சமூக ஊடகங்கள், இதழியல் இரண்டிற்கும் இடையில் இருந்த மெல்லிய கோடும் ஏறக் குறைய அழிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் பத்திரிக்கையும், வானொலியும், தொலைக்காட்சியும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களை எதிரொலித்தே இயங்க ஆரம்பித்து விட்டன. 2013 இல் ஊடகவியல் கற்கையே என்னுடைய உயர் கல்வியின் தொடக்கம். பத்திரிக்கையாளராகவும், உதவி ஆசிரியராகவும் வெகுசன வார இதழ்களில் பணியாற்றி இருக்கிறேன். அப்பொழுது இருந்த சில பிரச்சினைகளுக்கான செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்கு எனக்கொரு புனைபெயர் தேவைப்பட்டது. அப்படி வைத்துக் கொண்டதுதான். யதார்த்தன் என்ற புனைபெயரும். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தின் ஒரு பகுதியாகவே ஊடகத்துறைக்கு வந்தேன்.
நாங்கள் பணியில் இருந்த காலத்திலேயே ஒரு செய்தியை குறைந்தது மூன்று ‘மூலங்களால்’ (sources) உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை ஊடகவியல் அறம் கைவிடப்படத் தொடங்கியாயிற்று. அப்பொழுது பொய்ச் செய்திகளை, அபாசங்களை, அடுத்தவர் அந்தரங்கங்களை, வன்முறையை, அவதூறுகளை கொண்ட செய்திகளை வழங்கும் இணையத்தளங்கள் ஒரு சிலவே பிரபலமாக இருந்தன. வெகுசன இதழ்களின் உத்தியோக பூர்வமான தளங்கள் மட்டும் இணையத்தில் செய்திகளை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் பிரசுரித்தன. அந்தக் கோட்டையும் நாட்கள் வேகமாக அழித்தொழித்தன. ஒரு கட்டத்தில் ஊடகவியல் கடும் ஒவ்வாமையைத் தர ஆரம்பித்தது. அதில் இருந்து என்னை முழுதும் விலக்கிக் கொண்டேன். இலக்கியம் வேறு ஊடகவியல் வேறு என்று அறிந்து கொண்டேன். எழுதப்படுவது எல்லாம் இலக்கியம் என்பது பழைய மூட நம்பிக்கை. முதலில் ஊடகவியலில் இருந்தும் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறினேன். என்னுடைய வாழ்கையில், எழுதும் மொழியில் சிந்திக்கும் முறையில் ஒவ்வொன்றாக மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. முழுக்க முழுக்க இலக்கியத்திற்கு என்னை அளிக்க முடிந்தது. நிறைவை அன்றாடம் பயின்று எய்த முடிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு. மாலையில் காற்றும் மழை விட்டு இலேசான தூறலும் இருந்தது. நானும் தம்பியும் பொருட்கள் வாங்க வெளியே கிளம்பினோம். அம்மா இந்தப் புயல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் முழு நாட்டையும் அழிவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். நாள் முழுக்க அங்கே வெள்ளம், இங்க சரிவு, இத்தனை பேர் செத்தது, கெலியிலை போய் மீட்டது, இந்தியா உதவிக்கு வந்தது, ஆறு இப்பிடி பாயுது, புயல் இப்படி வரும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் புறபட்ட போது யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் தான் அதிக பாதிப்பாம் போகாதீர்கள் என்றார். வழமையாக அன்னைக்கு இருக்கும் அதே கரிசனையோடு இத்தனை வருடம் வாழ்ந்து புழங்கிய ஊரைப் பற்றி ஓர் பூதம் வாழ்கிறதான குரல் அவரிடம் வெளிப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நதிகள் கிடையாது. பெரிய குளங்கள் கிடையாது. மூன்று பக்கமும் கடலுக்குத் திறந்து கிடக்கிறது. நடுவில் நீரைக் கடலில் சேர்க்க தொண்டமானாற்றையும், நாவற்குழியையும் தொட்டுக் கொண்டு நீண்ட தரவை நீர்ப்பரப்பு உள்ளது. முன்னை விட இப்பொழுது பாசன திட்டங்களை மேம்படுத்தி இருந்தார்கள். சகட்டு மேனிக்கு யாழ்ப்பாண நகரத்தார் கட்டடங்கள் கட்டியும், இருந்த குளங்களை கபழீகரம் செய்தும் கூப்பிடு தூரத்தில் கடல் இருந்தாலும் வெள்ளத்தில் மிதக்கும் வேடிக்கை தவிர யாழ்ப்பாணத்தின் கிராமங்களுக்கு வெள்ளப் பெருக்கோ, பெரும் உயிராபத்துக்களோ ஒப்பீட்டளவில் குறைவு. மரங்களோ, மின் கம்பங்களோ பாறி விழலாம். அன்றாட முன்னெச்சிரிக்கையை தவிர அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.
