்தித்த போது  வாகனங்களைப்  பற்றித் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான். இராட்சச டிப்பர்களை ஓடுபவனாக ஆகியிருந்தான். ’கெவி வெய்கிள் லைசென்ஸ்’ பெற்றுக்கொண்டதுதான் அவன் வாழ்நாளில் மிகப்பெரிய கனவும் நிறைவுமாகவிருந்தது. நூலகங்களுக்கு சைக்கிள் உளக்கிய நாட்களை அவனால் எங்கோ முகில்களுக்குள் இருக்கும் உலகத்தைப் பற்றிய தொன்மக்கதையைப் போலச் சொல்லிக் கொண்டிருந்தான். சில வேளைகளில் கொமிஸ்கள் கிடைத்தால் பிடிஎப் இல் படிப்பேன் என்று சொன்னான். அவனுக்கு நான் எழுத்தாளன் ஆனதில் மகிழ்விருந்தது. தான் வாசிப்பை விட்டதில் கவலையிருந்தது. தான் முயற்சித்தேன் என்றும் பொறுமையாக இருந்து வாசிக்க முடியவில்லை என்றான்.  ஒண்டையும் இரசிக்க முடியேல்லை, முந்தி கரிக்குருவி மாட்டுக்கு மேலை இருக்கிறதைக் கண்டால் அதிலையே நிண்டிடுவன். அது பறந்தால் பிறகுதான் நான் வெளிக்கிடுவன். இப்ப அப்பிடி இல்லை, வாகனம் கொண்டு போற இடமெல்லாம்,  நல்ல வடிவான இடங்கள். காடுகள், மலைகள், ஆறுகள் எல்லாம். ரெண்டு நிமிசம் லையிச்சுப் பாப்பன், நெஞ்செல்லாம் எதோ பிசையும், கண்ணை எடுத்திடுவன் என்றான். நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். சில வருடங்களுக்கு முதல் டிப்பர் விபத்தில் இறந்து போனான். அவன் இறக்கும் போது இரண்டு பேரும் முழுமையாக வெவ்வேறு உலகத்தவராக ஆகியிருந்தோம்.

பழம்பாடல் 01

பழம்பாடல் 02

பழம்பாடல் 03

பழம்பாடல் 04

பழம்பாடல் 05

பழம்பாடல் 06

பழம்பாடல் 07  

பழம்பாடல் 08

பழம்பாடல் 09

பழம்பாடல் 10`

இரு உலகங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here