உழிஞ்சிலும் பெருவெளியும் | பழம் பாடல் 08

0
129

காலை நடை போகும் போது அன்றைக்குக் கண்ணில் படும் ஏதோ ஒரு இயற்கைப் பொருளைப் பற்றி இலக்கியத்தில் என்ன உள்ளது என்று தேடிப்பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறுமலரோ, செடியோ, மரமோ, பறவைகளோ, விலங்குகளோ, ஊர்பவையோ எதுவென்றாலும் ஒன்று. இன்றைக்கு கூகிளில் ஒரு செடியையோ மலரையோ படம் பிடித்து அளித்தால் அதன் பெயரைக் கண்டு பிடித்து தான் அறிந்த தகவல்களை முறைப்படுத்தி அளித்து விடுகிறது. மேலதிகமாக தேவைப்பட்டால் புத்தகங்களுக்கோ, கட்டுரைகளுக்கோ செல்வதுண்டு. பொதுவாக இத்தேடல் முடிவுகள் இரண்டு வகையானவை. ஒன்று குறித்த இயற்கைக் கூறு ஒன்றின் ’பயன்பாடுகள்’ சார்ந்த விடயங்களே பெரும்பாலும் அளிக்கப்படுவது. உணவு, மருத்துவம், மூலப்பொருள் வியாபாரம், விஞ்ஞானப் பெயர்கள், விளக்கங்கள், ஆய்வு முடிவுகள் போன்றன. பொதுவாக இதனை நாம் ’நுகர்வு’ என்று அழைக்கலாம். அடுத்தது குறித்த இயற்கைக் கூறு இலக்கியத்திலும் கலையிலும் நிகழ்ந்திருக்கும் விதங்களை அளிக்கிறது. அறிஞர் எமர்சன் தன்னுடைய புகழ் பூத்த ‘இயற்கை’ எனும் கட்டுரையில் நுகர்வையும், அழகையும் அடுத்தடுத்து விளக்குகிறார்.இன்றைக்கு மட்டுமல்ல மொழி மானுடரைத் தொட்ட காலத்தில் இருந்து மானுடர்கள் இயற்கையை இவ்விரண்டு வழிகளின் ஊடாக எதிர்கொண்டனர்.

நேற்றுக்காலை நடையை முடித்துக் கொண்டு வரும் போது இலேசான காற்று  அங்கே நின்றிருந்த மரமொன்றில் இருந்து அதன் காய்ந்த நெத்துத் தாள்கள் ( விதைகள் அடங்கிய தாள்) அசைந்து இரையும் ஒலி எழுந்தது. பேரலைகளின் நுண்மையான ஓசை, இலக்கியத்தில் இவ்வொலியை ‘ஆர்த்தல்’ என்பார்கள். பெரும்பாலும் கடலின் ஓசைக்கும் பேரிகைகள், முழவுகளின் ஒலிக்கும் குறிக்கப்படும் சொல். கடலுக்குத் தமிழில் ஆர்கலி என்ற பெயரும் உண்டு. மரத்தை நிமிர்ந்து பார்த்தேன். கிளைகளில் இலைகள் உதிர்ந்து பெரும்பாலும் நெத்துத்தாள்களே காய்ந்து கிடந்தன. மரத்தைப் பார்த்ததும் முதலில் வாகை என்றுதான் நினைத்தேன். ஆனால் வாகையின் நெத்துக்கள் பெரிது. ஓங்கிப்பரவி நிற்கக் கூடியது வாகை. அதனிடம் உள்ள பெரு நிமிர்வும் ‘வாகை சூடுதல்’ என்ற சொல் மரபு உருவாகி வருவதற்குக் காரணமாயிருந்திருக்க வேண்டும். என் முன்னால் கலகலத்துக் கொண்டிருந்தது வாகையின் வேறொரு இனம் என்று தோன்றியது. அதன் நெருங்கிய குருதி உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அதன் நிழலில் அமர்ந்தேன். இணையத்தில் தேடிய போது அதனுடைய பெயர் உழிஞ்சில் என்று தெரிந்தது. தமிழ்நாட்டில் இதை உசிலை மரம் என்று அழைத்தனர். மதுரையில் பிரபலமான உசிலம்பட்டி என்ற ஊரில் இம்மரம் அதிகம் செறிந்து வளர்ந்திருப்பதால் அப்பெயர் உருவானதாம் என்ற குறிப்புகள் இருந்தன. அவற்றோடு அதன் மருத்துவப் பயன்பாடுகள் பற்றியும் குறிப்புகள் இருந்தன. காணொளிகள் தென்பட்டன.

