யாழ்ப்பாணத் தமிழில் காதலிப்பதை ‘கதைக்கிற’ என்றுதான் சொல்வோம். உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எனக்கொரு சினேகிதன் இருந்தான். என்னை விட உணர்ச்சி வசப்படும் ஒருவனை அவனில்தான் முதலில் சந்தித்தேன். அவனொரு பெண்ணுடன் கதைத்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நாட்கள் அந்தப் பெண்ணும் அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அப்பெண் இவனைப்போலில்லை, கொஞ்சம் பக்குவமும் சூட்டிகையுமானவள். இவர்களின் கதை தொடங்கி ஓரிரு மாதங்களிலேயே அந்தப் பெண் இவனைத் தவிர்க்கத் தொடங்கினாள். இவன் எங்களிடம் புலம்பத் தொடங்கினான். ஒரு நாள் அவளுடன் பேசிப்பார்க்கப் போகிறேன் துணைக்கு வாருங்கள் என்று என்னையும் இன்னொரு நண்பனையும் அழைத்தான். சரியென்று போனோம். அந்தப்பெண் டியூசனுக்குப் போய் வரும் வழியில் அவளை மறித்து நியாயம் கேட்பது என்பதுதான் அவனுடைய எளிமையான திட்டம். டியூசன் விட்டதும் வழமையாக இவர்கள் கண்டு கொள்ளும் ஒழுங்கை வளைவில் எங்களை நூற்றியொரு அடி பின்னால் நிறுத்தி விட்டு இறங்கிப் போனான். அவள் முன் போய் நின்றான். அவள் அவனையும் எங்களையும் கண்டுவிட்டாள். எந்தச் சலனமும் இல்லாமல் அடுத்த காட்சிகளை ஏற்கனவே மனப்பாடம் செய்தவள் போன்ற பாவத்துடன் நடந்து வந்தாள். இவன் அவள் பேரைச் சொல்லி விழித்து, ’நில்லும் உம்மோட கதைக்கோணும்’ என்றான். அவள் ‘தலையால் மறுத்து விட்டு’ கதைக்க ஒண்டுமில்லை, ரோட்டிலை மரியாதை கெடுத்தாமப் போம்’ என்று சினந்தாள். நாங்களும் ஏற்கனவே அதை எதிர்பார்த்திருந்ததால் பேசாமல் நின்றிருந்தோம். இவன் எதிர்பாராத கணத்தில் பொக்கற்றுக்குள் கை விட்டு உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்தான். நாங்கள் சுதாகரிப்பதற்குள் தன்னுடைய மணிக்கட்டுக்கு மேலே சரக் என்று இழுத்தான். வெள்ளைத்தோலைக் கிழித்துக் கொண்டு கண்ணாடித் துண்டு குருதி உண்டு மீண்டது. இரத்தம் ஊற அந்தக் கையை அவளுக்கு முன்னால் நீட்டினான். அவளில் எந்த விதிர்ப்புமில்லை. இரத்தம் படாமல் அவனுடைய கையை தன் கையால் சினைப்பாம்பின் மூசலைப் போலொரு மூசலோடு அலட்சியமாகத் தட்டி விட்டு அவனைத் தாண்டி, எங்களையும் தாண்டி நடந்து மறைந்து விட்டாள். நாங்கள் இவனிடம் ஓடிச்சென்றோம். மற்றவன் தன் கைக்குட்டையால் அவன் காயத்தைக் கட்ட நான் கையை ஓங்கி கன்னத்தில் அறைந்தேன்.
