எனக்கு இரண்டு அப்பம்மாக்கள். வள்ளிப்பிள்ளை, தெய்வானை. இருவரும் சகோதரிகள். ஐய்யா (அப்பப்பா) இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஒரே வீட்டில் ஒன்பது குட்டிகளை ஈன்று அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் வதுவை முறைகள் பற்றிய செய்திகள் ஓரளவுதான் கிடைத்தன. அன்றைக்கு அதுவொரு பெரிய கலாசார அதிர்ச்சியெல்லாம் இல்லை. வள்ளிப்பிள்ளை மூத்த சகோதரி, என்னுடைய அப்பாவோடு அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். தெய்வானை இளையவர், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். வள்ளிப்பிள்ளையை நாங்கள் புல்லப்பம்மா என்று அழைப்போம். நாள் முழுக்க வயலில் வேலை செய்து மாலையில் புல்லுக்கட்டோடு திரும்புவதால் அப்படி அழைப்போம், தெய்வானையை சோத்தப்பம்மா என்போம். வீட்டில் சோறாக்கி உணவிடுவதால் அப்படிப்பெயர்.
எனக்கு ஓரளவு விபரம் பிடிபடத்தொடங்கிய நாட்களில் இருந்தே அவர்கள் முதுமைத் தோற்றத்தில் உள்ளவர்கள்தான். பெண்கள் முதுமையில்தான் அதிககாலம் நீடிக்கிறார்கள். பேரிளம் பெண்களாகவே அவர்கள் ஞாபகத்தில் நிலைக்கிறார்கள். அவர்களின் இளமைக் கால நினைவுகளை அவர்கள் மட்டுமே நினைவில் வைத்திருப்பார்கள். என்னுடைய கதைகளில் வரக்கூடிய அத்தனை கிழவிகளிலும் அவர்களின் சாயல் விழாமல் இருப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் நான் சொல்லப்போகும் கதைகளில் அவர்களின் நிழல் இராமல் போகாது என்றுதான் தோன்றும். எனக்கு சிறுவயதில் இரண்டு பறவைகளுக்குப் பயமிருந்தது ஒன்று ஆந்தை, இன்னொன்று காகம். சரியாகச் சொன்னால் அவ்விரு பறவைகளின் குரல்தான் என்னுடைய பிரச்சினையாகவிருந்தது. எங்கோ அருகில் இருந்தாலும் தன்னைக் காட்டாமல் அலறும் ஆந்தைகளின் குரலுக்கு அவ்வளவு பயம். இரவில் முற்றத்தில் இறங்க மாட்டேன். அடுத்து காக்கைகள். எனக்கு அவை கரையக் கூடாது, காக்கை கரைவது போல எந்தப் பறவைகளும் எரிச்சல் தருவதும் பதட்டப் படுத்துவதும் இல்லை. வீட்டில் காக்கை கரைந்தால் சோத்தப்பம்மா என்ன காகம், எந்தப்பக்கம் கரையுது எண்டு பார் என்று குசினிக்குள் இருந்து கேட்பாள், புல்லப்பம்மா என்னைத்தான் பார்க்கச் சொல்வாள். அண்டங்காக்கை தென் திசைக்குக் கரைந்தால் ஏதோ துட்டிச் செய்தி, அரிசிக்காகம் கரைந்தால் யாரோ விருந்தாளிகள் வரப்போகிறார்கள் என்று பொருள்.