நண்பர் ஒருவர் வானிலைக்குரிய செயலி ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கடி புயல் வரும் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கிரிக்கட் போட்டியை போல் அதற்கு ரன்னிங் கமென்ரி வேறு. ஒரு கட்டத்தில் எரிச்சலாகி ‘ என்ன செய்ய உத்தேசம் புயல் வந்தவுடன் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடிப்பீர்களா ? என்று கேட்டேன். ஓர் ஆற்றுப்படுக்கையிலோ குளக்கரையிலோ மலைச்சரிவிலோ வசிக்கும் ஒருவருக்கு இவ்வளவு பதட்டம் இருப்பதில் நியாயம் இருக்கிறது. புத்தூர் சந்தியில் நின்று கொண்டு உமக்கு என்னய்யா பிரச்சினை ? என்று கேட்டேன்.எனக்கு இவர்கள் அடையும் பதட்டத்தை, இந்தச் செய்திகளை நிமிடத்துக்கு ஒரு முறை சொடுக்கி சொடுக்கி பார்த்து புல் மேய்வது போல் மேயும் உளநிலையை கண்டு பொறுக்க முடியவில்லை. அதில் இயல்பான ஏதோ ஒன்று இல்லை என்று தோன்றியது. புயலோ மழையோ நமக்கு அதை எதிர் கொள்வதில் ஓர் எல்லையுண்டு அல்லவா. அதற்குரிய அன்றாட நடைமுறைகள், கடந்த கால அனுபவங்கள் உண்டல்லவா, வாலை அறுத்துக் கொண்ட தாவும் விலங்கைப் போல் ஆகுமளவிற்கு என்ன நிகழ்ந்தது என்று பார்க்க விரும்பினேன். இவை எல்லாம் நிகழ்வது வலைத்தளங்களில். அங்கிருந்துதான் இந்தத் தொற்றுப் பரவிக் கொண்டிருந்தது. இங்கே மலைகளும், ஆறுகளும், பெருங் குளங்களும் இருக்கும் இடங்களுக்கு உண்டான பயத்தையும் கற்பனையையும் சமூக வலைத்தளங்கள் வழங்கி விடுகின்றன. முழுக்க முழுக்க எதிர் மறை உணர்வையும், கொப்பளத்தை பலூன் என்று விற்கும் இடங்களாக மாறி விட்டன. அம்மா மட்டுமல்ல வெளிநாட்டு வெளியூர் நண்பர்களும் அக்கறையாக விசாரிக்கும் போது நான் மழையை பார்துக் கொண்டு தேனீர் அருந்திக் கொண்டே இவ்வாறு யோசித்தேன்.
இந்தத் தீவு காணும் முதலாவது இயற்கை அனர்த்தமா இது? இந்த சமூகவலைத் தளங்கள் வருவதற்கு முன்பு வானொலியும் தொலைக்காட்சியும் இருந்த காலத்தில், அல்லது தொலைக்காட்சி கூட இல்லாமல் கடித்துக் கடித்து பாவித்த பற்றறி வானோலிகளின் காலத்தில் இயற்கை பேரிடரே வந்ததில்லையா? 2004 இல் சுனாமி வந்த போது மக்கள் முழுவதும் கைவிடப்பட்டனரா. இத்தனை பதட்டம் ஒவ்வொருவருக்கும் வந்ததா? யுத்தம் தாண்டவமாடிய காலத்தில் வன்னியில் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தோம். இத்தனை பதட்டத்தைக் கண்டதில்லை.
அப்பொழுது இருந்த பதட்டத்திற்கும் இப்பொழுது உள்ள பதட்டத்திற்கும் ஓர் வேறு பாட்டை உணர்கிறேன். அருகில் இருப்பவர், உறவினர் பற்றிய பதட்டம் அது. அதற்குரிய கட்டமைப்பும் உளத்தொடர்பும் இருந்தது. தனியன்களாக ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த பதட்டமும் பயமுமே இருந்தன. சொல்லப்போனால் தங்களின் ஊரினோடும் சுற்றத்தோடும் இணைந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியுமாக இருந்தது. எத்துயரிலுமோர் நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் தொடர்பில் இருக்க முடியும் என்றும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் இத்தனை வசதிகளும் நவீன கருவிகளும் இருந்தும், பாதுகாப்பு வசதிகள் இருந்தும் நம்முடைய பதட்டமும் பயமும் மிகவும் தனிப்பட்டதாக இருப்பது போல் தோன்றுகிறது. அளவுக்கு அதிகமாக நாம் அச்சுறுத்தப்படுகிறோம். கற்பனை செய்து கொள்கிறோம். எதிர்மறையுணர்வினால் வரலாற்றில் எந்தக்காலத்தை விடவும் தற்காலத்தில் மிக மோசமாகத் தனித்து விடப்பட்டவர்களைப் போலாகி விட்டிருக்கிறோம்.
