தென் திசைத் தெய்வங்கள் தொட்ட கல்

0
72

எங்களூர் சினகைப் பிள்ளையார் கோவிலில் இருக்கும் பழைய மணிக்கூண்டை உடைத்து அகற்றப் போகிறார்கள் என்று சென்ற வாரமே கேள்விப்பட்டிருந்தேன். உடைக்க வேண்டாம் என்று அப்பாவிடமும் அம்மாவிடமும். சொல்லிப்பார்த்தேன். நிர்வாகத்தின் முடிவு. ’நிலையம்’ சரியில்லை, பழையது என்பவை மட்டும் தான் அவர்களுடைய தலைக்குள் இருந்தது. முல்லைத்தீவில் இருந்து நேற்றுத் திரும்பினேன். இரவு முழுவதும் நல்ல மழை. காலையில் ஓய்ந்திருந்தது. வழமையாக குருவிக்காட்டுப் பக்கம் நடைபோவேன் இன்றைக்கு ஒரு மாற்றத்திற்காக சினகைப் பிள்ளையார் கோவில் பக்கமாகப் போவோம் என்று திரும்பினேன். நடந்து கோவிலடிக்கு வரும் மட்டும் சூழலோடு மட்டும் பொருந்திக் கொண்டு வந்தேன். வெட்டிய வயல்களின் மீது மழை பொழிந்திருந்தது. இரவு வெட்டிய வயல்களில் உள்ள வைக்கோலை மேய கட்டியிருந்த மாடுகளும் கன்றுகளும் நீரில் தோய்ந்து போய் நின்றிருந்தன. என்னுடைய சந்தடியைக் கண்டுவிட்டு வீட்டுக்காரர்கள்தான் வருகிறார்கள் என்று நினைத்து முகத்தை முகத்தைப் பார்த்தன. கோவிலுக்கு வந்தேன். பழைய மணிக்கூட்டுக் கோபுரமும் அதன் பாசியேறிய தோற்றத்தோடு நின்றிருந்தது. அதன் அடியில் மிகப்பெரிய கிடங்கு எடுக்கப்பட்டு மழைநீர் தேங்கி இருந்தது. கோபுரத்தின் அடியில் ‘1964 பொது நிதி ’ என்று கல்லில் பொழியப்பட்டிருந்தது. முன்பு அதன் பக்கத்தில் ஒட்டினாற் போல் மதில் இருந்ததால் அதைக் கவனித்ததில்லை.

சினகைப் பிள்ளையார் அப்பம்மா வீட்டிற்குப் பின்பக்கம் உள்ள கோவில். நான் பிறந்த, எங்களுடைய பழைய கொட்டில் வீடு இருந்த காணியையும் கோவில் காணியையும் கோவிலுக்குச் செல்லும் ஒழுங்கை பிரித்தது. என்னுடைய குழந்தைப் பராயத்தில் இருந்து கோவிலும் அதைச்சுற்றியுள்ள பெரிய இராமாவில் குளமும் வயல்களும், கோவில் ஆல மரத்தின் நிழலும் நெருக்கமானவை. நகுலாத்தை நாவலின் வரும் ’சொத்தி முனி’ என்ற தொன்மம் இங்கிருந்து வந்ததுதான். என்னுடைய ஆழ்மனம் என்பது இந்த நிலத்தின் மீது உருவாகியிருக்கிறது. என்னுடைய கதை உலகம் ஏதோ ஒருவகையில் இந்த இடத்தைச் சென்று தொடாமல் நிகழ்ந்ததில்லை. நகுலாத்தையை எழுதும் போதும் சரி, தோறையை எழுதும் போதும் சரி கதைகளில் இந்நிலத்தின் சாயலோ, தொன்மமோ வந்து நிற்பதைக் கண்டு திகைத்திருக்கிறேன்.