வெகுகாலம் கழித்து வன்னியில் போர் நெருக்கிக் கொண்டிருக்கும் போது கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரத்தில் ஒரு காணியில் கொட்டில் போட்டுத் தங்கியிருந்தோம். சனங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போதே விடுதலைப்புலிகள் தமது இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பை இன்னும் இறுக்கியிருந்தனர். போராளிகள் என்ற பெயரை இழந்து ‘பிள்ளைபிடிகாரராக’ மாறியிருந்தனர். நாங்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு அம்மா இருந்தார், அவருக்கு ஒரே மகள். தன்னுடைய நாற்பதுகளின் பின்னர் பெற்று வளர்த்த பெண் பிள்ளை, நிரம்ப நாட்கள் ஒளித்து வைத்திருந்து எப்படியோ புலிகள் மோப்பம் பிடித்து அவரைப் பிடித்துச் சென்று விட்டார்கள். அத்தோடு அவரின் முகம் இருண்டு சிரிப்பு அகன்று போய்விட்டது. சினேகமான புன்னகை கூட. அவரிடம் நாங்கள் கொட்டில் போட இடம் கேட்ட போது போடுங்கோ என்று சொல்லும் போதே ஏதோ வேண்டா வெறுப்பாகச் சொல்வது போலிருந்தது. ஆனால் காணிக்குள் கொட்டில் போடுவதற்கும், அதற்குப் பிறகு அங்கே இருந்த நாட்களிலும் பெரும் துணையாகவிருந்தார். அவருடைய எல்லா இயல்பும் அப்படியே இருக்க, மகிழ்ச்சியையும் புன்னகையையும் அவர் ஈன்றவளோடு போய்விட்டிருந்தது. அன்றைக்கு ஷெல் சத்தங்கள் கொஞ்சம் ஓய்ந்திருந்தன. ஏதோ நிகழப்போகின்றது என்பதைபோன்ற அந்தரமும் அமைதியும் கலந்த காலை வேளை. தென்னங்கீற்றொன்றில் அமர்ந்து காகம் ஒன்று கரைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த என்னிடம் அவர் ‘என்ன காகம் எண்டு பார் மோனே’ என்றார். தென்னைப்பக்கம் ஓடிச்சென்று பார்த்தேன். அரிசிக்காகம் தான். வந்து சொன்னேன். உடம்பில் ஒரு நடுக்கம் பரவி அடங்கியது. சாணம் மெழுகிய திண்ணையில் அப்படியே அமர்ந்தார். கண்கள் கொட்ட உதட்டில் சிரிப்புப் பரவியது. முகம் ஒளிகொண்டு விரிந்தது. சொண்டுகள் திறந்தன. ‘பிள்ளை வரப்போறாள்’ என்றார். வாய்ப்பே இல்லை. நிலப்பரப்பு விரிந்திருந்த காலத்திலேயே புலிகளிடம் இருந்து தப்பி வருவது அவ்வளவு சுலபமில்லை. அப்பொழுது போர் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. புலிகளின் அரசியல் தலைநகரமாகவிருந்த கிளிநொச்சியின் எல்லைகளுக்குள் சப்பாத்துக் கால்கள் நுழைந்து விட்டார்கள். அன்றைக்கு மாலையில் ஷெல்கள் கூவிக்கொண்டு வந்தன. வட்டக்கச்சிப் பக்கம் விழுந்து கொண்டிருந்தன. அடுத்து தருமபுரம்தான். உடனடியாக எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு புறப்பட்டோம், அந்த அம்மாவையும் எங்களுடன் வரும்படி கேட்டோம். அவர் ‘நீங்கள் போங்கோ நான் பிள்ளை வரக் கூட்டிக்கொண்டு வாறன்’ என்றார் உறுதியுடன். பரிதாபமாகவிருந்தது. ஆனால் அந்த அரிசிக்காகத்தின் குரல் அவரை முழுவதும் ஆட்கொண்டிருந்தது.
ஐங்குறு நூறில் ஓதலாந்தையார் என்ற புலவரின் பாடல் ஒன்றுண்டு, தலைவனோடு சென்ற தன் மகள் வீடு திரும்ப வேண்டும் என்று எண்ணும் அன்னையொருத்தியின் குரல்.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம்சின விறல்வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே
மாசற்ற கரிய மயிர்களை உடைய காக்கையே நீ அன்பு கொண்ட உன் மரபினரான சுற்றத்ததுடன் வயிறார உண்ணுவதற்கு பச்சை ஊன் சேர்த்த அரிசிச் சோற்றைப் பொன் தட்டிலில் தருவேன். என்னுடைய அருமை மகள் வேல் தாங்கிய அவளுடைய காளை போன்ற தலைவனோடு வீட்டிற்குத் திரும்ப வேண்டும். ஆகவே நீ கரைவாயாக என்கிறாள்.