பல வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அந்தச் சம்பவம் பற்றி நினைவு கூர்ந்து, எப்படியிருக்கிறான் என்று கேட்டாள். இருக்கிறான் இரண்டு பெண் பிள்ளைகள் என்று சொன்னவன், பேரைக் கேட்டனான். உங்கடை பேர் இல்லை, தெய்வாதீனமாக’ என்றேன். அவள் சிரித்தாள். ‘எனக்கு அவனோடை ஒத்துவரேல்லை, சொல்லிப்பாத்தனான் கேக்கேல்லை, கொஞ்சம் பரிவும் குற்றவுணர்வும் கூட இருந்தது, ஆனால் அவன் அண்டைக்கு கையை வெட்டினோண்ணை அதுவும் போட்டுது, அந்த இடத்திலை எல்லாத்தையும் விட்டிட்டுதான் தாண்டிப்போன்னான். அண்டைக்கு அவன் தன்னை கிழிக்கும் போதே அது எனக்கு உன்னையும் வெட்டுவனடி எண்ட மாதிரித்தான் இருந்தது’ என்றாள். ஆயிரத்தில் ஒரு பெண் தான் அப்படியொரு முடிவை எடுக்கிறார்கள்.
இப்படிக் கையைக் கிழித்துக் கொள்ளும், மெய்யாகவே தன்னை வருத்திக் கொள்ளும் ஆண் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு வாழ்நாளெல்லாம் சீரழிந்த பெண்களை நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெருவிற்கு நான்கு பேர் இருக்கிறார்கள். பேரூந்துகளில் போகும் போது ஆண், பெண்களின் கைகளில் பிளேட்களோ, பிசுங்கான்களோ கீறிய வரிகள், கிழித்து இரத்தம் பார்த்துப் பொறிக்கப்பட்ட பெயர்களைத் தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அறுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் , பிரிவு, ஏமாற்றம் போன்றவை.
குறுந்தொகையில் ஓர் பாடல் உண்டு, மிளைக்காத்தனார் என்ற புலவர் பாடியது. சங்க இலக்கியத்தில் அவருடைய இந்த ஒற்றைப் பாடல் மட்டுமே கிடைக்கிறது. பாரியின் நாட்டின் நீரின் சுவையைச் சொல்ல எழுந்த பாடல். தலைவனிடம் பெண்ணின் தோழி உரைக்குமாறு அமைக்கப்பட்டது.
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
முன்பு அவள் தந்த வேப்பங்காயைக் கூட இனிமையானது என்று சொன்னாய். இன்று பாரியின் இப்பறம்பு நாட்டில் ஓடும் பனிபோன்ற குளிர்ந்த சுனை நீரை அவள் தந்தாலும் அது உவர்க்கிறது என்கிறாய், இவ்வளவுதான் உன்னுடைய அன்பின் திறம்’ என்கிறாள்.
உறவில், பிரிவோ விலக்கமோ கசப்போ பெருந்துயர்தான். ஆனால் அதுவொரு சாத்தியமும் கூடத்தான். உறவு கசக்கவோ, விலக்கம் கூடவோ வாய்ப்புள்ள ஒன்றுதான். அதனால் கடந்து செல்ல வேண்டியதும், விலகிச் செல்ல இயலுமானதுமாகும். மானுடர்களின் அடிப்படையான உரித்து . மனம் அதை எதிர்கொள்ள முடியாத போது அழிவைத் தேர்ந்தெடுக்கிறது. இத்தனை ஆண்டுகளாக பயின்று வந்த நவீன மனத்திற்கே இச்சிக்கல் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இலக்கியம் இவ் அழிவைத் தேர்ந்தெடுப்பதில்லை.
மெல்லுணர்ச்சிகள் மீது பழம்பாடல்கள் கவனம் செலுத்தும் விதத்தினைப் பார்த்தாலே அது காதல், பிரிவு என்பவற்றை எளிய தனிமானுடர்களின் சிக்கலாகவே காட்டுகின்றன, அப்படிக் காட்டும் போது கூட அப்பாடல்களின் நோக்கம் அதுவல்ல என்பதும், அது மெல்லுணர்ச்சி நிலைகளை சொல்ல வந்த விடயத்தை உள்ளுறையாகவோ, இறைச்சியாகவோ, உருவக உவமைகளாகவோ சொல்வதற்காக பயன்படுத்தும் நாடகக் காட்சியென்று புலனாகும். மேற்படி பாடலில் கூட அது காதலின் திறத்தையோ கசப்பின் திறத்தையோ பாட எழுதப்படவில்லை. அது பாரியின் புகழை, பறம்பு நாட்டின் நன் நீர் நிலையின் தன்மையைப் பாடுவதை நோக்கமாகக் கொண்டது.