சமூக வலைத்தளங்கள் நேரத்தை விரயப்படுத்துகின்றன, தேவையில்லா தகவல்களை தலைக்குள் கொட்டுகின்றன. என்றைக்கும் முடிவுறாத வெற்று ஆணவங்களும், அன்றாட அரசியலும் கொஞ்சமும் அறிவோ நாகரீகமோ இல்லாமல் மோதிக்கொள்ளும் ‘விவாதங்கள்’ குறுக்கிடுகின்றன என்பதாலும் இச்செய்தி மழையின் நஞ்சை எதிர் கொள்ள கூடாது என்றும் அவற்றில் இருந்தும் விலகியது சரி என்று இச்சம்பவத்தோடு இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன். சென்றவாரம் வாசித்து முடித்த புத்தகம் ஒன்றுடன் இவ்வெண்ணங்கள் சென்று பொருந்தின. அறிவியல் பூர்வமாக மானுட குல வரலாற்றை அணுகி நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் அந் நூலை வாசித்தது தற்செயல் என்று சொல்ல முடியவில்லை. எந்த நல்ல நூலும் நமக்கெனக் காத்திருப்பவைதான்.
ருட்கர் பிரெக்மன் 37 வயதே ஆகும் நெதர்லாந்து எழுத்தாளர்/ ஆய்வாளர். அவருடைய மனித குலம் :ஓர் நம்பிக்கையூட்டும் வரலாறு தமிழில் நாகலட்சுமி சண்முகத்தின் நல்ல மொழி பெயர்ப்பில் கிடைக்கிறது. யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் பெரும்பாலானோர் வாசித்து இருப்பீர்கள். முற்றிலும் மானுட வரலாற்றை எதிர் மறையாக அணுகும் நூலது. தனிப்பட்டு எனக்கு மானுட குலத்தை எதிர் மறையாக மட்டும் அணுகுதல் மீது ஒவ்வாமையே இருக்கிறது. ருட்கர் முழுமையாகவே மானுட குலத்தை அறிவியல் தரவுகளுடன் நம்பிக்கையுடன் அணுகுகிறார். மனித குலத்தை நஞ்சாக்கும் எதிர்மறையாக்கும் முதல் விடயமாக நவீன காலத்தில் இருப்பவை ஊடகங்கள் என்பதில் இருந்துதான் தன் ஆதாரங்களையும் வரலாற்று எழுத்தையும் முடுக்கிச் செல்கிறார். அவர் சமூக ஊடகங்களைச் சாடி நம்முடைய மானுட குலம் ஏன் எதிர்மறையான செய்திகளுக்கே ஒப்பீட்டளவில் முக்கியம் குடுக்கிறது என்று விரிவாக உளவியல், சமூகவியல் தர்க்கங்களை தரவுகளின் ஊடாக முற்றிலும் அறிவியல் பூர்வமாக முன் வைக்கிறார். ஓரிடத்தில்
நாம் ஏன் மோசமான செய்திகளின் மீது அதிக நாட்டம் கொள்கிறோம்? அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், மக்கள் பொதுவாக நல்ல விஷயங்களைவிட மோசமான விஷயங்கள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் வேட்டையாடிகளாக இருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு நச்சுச் சிலந்தியையோ அல்லது பாம்பையோ குறித்து அதிக எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது நாம் உயிர் பிழைத்திருப்பதற்கு இன்றியமையாததாக இருந்தது. அளவுக்கதிகமான எச்சரிக்கையுணர்வால் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் தேவைக்குக் குறைவான எச்சரிக்கையுணர்வு உங்களுக்குப் பேராபத்தாக அமையக்கூடும்.
இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்த எடுத்துக் காட்டுகளை நம்மால் எளிதில் நினைவுகூர முடிந்தால், அவ்விஷயம் பரவலானது என்று நாம் அனுமானிக்கிறோம். விமான விபத்துகள், பிள்ளை பிடிப்பவர்கள், கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றிய பயங்கரமான செய்திகள் தினமும் நம்மீது திணிக்கப்படும்போது, அவை நம் மனத்தில் ஆழமாகப் பதிந்து, உலகத்தைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடும். என்கிறார். அப்படித்தான் இந்த இயற்கை அனர்த்தங்களும் ‘ என்கிறார்.