அப்படியே இலக்கியத்தில் என்ன கிடைக்கிறது என்று பார்ப்போம் என்று சென்றேன். முதல் பாட்டே சற்று முன்பு என்னை மறித்த நெத்துக்களின் சத்தம். நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் என்ற குறுந்தொகைப் பாடல். அவ்வையாருடையது.கொஞ்சம் முதல் எச்சொல்லையும் ஓசையையும் இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேனோ அதே காட்சி, அதே படிமம். அக்கணம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த என்னுடைய மூதன்னையொருத்தியைத் தொட்டு மீண்டேன்..

வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை, அருஞ் சுரம்” என்ப நம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே

பாலை நிலத்தின் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற போது அவளுடைய உள்ளம் வெளிப்படுவதைப் பாடல் காட்டுகிறது.  என்னுடைய குளிர்ந்த  மார்புகளில் உறங்கிக் கிடப்பதைத் தவிர்த்து விட்டு கடும் வெக்கை வீசுகின்ற, உழிஞ்ஞல் மரங்களில் நெற்றுகள் காய்ந்து வற்றலாக ஆகிச் சத்தமிடும் கொடிய பாலை நிலங்கள் நிரம்பிய வழியே சென்றிருக்கிறான் என்று புலம்புகிறாள். அவளுடைய நெஞ்சு காய்ந்து துடிக்கும் பிரிவின் துயரை உழிஞ்சல் நெத்திற்கு உருவகப்படுத்துகிறார் அவ்வை. அந்நெத்துக்களின் ’ஆர்க்கும்’ ஒலி எவ்வளவு கச்சிதமாக சொல்லில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் அவளுடைய நெஞ்சமெனும் உழிஞ்சல் நெத்தின் சத்தம் கடலுக்கும் கடலுக்கும், பேரிகைகளுக்கும் இணையானதாக ஆகிவிடுகின்றது. ஒரு உளத்துயர், பிரிவின் நாடகம் ஒரு சொல்லினால் எவ்வளவு பிரமாண்டமாக ஆகிவிட்டது.

இலக்கியம் இயற்றையைத் தொட்டெடுக்கும் போது கவனப்படுத்துவது அதன் அழகை எவ்வாறு அர்த்தப்படுத்தலாம், எவ்வாறு அவ் அர்த்தங்களை ஆழப்படுத்தலாம், விரிவாக்கிக் கொள்ளலாம், எண்ணற்ற சாத்தியங்களைப் போட்டுப் பொருள் கொள்ளத் தக்க ’மவுனத்தை’ அங்கே சமைக்கலாம் என்பதும் தான். கலைகளின் அடிப்படையும் அழகை எவ்வாறு கையாள்வது, அதை எப்படி மானுட வயப்படுத்துவது எப்படிப் படைப்பின் ஒர் பகுதியாக ஆக்கிக் கொள்வது என்பதுமாகும். அழகுணர்வு என்பது நமக்கு மரபிலிருந்து அளிக்கப்படுவது. நாம் எல்லொரும் அழகுணர்வின் அடிப்படைகளை மரபில் இருந்தே பெறுகின்றோம்.  குறிப்பாக இயற்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் போது நாம் அழகை எவ்வாறு பொருள் ஏற்றிக் கொள்கிறோம் என்பது முக்கியமானது.

அன்றாட வாழ்கை என்பது பெரும்பான்மையோருக்கு தினமும் சலிப்பை அள்ளிக் கொட்டுவது. வேலை, உழைப்பு, அலைச்சல், என்று நிகழ்ந்த நாளே மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அச்சலிப்பில் இருந்து அவர்களை ஓரளவு மீட்பது அவர்கள் அன்றாடம் கொஞ்ச நேரமென்றாலும் இலயித்திருக்கும் இயற்கையின் அழகு. வானம், கடல், நட்சத்திரம், மலர், அழகிய புள்ளின் ஓசை, உதிக்கும் சூரியன், மறையும் அந்தி இப்படி அன்றாடம் எதையாவது சில கணமேனும் சந்திக்கும் போது மனது இலேசாகி, இறுக்கம் தளர்கிறது. ஆனால் இது வெறும் ஆரம்ப நிலை மட்டுமே. அழகு ஆன்மீகமான ஓர் தரிசனமாக, கலையாக மாறும் போதே அர்த்தம் கொள்கிறது. கலையிலும் இலக்கியத்திலும் இது வெவ்வேறு அளவுகளில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காற்றில் ஆர்க்கும் உழிஞ்சில் நெத்துக்கள் நெஞ்சின் அலைகளென மாறும் அழகு. சங்ககால அகத்திணை, புறத்திணைப் பாடல்களில் அவை பெரும்பாலும் ஒற்றை அணியினால் அழகுபடுத்தப்படும் அர்த்தமேற்றப்படும். தனி நிலைச்செய்யுள்களின் செவ்வியல் காலம் என்பதால், அதற்குரிய எல்லைகளை அங்கே காணலாம்.

