யாவரும் மின்னிதழில் என்னுடைய செம்மையாக்கம் : அகலாது அணுகாது தீக்காய்வார் போல் என்ற கட்டுரை பிரசுரமாகியுள்ளது. சென்ற வருடம் எழுதி முடித்து இவ்வருடம் வெளியான தோறை நாவலை ஒட்டி நானும் என்னுடைய நண்பர்களும் எடிட்டர்களுமான எழுத்தாளர் கிரிசாந், எழுத்தாளர் தர்மு பிரசாத் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த செம்மையாக்கம் பற்றிய உரையாடல்களையும் அப்பணியில் ஏற்பட்ட அனுபவங்களையும் கட்டுரையில் தொகுத்திருக்கிறேன். யாவரும் மின் இதழின் ஆசிரியர் நண்பர், எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்திக்கு என்னுடைய நன்றியும் அன்பும்.
ஏன் இவ்வகைச் செம்மையாக்கம் எழுத்தாளருக்கும் படைப்பிற்கும் தேவை என்பதை இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன். இலக்கியம் என்பது கண்டுபிடித்து எழுதுவது கிடையாது. எழுதிக் கண்டுபிடிப்பது. முழுக்க முழுக்க எழுத்தாளரின் அகப்பயணம் சார்ந்தது. நல்ல எழுத்தாளர் தான் எழுதும் காலத்தில் அப்பிரதியுடனே வாழ்கிறார். அவருடைய ஆன்மா அங்கேயே அலைந்து திரிந்து படைப்பைத் தேடித்திரிகிறது. அவருடைய புற வாழ்வு சிறுத்து அர்த்தமற்றதாகிப் போகிறது. ஏறக்குறையப் பித்து நிலை. கொந்தளிப்புக் காலம். குறுந்தொகைப் பாட்டு ஒன்று, சூர்கொண்ட மலைத் தெய்வத்திற்குப் படைத்த பொன் போன்ற தினையை மயிலொன்று அறியாது உண்டு விட்டு ‘தெய்வமாட்டியைப்’ போல் வெய்துற்று நடுங்குகிறது என்கிறது. கிட்டத்தட்ட அதே நிலைதான். (கட்டுரைப் பகுதி)
முழுக்கட்டுரைக்கு : செம்மையாக்கம்
யாவரும் மின்னிதழை முழுமையாக வாசிக்க : யாவரும் இதழ்