சங்க காலத்தில் பெருந்திணை மரபில் காதலை நிரூபிக்க மடல் ஏறும் வழக்கம் இருந்தது. அதில் இருந்து கையைக் கிழித்துக் கொள்பவர்கள் வரை இன்றைக்கு வரையும் இவ்வியல்பின் மனநீட்சி இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய அறிவும் நாகரிகமும் உளவளமும் வளர்ந்த பிறகும் பழங்குடிச் சமுதாயங்களினுடைய எல்லா இயல்புகளையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உதிர்க்க வேண்டியவை உதிர்க்கப்பட வேண்டுமில்லையா? தன்னை அறுத்துக் கொள்வதும் வருத்திக் கொள்வதும் பிரிவுத்துயரா? பகுத்தறிவாலோ மூளையினாலோ கூட இதை அணுகத் தேவையில்லை. அன்பினால் அணுகினாலே அதில் உள்ளது இன்னொருவர் பற்றியதில்லை என்பது பிடிபடும்.
நம்மை அவர் விட்டுச் சென்று விட்டார் என்ற குரலிலும் ஏக்கத்திலும், அதில் எழும் கசப்பிலும், துக்கத்திலும் உள்ளது நாங்கள் தான். நான் என்ற ஆதி ஆணவம். ஒருவர் நம்மை நீங்கிச் செல்லும் போது எழும் துயரத்தில் நம்முடைய ஆணவம் அதனால் சீண்டப்படுகிறது, அக்கணமே தாழ்வுச் சிக்கலுக்குள் சென்று சேர்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அஞ்சுவது நம்முடைய தனிமையை. மானிடர்களின் மாபெரும் இருத்தல் சிக்கல் தனிமைதான். அதை வென்று செல்ல நிரப்பிக் கொள்ள மனிதர்களின் முதன்மைத் தெரிவு உறவும் அன்பும். அது இழக்கப்படும் போது அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற மனத்தினதும் உடலினதும் விழைவே இத்தனை நாடகங்களும்.
உளவியலாளர் எரிக் ப்ராம் மானுடர்களின் அக ஆற்றல் படைத்தல், அழித்தல் இரண்டினாலும் ஆனது என்கிறார். வாழ்வை வாழ்ந்து செல்வதற்கு அவர்களுக்குரிய அடிப்படையான ஆற்றலாக மனிதர்களுக்குள் இருக்கின்றன. அன்பின் பொருட்டே ஒருவர் படைக்கிறார். அது தடைப்படும் போது அதற்காக வருந்துகிறார், துயருறுகிறார், தன்னை வருத்திக் கொள்ளவோ, போதை அடிமையாகவோ ஆகிறார். அதிக பட்சமாக தங்களையும் அந்த உறவுற்றவரையும் கூட அழித்துக் கொள்கிறார்கள். அழிப்பது என்பது உள விசையைப் பொறுத்த வரையில் படைப்புச் செயலுக்கு நிகரானதுதான் என்பது ப்ராமின் வாதம். மானிடர்கள் எதைத் தெரிவு செய்கிறார்கள் என்பதே விசயம்.
நம்முடைய மரபில் கடந்து செல்ல முடியாத; அதற்கான தேவையிராத ஒரே உறவாக தெய்வம் மீது கொள்ளும் உறவு மட்டுமே சொல்லப்படுகிறது. தெய்வம் என்பது இங்கு எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பேரண்டத்தின் உருவகமாக ஆகிறது. ஆண்டாளும் மணிவாசகரும் போல. மெல்லுணர்ச்சியில் இருந்து அன்பைப் பெருநிலைக்கு எடுத்துச் செல்வது. அவர்கள் அதைக் கலைமூலம் செய்தார்கள். மெய்யுருகி அவர்கள் தங்களுடைய துயரத்தை, ஏக்கத்தை, தனிமையை கலையாக அளிக்கை செய்கிறார்கள். ஆண்டாள் தன் பாடல்களில் மனமுருகி மெய் வருந்தி மாயோனை நோவதை வாசிக்கும் போது அவை எளிய பிரிவுப் பதிகங்களாகவா நம்மைத் தொடுகின்றன? அவளை நெட்டுருகி வருந்தி வாடியிருக்கும் எளிய பெண்ணாகவா காண்கிறோம்? தினமும் பெருமாளுக்கு சாத்தும் மாலையை அணிந்து விளையாடி தன்னில் திழைத்து, நிறைவுற்றிருந்தவள். அவள் பேதையோ அறிவிலியோ கிடையாது. தமிழின் பெரும் பெண் கவிகளில் ஒருத்தியாகவும் பன்னிரு ஆழ்வார்களில் ஒற்றைப் பெண்ணாகவும் தன்னை நிறுத்திக் கொண்டவளல்லவா அவள்?