புறப்படும் போதே கோவில் பக்கமாக இறங்கி குஞ்சுராமாவில் குளம் வரை சென்று திரும்பும் மனநிலையோடுதான் வந்தேன். தன் காலடியில் குழியெடுக்கப்பட்டு நின்றிருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தைப் பார்த்ததும் உணர்வு வசப்பட்டு விட்டேன். ஆலயச்சூழலில் சுழன்று கொண்டிருந்தேன். கோவில் பெருமளவு மாறியிருந்தது. புதுச் சுற்றுமதில், புதியதாகக் கட்டி ஓவியங்கள் வரைந்து, இலங்கையில் ஓடும் தனியார் பேரூந்துகளைப் போல வண்ணம் பூசி இறைத்திருந்த முற்பிரகாரம், திருத்திக் கட்டப்பட்ட மடப்பள்ளி, பிள்ளையாருக்குச் செய்வித்த புது எலிவாகனம். பெரும்பாலும் எல்லாம் தனியார் உபயங்கள். புது நிர்வாகம் கடந்த சில வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு நடக்கும் நிர்வாகப் போட்டிகள் பற்றி ஓரளவு அப்பா மூலம் அறிந்திருக்கிறேன். வழக்கம்தான். அவர்கள் அளவில் அவை தீர்க்கப்படும், ஏனென்றால் அப்படி முரண்கள் இருக்காமல் அங்கே கோவில் நிகழாது. இல்லையெனில் தெய்வம் நாள் நைவேத்தியத்தை உண்டு விட்டு திம்மென்று உட்கார வேண்டியதுதான். அங்கே ஏதாவது ஓர் மானுட நிகழ்வு நடந்து கொண்டிருக்க வேண்டும். சினகைப் பிள்ளையார் வெகுகாலம் தீமிதிப்பு, பங்குனித்திங்கள் போன்ற விசேட நாட்களுக்கு மட்டும் கோலாகலப்பட்டது. புது நிர்வாகம் வந்த பிறகு வெளிநாட்டு உபயகாரர்கள் மூலம் ஒவ்வொரு பறுவத்திற்கும் அன்னதானம் நிகழ்கிறது. பெரும்பாலும் எல்லா விசேட நாட்களும் அனுட்டிக்கபப்டுகின்றன. குழந்தைகள் தோத்திரங்கள் பயில்கிறார்கள். கலைநிகழ்வுகள் சிறிய அளவில் நடக்கின்றன. கோவில் கிராமத்தை உயிப்புடன் வைத்திருக்கிறது. கோவில் என்பது தெய்வங்களுடம் பேரம் பேசும் இடங்கள் அல்ல அவை பண்பாட்டு வெளிகள். கிராமம் அங்கிருந்தே தன்னையொரு உயிர் நிகழ்வாக மாற்றிக் கொள்கிறது.

இவற்றையெல்லாம் ஊருக்கு வரும் போது அப்பா, அம்மா மூலமாகத் தெரிந்து கொள்வேன். சடங்கு சாங்கியங்கள் சார்ந்தவனில்லை என்றாலும், அவற்றின் பண்பாட்டு இடம் சார்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை விட்டதில்லை.

இன்றைக்கு கோவிலில் பழையது என்று இருப்பவை, அந்த மணிக்கூண்டுக் கட்டடமும், தேங்காய் உரிக்கும், கல் அலவாங்கும், ஆலில் வசிப்பதாகச் சொல்லப்படும் சொத்தி முனியும், பிள்ளையாரும் மட்டும்தான். மணிக்கூண்டை இடிக்கப்போகிறார்கள் என்பதைத் தாங்க முடியவில்லை. புதிதாகக் கட்டிய ஒவ்வொன்றிலும் உபயகாரர் பெயர்கள் கொட்டை எழுத்தில் பதித்திருந்தார்கள். மணிக்கூண்டில் இருந்ததோ ’1964 பொது நிதி’ என்ற கல்வெட்டு. யாரோ வெளிநாட்டுக்காரர் சொந்த ஆணவம், சொந்தப் பெருமை, சொந்த நேர்ச்சைக்காக கட்டியதல்ல. ஊர் கூடிக் கட்டியது. போரும் பூசலும் தோன்ற முன்பு, அதனாலேயே ’வெளிநாட்டுக்காரர்’ என்ற புது உபயகாரர்கள் தோன்ற முன்பு ஊரிவர் கைக்காசில் கட்டியது. இனி இங்கே நான்கைந்து கோடி செலவில் ஒரு இராஜகோபுரம் கட்டியெழுப்பினால் கூட மணிக்கூண்டை விட அது சிறியதுதான். ஏனென்றலால் அதில் எழுதியிருப்பது தாதைகளின் சொல். தென் திசைக்குரிய தெய்வங்கள் தொட்ட கல்.

