ஈன்ற பொழுதில் பெரிதுவந்தவள் | பழம் பாடல் 09

0
114

என்னுடைய சினேகிதி  ஒருத்தி  என்னுடன் பள்ளிக்கூடத்தில் கற்றவள். வாசிப்பாள். தற்பொழுது திருமணமாகி கனடாவில் வசிக்கிறாள். இரண்டு ஆண் பிள்ளைகளின் தாய். அவளுடைய அம்மாவிடமிருந்து வாசிக்கும் பழக்கம் இவளுக்கு வந்தது.  தாயாரையும் தன்னுடன் கனடாவிற்கு அழைத்து வைத்துக் கொண்டாள். ஒரு நாள் தொலைபேசி அழைப்பில் என்னை அம்மாவிடம்,  எழுத்தாளர் என்று அறிமுகம் செய்தாள்.  அம்மா ’ஜெயகாந்தனை விட பெரிய எழுத்தாளனோ நீர்?’ என்று கேட்டார் ’ஆகிடுவேன்’ என்று சொன்னேன். சிரித்தார்.  அம்மா நகுலாத்தை நாவலை முழு மூச்சாகப் படித்து முடித்தார் என்று சினேகிதி சொன்னாள்.  ஒரு ஆர்வத்தில் எப்படி இருக்கிறது என்று கேட்கச் சொன்னேன்.  நெஞ்சில் இருந்து எடுக்கப்பட்ட ஆழமான ஓர் ’ம்ம்’ மட்டும் வந்தது என்றாள்.  போதும் அதற்கு மேல் ஒன்றும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  ஒன்றரை வருடம் கழித்து அம்மா இறந்து விட்டார் என்று சொன்னாள்.  ஈமைச் சடங்குகள் முடிந்த பிறகு  அழைத்துப்பேசினேன். அப்பொழுதுதான் தனக்கொரு சகோதரன் இருந்ததைப் பற்றிச் சொன்னாள்.  ’அண்ணா இயக்கம்’ என்றாள் தயக்கமாக. அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து  முல்லைத்தீவில் நடந்த  ஓயாத அலைகள்   போரில்  சாவடைந்தார். தமையன்  இறக்கும் போது   இவளுக்கு  நான்கு வயது. இன்றைக்கு தமையன் பற்றிய ஞாபகம் ஏதுமில்லை.  போட்டோக்களில் மட்டும் பார்த்திருக்கிறாள். மற்றபடி அண்ணாவைப் பற்றி அம்மா சொல்லிய கதைகளைக் கொண்டுதான் ஓர் சித்திரத்தை உருவாக்கி வைத்திருந்தாள். ’அண்ணா மோசம் போன நாளிலை இருந்து ஒவ்வொரு நாளும் அம்மா அழாமல் உறங்கினதில்லை ; அம்மாவின் விசும்பல் சத்தம் கேட்காமல் தானும் அயர்ந்ததில்லை என்றாள். வீட்டில் எந்த பக்கத்தில் இருந்தாலும் அவளுக்கு அம்மாவின்  அழுகை கேட்கும் என்றாள். அம்மாவை காடாத்தின பிறகும் ஏழெட்டு நாட்களுக்கு அந்த விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது என்றாள் ’அம்மாட்டை இருந்தது அப்ப ஊறினதில்லை, அது தேங்கின பழைய கண்ணீர், அவா  செத்த பிறகும்  அழுது தீர்த்துத்தான் ஓஞ்சு போனது’ என்றவள் சொல்லும் போது கனத்துச் சோர்ந்து போனேன்.  

பல மாதங்கள் கழித்து எனக்கொரு புறநாநூற்றுப் பாடல் ஒன்றை அனுப்பியிருந்தாள். அதை அனுப்பி விட்டு  this is inhuman!   என்று தட்டச்சுச் செய்திருந்தாள். அதில் கொஞ்சம் கூட மானுடத்தன்மை இல்லை என்றும்,  அதை பாடியது ஓர் பெண் புலவர் என்பதை நம்பமுடியவில்லை என்று குறிப்பிட்டு  சில வியப்புக் குறிகளும் அனுப்பியிருந்தாள்.  

