சில வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிற்சைப் பிரிவிற்கு நுழையும் வாசலின் அருகில் இருந்த நடைபாதையில் சரிந்திருந்த மதிலின் நிழலில் சில பெண்கள் அமர்திருந்தார்கள். தமிழ் நாட்டில் இருந்து குறி சொல்லிப் பிழைக்க வந்த பெண்கள், கறுத்த மேனியும், கணீர் குரலுமாக அவ்விடத்தைச் சுற்றி ஓர் அரூபமான அசைவை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் சேலை உடுத்தி பெரிய பொட்டும், மூக்குத்தியும், தொங்கட்டான் தோடுகளுமாக அவர்களில் ஓர் நிறைந்த மிளிர்வு இருந்தது. கைகளில் வெள்ளிப் பூண் போட்ட கருங்கோல் ஒன்று அசைந்து கொண்டிருந்தது. தங்களை அண்டி, சிறிய மரப்பெட்டிகளை வைத்திய சாலைச் சுவரில் சாத்தி அதில் தெய்வங்களைப் பொறித்த வண்ணப் படங்களைச் சாத்தியிருந்தார்கள்.
அவர்களுடைய குரல் எழுந்த நீட்டிச் சொல்லத்தக்க தன்மையினதாகவிருந்தது. அதில் இருந்தது ஒருவகை அழைப்பு. பாட்டா பேச்சா என்று குழப்பக் கூடிய ஒன்று. அன்றைக்கு நானும் நண்பர் ஒருவரும் அவர்களைக் கடந்து அவசர சிகிற்சைப் பிரிவிற்குள் சென்று விபத்தில் சிக்கிய அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டு திரும்பவும் அதே வாசலால் வெளிப்பட்டோம். எங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் அங்கிருந்து வெளியேறி நடைபாதையில் இறங்கினார்கள். தாயும் மகளுமாக இருக்க வேண்டும். அவர்களின் முகம் இருண்டு கிடந்தது. அப்பெண்களைப் பார்த்ததும் அக்குறி சொல்லும் பெண்களில் ஒருத்தியின் குரல் எழுந்தது.
’ஒரு உசுரு உத்தரிச்சுக் கெடக்கு சாமீ…’
அந்தப்பெண் சுழற்றிய கைக்கோலுக்கு கட்டுண்டவர்கள் போல அந்தப் பெண்கள் இருவரும் அவர்களுக்கு முன்னால் அமர்ந்து விட்டனர். அந்தக் குரலின் மந்திரத் தன்மையுள்ள அழைப்பு எங்களை அப்படியே நிறுத்தியது. ’இரு ஆத்தா’ என்று அவர்களை அமர்த்தி தாயின் கையை நீட்டச்செய்து அதில் கோலால் தொட்டு எதையோ வாசிப்பவள் போல் ஆரம்பித்தாள். அதைப்பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய நண்பர் ’என்ன ஒரு ரிக் பாத்தியளா? எமர்ஜன்சி வாட்டுக்கு முன்னாலை இருந்து உசிர் உத்தரிச்சுக் கிடக்கெண்டால் ஆரும் குந்திடுவாங்கள்தானே? ’ அவர் சொல்லும் போதே குறிச்சொல்ல இருக்கும் மற்றப் பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரையும் தம் சொல்லால் இருந்தவில்லை, அவர்கள் ஒவ்வொருத்தரின் முகத்தையும் உற்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியான முகங்களும், கண்களும் தென்பட்டவுடன் குரலை அவர்களை நோக்கி அனுப்பினார்கள்.
வெகுநாட்கள் கழித்து இப்படிக் குறிசொல்லும் பெண்ணொருத்தியை கண்டி இரயில் நிலையத்தில் சந்தித்தேன். அவர் தாங்கள் பரம்பரையாகக் குறி சொல்பவர்கள் என்று சொன்னார். குறிப்பாக ’இரண்டாயிரம் வருடங்களாகக்’ குறி சொல்கிறோம் என்று அழுத்திச் சொன்னார். எனக்கு குறி, சாத்திரம் இவற்றின் மீது மூடத்தனமான நம்பிக்கையோ, நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையோ இல்லை என்பதோடு, அவற்றைப் ஓர் புனைவெழுத்தாளனாக வேறு வழிகளில் அணுகவே பார்ப்பேன். அப்பெண் இரண்டாயிரம் வருடங்களாகக் குறி சொல்கிறோம் எறு சொல்லும் போது அவள் குரலிலும் சொல்லிலும் இருந்த அழுத்தம் அச்சொல்லைக் கேட்டது முதலே அருகில் வந்தமர்ந்து கொண்டது. இரண்டாயிரம் வருடங்கள் என்பது நம்முடைய தமிழ் அரசுகளும், இன்றைக்குப் பண்பாடு என்று நாம் சுட்டிக்காட்டத்தக்க அனைத்தினதும் முதல் வேர்கள் உருவாகித் திரளத்தொடங்கிய காலம். இன்றைக்கு அக்காலத்தை இலக்கியங்கள் வழியாகப் பார்க்கிறோம். இலக்கியத்தில் அவை நித்தியமும் சீவனுமாய் இருக்கின்றன.