காலத்தினால் மட்டுமல்ல, மணிக்கூண்டின் கட்டட அமைப்பு அந்தக்காலத்துக்குரிய கலையமைதி கொண்டிருந்தது. எங்களுடைய ஊர்ப்பகுதிக்கே உரிய மயோசின் பொளி கல்லினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இன்றுள்ள பல கோவில்களும், பழைய கிணறுகளும் இந்த சுண்ணாம்புப் பொளி கற்களால் கட்டப்பட்டவை. யாழ்ப்பாணக் கட்டடக் கலைக்கு இருக்கக் கூடிய ஒரு சில தனித்துவங்களில் மயோசின் சுண்ணக் கல்லின் இடம் முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் மிகச் சொற்பமான கோவில்களிலேயே தற்பொழுது பொளிகல் பாவிக்கப்படுகிறது.

விதை குழுமத்தில் செயற்பட்ட காலத்தில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொன்மயாத்திரை என்ற மரபுரிமை நடையையும், இதழையும் தொடங்குவதற்கு இப்படியொரு நிகழ்வும் காரணமாக இருந்ததை இப்பொழுது நினைவு கூருகிறேன். பருத்தித்துறையில் எங்களுடைய நண்பர்கள் அறிமுகமான காலம். அவர்களுடைய பிள்ளையார் கோவிலில் முன்பிரகாரத்தில் இருந்தவை பழைய தூண்கள். அவற்றை கோவிலைப் புனரமைக்கிறோம் என்று நிர்வாகம் இடிக்கப் போனது. ஊர் இளைஞர்கள் சேர்ந்து போராடியும் அவர்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை, அப்பொழுது நானும் கிரிசாந்தும், புதுவிதி என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியர்களாக இருந்தோம் அதில் குறித்த கோவில் தூண்களைப் பற்றி ‘ஊரில் செய்த பாவம்’ என்றொரு கட்டுரை பிரசுரித்தோம். அந்தத் தோல்வி கொடுத்த விசை தொன்ம யாத்திரையாக வளர்ந்தது. தொன்ம யாத்திரை செய்யப்பட்ட எல்லா இடங்களுமே இன்று பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அரசாங்கம் அவற்றை தொல்லியல் சின்னங்களாக கவனப்படுத்தியிருக்கிறது. பெயர்ப் பலகைகள் போடப்பட்டிருக்கின்றன. சுற்றியுள்ள சனங்களும் அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பேணுகிறார்கள். பருத்தித்துறை தெருமூடி மடம், குருவிக்காடு, தொன்ம யாத்திரை மூலம் அடையாளப்படுத்திய கேணிகள், ஆவுரஞ்சிகள், சுமைதாங்கிகள், தேவாலயங்கள், கட்டடங்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு பார்க்கும் போது நிறைவாக இருக்கிறது. தொடர்ந்து பண்பாட்டு அமைப்புகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நிகழ வேண்டும் என்று அதனால்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். சமூக செயற்பாட்டில் இருந்து விலகி இலக்கியம்தான் என்னுடைய இடம் என்று வகுத்துக் கொண்ட பிறகும் பண்பாட்டு அமைப்புகளின் தேவையை சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு இந்து அடிப்படைவாத அமைப்பான சிவசேனை, கொலனிய காலக் தேவாலயமான, நல்லூர் சென் ஜேம்ஸ் தேவாலயம், பழைய நல்லூர் கோவிலிருந்த இடம் என்பதால் அதைத்திருப்பிப் பெறவேண்டும் என்று சுவரட்டிகள் ஒட்டியது. கூடவே மத வெறுப்பையும் பாக்கு வெத்திலை போட்டுத் துப்புவது போல் சுவர்களில் சிவப்பு நிறத்தில் சுவரொட்டிகளாகச் சத்தியெடுத்து வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பண்பாட்டு அமைப்புக் கூட இதைக் கேள்வி கேட்கவில்லை. எதை மீட்க வேண்டும் எதைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரியாத அறிவிலிகள். தலைக்குள் மதத்தை மலத்தைப் போல் திணித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மதவாத சுவரொட்டிகள் தொடர்பில் அரசாங்கம் வழமை போல் கண்மூடிக் கொண்டு விட்டது. இந்த புதிய அரசாங்கம் சமூக வலைத்தளங்களைத் தவிர எங்கும் இயங்குவதில்லை. அதற்கு இன்று மட்டுமே உண்டு. நேற்றும் கடந்தகாலமும் கிடையாது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்துகிறோம், ஊழலை ஒழிக்கிறோம் என்பது போன்ற சினிமா பாணியில் படங்காட்டக் கூடிய எதுவும் கிடைத்தால் மட்டுமே அதைப் பிடித்துக் கொண்டு தொங்கும். இனப்பிரச்சினையோ, மதச்சிக்கல்களோ கிடையாத பொன்னுலகத்தை அடைந்து விட்ட பாவனை. பண்பாட்டிற்கு எந்த மொழியிலும் உச்சரிப்புத் தெரியாத அரசு இது.

