அண்மையில் உரையாடல் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளில் உள்ள இலட்சியப் பாத்திரங்கள் உண்மையான மனிதர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்று அந்நூலிலேயே குறிப்பிடப்பட்டு இருப்பதனால் இந்நூலில் உள்ள கதைகளிற்கு இத்தனை ஆழமும் தகுதிப்பாடும் கிடைக்கப் பெறுகின்றனவா? என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அறம் தொகுப்பில் குறிப்பிடப்படும் மனிதர்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருப்பது அந்நூல் அளிக்கக் கூடிய மானுட குலத்தின் மேலான நம்பிக்கைக்கு மேலதிகமாக ஓர் அணிசெய்வதற்கு உதவுகிறது. அதே வேளை அதைக் குறிப்பிடா விட்டாலும் அதன் புனைவுத் தளத்திலும் தகுதியிலும் எந்தக் குறைபாடும் இருக்கப் போவதில்லை. அது உண்மை மனிதர்களைப் பற்றிய கதை என்றாலும் புனைவு என்ற வகையில் அதில் ஜெ வின் கையெழுத்து இடப்பட்டே இருக்கிறது. அவை மிகச்சிறந்த முறையில் கதையாக எழுதப்பட்டிருக்கவும் செய்கின்றன. அவற்றில் சிறுகதைகளுக்குரிய அழகியல் ஒருமை கூடி வந்திருக்கிறது. அது எல்லா நல்ல புனைவுகளைப் போலவும் தன்னை சந்தேகமின்றித் தகுதிப் படுத்திக் கொண்ட கதைகளைக் கொண்டது தான் என்று குறிப்பிட்டிருந்தேன்.
நவீன இலக்கியங்கள் மீது மட்டும் அல்ல பழந்தமிழ் இலக்கியங்களின் மீதும் இத்தகைய ‘உண்மை’ பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இக் கேள்வியில் இருக்கும் அடிப்படையான பிரச்சினை உண்மை அல்லது பொய் என்ற இரண்டு எதிர் நிலைகளும் மட்டுமே உள்ளன என்ற நம்பிக்கைதான். இலக்கியத்தில் கைவிட வேண்டிய பத்து மூட நம்பிக்கைகளில் முதன்மையாது இது. இலக்கியத்திற்குள் நுழைவதையும் வாசிப்பதையும் தடைசெய்யும் மிகப்பெரிய அடைப்பு. இலக்கியத்தைப் பொறுத்தவரை அங்குள்ளது ‘புனைவு உண்மை’ மட்டுமே. ஓர் இலக்கியத்தை வாசிக்கும் போது அது குறிப்பிடும் புனைவுக்களம் எங்கோ நிகழ்கிறது என்று எண்ணிப் பொருந்தும் வகையில் அதற்குள் சென்று வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை எழுத்தாளர் நமக்கு அளிக்கிறார் என்ற எண்ணத்தை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். கற்பனையால் அவர் அளிக்கும் வாழ்வை நாமும் வாழ்ந்து அறிவதே இலக்கியம். நம்முடைய பொது வாசிப்பில் இருக்கக் கூடிய மிகப்பெரிய இடர் என்ன வென்றால் தகவல் உண்மைகளை, புற யதார்த்தங்களைக் கொண்டு தங்களின் அன்றாடங்களைப் போல இலக்கியத்தை அணுகுவது. அவை மிகவும் புறவயமானவை. வெறுமனே அறிந்து கொள்ளக் கூடியவை. சிற்றுணர்வுகளின் தளத்தில் நிகழ்பவை. இலக்கியத்தில் இருக்கக் கூடிய உண்மைகளோ அகத்தின் ஆழத்திற்குச் சென்று சேர வேண்டியவை. அவ் உண்மைகள் தெரிந்து கொள்பவை அல்லாமல் உணரச் செய்பவை.

