செயற்கை நுண்ணறிவினால் ஆக்கப்பட்ட அட்டைப் படங்களை தமிழிலக்கியத்திலும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். எனக்கு அவற்றின் மீது ஒவ்வாமையே இருக்கிறது. அது கற்பனை செய்ய வில்லை. தொகுக்கிறது. இலகுவானதாகவோ செலவு குறைந்ததாகவோ இருக்கலாம் ஆனால் அதை ஓவியம் என்றோ கலையாக்கம் என்றோ அழைக்க முடியாது. என்றைக்கும் ஒவியங்களையோ, புகைப்படங்களையோ, சிலைகள், நிலவுருக்களின் படிமங்களையோ மட்டுமே என்னுடைய அட்டைப்படங்களில் பயன்படுத்துவது என்ற தீர்மானம் செயற்கை நுண்ணறிவு என்ற டியிற்றல் கொலாச் வேலைகள் பிரபலமாகும் காலத்திற்கு முன்பே தீர்மானித்து விட்டேன்.வெளிவந்திருக்கிற என்னுடைய தோறை நாவலுக்கான அட்டைப்படம் சமகாலக் காண்பியக் கலைஞர் பாத்திமா ருக்சானாவால் வரைந்தளிக்கப்பட்டது. என்னுடைய முதல் நாவலான நகுலாத்தைக்கும் ருக்சானாவே ஓவியம் வரைந்திருந்தார். அவரைப்பற்றி ஓர் குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது.
என் முதல் சிறுகதைத் தொகுப்பான மேடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலத்திற்கான அட்டைப்படத்தை அதை வெளியிட்ட ஆக்காட்டி பதிப்பகத்தின் நிறுவுனர், நண்பர் தர்மு பிரசாத்தே தெரிவு செய்து வடிவமைத்தார். kyendo என்ற ஓவியருடைய படத்தினை அட்டைப்படமாகப் பாவித்தார். புதிய சொல் வெளிவரத் தொடங்கும் போது முதல் இதழில் இருந்து உள்ளூர் காண்பியக் கலைஞர்களின் ஆக்கங்களையே பயன்படுத்தினோம். எங்களுடைய சுற்றத்திற்கும் பல்கலைக்கழக கலைவரலாற்றுத் துறையுடனும் அதன் மாணவர்களுடனும் நல்ல நட்பிருந்தது. புதிய சொல்லின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த நண்பர் சதீஸ் கலைவரலாற்றுத்துறையில் கற்றவர், நல்லூரில் இருக்கும் சமகால கட்டடக் கலை மற்றும் வடிவமைப்பிக்கான ஆவணக் காப்பகத்தில் பணிபுரிந்தவர். அவருடைய காண்பியக் கலை சார்ந்த நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்களானார்கள். அதே போல நானும் பிரிந்தாவும் யாழ் பல்கலைக்கழக கலை வரலாற்றுத்துறையில் கற்றவர்கள். நான் முதலாம் வருடத்தில் கலைவரலாறும், இரண்டாம் வருடத்தில் மரபுரிமை பாதுகாப்பு பற்றிய உப பாடமும் அத்துறையில் கற்றிருக்கிறேன். பிரிந்தா கலை வரலாற்றை பிரதான பாடமாகக் கற்று இன்று அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இப்படி உருவான சுற்றமும் தொடர்புகளும் இலக்கியம் அளவிற்கு இலங்கையின் காண்பிய வெளியுடனும் நல்ல பரிச்சமும் நட்பையும் தந்தது. இலங்கையில் இருக்கக் கூடிய கலைகளில் நவீன இலக்கியத்திற்கு நிகராக நவீன ஓவியமும் தாபனக் கலைகளும் வளர்ந்திருக்கின்றன. சர்வதேச அளவில் நம்முடைய படைப்பாளின் ஓவியங்கள் கண்காட்சிகளில் உள்வாங்கப்படுகின்றன.
நகுலாத்தைக்கான அட்டைப்பட ஓவியத்திற்காக நண்பர் ஓவியர் புஷ்பகாந்தை அணுகினேன். புஷ்பகாந்த் பாத்திமா ருக்ஷனாவை அறிமுகம் செய்து வைத்தார். ருக்சானா புஷ்பகாந்தின் மாணவி, நண்பர். முஹம்மத் தாஜுதீன் பாத்திமா ருக்சானா, இலங்கையின் குருநகலை நகரை சேர்ந்தவர். காண்பியக் கலைஞர். தற்பொழுது ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி கற்று இலங்கையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு நுண்கலை இள்கலைப் பட்டப்பினையைப் பெற்றார் மற்றும் அப்பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத்துறையில் தற்காலிகவிரிவுரையாளராக 2016- 2018 காலப்பகுதிகளில் பணி புரிந்தார். பாகிஸ்தானில் லாகூர் நகரில் Beaconhouse National University இல் முதுகலைமானிப் பட்டடிப்பினை தொடர்ந்தவர். கொழும்பு மற்றும் தெற்காசிய நாடுகளில் ருக்சானாவின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Young Subcontinent, Serendipity Arts Festival, Goa, India (2018), A Timeless Heritage, Tolworth Recreation Centre, Fullers Way North, UK (2019), Colomboscope Art Festival 2022 & 2024 and ‘Warehoues421’Abhu Dhabi exhibition, in UAE and Indian art fair 2025. Amerasinghe Ganendra collection and be featured in “Craft Tradition and Invention Springer 2026 ( encyclopedic craft publication) போன்ற கண்காட்சிகள் குறிப்பிட்டுச் செல்லத் தக்கவை.