இந்தப்பாடல்கள் எழுதப்பட்டு இரண்டாயிரம் வருடங்கள் இருக்குமல்லவா. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இந்தக் காக்கைகளும் அன்னையர்களும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். விருந்தினரையோ துட்டிச் செய்தியையோ காக்கைகள் எடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையான நம்பிக்கைகள் உண்மையா பொய்யா என்பதான விவாதங்கள் சமகால இலக்கியத்திற்கு பொருட்டல்ல. ஏனென்றால் அது இவ் இரட்டை தன்மையைக் கடந்து செல்லவே விரும்புகிறது. இங்கே ஆச்சரியப்படுத்தியது எதுவென்றால் ஒரு வாய்மொழி மரபில், வாழும் நம்பிக்கை இரண்டாயிரம் வருடங்கள் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் அது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கவிதை ஒன்றில் எழுதப் பட்டிருக்கிறது என்பதும்தான்.
வாய்மொழி மரபில் உள்ள தொன்மங்களை, நம்பிக்கைகளை, வழக்குகளை, இலக்கியப்படுத்திக் கொள்வது; இலக்கியத்தில் அவை வைத்து வாசிக்கப்படுவது, பயிலப்படுவது சமகால இலக்கியத்தில் முக்கியமான பகுதியாகக் காண்கிறேன். இத்தகைய வாய்மொழி மரபுகளை நேரடியான பகுத்தறிவுப் பார்வையின் ஊடாகப் பார்க்காமல் அவற்றை படிமங்களாகக் குறியீடுகளாக பார்க்க வேண்டும். ஏதோவொரு வகையில் அவை இலக்கியத்தில் நிகழும் போது வெறொன்றாக ஆகக்கூடிய சாத்தியத்தைக் கொண்டவையாகவும் இருக்கின்றன.
நவீன அறிவுப் பரப்பில் ’மொழியியல்’ ஓர் தனியான துறையாக 19 ஆம் நூற்றாண்டு பின்னர் உருவாகி வந்தது. இலக்கியம், மொழிக்கல்வி போன்றன இருக்கும் போது மொழியியல் உருவாகி வந்ததன் நோக்கமே அடிப்படையில் அது வாய்மொழி/ பேச்சு மொழியைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதுதான். மொழியும் இலக்கியமும் என்பது எழுதப்பட்டவையாகவோ இலக்கணம் வகுக்கப் பட்டவையாகவே இருக்கும் போதே அவை பொருட்படுத்த வேண்டும் என்ற மரபார்ந்த பார்வையில் இருந்து விலகி வாய்மொழியைக் கவனிக்கத் தொடங்கியது. இன்றைக்கு மொழியியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், நாட்டாரியல், மானுடவியல் இவை எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து தம்மைக் கதம்ப வடிவாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. வாய்மொழி மரபில் இருக்கக் கூடிய அதன் ஆழமான நனவின் படிமம், அதன் பயில்வு, அதன் மூலம் வாசிக்கப்படும் மானுட நிலைமை, வரலாறு, எல்லாவற்றுக்கும் மேலாக அதன் இலக்கிய இடம் என்பன கவனப்படுத்தப்படுகின்றன.