கலைகளும் இலக்கியங்களும் மானுட உணர்ச்சிகளைக் கையாளும் போது அவை கொண்ட துயருக்கு எதிரான ஆற்றலாக படைப்பையே அவை தெரிவு செய்கின்றன, எளிய உலகியல் துயரங்களுக்கு எதிரானவையாக தங்களை நிறுத்துகின்றன. மனிதர்களின் தனிமையை, சலிப்பைப் போக்கி வாழ்வுக்கான என்றைக்குமான பொருளைக் கொடுக்கின்றன. விலங்கியல்புகளில் இருந்து மானுடரை வேறுபடுத்துகின்றன. ஏனென்றால் அவை பேசுவது இருவருக்கு இடையில் இருக்கும் ‘தன்னலத்தின்’ அன்பைப் பற்றியல்ல. கலைகளில் காதல் என்பது உன்னதமாக்கப்பட்ட (Sublimation) வடிவத்தில் நிகழ்கிறது. அது எளிய மானுட ஆணவமோ, துக்கமோ, வேட்கையோ அல்ல அப்படி நிகழுமானால் இன்னொன்றைச் சொல்ல அதையொரு கருவியாகவே அது கையாள்கிறது. பழைய சமூகங்களில் காதல் என்ற சொல் கிடையாது, காமம் என்பதே கையாளப்பட்டது. இலக்கியமே காதல் என்ற சொல்லை நிறுத்தியது. காமத்தின் உன்னதமாக்கப்பட்ட வடிவமாக. நுண்மையாக்குதல், அழகியல் படுத்தல், உருவகப்படுத்தல் முதலான உத்திகள் மூலம் இது இலக்கியத்தில், கலைகளில் சாத்தியப்படுத்தப்படுகிறது. காமத்தை நுண்மையாகச் சித்தரிப்பது, இயற்கையோடு இணைப்பது, காதலைப் பிரபஞ்சக் கருத்தோடு உருவகப்படுத்துவது என்பது நம்முடைய இலக்கிய மரபில் உருவாகி வந்திருக்கிறது.
நவீன இலக்கியம் ஒருபடி மேலே சென்று தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற மானிட அறிதல்கள் மூலம் மானுட உறவுகளை, அவற்றின் சிக்கல்களை விசாரணை செய்கிறது. தத்துவம் இலக்கியத்தின் பின்னணியில் தன்னை மேம்படுத்திக் கொண்டு அதற்குப் போசிக்கிறது. அன்பும் துக்கமும் விசாரிக்கப்படுகின்றன. வாழ்வின் நுண்மையையும் மெய்மையையும் நோக்கி இலக்கியம் வளர்ந்து செல்கிறது. அவ்வகையில் கலை இலக்கியங்களின் மெய்யான பணி மானுடர்களைப் பண்படுத்துவது. துயரத்தில் இருந்து மீட்டு அர்த்தமற்று அளிக்கப்படும் வாழ்விற்கு பொருளை அளிப்பது, குன்றாத மகிழ்வையும் நிறைவையும் அளித்து ஈடேற்றுவது. ஏனெனில் கலையே மெய்யான அன்பின் தரப்பு, மேலும் அன்பே முதன்மையான கலையும் கூட.
பழம்பாடல் 01 பழம்பாடல் 02 பழம்பாடல் 03
வேப்பங்காய் மற்றும் பிரிவு எனும் எளிய துக்கம் | பழம்பாடல் 04


