ஆசிரியருக்குக் கெளரவம்

0
100

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தக்சிலா பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கிக் கெளரவிக்கிறது. எழுத்தாளரில் இருந்து இன்று தத்துவாசிரியராக ஆகியிருப்பவர் ஜெ. அவருடைய கனிந்த காலம் இது. தீவிரமாக தன்னுடைய படைப்புகளிலும் கலை இலக்கியச் செயற்பாட்டிலும் திழைத்திருப்பவர். வெண்முரசு போன்ற உலகின் மிகப்பெரிய நாவலை, எழுதி முடித்த பிறகு, கொஞ்சமும் சோராமால் ’காவியம்’ போன்ற அதன் எதிர்வடிவமான ஒன்றை எழுதிக் கொண்டு எழுந்து வருபவர். எழுத்தாளர், விமர்சகர், தத்துவாசிரியர் இந்த ஒழுங்கு அவருக்கே சமகாலத்தில் மிகப்பொருந்தும்.  ஆகவே பெருஞ்செயல் புரிக ! என்ற சொல் அவரில் இருந்து பரவி இன்றைக்கு பெரும் அறிவியக்கமாக வளர்ந்து நிற்கிறது.

ஓர் ஆசிரியராக ஆலமர்ந்திருக்கும் போது அவருக்கு அளிக்கப்படும் கெளரவம் முக்கியமானது. விருதுகளை ஏற்பதும் சூடிக்கொள்வதும் தொடர்பில், அவரிடம் மிகுந்த கவனமும் சிரத்தையும் இருக்கிறது. ஓர் பேரால மரத்தைப் போல் தமிழ் இலக்கியத்தின்  உச்சியில் அமர்ந்து சொரிந்து கொண்டிருக்கிறார்.  தனிப்பட்டு என்னுடைய வாழ்க்கையை வேறொன்றாக ஆக்கித்தந்தவர். அவரே சொன்னது போல் மானுடர்கள் தங்களை மாற்றிக்கொள்வது இரண்டு வகைகளில் நிகழக்கூடியது. ஒன்று ஏதேனுமொரு  நிகழ்வு, சம்பவம் அவர்களை நெற்றிப்பொட்டில் அடித்துச் சுழற்றிப் போடவேண்டும். அல்லது  நல்லாசிரியர் ஒருவர்  அவரை உடைத்து மீட்டெடுக்க வேண்டும். ஜெ நானே உருவாக்கிக் கொண்ட பெருஞ்சுழல்களில் இருந்து மீட்டவர். எனக்குரிய தெய்வத்தை அளித்தவர். அவரைப் பற்றிக் கொண்டே என்னுடைய சுற்றத்தை அமைத்துக் கொண்டேன், முடிந்தவரை வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டேன். இவ்வருடம்  வெண்முரசு குருபூர்ணிமா உரையாடலில் அவருடன் முதலில் பேசினேன். வாழ்வில் அவ்வளவு பதட்டப்பட்டதே கிடையாது. அகங்காரத்தை உதறிவிட்டு தன்னை முழுதளித்துப் பெறுவதே மாணவனின் முதல் கருமம்.

இவ்வளவு தீவிரமாக , நிறைவாக, மகிழ்ச்சியாக, நேர்நிலை எண்ணங்களோடு இலக்கியத்தில் இயங்க வைத்தவர்.  ஒவ்வொரு நாளும் எங்கிருந்தோ அவரே அறியாத கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வை உதறவே முடிவதில்லை.  முனைவர் பட்டம் பெறும் ஆசிரியர் ஜெயமோகனுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

வியாஸோசிஷ்டம் ஜகத் சர்வம் !

கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here