வெள்ளை யானை : கவிதை நிகழ்தல்

0
491

எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவலை வாசித்து முடித்த அலைக்கழிப்பு அன்று முழுவதும் இருந்தது.  அதன் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டிருக்கும்  வலைப்பூவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் வாசித்தேன். ஜெவிடம் அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்களித்த பதில்களையும் தேடிப்படித்தேன்.  நீதியுணர்ச்சி, அரசியல், வரலாறு, காலனிய ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்கள், நிலப்பிரபுத்துவம் என்று அதை எல்லாக் கோணங்களிலும் வாசித்திருந்தார்கள். அதிகம் சிக்கல் இல்லாத மிக தெளிவான  உருவகத்தைக் கொண்டு  நல்ல மொழியில் எழுதப்பட்ட நாவல். வெள்ளை யானை என்ற படிமம்.  பருவடிமாகவும் தொன்மமாகவும் நாவலின் சரட்டில் விரிந்து செல்கிறது. நாவலின் படிமமும் மொழியும் எல்லா படிநிலைக்குமுரிய வாசிப்பிற்கும் தன்னளவில் இடம் கொடுக்கக் கூடியது. விஷ்னுபுரத்திலோ, கொற்றவையிலோ கோரப்படும் அறிவுழைப்பும்  பெருங்கற்பனா விரிவும் வெள்ளையானையை வாசிப்பதற்கு அவசியமில்லை. அடுத்து ஏழாம் உலகத்தை மறுவாசிப்புச் செய்யும் போதும் இதே எண்ணம்தான் ஏற்பட்டது. காடு இவ்விரண்டிற்கும் நடுவில் நிற்பது.

வெள்ளையானையை  ஒரு செவ்வாய் கிழமை காலையில் தொடங்கி இரண்டு நாட்களில் முடித்தேன். நாவலை முடித்து விட்டு  எல்லா வாசகர் குறிப்புகளையும் விமர்சனங்களையும் வாசித்து முடித்த போதும் ஏதோ மிச்சமிருக்கும் உணர்வு இருந்து கொண்டே இருந்தது.  நாவல் வாசித்த கையோடு அதற்குரிய குறிப்பை எழுதி வைத்துக் கொள்வதால் அதை என்னுடைய நோட்டில் எழுதினேன். எல்லோரும் ஏற்கனவே எழுதியவைதானே இவை என்ற எண்ணம் மேலிட்டுக் கொண்டிருந்தாலும், எதுவோ ஒன்று மிச்சமிருக்கும் உணர்வு. நல்ல நாவல்கள் அப்படிப்பட்டவைதான், இரண்டாம் வாசிப்பில் வேறொன்றாக விரியும். நுட்பமானவை புலப்படும். ஆனால் இம்முறை அப்படியில்லை,  வாசித்த எதையோ ஒன்றைப் பற்றியது என்று தோன்றியது.

ஒவ்வொரு புனைவும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமானது, சில சமயங்களில் நாவலை வாசித்து முடித்து விட்டு அதன் தரிசனத்தை, அதன் உச்ச இடங்களை தொட்டுச்சொல்லித் தொகுத்துக் கொண்டு விட்டாலும் கூட  மொழியினால்  சொல்லப்படாத, ஆழத்திலே திகழும் ஒன்று இன்னும் இந்நாவலில் அனுபவப்பட்டிருக்கிறது என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.  கடுமையாக உறுத்தாத அதே நேரம் அங்கிருக்கிறது என்பதை உணரக்கூடிய கண்ணில் விழுந்த நுண் தூசியைப் போல் இருந்து கொண்டிருக்கும்.  அந்த அந்தரங்கமான  ஒன்று எல்லா வாசிப்பை விடவும் எனக்கு முக்கியமானது. வாசகரும் எழுத்தாளரும் வெகுநேரம் உரையாடிய பின்பு எங்கோவொரு கணத்தில் கண்களால் தொட்டுப் பரிமாறிக்கொண்ட சிலதும் அவ் உரையாடலின் முக்கியமான பகுதிகள் என்றே நினைக்கிறேன். வெள்ளையானையை மூடி வைத்த பிறகும் அவ்வுணர்வைச் சொற்களாய் மாற்றமுடியாத அலைக்கழிப்பை துளாவிக்கொண்டே இருந்தேன். 