மீன்உண் கொக்கின் தூவிஅன்ன

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்

நோன்கழை துயல்வரும் வெதிரத்து

வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

மீனைக் கொத்தி உண்ணும் கொக்கின் உடலைப் போன்ற தூய வெண்மையான கூந்தலை உடைய முதியவளின் மகன் போரிற்குச் செல்கிறான், அங்கே அவன்  ஆனை ஒன்றை எதிர்கொண்டு மடிந்தான் என்ற செய்தி அத்தாய்க்குச் சொல்லப்படுகிறது,  அவள் அதைக் கேட்டதும்  அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை காட்டிலும் உவகை கொள்கிறாள்.  அவளுடைய மகிழ்ச்சியினால்  வழிந்த  கண்ணீர்,    மூங்கில்களின் மேலே பொழிந்து அங்கே சேர்ந்து தேங்கிச் சிதறும் மழை நீரை விடவும் வலியதாகவிருந்தது  என்கிறது பாடல். 

பூங்கண் உத்திரையார்  எனக்குப் பிரியமான பெண் புலவர்களில் ஒருவர்.  அவருடைய பாடல்களில், தும்பைத்திணைக்குரியது. ஆநிரை கவர்தல், கோட்டைகளைப் பிடித்தல், போன்ற அக்கால மறங்களில் தும்பை நேடியாக களத்தில் நின்று பொருந்துவதைக் குறிப்பது. தும்பைப் பூவைச் சூடிக்கொண்டு  ‘வீரம்’ என்பதையே மையமாக வைத்து அரசரும் அவர் படையும் நிகழ்த்தும் போர் முறை ”தும்பைத்திணை” எனப்படும். அதிரப் பொருவது தும்பையாம்  என்பது அதன் இலக்கணம்.

என்னுடைய சினேகிதியால் உத்திரையார் காட்டுகின்ற தாயின் இயல்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் தன்னுடைய அம்மாவுடன் தொடர்பு படுத்திக் கொண்டாள். அவளுடைய தர்க்கங்கள் தெளிவாக இருந்தன, அது இயல்பானதுதான். ஆனால் இலக்கியப்பிரதிகளை, குறிப்பாக மரபிலக்கியங்களை தற்காலத்தில் நம்முடைய  தர்க்க அறிவினாலோ, உணர்வுகளினாலோ அணுகும் போது  இந்தச் சிக்கல் எழுகிறது. பழைய பாடல்கள் பிற்போக்கு தனமாகவோ, அறமற்றதாகவோ,  மனிதத்தன்மையற்றதாகவோ கூடத் தோன்றலாம்.

ஆனால் இலக்கியத்தில் அது எழும் காலமும், வரலாறும், இலட்சியங்களுமே முதன்மையானவை. அவற்றைக் கவனிக்காமல் வாசிக்கும் போது மேற்படி சிக்கல்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்தப்பாடலில் வெளிப்படையாக உள்ளது அக்காலத்து  தும்பைத்திணையின் அறம். போரில் படுவதும், களத்தில் அமலையாடிச் சாவதும் அக்காலத்தில் போற்றுதலுக்குரியது. தாயே மகன் களம் பட்டான் என்றதும் அவன் நெஞ்சில் புண் வாங்கி வீரனாகச் செத்தானா என்று அவன் உடலைத் தேடிச்சென்று பரிசோதித்து   தன் மகன் வீரன் என்று மகிழ்ந்து அழுவதைப் பாடல்கள் சித்தரிக்கின்றன. 