எங்களுடைய பள்ளிக்கூடத் தமிழ் இலக்கியப் பாடத்தில் கம்பருடைய தனிப்பாடல் ஒன்று இருந்தது. கம்பரமாயாணத்திற்கு வெளியே இருக்கக் கூடிய கம்பரின் முக்கியமான பாடல்களில் ஒன்றது. மோடெருமை வாவி புக…’ என்று தொடங்கும் பாடல். சோழ நாட்டின் திருவெண்ணை நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல், கம்பனை ஆதரித்தவர், அவருக்கு பொருளுதவி செய்து துணை நின்றவர். அவருடைய கொடைச்சிறப்பைப் பாடுவது அப்பாடலின் நோக்கம். எருமைகள் வாவிகளில் இறங்கிச் சேல்லும் போது அவற்றின் முலைக்காம்புகளை விரால் மீன்கள் கவ்வுகின்றன. அவற்றைத் தங்களுடைய கன்றுகள் என்று நினைத்து அவ் அன்னை எருமைகள் வீடுவரை பால் சொரிந்து செல்லும் வெண்ணை நல்லூர் என்று குறிப்பிடுகிறார், அப்படிப்பட்ட ஊரில் வாழும், பூட்டாத நெடிய கதவுகளையும் ‘அஞ்சாதே’ என்ற சொல்லும் கொண்டவர் சடையப்ப வள்ளல் என்கிறார் கம்பர். பள்ளிக்கூட நாட்களில் இப்பாடல் தந்த அதே உணர்வெழுச்சியை கொஞ்சமும் குறையாமல் இப்பொழுதும் இருக்கிறது. அப்பாடலில் உள்ள விரால் மீன்களைக் கன்றுகள் என்று நினைத்து வீடுவரை பால் சொரிந்து செல்லும் எருமைகள் என்ற சித்திரத்தில் துலங்கும் அழகும் அது கடத்தக் கூடிய உணர்வு நிலையும் அத்தகையது. கம்பராமாயணத்திலும் அங்காங்கே சடையப்ப வள்ளல் பற்றிய குறிப்பைக் கம்பர் இட்டுச்செல்கிறார். பால காண்டத்தில் வேள்விப்படலம் தொடங்கும் போது இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரரிடம் இருந்து படைக்கலங்களைப் பெறுகிறார்கள், அப்பொழுது
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே
என்கிறார் கம்பர். போருக்கு உரியது படைக்கலம். அதை மண்ணவர் வறுமையை நீக்கும்படியான சடையப்பவள்ளலில் சொல்லெனும் மருந்தைப் போன்றது என்கிறார். இராமனுடைய கையில் அளிக்கப்பட்ட பிறகு அப்படைக்கலம் கொல் கருவியல்ல, அது நோயைத் தீர்க்க வந்த மருந்து ஆகிவிடுகிறது என்று இதை வாசிக்க வேண்டும். இங்கே சடையப்ப வள்ளல் என்ற தன்னுடைய காலத்தில் வாழ்ந்த தன்னை ஆதரித்த வள்ளலின் சிறப்பையும் கம்பர் சேர்க்கிறார். அதாவது கம்பராமாயணத்திற்கு வெளியேயும் அறியப்பட்ட , ஓரு இலட்சியமான பாத்திரத்தைக் காவியத்தில் நிலைநிறுத்துகிறார். சொல்லப்போனால் காவிய நாயகனான இராமனுக்குரிய கொடைச்சிறப்பின் படிமமாக ஆகிறார் சடையப்ப வள்ளல்.
காவியங்களில் அவை நிகழ்ந்த காலத்தில் காவியங்களுக்கு வெளியே உள்ள அன்றாட உண்மைகள் எஞ்சுவது மிக அரிது, அவை காவியத்தினால் , இலக்கியத்தினால் தொட்டெடுக்கப்பட்டிருந்தாலோ, ஏதோவொரு வகையில் வரலாற்றுக் குறிப்புகளிலோ, கல்வெட்டிலோ காணப்பட்டாலோ அன்றி அவை நிலைப்பதில்லை. சொல்லப்போனால் நூறு கல்வெட்டில் பொறித்திருந்தாலும் இலக்கியத்தில் குறிப்பிடப்படாவிட்டால் கல்வெட்டாய்வாளர்களைத் தாண்டி மானுட நினைவில் நிலை நிற்க முடியாமல் போன அக்காலத்தை முழுதாண்ட பேரரசர்கள் கூட உள்ளனர். ஆனால் இலக்கியம் மெய் வாழ்வில் இருந்து ஒருவரைப் பொருட்டெனக் கருதும் என்றால், திருவெண்ணை நல்லூரில் இருக்கும் சிறு நிலப்பிரபுவான சடையப்ப வள்ளல் இதிகாச நாயகனான இராமனுக்கு அணுக்கமாக கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.