குறி சொல்லும் பெண்கள் பற்றிய சித்திரங்கள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. சங்ககாலத்தில் ’அகவன் மகள்’ என்ற குறி சொல்லும் பெண் தெருக்களில் நடந்து போயிருக்கிறாள். முகத்தை உற்று வாக்குச் சொல்லியிருக்கிறாள். சங்க காலத்தில் மூதன்னையான அவ்வையார் அவளைப் பாடியிருக்கிறார். குறுந்தொகையில் இருக்கும் இப்பாடல் தமிழ் இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. மலைகளையும் அதன் நிலங்களையும் பாடும் குறிஞ்சித் திணைக்குரிய பாடல்.
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!
– (குறுந்தொகை: 23)
இப்பாடலுக்கு இப்படியொரு காட்சியைக் கற்பனை செய்துகொள்ளலாம். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி பிரிவுத்துயர் முற்றி நோய் கண்டிருக்கிறாள். அவளுடைய பெற்றோர் அவளுக்கு என்ன நிகழ்ந்து விட்டது என்று தெரிந்து கொள்ள குறிசொல்லும் அகவன் மகளை அழைக்கிறார்கள். தலைவியை முன்னால் இருத்திவிட்டு முதியவளான அவ் அகவன் மகள் தன் மலைத்தெய்வங்களைப் பாடி தன் குறியைத் தொடங்குகிறாள். அவள் மலையைப் பாடும் போது வாடியிருந்த தலைவியின் முகம் ஒளிகொள்கிறது. அவள் ஆர்வமாகிவிடுகிறாள். உடனே அப்பெண்ணை விழித்து அழைக்கிறாள்.
அகவன் மகளே! அகவன் மகளே ! சங்குகளைக் கோர்த்துக் கட்டியதைப் போன்ற வெண் கூந்தலைக் கொண்டவளே. திரும்பவும் நீ பாட வேண்டும், (தலைவனுடைய) நன் மலையைத் பாடவேண்டும்’ என்று அரற்றுகிறாள். அக்கணம் அம்முதிய அகவன் மகளின் முகத்தில் மிளிரும் புன்னகையை தலைவியும் அவளும் மட்டுமே அறிந்திருப்பார்கள்.
புகையிரத நிலையத்தில் சந்தித்த குறிசொல்லும் பெண், சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறி சொல்வது ஒருவகையில் கண்களின் வழியாக அகத்தைத் தொடுவது. உள்ளுணர்வைக் கூர் தீட்டித் தீட்டி காலம் காலமாகப் பரம்பரைகளுக்கு அளிக்கப்படும் கலை. ஒரு குறிசொல்லும் பரம்பரையில் வரும் குடும்பத்தில் எல்லோரும் அதற்காகக் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கொரு குருமரபும், குறிசொல்லுவதற்காக, வாக்கை தன்னில் இருத்தத் தக்க கூருணர்வைக் கொண்ட பெண்ணே தேர்ந்தெடுக்கப்படுகிறாள். காலம் காலமாக மனித வாழ்க்கையையைக் கவனித்துக் கவனித்து அதன் நிகழ்வுகளின் மாபெரும் இணைவை உள்ளுணர்வால் தொட்டு எடுக்கும் கலையது. இரண்டாயிரம் வருடத்தின் முன்னர் அகவன் மகளில் கூடியிருந்த ஒன்றின் தொடர்ச்சி வைத்தியசாலை வாசலில் அமர்ந்திருந்த பெண்ணையும் தொட்டுக்குக் கொண்டிருக்கிறது. ஆயிராமாண்டுகளாக ஒரு பண்பாட்டுக் கூறு நிலைத்து நிற்கிறது, அதில் ஓர் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அதில் உள்ளது மானுட அறிதலுடன், வாழ்வின் ஆழங்களுடன் முடிச்சிடப்பட்ட ஒன்றாகவே இருக்க முடியும்.