இன்றிருக்கும் நம்முடைய அறங்களில் இருந்தோ விழுமியங்களில் இருந்தோ பார்க்கும் போது அதில் ’அன்னைத்தன்மை’ என்ற உயிரியல்பு அற்றுப் போவது போலிருக்கும். இதை இவ்வாறு வாசிக்க முடியாது. முன்பு சொன்னது போல அது அக்காலத்தின் அறம். பழங்குடிச் சமூகங்களில் இருந்தும், நாடோடிச் சமூகங்களிலும் நிலைபேறுள்ள குடியமைப்பு உருவாகி வந்த ஆரம்பங்களில்  எழுந்த பாடல் இது.  அரசும், அதற்கான நெறிகளும் அறங்களும் அப்பொழுதுதான்  ஒன்று சேர்ந்து ஓர் பேரமைப்பாக, சமூகமாக ஆகத்தொடங்கியிருந்தன. குலங்கள் ஒன்றையொன்று வென்று தமதாக்கி, சிற்றரசுகளாக உருவாகி வந்தன. அதற்குப் போர் அடிப்படையாக அமைந்தது. சங்ககாலத்தை எடுத்துக் கொண்டால் அகத்திணை நடைமுறைகளை ஒழுங்கமைப்பது உறவுகளையும் அவை நிகழும் களங்களான  குடும்பத்தை உருவாக்கும் உயர் காமத்தை. அவ் உறவுற்ற குடும்ப அமைப்புகள் நிலைபெறும் நிலங்களையும், கருவளத்தை  அளித்துக் குடிபெருக்கும் பெண்ணையும் பாதுகாக்கவும் ஆண்கள் போரிட வேண்டியிருந்தது. போர் அவனுடைய அறமாகவும் கடமையாகவும் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்போனால் மிகச்சிறந்த வீரன், பேராண்மையுடைய ஆண்,  அச்சிறு குடிகளின் மிகப்பெரிய தேவையாக இருந்தது.  இது ஒருவகையில் பெண்ணின், கருவளத்தில் இருந்து உருவாகி வரக்கூடிய  கட்டளை என்று சொல்லலாம். தன்னைப் பாதுகாக்கக் கூடிய,  வலிய குழந்தைகளை அளிக்கக் கூடிய ஆணை அவள் விரும்ப வேண்டும். அவனைப் போன்ற குழந்தைகளைப் பெற்றளிக்க வேண்டும். அதிலிருந்து அவள் தன் கருவளத்தின் விருப்பதையும்,  அதை நிகழ்த்தக் கூடிய குடும்பம் என்ற அமைப்பையும் உருவாக்கவும் பாதுகாக்கவும் செய்கிறாள். ஒரு அரசு உருவாகி வருவதற்கு மிக மிக அடிப்படையான ஒன்றான குடும்பத்தை, ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். அதற்குக் காமமும் போரும் வேண்டும். அவற்றுக்கான  நியாயங்களும், களங்களும் இலட்சியங்களும் வகுத்தளிக்கப்பட வேண்டும். 

இலக்கியம் என்பது தன்னுடைய காலத்தின் பெரும் இலட்சியங்களையும், கனவுகளையும் முன் வைப்பது, அது  சிற்றுணர்ச்சிகளை அது இரண்டாம் தரப்பாகவே கருதும். இயற்கையால் அளிக்கப்பட்ட தாய்மை போன்ற உணர்வுகளை தன்னுடைய காலத்தின் கனவுக்கு ஒருபடி கீழேயே வைக்கும். அல்லது அவை அனைத்தும் தன் காலத்தின் இலட்சியங்களுக்கான வழிகளாகவே கொள்ளும்.  அது அன்றாட உண்மையை விட, உணர்சிகளை விட பேருண்மைகளையும், அறங்களையுமே முன் வைக்கும். சங்க காலத்தில்  வீரமும் காமமுமே அடிப்படையான பாடு பொருள்.  எக்காலத்திற்குரிய இலக்கியங்களை வாசிக்கும் போதும் அது எழுந்த வரலாற்றுப் பின்புலமும் பண்பாட்டு வாசிப்பும் மிக மிக அவசியமாகும். விழுந்த மாட்டிற்கு குறி சுடுவது போல் வெறுமனே நேரடிப் பொருளை, தர்க்க புத்தியை அதனோடு பொருத்திவிட முடியாது.

தமிழ்ப் பண்பாட்டில் சங்ககாலம் முடிந்து சங்கமருவிய காலம் ஆரம்பிக்கும் போது அரசுகள் உருவாகி வந்தன. அதன் பிறகு போரும் காமமும் பின் தங்க அறங்களும், சான்றான்மையும் மேலே வந்தன. குறிப்பாக சமண, பெளத்த மதங்கள் பண்பாட்டுக்குள் செல்வாக்குடன் பரவின. விழுமியங்கள், ஆசாரங்கள் நெறிகளாக ஒழுங்கு செய்யப்பட்டன. தமிழில் தத்துவம் வளர்ந்தது பேருருக் கொண்டது. அதுவரை காலமும் திரட்டி எடுக்கப்பட்ட  சிந்தனைகள் உச்சம் பெற்றன. அக்காலத்து விளைநிலங்களில் கனிந்த சமண நூலாகிய திருக்குறள் இன்று வரைக்கும் தமிழ்ச்சமூகத்தின்  அறிவியக்கத்தில் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது.  