தமிழில் தனிநிலைச்செய்யுளில் இருந்து தொடர்நிலைச் செய்யுளுக்கும், பின்னர் காவியங்களுக்கும் மொழி நுழையும் போது தமிழில் தத்துவ தரிசனங்களும் மேம்பட்டிருந்தன. சொல்லப்போனால் காவியங்கள் என்பதே இலக்கியம் தத்துவங்களைத் தொட்ட போது தோன்றிய பேரிலக்கிய வடிவங்கள் தான். அப்பொழுது அழகு என்பது தெய்வீகத்தன்மையை எட்டுகிறது. பிரபஞ்சத்திற்கான விளக்கத்தை, வாழ்க்கைக்கான பேரிருப்பின் பொருளைத் தாங்கிக் கொள்ளும் பெருவடிவத்தைப் பெறுகிறது.

இலக்கியம் இயற்கையின் அழகை ததுவப்படுத்திக் கொள்ளும் போது, தன்னுடைய படிமங்களையும் அணிகளையும் ஆழப்படுத்திக் கொள்வதுடன் விரிவாக்கவும் செய்கின்றது. எல்லாக்கலைகளின் அடிப்படைகளும் இயற்கையில் இருந்து பெறப்பட்டவற்றிற்கான ஆழகையும் அர்த்தத்தையும் வழங்கும் செயற்பாடுகளே. இந்த வகையில் ஒரு தனித்த கூறு வரலாற்றிலும் தத்துவத்திலும் வைக்கப்படும் போது இயற்கையின் பேரிருப்பின் ஓர் பகுதியாக தன்னை உணரும் படி செய்வது இலக்கியத்தின் பணியாக அகிறது. அழகு படைப்பாக மாறும் செயல்முறை அதுவே. எமர்சன் சொல்வது போல கலை என்பது உண்மையில் இயற்கையின் முதல் சிருஷ்டிகளின் அழகால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனின் மனம் வழியாக இயற்கை மீண்டும் செயற்படும் விதம்தான்.

இலக்கியங்கள் நம்மை எங்கே எடுத்துச் செல்பவை ? வெறுமனே இயற்கைக்கு அழகையும் அர்த்தத்தையும் வழங்குவதோடு அவற்றின் பணி முடிந்து விடுகிறதா? இலக்கியங்கள் இவற்றின் மூலம் வாழ்க்கை மீதான அடிப்படைக் கேள்விகளுக்குச் செல்கின்றன. வாழ்வைச் செறிவாக்கி மொழியில் நிகழ்த்திப் பார்த்து அவற்றின் சாரத்தைக் கண்டறிந்து மொத்த மானுட அறிதலோடு இணைக்கின்றன. நம்முடைய ஆன்மாவிற்கு இருக்கக் கூடிய அழகை நாடுகின்ற விழைவும், அர்த்தத்தை நாடுகின்ற விழைவும் செல்ல நினைப்பது மாபெரும் தூய அறிதலை நோக்கி. ஏனெனில் நாம் அறிந்தவற்றிலேயே பிரமாண்டமும், இன்னும் முழுதறிந்து முடியாததுமாக உள்ள இயற்கையின் பகுதி நம்முடைய வாழ்கைதான். ரிக் வேதத்தில் உள்ள சிருஷ்டி கீதம் இவ்வாறு முடியும்,

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது? யாருக்குத்தெரியும் அது?

அதை யார் உண்டுபண்ணினார்கள் அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது

அதுவும் அறியாது!

மானுட குலத்தின் உச்ச கவிதைகளில் ஒன்றாக கருதப்படும் ஒன்றிது. சிருஷ்டி கீதம் குறிப்பிடும் ஆகாயம் நாம் அன்றாடம் காணும் ஆகாயம் அல்ல. அது விசும்பைக் குறிக்கிறது. எல்லையற்ற நாம் அறிந்து தீர்க்க முடியாத, பெருவெளியைக் குறிக்கிறது. அதன் பேரழகு அதன் முடிவின்மை. அது நாம் காணும் ஓவ்வொன்றிலும் நிகழ்கிறது. நம்முடைய அறிவும் கலையும் இலக்கியமும் இயற்கையைக் காணும் முயற்சியும் பயிற்சியும் இணைந்த பெரும் பயணம் என்றே தோன்றுகிறது. அதன் எல்லையற்ற பேரெழிலைப் புரிந்துகொள்வதற்கான நம்முடைய ஆன்மாவின் விழைவே நம்முடைய கவிதையும் கலையும். அதற்காகவே காய்ந்து காற்றில் ஆர்க்கும் உழிஞ்சில் நெத்தும் விரிந்த எல்லையற்ற விசும்பின் பெருவெளியும்  காத்திருக்கின்றன.

பழம்பாடல் 01

பழம்பாடல் 02

பழம்பாடல் 03

பழம்பாடல் 04

பழம்பாடல் 05

 பழம்பாடல் 06

பழம்பாடல் 07  

உழிஞ்சிலும் பெருவெளியும் பழம்பாடல் 09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here