அன்றைக்கு அந்தப் பெண்ணைச் சந்தித்த பிறகு சங்கப்பாடல்களில் அகவன் மகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் இடங்களைத் தேடிச் சென்றேன். அன்றைக்கு அந்தப் பெண்களின் நாக்கில் நின்ற பாட்டை ஒத்த சொல்லிணைவை அகவலின் அடியில் இருந்து வந்ததாகக் கருத வேண்டும். தமிழில் அகவல் என்பது தனியான பாடல் முறைமை. ஆசிரியப்பா வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் மரபிலக்கிய வடிவம்.. இது மயிலின் குரலைப் போன்றது என்பதால் அகவல் எனப்படுகின்றது. அடிப்படையில் அகவல் கூவி அழைக்கும் தொனியில் இருந்து பிறந்தது. தமிழில் அவ்வையாருக்குப் பிறகு, மாணிக்கவாசகர் அகவல் பாவைக் கொண்டு தெய்வத்தை அழைத்துப் பாடிய திருவாசகத்தில் இருக்கும் கீர்த்தி திருஅகவல் இம்மரபின் கனிந்த பகுதிகளில் ஒன்று.
சொல் மட்டுமல்ல இக்குறிசொல்லும் பெண்கள் கைகளில் வைத்திருக்கும் கோலும் அவர்களுடைய கைகளில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக அமர்ந்திருக்கிறது. குறுந்தொகையில் உள்ள பரணர் பாடிய பாடல் ஒன்றில்
வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர் மடப்பிடி பரிசில் மான
என்ற அடிகளில் அவர்களின் வெள்ளிப் பூண் போட்ட சிறுகோல் நின்றிருக்கிறது. தவிர இன்றைக்குப் போல் அவர்கள் அவசர நோயாளர் பிரிவின் வாசலில் அமர்ந்திருக்கவில்லை ’மடப்பிடி பரிசில் மான’ என்ற அடிகளில் அகவன் மகளில் ’பெண் யானையைப் பரிசாகப் பெற்றார்கள்’ என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெறுமனே வருவதுரைக்கும் பெண்களாகவோ கட்டும் குறியும் சொல்லும் பெண்களாகவோ இருக்கவில்லை. அவர்கள் தமிழ் மரபின் முக்கிய பகுதியினரான பாணர் மரபைச் சார்ந்தவர்கள் என்றே குறிப்பிடப்படுகிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் அகவன் மகளைப்போல , வேலன் வெறியாட்டு, கட்டுவிரிச்சியர் மரபு (விரிச்சி கேட்டல்) போன்ற மரபுகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன, வருவதுரைக்கும், குறிசொல்லும், இம்மரபு காவிய காலத்தில் சிலப்பதிகாரத்தில் வரும் சாலினி வாக்குரைத்தலில் உச்சம் பெறுகின்றது. தவிர இன்றைக்கும் சாத்திரங்கேட்பது, கட்டுச் சொல்வது போன்ற ஆற்றுகையுடன் இணைந்த வடிவங்கள் நாட்டார் சமயங்களுடன் இணைந்து கொண்டுள்ளன. வேலன் வெறியாட்டு இன்றைக்கும் கேரளத்தில் வழக்கில் உள்ளது. குறி, கழங்கு, விரிச்சி, கட்டுச் சொல்லல், கன்னம் பார்த்தல் போன்ற மரபார்ந்த வருவதுரைக்கும் முறைகள் இன்றைக்கும் சில மாற்றங்களுடன் பயில்வில் இருக்கின்றன அல்லது சாத்திரம், சோதிடம் போன்றவற்றில் கரைந்து போயிருக்கின்றன. அகவன் மகள் மரபு குறி சொல்வது என்ற பெயரில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண் யானையைப் பரிசாகப் பெற்ற அம்மரபு இன்றைக்கு தேய்ந்தழிந்து போயிருந்தாலும் எப்படியோ இன்றைக்கும் தாக்குப்பிடிக்கிறது.
ஓர் பண்பாட்டின் அகத்தை வாசிப்பதில் அதன் மரபார்ந்த ஒவ்வொரு வடிவமும் முக்கியமானது. இவை வெறுமனே தர்க்க அறிதல்களால் மட்டும் அணுக முடியாதவை, ஏனெனில் அவை மானிட கூட்டு நனவுடனும், உள்ளுணர்வுடனும் இணைந்திருப்பவை. ஓர் புனைவெழுத்தாளனாக என்னைப்பொறுத்தவரை இவை கற்பனையெனும் அறிதல் முறையின் ஊடாக அணுகவேண்டியவை. மற்ற அறிவுத்துறைகளை விடவும் இதனை இலக்கியமே கூருணர்வுடன் அணுகக் கூடியது. ஏனென்றால் இரண்டாயிரம் வருடமாக நின்றிருக்கும் ஓர் பெண்ணைக் கதைகளிலேயே சந்தித்து உரையாட முடியும். நேரில் அவள் தொழிலாக அதைச் செய்யக்கூடிய, எளிய பெண் மட்டுமே. அவளுடைய இரண்டாயிரம் வருடத்து பெருவடிவத்தை கதையிலோ காவியத்திலோ நிறுத்தியே காணமுடியும்.
பழம்பாடல் 01 பழம்பாடல் 02 பழம்பாடல் 03 பழம்பாடல் 04 பழம்பாடல் 05