பழந்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல நவீன இலக்கியத்திற்கும் இதே ஆகிருதி உள்ளது. நவீன இலக்கியங்கள் கிட்டிய இறந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதால் அதனுள் நிகழும் உண்மையான மனிதர்கள், பற்றி ஓர் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை எழுது எழுத்தாளரின் சொந்த வாழ்கையும் இன்றைக்கு சேர்ந்தே கவனிக்கப்படுகிறது. வாசிக்கப்படுகிறது. இது நவீன இலக்கியத்தில் உருவாகி வந்த ஓர் இயல்பு. அது தவிர்க்க முடியாததுதான். என்றாலும் நல்ல இலக்கியத்தை எழுதக் கூடிய ஒரு படைப்பாளி உண்மையான மனிதர்களையோ களங்களையோ எடுத்தாண்டாலும் அதை வெறுமனே அக்களம் நிகழும் காலத்திற்குள் குறுக்கி விடுவதில்லை. அது உண்மைச் சம்பவம் என்ற செய்தி மறைந்து போன காலத்திலும், அறியப்படாத வாசிப்பிலும் கொஞ்சமும் அதன் புனைவின் நோக்கமும் அழகும் குறையா வண்ணமே எழுதி அளிக்கிறார். ஓர் இலட்சியமான பாத்திரம் இன்னார் என்ற தகவல்கள் தெரியாமலே அந்த புனைவின் காலத்தினுள்ளும் தர்க்கத்தினுள்ளும் நிகழ்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள் தாம் உருவாக்கும் புனைவு வெளிகளில் அப்புனைவு எழுதப்படும் காலத்தைச் சேர்ந்த உண்மை மனிதர்களைக் கொண்டு வரும் போதும் அவர்கள் மெய்யாகவே நிகழ்ந்தார்களா இல்லையா என்ற விடயத்தைப் பொருட்படுத்துவதில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில், அரசர்கள், இராணிகள், வீரர்கள், முனிவர்கள், வள்ளல்கள், அறிஞர்கள், கவிஞர்கள், அன்னையர் என அக்காலத்தில் வாழ்ந்த பலரும் பாத்திரங்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த இலக்கியங்களுக்கு வெளியே வரலாற்று ஆதாரங்கள் மூலமும், செவிவழிச் செய்திகள் மூலமும் அவர்கள் மெய்யுலகில் நிகழ்ந்ததை அறிகிறோம். சில சமயங்களில் கதைகளும் காவியங்களும் உருவாக்கி அளித்த பல பாத்திரங்கள் மெய்யுலகில் நிகழ்ந்தவர்கள் என்ற நம்பிக்கையாக தொன்மங்களாகவும் மாறியிருக்கிறார்கள். அது நிகழ்வது இலக்கியத்தில் சாதாரணமானதுதான். ஏனென்றால் இலக்கியத்தினுடைய நோக்கம், வரலாற்றை எழுதுவதோ, சாதாரண உலகுண்மைகளைப் பதிவு செய்வதோ அல்ல.
ஒரு மொழியில் நிகழும் மிகப்பெரிய பண்பாட்டு நிகழ்வான காவியங்களில் நிகழும் பாத்திரங்கள் எளிய அன்றாட உலகியல் உண்மைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு செறிந்த காவிய உண்மைக்குள் வைக்கப்படுகிறார்கள்.நாவலிலோ சிறுகதைகளிலோ கவிதைகளிலோ கூட இதுதான் நிகழ்கிறது. அறம் தொகுப்பில் உள்ள புகழ் பெற்ற ’சோற்றுக் கணக்கு’ கதையில் வரும் கேத்தல் சாஹிப்பும் சரி ,கம்பருடைய சடையப்ப வள்ளலும் சரி புனைவுக்குள் வரும் போது காவிய கர்த்தனின், எழுத்தாளனின் மந்திரக் கோலால் தொடப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய காலத்தில் இருந்தும் அன்றாடத்தில் இருந்தும், எளிய உண்மைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். எழுத்தாளனுக்கும் காவிய கர்த்தனுக்கும் அவர்கள் அறியப்பட்டவர்கள், பிரியமானவர்கள் என்றே இருந்தாலும் இலக்கியம் அச்சிற்றுணர்வுகளைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. அது அப்பாத்திரங்களின் மூலம் நிறுவத்தக்க மாபெரும் இலட்சியங்களையும், விழுமியங்களையுமே பெரிதென்று கருதுகிறது. ஏனென்றால் தனிமானுடர்களில் திரட்டி எடுக்கப்படும் விழுமியங்கள், நீதியுணர்வு போன்றவற்றின் பெருவடிவமான அறமே காவியத்தின், கதையின் முதன்மை நோக்கம். என்றைக்கும் உள்ள உண்மைகளைத், தத்துவமாக செறிவாக்கப்பட்டதை, வரலாற்றின் மாபெரும் பெருக்கை கற்பனையைக் கொண்டு விசாரித்து அறிவது காவியத்தின்; இலக்கியத்தின் அடிப்படை. அது எளிய உண்மைகளைச் செறிவாக்கி உன்னதமாக்கல் (sublimation) மூலம் வெய்யோனின் கரங்கள் நீரை ஒடுக்கி மேகமாக ஆக்குவதைப் போல முழு உண்மையாக ( The Truth) ஆக மாற்றி உச்சத்தில் நிறுத்துகிறது. ஆதலால் மேகமாக உள்ள ஒன்று முன்பு ஆறாக இருந்ததா கிணறாக இருந்ததா என்ற வாதங்கள் பொருளற்றதாகிவிடுகின்றன.
உண்மை என்ற மேகம் | காவிய வாசிப்பு 06