அன்றைக்கு மாலையில் கோபிகா பவள மல்லிப் பூக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.  அவை எப்பொழுதும் தலைகீழாகவே விழுந்து கிடக்கும் என்றார். அதனுடைய காம்பு மிக எடை குறைந்தது அதனால் பூவின் காற்றாடி வடிவம் காற்றில் கச்சிதமாக இறங்கி தலைகீழாகக் அமைகிறது என்பது போலில்லாமல் அவர் அதையொரு   தொல் தெய்வத்தின் இயல்பை விளக்குவதைப் போல விளக்கினார். நாவலில்,  உடைந்தும் சோர்ந்தும்  போன எய்டன் மரிசாவைத் தேடி ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வான். அவளுடைய வீட்டைப் பற்றியவள் சொன்னவற்றை மீட்டிக்கொண்டு செல்வான்.  அவளுடைய வீட்டிற்கு முன்னால் பவளமல்லி மரமொன்றிருந்ததை நினைவுபடுத்திக் கொள்வான். உதிர்ந்த பூக்கள் அதனடியில் விழுந்து கிடப்பதை ஜெ,  பூப்போட்டை  வெள்ளைத்துணி ஒன்று விழுந்து கிடப்பது போல என்று எழுதியிருப்பார். வாசிக்கும் போது அக்காட்சியை நுணுகிக் கவனித்திருந்த நினைவில்லை. அதுவொரு உச்சமான இடமென்றாலும் பவளமல்லியும் இந்த உவமையும் சட்டென்று எழுந்து வந்ததும் என்னை  ஒரு நடுக்கு நடுக்கியது. நான் எதை விட்டுவிட்டேன். என்று அக்கணமே வெளித்தது. அது  ஷெல்லியை. நாவலின் உச்சமான எல்லாத்தருணங்களிலும் எய்டனுடன் இருந்தது ஷெல்லிதான். கவிதைதான்.

எழுத்தாளர்  பி.கே பாலகிருஷ்ணன்  ஓரிடத்தில்  நாவலில் சமூகத்தைச் சித்தரிப்பதற்குரிய நல்ல வழிமுறை தனிமனிதனைச் சித்தரிப்பதுதான் என்கிறார். எய்டனை அப்படியொரு பாத்திரமாகவே ஆழப்படுத்திக் கொண்டு செல்கிறது நாவல். முக்கியமாக அவனுடன் இணைந்து வரும் கவிதையையும் கவித்துவத்தையும் கவனித்து  உள்ளெடுக்கும் போது வாசிப்பு,  தர்க்கங்களில் இருந்தும், அறிவிலிருந்தும் நம்மை விலக்கி  கற்பனையின் வாசிப்பிற்கு எடுத்துச் செல்கிறது.

வெள்ளை யானை நாவலின் கதைத்தருணங்களின் உச்சிகளில் கதையை வாசிக்கும் போது ஆழ் மனம் கவிதையையும் வாசித்திருக்கிறது.  நாவலில் கவிதை  நிரப்பும் பொருளாக அல்ல, எய்டனுடைய விஸ்கியாகவோ, மரிசாவாகவோ அல்ல அது ’மவுனமாக’ நிகழ்கிறது. நாவல் எழுதிக் கொண்ட கவிதையாக மாறுகிறது. ஷெல்லி எய்டனின் ஒருபகுதியாக இருக்கிறான். அவன் தான் எய்டனைக் கனவு காணச் சொல்லியிருக்கிறான்.  தன் சொந்த நிலத்திலிருந்து  தாயையும், தந்தையையும் பிரிந்து கனவை நோக்கித் தள்ளியது. அனுடைய நீதியுணர்வின் ஊற்றைத் திறந்தது. அன்றைக்கு உருவாகி வந்த ஐரோப்பாவின்  சுதந்திரத்திற்கும், மானுட விடுதலைக்குமான சனநாயக வெளியின் ஆன்மாவை ஏற்கச் செய்கிறது.  நாவலின் ஆரம்பத்தில் எய்டன் புறப்படும் போது தந்தையைத் தொட நினைப்பான்.  அவ்விடத்தில் அவனுக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களுடன் அவனால் அவரைத் தொட முடியாது என்று ஜெ எழுதிச் செல்கிறார். அங்கிருந்தே கவிதை எய்டனுடன் இருக்கிறது. திரும்பவும் நாவலின் உச்சமான இடங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு பக்கங்களைத் தட்டிப்பார்த்தேன். எல்லா இடங்களிலும் ஷெல்லி நிகழ்ந்து கொண்டிருந்தார்.  சொல்லப்போனால் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியல்ல. எய்டனுடைய ஷெல்லி. ஜெயமோகனுடைய ஷெல்லி.  அதில் நுட்பமான வேறுபாடுகள் உண்டு.   எய்டனுடைய ஷெல்லியைத் தொட்டுவிட்டால்  நாவலின் உச்சங்களை இன்னும் ஆழமாக வாசிக்க முடியும் போலத் தோன்றியது. 