மேற்படி பாடலில், வீரத்தோடு களம் பட்ட மகனை நினைந்து மகிழ்ந்து கண்ணீர் விட்ட தாயின் மகிழ்ந்த கண்ணீர்  திருக்குறளில் வேறொன்றுக்காக  பொழிகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்  என்கிறார் வள்ளுவர்.  அதே அன்னை, அதே கண்ணீர் இப்பொழுது வீரத்திற்கு அல்லாமல், சான்றான்மைக்காகப் பொழிகிறது. அவள் தன் மகன் அறமும் கல்வியும் கொண்ட சான்றோன் என்று பிறர் சொல்லும் போதே  பெற்ற போது அடைந்த இன்பத்தைக் காட்டிலும் பெரிய இன்பத்தை அடைகிறாள்.

தமிழில் அறவிவாதங்களின் பின்னர் உருவாகி வந்த சமூக அமைப்பில்  நிகழ்ந்த அறிவியக்கம் உருவாக்கிய சான்றோன் என்ற சொல், சங்ககாலத்தில் வீரன் என்ற சொல் எங்கே வைக்கப்பட்டதோ அதை விட ஒரு படி மேலே   நிலை நிறுத்தப்பட்டது. சால்பு என்ற சொல்லில் இருந்து உருவாகி வந்தது. அப்படியே வளர்ந்து சென்று காவியங்களில்  இன்னும் செறிந்து  நின்றது. அங்கே  மாபெரும் மானுடக் கனவு நிகழ்கிறது. இளங்கோ அறத்தின் கொற்றத்தாளாக கண்ணகியை நிலை நிறுத்துகிறார். சாத்தனார் அறத்தின் அன்னமிடும் இலட்சிய பாத்திரமாக மணிமேகலையை அளிக்கிறார், பெருகாப்பியம் எழுத அமர்ந்த கம்பர்  அறத்தின் மூர்த்தியானான இராமனை நிலைப்படுத்துகிறார். இந்தப் பயணம் இலக்கியத்தில் தொடர்ந்து நிகழ்கிறது. வீரனில் இருந்து நவீன சனநாயகத்தின் தனிமனிதன் வரை இலக்கியம் இலட்சியமான பாத்திரங்களை உருவாக்கி அளித்துக் கொண்டே இருக்கிறது.

மரபிலக்கியமோ நவீன  இலக்கியமோ அதை நாம் வரலாற்றின் மிகப்பெரும் சித்திரத்தில் பொருத்தாமல் வாசிக்க முடியாது. அப்படி வாசிக்கும் போது எளிய தர்க்கங்களால் மட்டும் அவற்றை எதிர்கொள்ள நேரிடும். இலக்கியத்திற்கு தர்க்கம் என்பது ஓடுபாதை, அது எழுந்து பறப்பது கற்பனையால். இந்த இணைவு முக்கியமானது. ஆரம்ப கால மரபிலக்கியங்கள் கவிதைகள், அவை மிகச்சிறியவை, செறிவானவை.  தனியே ஒரு மின்னலை அளிக்க எழுந்தவை. அதை மொத்த வானத்திலும் பொருத்தியே காண முடியும். அதற்கு பண்பாடு வரலாறு  தத்துவம் போன்றவற்றில் அடிப்படையான பயிற்சியும், அவற்றைக் கொண்டு  நாமே புரிந்து உருவாக்கிக் கொண்ட  சித்திரமும்  அடிப்படையானது. 

பழம்பாடல் 01

பழம்பாடல் 02

பழம்பாடல் 03

பழம்பாடல் 04

பழம்பாடல் 05

பழம்பாடல் 06

பழம்பாடல் 07  

பழம்பாடல் 08

ஈன்ற பொழுதில் பெரிதுவந்தவள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here