குருவிக்காட்டுப்பக்கம் சென்றிருந்தேன். காலை இளவெய்யில் இளஞ் சூட்டோடு பொன்னெனத் துலங்கும் நேரம். கொக்குகளும், நீலக் கோழிகளும் வற்றிக்கொண்டிருக்கும் சதுப்பை மொய்த்துக் கொண்டு மீன்களை மேய்ந்து கொண்டிருந்தன. மாரியில் கொட்டித் தீர்த்த மழையாலும், புதிதாக அமைக்கப்பட்ட பெரு வரம்புகளாலும் கடலுக்குச் செல்லாமல் வருடத்தின் நடுப்பகுதியைத் தாண்டி கோடையின் உக்கிர நிலையையும் வெப்பத்தையும் கடந்து குருவிக்காட்டின் சதுப்பு வெளிகளில் நீர் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து நிற்கும் நீரின் போசனையால் தில்லைச் செடிகளும் அவற்றை மூடியிருந்த பெருங் கொடிகளும் பச்சை செறிந்து மதர்த்திருந்தன. குருவிக்காட்டின் நடுப்பகுதியின் விரிந்த நீர்ப்பரப்பு அல்லி மலர்களாலும் சிற்றிலை வட்டங்களாலும் நிரப்பிக் கொண்டு தன்னையொரு குளமாகவே பாவனை செய்தபடியிருந்தது. மேடான சில பகுதிகளில் நீர் வற்றி நிலம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆடி ஆவணியில் குருவிக்காட்டை வெட்டிச்செல்லும் கப்பூது வீதியின் இருபக்கங்களிலும் படர்ந்திருக்கும் நறுந்தாளிக் கொடிகளில் இளஞ்சிவப்பு மலர்கள் பூத்திருக்கும். நறுந்தாளிகள் வருட நடுப்பகுதியில்; தென் மேற்கு பருவப் பெயர்வின் காலத்தில் மலர்களை அள்ளி இறைக்கும். மற்ற நாட்களில் ஒவ்வொரு கொடியிலும் ஓரிரு மலர்கள் மட்டும் காணக் கிடைக்கும். இம்முறை குருவிக்காட்டின் உயிர் வேலியெனப் படர்ந்த கொடி அடர்வுகளின் மேல் ஏராளம் நறுந்தாளி மலர்கள். நறுந்தாளி மலர்களின் மெல்லிய இதழ்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. சரியாகச் சொன்னால் அதுவொரு ஓரிதழ் மலர். பூவின் நட்ட நடுவில் செறிந்த இளஞ்சிவப்பு பொட்டு, கரைந்து இதழில் பரவுகிறதா, இதழ்களில் இருந்து நடுவில் குவிகிறதா என்பது, அதை இயற்றியது மட்டும் அறிந்தது. மலர்களில் மட்டும்தான் இளஞ்சிவப்பு (றோஸ்) நிறைந்த அழகைப் பெறமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.
நறுந்தாளிக் கொடிகளும் மலர்களும் பரவலாக பழந்தமிழ் இலக்கியங்களெங்கும் குறிப்பிடப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் முதல், கரு, உரி ஆகிய பொருள்வகைகள் குறிப்பிடப்படும். முதல் பொருள் நிலம், பொழுது ஆகியவற்றைக் குறிப்பிடுவது. சங்க இலக்கியங்களில் நிலமும் பொழுதும் அதிமுக்கியமான அலகுகள். நிலத்தையும் பொழுதையும் இயற்கைக் காட்சிகள் மூலம் விரித்து, அவற்றில் அணி சேர்த்து உருவகமாகவோ, உவமையாகவோ, உள்ளுறையாகவோ சொல்லப்படும் செய்திகள் வைக்கப்படும்.
சங்க இலக்கியங்களில் மாற்பித்தியார் என்றொரு பெண்பாற்புலவரின் பாடல்கள் கிடைக்கின்றன. மாரிக்காலத்து மலரும் பித்திகம் என்னும் மலரைப் பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் இவருடைய பெயருக்கான காரணம் கருதப்படுகிறது. ஆனால், இவர் பித்திகம் என்னும் மலரைப் பற்றிப் பாடிய பாடல் கிடைக்கவில்லை. என்றாலும் அவருடைய பாடல் ஒன்றில் தாளிக் கொடி பற்றிய குறிப்புண்டு.
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.