ஒரு நாட்டின் அடிப்படையான அலகுகளான கிராமங்கள் தங்களின் பண்பாட்டையும் மரபுரித்தையும் அறியாமையாலே கைவிட்டுக் கொண்டோ அழித்துக் கொண்டோ இருக்கிறார்கள். உள்ளூர் அரசியலுக்கும் அது பொருட்டில்லை தேசிய அரசியலுக்கும் அது பொருட்டில்லை.

தவிர, யாழ்ப்பாணத்தில் ஏராளம் சைவ அமைப்புகள் இருக்கின்றன. ரோட்டில் வைக்கப்படும் திருட்டு லிங்கங்களுக்கும், புதிதாக பணமும் பகட்டும் கொட்டி தனி ஆட்களின் ஆணவத்தைப் பீற்றிக் கொள்ளும் தனியார் கோவில்களின் பகட்டுகளுக்கும் எடுபடுவதும், அறநெறி வகுப்பு என்ற பெயரில் பிள்ளைகளுக்கு ஒழுக்கவாத வகுப்பு எடுப்பதையும், தவிர இந்த அமைப்புகள் வேறேதும் செய்கின்றனவா? உள்ளூர் கோவில் பண்பாடுகள் அதுசார்ந்த மரபுரிமைகள் அழிந்து போவதைப் பற்றி அவற்றுக்கு கொஞ்சமேனும் கரிசனையும் அறிவும் இருக்கிறதா ?

பெரிய சட்டம்பியார்களான பல்கலைக் கழக கனவான்கள் இதை விட மோசம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இருந்த இந்து நாகரீகத்துறை, இன்றைக்கு இந்து கற்கைகள் பீடமாக மாறியிருக்கிறது. எதுக்கு ? வெறும் அதிகார நலன்களுக்கும் கதிரைகளுக்கும் மட்டும்தானே? கடந்த முப்பது வருடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செய்த சமூகப் பணிகளில் விரல்களில் எண்ணத்தக்க பத்துப் பணிகள் சொல்லுங்கள் பார்க்கலாம். திருநீற்றைப் பட்டை பூசிக்கொண்டு நல்லூர் பின் வீதியில் சென்று பிரதட்டை அடிக்கட்டும். நல்லூர் மட்டும் நின்றால் போதும் இவர்களுக்கு.