வாய்மொழி வழக்கில் இருந்து மொழியின் மூலம் இலக்கியத்திற்குச் சென்று சேரும் எதுவும் தனிப்பாடலில், செய்யுள்களில், பயிலப்படுகின்றன, கூத்திலும், பள்ளிலும் நிகழ்தப்படுகின்றன, அப்படியே செவ்வியல் மரபுக்குள் நுழைந்து காவியம் வரை சென்று சேர்கின்றன. பின்னர் காவியங்களில் இருந்து மீண்டும் பேச்சு வழக்கிற்கு வருகின்றன. இந்த சுற்று தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அவ்வழக்குகள் பண்பாட்டின் அழியாத கூறுகளாக ஆகின்றன. அவை எளிய பகுத்தறிவிற்கோ, தர்க்கங்களிற்கோ தங்களை அளிப்பதில்லை. காலத்தில் நின்று நிலைத்த மொழியின் பெரும்பான்மையான பகுதிகள் இலக்கியங்களில் வாழ்ந்தே இறவாத்தன்மையை அடைகின்றன. தன் மகள் திரும்பி வரும் பொருட்டு நீ கரைவாய் காக்கையே என்று கேட்கும் தாயின் குரலாக அவை நிற்கின்றன. கவிதையாக வாழ்வை நிகழ்த்திக் காட்டுகின்றன. நம்முடைய நாட்டாரியல் மரபு, வாய் மொழி மரபுகள் நம்முடைய பண்பாட்டின் பொக்கிசங்கள் ஆழ் மனத்தின் குறியீடுகளாக, பண்பாட்டின் படிம நிலைகளாக, இலக்கியமாக நிலைபேற்றை அடைகின்றன. இன்னும் இன்னும் அவை தம்மை விரித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பை என்றென்றைக்கும் தம்மில் சூடியிருக்கின்றன. அழியாத்தன்மை என்பது அவற்றுக்கு இருப்பதற்குக் காரணம் அந்த சாத்தியம் அங்கே எப்பொழுதும் இருப்பதுதான்.
போர் முடிந்து வெகு காலம் கழித்து அந்த அம்மாவைச் சந்தித்தேன். நன்றாகக் தளர்ந்திருந்தார். அவருக்கு என்னை நினைவிருந்தது. அன்றைக்கு இரவு ஷெல் விழுந்து கொண்டிருக்கும் போது, திண்ணையில் ஒற்றை இலாம்பின் பிசுபிசுத்த வெளிச்சத்தில் அவர் அமர்ந்திருக்கிறார், மாலை வரை கரைந்து கொண்டிருந்த காக்கை போய்விட்டது. நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது, சனங்கள் வாரிச்சுருட்டிக் கொண்டு நெத்தலியாற்றைக் கடந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். புலிகள் முரசு மோட்டையில் ஆமிக்காரர்களை எதிர்கொள்ள தருமபுரத்தை அரணாக ஆக்கிக் கொண்டிருந்தனர். ஒரு தாய் இலாம்பு வெளிச்சத்தில் தனித்து இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. நடுச்சாமம் நெருங்கும் போது படலை திறப்பட்டது. சந்தடி வந்த திசைக்கு முகத்தைத் திருப்பி ‘பிள்ளை?’ என்றார். ‘ஓமம்மா’ என்று குரல் வந்தது. தன் மகளை அணைத்து அணிந்திருந்த சீருடையைக் கழற்றி எறிகிறார் துவக்கை வாங்கி பிளாட்டில் விசுக்கி எறிந்தார். தன் பெண்ணைப் பேச விடவில்லை. வாயை அடக்கி, ஏற்கனவே தயாராக இருந்த உடுப்பு பைகளையும், ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு நடு இரவில் ஒழுங்கைகளைப் பிடித்து நடந்து உடையார் கட்டில் இருக்கும் தன் தங்கையின் வீட்டிற்கு வருகிறார். மகளை அங்கே ஒழித்து வைக்கிறாள். புலிகள் அவள் ‘வீரச்சாவு’ என்று அறிவிக்கும் போது தண்ணிப்பாலத்தடியால் அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் மகளுடன் வருகிறாள். இராணுவத்திடம் ஒப்படைக்காமல் அவளை எப்படியோ மீட்டு வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுக்கிறார். நான் அவரைச் சந்திக்கும் போது கோவிலுக்குப் போக பேரூந்திற்குக் காத்திருந்தார். ‘பிள்ளேன்ர இளையவளுக்கு கண்டகச் சனி நடக்குது, அதுதான் சனிக்கு செய்யப் போறன்’ என்றார். உடல் தளர்ந்திருந்தாலும், சுருங்கி முதுமையேறியிருந்தாலும், கண்ணில் இருந்த ஒளியில் விருந்துண்ட களிப்பிருந்தது.
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் !