நாவலின் மிக உச்சமான நாடகீயமான தருணம்  எய்டன் பஞ்சம் பீடித்த  இந்தியாவைச் செங்கல்பட்டு செல்லும் வழியில் காண்பது. அங்கேதான் நாம்  அன்ரூவைச் சந்திக்கிறோம். வெள்ளையானை நாவலில் வரும் ஆன்ருவைச் சந்தித்தவுடன்  தஸ்தோயின் ’போரும் அமைதியும்’ நாவலில் போர்க்களக் காட்சியை வெறித்து நிற்கும் பிரின்ஸ் ஆன்ருவை ஜெயமோகனை அறிந்த யாருக்கும் சட்டென்று ஞாபகம் வந்திருக்கும்  என்றே தோன்றியது. ஒரு அத்தியாயத்தில் கோச்சில் ஏறி அவ் அத்தியாயத்திலேயே அதில் இருந்து இறங்கிச் சென்று விடுகிறான். அவ்விடத்தில் எய்டனை விட ஆன்ருவின்  மீதே அதிகம் மோதிக் கொண்டிருந்தேன். புனைவில் அவன் எய்டனுக்கு வழியில் அறிமுகமானவன். உணர்ச்சி வசப்படக் கூடியவன். அவனுடைய நடுக்கமே அவனுடைய நீதியுணர்ச்சியின் வடிவம்.  ஒருவகையில் ஆன்ரூ  எய்டனின்  ஆழத்தின் ஓர் பகுதி. அவனுடைய குற்றவுணர்வின். பொறுக்க முடியாமையின், அவன் அணிந்திருந்த சீருடையையும், வரலாற்றையும், காலத்தையும் வென்று முன் செல்ல முடியாத  எய்டனின் தவிப்பின்  மெய்யுரு இவன்.

எய்டனும் ஆன்ரூவும் செங்கல்பட்டில் பஞ்ச நிலவரங்களைப் பார்ப்பதற்கு எய்டனின் கோச் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களின் வண்டியின் கீழ் நசிபடும் பாவப்பட்ட சனங்களின் ஓலம் நெஞ்சுக்குள் துடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் பசிக்கென ஏந்திய கைகளை சந்திக்க முடியாமல் கண்கள் முட்டிக் கொண்டிருந்தன. மரத்தடியில் கொட்டப்பட்டிருந்த பிணங்களுக்கு நடுவே  நாய்கள் குதறிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற துடிக்கும் ஆன்ருவை விலக்க முடியாமல் வெப்பியாரம் அனல் கொண்டிருந்தது. கோச் வண்டியின் சில்லுகள் ஊழின் சக்கரமெனச் சுழன்று (the wheels of destiny) சனங்களின் உடல்களின் மேல் ஏறிச்செல்கின்றது.  வண்டிக்குள் இருந்த உணவை எடுத்து வீசுவோம் என்று அன்ரூ துடித்துக் கொண்டிருக்கிறான். பொறுக்க முடியாமையும் சகிக்க முடியாமையும் பெரும் ஆற்றாமையும் நிகழும் அவ்விடத்தில்  கடவுளர்களின் மீது  நிந்தனை எழுகிறது.  

Is it the Eternal Triune, is it He

Who dares arrest the wheels of destiny

And plunge me in the lowest Hell of Hells?

Will not the lightning’s blast destroy my frame?

(Percy Bysshe Shelley: The Wandering Jew’s Soliloquy)