ருக்சானாவை அணுகும் போது நகுலாத்தையை அப்பொழுது எடிட் செய்து கொண்டிருந்தேன். அட்டைப்படம் ஒன்றை வரைவதற்காக அவருக்கு நகுலாத்தையின் முற்பகுதியில் சில அத்தியாயங்களை அனுப்பினேன். நாவலைப் பற்றியும், அதில் உள்ள நகுலாத்தை என்ற பெண் தெய்வத்தையும் பற்றி விளக்கினேன். ருக்சானா கற்றதும், அவர் தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்ட நட்பு வட்டமும் , எல்லாப் பண்பாட்டுச் சூழலையும் நன்கு உள்வாங்கிக் கொள்ள உதவியதாகச் சொல்வார். நகுலாத்தைக்கான அட்டைப்பட ஓவியத்தை வரைந்து அனுப்பினார். முதல் வரைந்த ஓவியத்தில் சில திருத்தங்களையும் என்னுடைய விருப்பங்களையும் சொன்னேன். சில நாட்களிலேயே நகுலாத்தைக்கான ஓவியத்தின் முழுமையான இறுதி வடிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தார். ஆணும் பெண்ணும் இணைந்த நான்கு கால்களைக் கொண்ட பெண் தெய்வம் குளத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் ஓவியம். என்னுடைய ஒப்புதலுக்குப் பிறகு அதை ஸ்கான் செய்து அனுப்பினார். ஓவியத்தின் நிகர் பிரதி அவரிடமே இருந்தது.
தோறையை எழுதிக் கொண்டிருக்கும் போதே நாவலுக்குரிய கருவினைச் சொல்லி ஓவியம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சென்றவருடம் அவருடைய தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இருவரையும் தனியொரு ஆளாக பராமரித்துவந்தார். ருக்சானா மெல்லியல்புகள் கொண்ட பெண். நிறங்கள் என்று வரும் போது அடர் வண்ணங்களைப் பாவிப்பார். ஓவியம் வரையைக் கேட்கும் போதே வீட்டு நிலவரங்களைக் கவலையுடன் பகிர்ந்து கொண்டார். என்றாலும் தனக்கிருக்கும் ஒரே ஆசுவாசம் வரைவது மட்டும் தான் நிச்சயமாக முடித்துத் தருவேன், பிந்தினால் வேறு ஓவியர்கள் யாரையும் அணுகச் சொன்னார். தோறை அப்பொழுது எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தது. எடிட்டிங் வேலைகள் இருந்தன. எந்த வகையிலும் ருக்சானாவிற்கு அழுத்தமேதும் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எழுமாற்றாக ஓர் ஆர்வத்தில் விசாரிக்கும் போது பதறி விடுவார். சொன்ன நேரத்திற்குள் முடித்து தர முடியாமல் போய் விடும் என்ற கவலை அவருக்கு. வீட்டில் தாய் தந்தையர்களின் நோய் நிலைமை வேறு மோசமடைந்து விட்டிருந்தது. அத்தனைக்கும் மத்தியில் இதை வரைந்து தருவேன் என்ற அவருடைய உரம் ஓர் தெய்வம். நெடுநாட்கள் தோறையை முடிப்பதற்காக எடிட்டிங்கில் இருந்து விட்டேன். இடையில் ஒரு நாள் விசாரித்த போது. உம்மா மவுத் ஆகிட்டார் என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்தர தருணம். இரண்டு முறை அழைத்துப் பேசினேன். அத்தனை துக்கத்திற்கும் நடுவில் என்னுடைய அட்டை ஓவியம் முடித்துத் தரவில்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு குற்றவுணர்வு போலாகி விட்டது. நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் உங்கடை படம் தான் போடுவேன் என்றேன். அவர் மீண்டு வந்து ஓவியத்தை முடிக்கும் மட்டும் நாவல் கிடக்கட்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனாலும் தான் சொன்ன நேரத்திற்குள் ஓவியத்தை முடித்து அனுப்பியிருந்தார். தாயார் இறந்து ஆறுமாதங்களில் தந்தையும் இறந்து விட்டார். அவருடன் பேசும் போதெல்லாம் தனக்குரிய ஒரே ஆறுதல் வரைவது தான் என்பார். தன்னுடைய சொந்த துக்கம் தீண்ட முடியாத ஓர் இடத்தில் தன் கலையை வைத்திருக்கும் ஒரு பெண். இரண்டு முறையும் ஓவியங்களுக்காக சிறு தொகையேனும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். மறுத்து விட்டார். ஒரு புத்தகம் மட்டும் அனுப்பிவிடுங்கள் போதும் என்றார். தன்னுடைய ஓவியம் நூலொன்றில் அட்டைப்படமாகப் பயன்படுத்தப் படுவதில் அவருக்கு நிறைவும் மகிழ்ச்சியும் உண்டு என்று சொல்வார். கொஞ்ச நாளில் நகுலாத்தைக்கு வரைந்த ஓவியத்தையும், தோறைக்கு வரைந்த ஓவியத்தையும் சேர்த்துப் பத்திரப்படுத்தி தபாலில் அனுப்பி வைத்திருந்தார். அவற்றைப் ப்ரேம் செய்து என்னுடைய அறையில் வைத்திருக்கிறேன். ருக்சானாவிற்கு என்னுடைய அன்பும் நன்றியும்.





