கருணாகரனுக்கு இலக்கியத் தோட்ட விருது

0
610

இம்முறை கனடா  இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருது,   ஈழத்தில் கவிஞர் கருணாகரனுக்கு அளிக்கப்படுகிறது. ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை சமகால இலக்கியத்தில்  தன்னை ஓர் உரையாடல் வெளியாகத் திறந்து வைத்திருப்பவர் கருணாகரன். அவருடைய கவிதைகள், பத்திகள் அவர் வாழ்ந்த காலகட்டங்களை தொகுத்து அளிப்பவை. கிழக்கையும் வடக்கையும்  இணைக்கும் ஓர் அரூபக் கோடு  அவர் வாழும் கிளிநொச்சி – திருநகர் வீட்டில் இருந்து இணைத்துக் கொண்டிருக்கிறது. இச்சிறு தீவில் அவர் உருவாகி வந்தது இலக்கியத்தின் நல்லூழ்.

கவிஞர் கருணாகரன் தன் வாழ்வை முழுக்க அதற்கு அளித்திருக்கிறார். அதில் அவருக்கு  கசந்த காய்களும் பழுத்த கனிகளும் உண்டு.  கோபமும் சலிப்பும் வெறுமையும் நிறையவே உண்டு. ஆளுமைகள் தம் சொந்த  அன்றாடச் சிற்றுணர்வுகளை தாம் பொருந்தி இருக்கும், நம்பியிருக்கும் பெருஞ்செயலில் கரைத்து அழித்தபடி நகர்ந்து செல்கிறார்கள். மோதி நுரைத்தாலும், விழுந்து கலங்கினாலும்  தன் பிரவாகத்தையும் பயணத்தையும் கைவிடாத நதியைப் போல.

கருணாகரன்  எந்த தரப்பையும் ‘கதைக்கலாம்’ ‘ உரையாடலாம்’ என்ற சொற்களால்  தொட்டு அழைக்கக் கூடியவர்.  தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகுதியாக புலம்பெயர் தளமும் தமிழ்நாட்டும் பல சந்தர்ப்பங்களில் அவர் மூலமாக வந்து சேர்வதை அவருடன் பழகிய பதினைந்து வருடங்களில் எப்பொழுதும் கண்டு வந்திருக்கிறோம்.  அருகமைவும் விலக்கமும் அதில் நிகழ்ந்தபடியிருக்கும்.  அது அவ்வாறு தான் அமைய முடியும். முரணும்  இணைவுமே பண்பாட்டை அசைக்கிறது.

இளையவர்களாக இலக்கியத்திற்குள் வரும் ஒவ்வொருத்தருக்கும் அவர் நம்பிக்கையளித்திருக்கிறார். அவரிடம் உள்ளது எல்லோரையும் அரவணைக்கும் ஓர் இயல்பு.  முழு நேர இலக்கியவாதி என்பதைத் தவிர அவர் எதையும் தன்னில் சூடிக் கொள்ளாதவர். அதன் பொருட்டு பெரும் புகழோ  செல்வமோ ஈட்டமுடியாது என்பதை அறிந்தும் அந்த பணயத்தை ஆட அமர்ந்தவர். மிக மிக துணிச்சலான முடிவது. இலக்கியத்தில் அதற்கு எப்பொழுதும் ஓர் கெளரவமான இடமுண்டு நிறைவுண்டு.

சில நாட்களுக்கு முன்பு  நண்பர் கிரிசாந்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது  அவருடைய பழைய நண்பர்கள், இன்று  அதிகார பீடங்களில் அமர்ந்திருப்பவர்கள் கூட அவரை பேரூந்தில் தற்செயலாக கண்டவரை எதிர்கொள்வதைப் போல சம்பிரதாயத்திற்கு சினேகச் சொற்களைச் சொல்லி விட்டுக் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன், அவரும் தன்னை பட்டம் பதவிகளோடு பொருத்திக் கொண்டிருந்தால் அவர்கள் பொருட்படுத்தியிருப்பார்கள் என்றார். அது உண்மை. அவரை பட்டாடோபம் மிக்க மேடைகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் கெளரவித்ததில்லை. பயன்படுத்தியதுண்டு. தன்னை ஓர் விரிவுரையாளராகவோ,  ஏதேனுமொரு அரசாங்க தொழிலில் இருக்கும் கனவான் தோரணைக்கோ அவர் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். அவர் அதைத் தெரிவு செய்யவில்லை. அவர் இலக்கியத்தையும் அதன் மூலம்  வந்து சேர்ந்த நல்லுறவுகளையும் மட்டுமே நம்புபவர். அவர் வாழ்ந்த பளையிலோ  வாழும் கிளிநொச்சியிலோ உள்ள  பொதுமக்கள் அவரிடம் காட்டும் மரியாதையையும் அன்பையும் பல தடவைகள் கண்டிருக்கிறேன். சம்பாதிப்பதற்கும் ஈட்டிக் கொள்வதற்குமான  வித்தியாசம் அது.

மூத்தவர் என்ற அடிப்படையில் கருணாகரனிடம் இருந்து முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது அவர் தன்னை எந்த அமைப்போடும் பொருந்திக் கரைந்ததும்  இல்லை என்பதும் எந்த அமைப்பையும் விலக்கிக் கொண்டதுமில்லை என்பது.  அது அவரை இயல்பாகவே தனிமனித அமைப்பற்ற அமைப்பாக மாற்றியிருக்கிறது.

ஓர் ஆலமரம் ஊரின் நடுவில் நிற்கும் சித்திரமது.  கருணாகரன் என்ற ஆளைப் புகழ்வதற்காக இதனைச் சொல்லவில்லை. அவரில் உருவாகி வந்திருக்கும் ஓர் ஆளுமையின் இயல்பை  வரலாற்றில்   நிறுத்திப் பார்க்கவும் அதை வரலாற்றில் நிகழ வேண்டிய  மூல நிகழ்வாக (cannon event) கருதுவதால் சொல்கிறேன்.

கருணாகரன் நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறார். இதழியலாளராக இருந்திருக்கிறார். அவருடைய  உள்ளூர் பண்பாடு, நிலவியல் சார்ந்த கட்டுரைகள் முக்கியமானவை. அவருடைய பதிப்பு முயற்சிகள்.  இலக்கிய ஆக்கங்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் போற்றப்பட வேண்டியவை.   ஈழத்தில் நடந்த இலக்கியக் கூட்டங்களில், சந்திப்புக்கள் அவருடைய பங்களிப்பு அதற்காக அவர் கொடுக்கக் கூடிய மூளை உழைப்பும் உடல் உழைப்பும் எல்லோராலும்  முடிவதில்லை.  முக்கியமாக தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதும் அவரில் குன்றியதில்லை. அவரிடம் உள்ள இடைவிடாத இலக்கியச் செயற்பாடுகளை பல்வேறு தளங்களில் விரித்துச் சொல்லிக் கொண்டு செல்லலாம். ஆனால்  இவை எல்லாவற்றும் மேலாக அவர் எப்பொழுதும் தன்னை கவிஞராகவே நிகழ்த்த விரும்பக் கூடிய ஆளுமை.  விசையையும் குன்றாமையையும் அங்கிருந்துதான்  அவரிடம் வருகின்றன.

அவருடைய வரிகளின் எனக்குப் பிரியமானது

‘எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னை எப்போதும் திகைப்பூட்டிக் கொண்டிருக்கிறது.

கவிதைக்காக  இலக்கியத் தோட்ட விருது பெறும் கவிஞர் கருணாகரனுக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here