நரகத்திலும் கீழான நரகம் என்ற சொற்கள் அவ்வளவு உச்சத்தில் நிகழ்கின்றன. யாழ்ப்பாணத்தில் , பஞ்சம் போனாலும், பஞ்சத்தில் சொன்ன வசை போகாது  என்றொரு சொலவடையுண்டு . பசி நெருப்பாக அடிவயிற்றில் எரிய குழந்தைகளைச் சாகக் கொடுத்த அன்னையர்களைக் கண்டு எய்டன் ‘ஆமாம் பல பெண்களிடம் குழந்தைகல் கூட இல்லை’ என்றுபதைக் கண்டு திடுக்கிடுகிறான்.  கடைசிவரை கூட வருவது தாயின் பிள்ளைதான் ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் உதிர்ந்து விடுகிறது’ என்று தவிக்கிறான்.   உடல்களை நசுக்கி ஓடும் கோச் வண்டியின்பாதையை   ’ஆதாமின் நுணி விரலைத் தீண்டும் பிதாவின் நுணி விரல் இந்தச்சாலை’   என்ற சொற்கள் நிகழும் போது உலுக்கி எடுக்கின்றன.  தாங்க முடியாமல் ஆன்ரூ வண்டியை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு சடலங்களை அகற்றுபவர்களுடன் சென்று சேர்ந்து கொள்ளப் போய்விடுகிறான். 

ஷெல்லி

புனைவில் கவிதையோ  கவித்துவமோ நிகழும் தருணங்களை அவை நிகழ்ந்த பிறகு அதற்கு முன் உள்ள பகுதிகள் அளவிற்கு கீழறக்க முடியாது.  மலையில் இருந்து இறங்கி பள்ளத்தாக்கிற்கு வந்து திரும்பவும் மலையுச்சியை நோக்கிச் செல்வது போல. அவ்வாறு இறக்கினால் அதற்கு பிறகு நாவல் சோர்ந்து படுத்துவிடும். காவியச் சாயல் கொண்ட பெரு நாவல்களில் அது சாத்தியப்படலாம். பெரும்படைப்பாளிகளாலேயே சாத்தியப் பட்டுமிருக்கிறது. தஸ்தோய், தஸ்தெயெவெஸ்கி என்று அதற்கு முன்னோரும் உண்டு. தமிழில் வெண்முரசு அத்தகைய  ஒன்று.  மற்றபடி  கவித்துவ உச்சங்களை அடையும்  நல்ல நாவல் அந்த உச்சியில் இருந்து இன்னொரு உச்சிக்கே தாவக்கூடியதாகிவிடும்.   வெள்ளை யானை  ஏழாவது அத்தியாயத்தில் இருந்து எய்டனை உணர்வுத்தளத்தின் உச்சியிலேயே வைத்திருப்பது போலக் கதையையும் அந்நூலிலேயே நடத்திச் செல்கிறது.  கருப்பர் நகரத்திற்குள் நுழையும் எய்டனுக்கு அத்தனை பஞ்சத்திலும் பசி நெருப்பிலும், குழந்தைகளின் சாவின் முன்னும் நின்றிருக்கும் மூதன்னையொருத்தி எங்கிருந்தோ ஓர் நுங்கைக் கொண்டு வந்து அளிக்கிறாள். உபசரிக்கிறாள்.  அவன் நெஞ்சினால் அவள் சொற்களைத் தொடுகிறான். அவள் ‘புண்ணியமுண்டு’ என்று சொன்ன வார்த்தை அவனுக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது.   நாவல் அங்கே மேலேறத்தொடங்குகிறது. அது கவிதைகளைத் தொட்டபடி அன்ரூவில்  உச்சம் கொண்டு எய்டனை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.

Man, who man would be,

Must rule the empire of himself; in it

Must be supreme, establishing his throne

(Percy Bysshe Shelley:  Sonnet )

நாவலில் அன்ரூவைப் போல  எய்டன் மோதும் பாத்திரம் காத்தவராயன்.  அவனுடைய அறிவார்ந்த குரல் மட்டுமல்ல  ‘ஐரோப்பிய ஆன்மா’ மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையும் உறுதியும் அவனில் இருந்து  காந்திக்கு ஓர் கோட்டை இழுக்க முடியுமோ என்றும் எண்ணத் தோன்றியது.   இருண்ட காலம் என வரலாறு வர்ணித்துக் கொள்ளும் நிலப்பிரபுத்துவத்தை  களைந்து விட்டு ஐரோப்பா புத்தொளிக்காலத்தின் வழியாக கலை இலக்கியத்தையும் அறிவியலையும் பிடித்துக் கொண்டு  நவீன உலகத்தை உருவாக்கும் காலம் கனிகிறது.  முடிகள் சாய்க்கப்பட்டு,  மதத்தின் தலையீடு விலக்கப்பட்டு மக்கள் ஆட்சியை நோக்கி, மானுட விடுதலையை நோக்கி ஐரோப்பா நகர்கிறது. பதினேழாம் நூற்றாண்டு  ஆகும் போது  ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனப்பட்ட ஆங்கிலப்புரட்சியும்,   பிரேஞ்சுப் புரட்சியும் நிகழ்கின்றன. கவிஞனான ஷெல்லி நம்மை விடவும் இவ் இரண்டு புரட்சிகளுக்கும் நெருக்கமான காலத்தில் வாழ்ந்தவன். ஜெ எழுதிய களமும் காலமும் இயல்பாகவே அவனை நாவலுக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. அல்லது ஷெல்லியே அவருடைய முதன்மையான தெரிவாக இருந்திருப்பான். 