சமூக வலைத் தளங்களின் முதலாளிகளுக்கு எதிர்மறை விசயங்களே வருமானம். நாம் விற்கப்படுகிறோம். தங்களுக்கு ஏற்றபடி இயங்கும் சேர்கஸ் விலங்குகளைப் போல. முன்பு அடிமைகளுக்கு தாம் அடிமைகளாக இருப்பதே நம் விதி என்ற நம்பிக்கை புகட்டப்பட்டது. நமக்கோ பகுத்தறிவு தரப்பட்டு இருக்கிறது. ஏன் சிலதை நாம் அதை அறிந்தும் இருக்கிறோம். நாம் ஏதேனும் ஒரு பொருளைத் தேடினால், ஏன் தொலை பேசுக்கு கேட்கும் தூரத்தில் பேசினாலே சமூக வலைத்தளம் அது தொடர்பான விளம்பரத்தைக் காட்டுவதை பகடியாக்கிக் கொண்டு ‘மார்க் மாமாக்கு தெரிந்து விட்டது பார் ‘ என்று மீம் போட்டுக் கொண்டிருக்கிறோம். நம் அந்தரங்கம் உளவு பார்க்கப்படுவதை சாதாரணப்படுத்திக் கொண்ட தலைமுறை நாங்கள் தான். ஓர் விடுதியில் நிர்வாண நடனமாடுவதைத் தொழிலாகக் கொண்ட பெண் அவ்விடுதி சிப்பந்தி அவள் உடை மாற்றும் போது ஒளிந்திருந்து பார்த்ததை விடுதி மேலாளரிடம் கண்டிக்கிறாள் அவரோ அவளை நக்கலாக எதிர் கொண்டு அதனால் என்ன இப்பொழுது குறைந்து விட்டது என்றாராம். அதற்கு அவள் ‘அச்சிப்பந்தியின் மறைந்திருந்து பார்க்கும் அற்பத்தனத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பொருமினாள்’ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது இந்தக் கதை நினைவில் வந்தது.
சமூக வலைத்தளங்களை ஆக்க பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அனர்த்தங்களில் அப்படி நிகழ்ந்தும் உள்ளன. உதவி தேவைப்படுவோர் அதில் தொடர்பு கொண்டனர். நிவாரண உதவிகள் கிடைத்தன. என்றெல்லாம் வாதங்கள் சொல்லப்பட்டன. சரிதான். ஆனால் நூற்றுக்கு 90 வீதமானவர்கள் சமூக வலைத்தளத்தால் அன்றி தம் சுற்றத்தாலும் அவ்வூரில் உள்ள அமைப்புகளாலும் அரசாங்க பொறிமுறைகளாலும் காப்பாற்றப்படுகின்றனர். சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்தில் காப்பாற்றப்பட்டதைப் போலவே. நாம் எல்லாம் அவற்றை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பதாலும் நான்கு கருத்தும், இரண்டு பிரார்த்தனைப் பதிவும், நன்றியறிதலையும் பகிர்ந்து விட்டு நாமும் அந்த காரியத்தில் பங்குள்ளவர்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் களத்தில் 10 % பேரே நிற்கிறார்கள். அவ்வளவும் போதுமானதும் கூட. நான் நடைமுறைக்கோ அதில் இயங்கும் நல்லெண்ணத்திற்கோ, வழிப்புணர்விற்கோ எதிராக நிற்கவில்லை. அங்குள்ள அறியாமைக்கும் எதிர்மறை உணர்விற்கும் நாம் விற்கப்படுவதற்கும் எதிராக நிற்கிறேன். நாம் ஒன்றாக நிற்க வேண்டும். உதவ வேண்டும். இடர் காலங்களில் நம் சுற்றத்தைப் பார்த்தாலே போதுமாக இருக்கும். நமக்கு ஓர் எல்லை உள்ளது என்பதையும் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றையும் விற்கவும் பெருப்பித்து நம்மை எதிர் மன நிலையில், நம்பிக்கை இன்மையில் கசப்பில் வைத்திருப்பதற்காகவே வடிவமைக்கப் பட்டவை என்பதையும் உணர வேண்டும் என்கிறேன்.
மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருவெள்ளம். அதன் வழிகள் நீரினால் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பும் மின்சாரமும் இருக்க வில்லை. சமூக வலைத்தளங்கள் முல்லைத்தீவை உலகம் கைவிட்டது என்று பரபரக்க ஆரம்பித்தன. அரச அதிகாரிகள் தொடர்பில்லாமல் வீட்டில் முடங்கி உள்ளார்கள். வைத்திய சாலைகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன என்று வலைத்தள வாசிகளும் ஊடகங்களும் பரப்பினர்.
அத்தனை பதட்டம் தொற்றிக் கொண்டது. நான் மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் குமணனைத் தொடர்பு கொண்டேன். என்ன நிலவரம் என்று கேட்டேன். தொடர்பு எடுத்து விட்டு சொல்கிறேன் என்றார். அன்றிரவே தொடர்பு கரண்டும் போனும் தான் இல்லை அரசாங்க அனர்த்த நிர்வாகப் பிரிவு நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தி இருந்தது. குளங்கள் வான் பாய்ந்ததாலும் திறக்கப்பட்டதாலும் அதன் வழித்தடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். பொதுமக்களும் இளைஞர்களும் களத்தில் நின்றிருக்கிறார்கள். அது அப்படித்தான் நிகழும். அப்படித்தான் நிகழ்ந்து வந்தது. அதைத்தான் நாம் வரலாறு என்கிறோம். மின்சாரமும் தொலைபேசியும் இல்லை என்றால் வரலாறு நின்று விடுவதில்லை. மானுட விழுமியங்கள் அற்றுப் போவதில்லை. தோழமை ஒழிந்து போவதில்லை நம்பிக்கை இழக்கப்படுவதில்லை.
நண்பர்களே ஒரு யோசனை சொல்கிறேன். சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுங்கள். குறிப்பிட்ட காலத்துக்கு. உலகத்திற்கு வாருங்கள் சுற்றத்துடன் இருங்கள். அவர்களுடன் புறணி பேசுங்கள், உலக நடப்பை தெரிந்து கொள்ள அன்றாடம் வரும் செய்தி குப்பைகளைக் கொட்டுவதற்குப் பதிலாக வார இறுதி நாட்களில் வரும் செய்தி கட்டுரைகளை வாசியுங்கள் தொகுத்து அளிக்கப்படும் கட்டுரைகள் அன்றாட செய்திகளை விட எவ்வளவோ மேம்பட்டவை. தொடர்பு என்பது அடிப்படையில் மற்றவர்தான். அவரைக் கவனியுங்கள் கதையுங்கள். பொழுது போக்கிற்கு என்ன செய்வது என்று கேட்காதீர்கள். இந்த நூற்றாண்டில் வாழும் ஓர் அபத்தம் அந்தச் சொல். பொழுதை வாழ்க்கை போக்குவதற்கு அளிக்கவில்லை. வாழ்வதற்கு, வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கும் அளித்தது. கேளிக்கை வாழ்கையின் நோக்கமாக இருக்க முடியாதது. அது சலிப்பில் சென்று முடிவது. சாரமற்றது.
நீங்கள் எங்கோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, வீட்டை இழந்தவருக்கு, உறவை இழந்தவருக்கு, வெள்ளம் சூழ்ந்த தன் வீட்டின் கூரையில் திகைத்துப் போய் நிற்பவருக்கு உதவ நினைத்தா,ல் மெய்யாகவே அவருக்காக பிரார்த்திக்க விரும்பினால் அதைச் செய்ய விரும்புங்கள். மூதன்னை அவ்வை ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். அதை விரும்புங்கள். அதுதான் முதல் அடி. உங்களுடைய உதவி எவ்வழியிலோ போய்ச் சேரும். உங்கள் பிரார்த்தனை பலனளிக்கும். நம்புங்கள். இத்தனை ஆயிரம் வருடங்கள் மானுட குலத்திற்கு அதுதான் நிகழ்ந்து வருகிறது. இவ்வளவு பலவீனமான ஓர் அற்ப உயிர்கள் நாங்கள்; இந்தப் பூமியின் மையமாக மாறியது அப்படித்தான். வாழ்க்கை நம் கையிலே நிகழும் அற்புதமேதான்.
இந்தக் கட்டுரைய எழுதிக் கொண்டே வீட்டில் இருந்து புறப்பட்டு வயல் வெளிக்குப் போனேன். வாய்க்காலில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. பயிர்கள் எழுந்து ஆடிக் கொண்டிருந்தன. கொக்குகளும் , நாரைகளும் நீர்க்காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. கரிக்குருவி ஒன்று பூவரசங் கொப்பில் இருந்து தன்னை உலர்த்திக் கொண்டிருந்தது.