பெருங்கோவில்களை விட பல நூறு மடங்கு பண்பாட்டு பொக்கிசங்கள் உள்ளூர் கோவில்கள். எனக்கு பெருங்கோவில்களில் எப்பொழுதும் இருக்கும் ஒவ்வாமை தீர்வதே இல்லை. அன்றாடம் வளர்ந்து தான் செல்கிறது. நல்லூர் போன்ற பெரிய கோவில் அமைப்புகள் நினைத்தால் கூட உள்ளூர் கோவில்களை அவற்றின் தொல்லியல், மரபுரிமை சார் பாதுகாப்பிற்கு ஏதேனும் செய்யலாம். செய்ய மாட்டார்கள். கோபுரங்கள், தோரணங்கள் சுத்தி சுத்தி கட்ட வேண்டும். வேறென்ன கண்டார்கள். அறிவிலிகள்.

காலையில் சினகைப் பிள்ளையார் கோவில் மணிக்கூண்டின் முன் உணர்வு வசப்பட நின்றிருந்தேன். கால்கள் கடுக்க கூண்டின் பக்கத்தில் கிளப்பி இருந்த பழைய பொளிகல்லின் மீது அமர்ந்தேன். மழை நனைத்திருக்க இன்னும் கலையாத மழைமுகில்களின் சாம்பல் நிறத்தின் சாயலைப் பெற்று நின்ற வயல் வெளியில் கண்களை விரித்துக் கொண்டு இருந்தேன்.

இந்த யாழ்ப்பாணத்து படித்த ‘கந்தபுராணக் கலாசாரதவர்’ என்று வாய்க்கு வாய் கூசாமல் தம்பட்டமடிக்கும் கற்ற, அதிகாரம், வசதி எப்பவற்றின் மீது நந்திகளாக அமர்ந்திருக்கும் ஆட்களே இப்படியிருக்க எளிய கிராம மக்களை நான் எதற்கு நோகவேண்டும் என்றுதான் தோன்றியது.

கண்ணில் விரிந்திருந்த வெளி மனதை அமைதிப்படுத்தியது. மணிக்கூண்டுக்காக என்னளவில் முயற்சித்துப் பார்க்கலாம். முதலில் இந்தக் கட்டுரையை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன். தலைக்கு மேலே சாம்பல் வானத்தின் பின்னணியில் போல சிற்றுயிர்கள் கூட்டமாக அலைந்து கொண்டிருந்தன. உற்றுப்பார்த்தேன். மஞ்சள் நிற செட்டைகளைக் கொண்ட தும்பிகள். இதற்கு முதல் இப்படியொரு தும்பிகளைக் கண்டதில்லை. தும்பிகள் நம்முடைய முன்னோர்கள் என்று சமீபத்த புனைவொன்றில் எழுதியது ஞாபகம் வந்தது. மஞ்சள் செட்டைகளின் அசைவைக் கண்டதும், சோர்ந்திருந்த மனம் நான்கு கால்களால் எழுந்து நின்றது. கொஞ்ச நேரம் அண்ணார்ந்தபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லின் ஈரம் ஊறி கால்களைக் குளிர்த்தியது.

வீட்டிற்கு வந்த போது மனம் நிதானப்பட்டு எழுதும் மனநிலை மட்டும் மிச்சமிருந்தது. அதற்கு முன்பு என்னுடைய புதுத்தும்பிகளின் பெயரை இணையத்தில் தேடினேன். கிடைத்தது. அவற்றின் பெயர் ஓவியச் சிறகன்.