அதிகாரத் தரப்பான காலனிய வாதிகள் கீழை நாடுகளைச் சுரண்டிக் கொண்டிருக்கும் போது அறிவியக்கம்  மெல்ல மெல்ல நிகழும் போது வரலாறும் தன்னுடைய தற்செயல்களைத் தானே தெரிவு செய்து கொள்கிறது.  இலட்சியவாதிகள் அங்கிருந்து  உருவாகி வருகிறார்கள். அவர்கள் எங்கே வரலாறு திரட்டி எடுக்கப்பட வேண்டுமோ அங்கே கச்சிதமாக நிகழ்கிறார்கள் காலம் தோறும் அப்படி நிகழ்வதன் மூலமே இந்த மானுட குலத்தின் நாகரீகமும் பண்பாடும் உருவாகி வந்தன. வளர்த்தெடுக்கப்பட்டன.   எய்டனும்,  காத்தவராயனும் நாவலில் அப்படித்தான் நிகழ்கிறார்கள்.   காந்தி அவ்வாறுதான் நிகழ்ந்தார். அவரும் வரலாறும் ஒருவரையொருவர் தெரிவு செய்து கொண்டனர். காந்தி தன்னுடைய அகிம்சை ஐரோப்பிய ஆன்மாவைத் தொடும் என்று நம்பினார். அது உலகின் ஆன்மாவைத் தொட்டது. முடி மன்னர்களும்,  ஜமீன்களும், முதலாளிகளும், பண்ணையார்களும் அவர்களுடைய நிலங்களில் உழைத்த  கோடி மக்களும் இருந்தும் அகற்ற முடியாத ஐரோப்பிய மேலாதிக்கத்தை காந்தி அகற்றினார்.  வெறும் ஒன்றரை லட்சம்  இராணுவத் துருப்புக்களைக் கொண்டு ஒரு துணைக்கண்டத்தை எவ்வாறு ஆங்கிலேயர் ஆண்டழித்தார்கள், எப்படி கீழை தேசத்தின் மையநிலமான இந்திய பெருநிலத்தை இருள் சூழ்ந்தது ? எதனைக் கொண்டு அவர்கள் நம்முடைய சனங்களை அடிமைப்படுத்தினார்கள்?  எந்த நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து விடுபட்டு தங்களுடைய தேசங்களை ஒளி பெறச்செய்தார்களோ? அதே நிலப்பிரபுத்துவ சாதிய நடைமுறைகளை எடுத்துக் கொண்டு நம்முடைய ஆன்மாவை பாழில் தள்ளி ஆண்டொழித்தார்கள். செயற்கையான பஞ்சங்கள் மானுடரை உலுப்பின.   மெல்ல மெல்ல விடுதலை உணர்வு.  உருவாகி வந்தது.  ஒரு பக்கத்தில் காலனிய ஐரோப்பியர்களும் அதிகாரத்தரப்பும், அவர்களை ஒண்டிப்பிழைக்கும் இந்திய நிலமானிய சமூகமும், அதன் சாதியமைப்பும்  நிற்கிறது. இன்னொரு பக்கம் ஐரோப்பிய அறிவியக்கமும்,  கலை இலக்கியங்களும் நிற்கின்றன. எய்டனுக்குள் அந்தப் பேரமைப்பை மீறும் முடிவை எடுக்கச் செய்வதும், காத்தவராயனை நம்பிக்கை கொள்ளச் செய்வதும். தன்  இலட்சியங்களைச் சிக்கெனப்பிடிக்கச் செய்வதும் இந்த இரண்டாவது தரப்பைத்தான். நாவல் சரியாக இந்தியாவில்  மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்த காலங்களில் தன் புனைவுக்காலத்தை அமைத்திருக்கிறது. ஐரோப்பிய மனசாட்சியும் இந்திய மரபும் திரண்டு எழுந்து வந்து காந்தியில் உச்சம் பெற்றதுதான் நவீன இந்தியாவின் ஒருவகையில் இலட்சியவாத உலகின் வரலாறும் கூட.  அதில் ஷெல்லியும் இருக்கிறான். 