(புறநானூறு 252)
இளைஞன் ஒருவன் ,ஒலித்துக்கொண்டு வீழும் வெள்ளைநிற அருவிநீர் தலையில் தங்கி ஈரம் புலராமல் இருப்பதால் நிறம் மாறித் தில்லைச் செடியின் விழுதுகள் போன்ற சடையுடன் காணப்படும் இவன் இன்று செறிந்த இலையினை உடைய தாளி இலையைப் பறித்துகொண்டிருக்கிறான். (இந்த இலைகளைப் போட்டு வழிபட) இவன் முன்னொரு நாளில் தன் இல்லத்தில் இருந்துகொண்டு சொல் என்னும் வலையை வீசி இல்லத்தில் நடமாடும் பெண்மயிலைப் பிடித்தவன் ஆயிற்றே என்கிறார் புலவர். சங்கப்பாடல்களில் தாபத வாகை எனப்படும் துறையுண்டு. என்பது தவம் இயற்றுவோரையும் அவர்களின் சிறப்பையும், அவர்களின் ஒழுக்கத்திலிருந்து பிறழா நிலையையும் கூறும் தாபத வாகை; வாகைத் திணையின் உப துறைகளில் ஒன்றாகும். இதனைத் தொல்காப்பியம் “நாலிரு வழக்கின் தாபத பக்கம்” என்று குறிப்பிட்டுள்ளது. அதில் தவம் செய்வோரின் ஒழுக்கங்களும் பணிகளும் எட்டு வகையாகத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளன நீராடல், நிலக்கிடைக் கோடல் (நிலத்தில் படுத்தல்), தோல்தல் (உடலில் தோல் தரித்தல்), எரி ஓம்பல் (வேள்வித் தீ வளர்த்தல்), ஊர் அடையாமை (ஊருக்குள் செல்லாமல் காட்டில் வசித்தல்), சடை புனைதல், சுருங்கிய உணவு உண்ணுதல், தெய்வங்களை வழிபடுதல் முதலானவை தாபதத்தில் அடங்குபவை.
மேற்படி பாடலை மாற்பித்தியார் வாசிக்கும் போது, அற்புதமான நறுந்தாளி மலர்களை விட்டு விட்டு இலைகளை ஏன் பறிக்கிறான் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. அப்பொழுதுதான் அவன் நின்றிருப்பது தாபதத்தில் என்பதும், பயன்பாட்டிற்குகந்த இலையையே அவன் கொய்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். அவனால் கொடியின் காமத்து உறுப்பான மலர்களின் அழகைக் காணத்தான் முடியும், அவை அவனுக்குரியவை அல்ல என்று ஒரு சொல் கூட்டி வாசித்துப் பார்த்தேன். மாற்பித்தியாரின் இடத்தில் நின்று கவனித்தேன். அவர் ஒரு பெண். மலர்களைப் பாடுவதால் பெயர் பெற்றவர். இப்பொழுது அத்தாபதத்தின் கனம் இன்னும் கூடியிருந்தது. என்னை அறியாமல் இளமுறுவல் எழுந்தது. நறுந்தாளிச் செடியும் மலரும் அக்கனத்தைத் தாங்கிப் படர்ந்து எழுந்தன. இப்பொழுது அந்த மலரைப் பார்ப்பது மாற்பித்தியாரல்ல நான் தான். இலக்கியம் உருவாக்கி அளிக்கும் பார்வைகளில் தலையானது இது.
நாம் ஒரு மலரைப் பார்க்கும் போது எதைப் பார்கிறோம்? இயற்கையைப் பார்க்கும் போது எதைப்பார்க்கிறோம் ? நம்மைத்தான். அது நம்முடைய சொந்த உணர்வையே பிரதிபலிக்கிறது. நீங்கள் எதுவோ அதைத்தான் அது நிகழ்த்திக் காட்டுகிறது. பிரியம் மிக்க அமெரிக்க எழுத்தாளரான ரால்ப் வால்டோ எமேர்சன் எழுதிய இயற்கை என்ற கட்டுரை உலகப்பிரபலமானது. ஜெயமோகன் அதை இயற்கையை அறிதல் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிறு நூலாகவே கிடைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நாடு சென்ற போது தமிழினி பதிப்பகத்தில் அந்நூலை வாங்கி வந்தேன். எப்பொழுதும் என்னோடு வைத்திருக்கும் நூல்களில் அதுவுமொன்று. திரும்பத்திரும்ப வாசிப்பேன். அது இயற்கை பார்க்கும் என்னுடைய பார்வையை மாற்றியது. அந்நூலின் முதலாவது உரையாடலே இதைப்பற்றியதுதான். எமர்சன் தான் இயற்கையோடு இருக்கும் போது முழுவதும் நம்மைத் தனிமையில், ஏகாந்தத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லித்தந்தார்.
ஒரு மலரைப் பார்க்கும் போதும், எழுந்து தன்னை அறையும் அலையின் நுரைகளில் மடிந்து செல்லும் போதும் என்னில் நிகழ்வதை கவனித்துக் கொண்டிருப்பேன். அகமும் புறமும் சந்திக்கும் கணத்தில் நிகழும் ஒருவித சமநிலையது. எளிய அன்றாடத் துயரங்களில் இருந்து அது விடுவிக்கிறது. இயற்கையின் முன் நிற்கும் போது அகங்காரம் அழிகிறது. நம்மைத் தெளிவாக அதில் காண்கிறோம். ஒவ்வொரு முறையும் இயற்கைக்கு முன் நம்மை எரித்துக் கொள்வது, இதற்காகத்தான். வாழ்வதற்கான பொருள் அந்தச் சாம்பலில் இருந்தே எழ முடியும். ஒவ்வொரு முறையும் மலர்களின் முன் நிற்கும் போதும் ஆருணியாகிய உத்தாலகர் தன் மகன் விருச்சிக கேதுவிடம் சொன்னது காதுக்குள் ஒலிக்கிறது தத்வமஸி! விருச்சிக கேது, தத்வமஸி ! அது நீதான்.
பழம்பாடல் 01 பழம்பாடல் 02 பழம்பாடல் 03 பழம்பாடல் 04