SWIFTLY walk o’er the western wave,  Spirit of Night !   

பட்டினிச்  சாவும்,  அதிகாரத்தால் நிகழ்த்தப்படும் கொலைகளும் மலிந்த அன்றாடத்தைப் பழகிப் பழகி   உறைந்து போயிருக்கும் பனிக்கட்டி தொழிற்சாலை ஊழியர்கள், தங்களின் சக ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டிருப்பர் என்று அறிந்த போது வாழாதிருக்கின்றனர்.  அது அன்றொரு நாள் மவுனமல்ல  நூற்றாண்டுகளின் மவுனம்.  எய்டனும் காத்தவராயனும் அங்கே நிகழும் மட்டும் அந்த மவுனமே அவர்களுடைய வாழ்வும்  கடனுமென்று இருக்கிறது. எய்டன் அவர்களுடைய பிணங்களைக் கொண்டு வந்து  அவர்கள் முன்னால் இடுகிறான்.  ஷெல்லி அவர்களிடம் கேட்கிறான்.  விடுதலை என்றால் என்ன?    இன்று நாம் இந்தச் சொல்லை அன்றாட  காய்கறி வெட்டும் கத்தியைப் போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்று அந்த பாவப்பட்ட சனங்களுக்கு மவுனம் சிதல் புற்றைப்போல்  அவர்களின் மேல் எழுந்திருந்த மக்களுக்கு அது   ஆழப்பிலங்களில் இருந்து அவர்களை மீட்க வந்த சொல்.  What is freedom? You can tell which slavery is too well.

நாவலின் இன்னொரு உச்சம் அங்கே நிகழ்கிறது. வரலாற்றில்  ஒடுக்கப்பட்ட சனங்கள் எழுந்து நிற்பதும் நீதி கேட்பதும், எப்பொழுதெல்லாம் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் அது மானுட குலத்தை ஒரு உலுக்கு உலுக்கி துருக்களை உதிரச்செய்து  இன்னொரு இடத்தில் வைக்கிறது. அது தனியொருத்தி கைகளில் சிலம்பை உயர்த்தினாலும் சரி, ஆயிரம் பேர்  எழுந்து அநீதிக்கு முன்னால் நின்றாலும் சரி. அங்கே அறமென்னும் முது தெய்வம் எழுகிறது. அதே போல் அதன் ஆடியுருவான கவிதையும் எழுகிறது. கலையும் இலக்கியமும் எழுகின்றன.

எய்டன்  கொண்டு வந்து வளர்த்திய  தங்களின் பிணங்களைப் பார்த்ததும் கறுப்பனும் அவனுடைய சக ஊழியர்களும் எழுந்து நிற்கின்றனர். காத்தவராயனும் எய்டனும் நடைமுறைச் சமரசங்களுக்கு தயாராகி விடுகின்றனர். ஆனால் அவர்களோ அசையாமல் நிற்கிறார்கள்.   அங்கே நிகழ்ந்த  இரத்தப் பலிகளுக்குப் பின்பும் எய்டனைக் கறுப்பன் பின் தொடர்கிறான். அப்பொழுது அவன் கவிதையாக ஆகிவிட்டிருக்கிறான். அங்கே கறுப்பன் கவிதையை ஒப்பித்தான் என்கிறது  நாவல். 

He was pale even to the lips, 

Like Death in the Apocalypse

நாவலைக் கவிதைகளைத் தொட்டபடியும் வாசித்திருக்கிறோம் என்பது  நன் நிறைவை அளித்தது.  வாசித்தவுடன் எழுதிய குறிப்பிற்கு மிகத்தொலைவானது இந்தக் குறிப்பு. வாசகர் எழுத்தாளரின் எதிர்த் தரப்பு ஆயினும் ஆடிப்பாவையைப் போன்றவன் என்று ஜெ சொல்கிறார். எழுத்தாளர் முழுக்க முழுக்க தனக்காக தன்னைக் கண்டடையவும் விடுவிக்கவும், நிறையவுமே எழுதுகிறார். எது எழுத்தாளனைத் தொடுகிறதோ எது அவரை விடுவிக்கிறதோ, நிறைகிறதோ அது வாசகரையும் தொடுகிறது. அதையே நிறைவான வாசிப்பு என்று நானும் நினைக்கிறேன்.