எழுநா இணையச் சிற்றிதழில் பிரிந்தா குலசிங்கம் மேற்கொள்ளும் கோட்டில் கேட்கும் சங்கீதம்: காண்பியப் படைப்பாளிகளுடனான நேர்காணல் என்ற புதிய நேர்காணற் தொடர் ஆரம்பமாகியுள்ளது. தொடரின் முதல் ஆளுமையாக காண்பியக் கலைஞர் தா.சனாதனன் அவர்களை நேர்கண்டிருக்கிறார். நேர்காணலின் முதற்பகுதி பிரசுரமாகியுள்ளது. சமீபத்தில் ஈழத்து கலை இலக்கியச்சூழலில் வெளியான முக்கியமான நேர்காணல் என்று சொல்லத்தக்கது. தொடர்ச்சியாக இலக்கியத்தைப் போலவே காண்பிய வெளியை அவதானிப்பது உரையாடுவது எழுத்தாளனாக எனக்கு முக்கியமானது. பண்பாட்டின் முக்கிய பகுதியான சமகாலத்தின் கலை இலக்கிய வெளியைப் புரிந்து கொள்வதற்கான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது. அவ்வகையில் இந்நேர்காணல் விரிவானது. இன்னொரு பகுதியும் பிரசுரமாகவுள்ளது. இத்தொடர் பற்றிய கவனமும் விவாதங்களும் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதில் எனக்கு விதந்து கவனப்படுத்த வேண்டும் என்ற இடங்களை இக்குறிப்பில் தொகுத்துச் சொல்லியிருக்கிறேன்.
ஈழத்தில் நெடுங்காலமாக கலை இலக்கியம் என்பது அரசியல் போராட்டம் சார்ந்ததாகவோ, அதன் வடிவம் அல்லது முன் வைப்பு முறைகள் பற்றிய கரிசனை கொண்டதாகவோ மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கப்பட்டது. மெய்யான பல கலைஞர்களைக் காவு கொண்டது. வரலாறு, அழகியல், பண்பாடு இவை மூன்றையும் இணைக்கக் கூடிய அவை பற்றிய சொந்தமாக அடைந்தவற்றைத் தொகுத்துக் கொள்ளக் கூடிய ஆளுமைகள் உருவாகிவருவது என்பது ஈழத்தில் மட்டுமல்ல மொத்தத் தமிழ்ச் சூழலிலேயே அரிதாகிப் போனது. இவ்விடத்தில்தான் காண்பியக் கலைஞரான சனாதனனின் இந்நேர்காணலில் அவர் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து எடுத்துக் கொண்ட சொற்கள் ’வெறும் அரசியல்’ என்ற பெரும் போக்கிற்கு எதிராக நிற்கின்றன. எனது படைப்புகளுக்கான தொடக்கம் போர்சார் அனுபவங்கள் தான் என்றாலும் இவ்வனுபவங்கள் படைப்பாக மாறும் போது அது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் பற்றிப் பேசுபவையாக மாறிவிடுகின்றன. அவை நீதிக்காகக் குரல் கொடுக்கின்றன. ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்கும் தனித்தனியாகப் படம் வரையத் தேவையில்லை என்கிறார். இங்கே பெரும்போக்கில் உள்ள அரசியல் மட்டுமான தரப்பின் பிரச்சினை என்ன வென்றால் இங்கே ஒவ்வொரு நிகழ்வுக்கும் படம் வரையச் சொல்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு ஒருபடம். காசாவிற்கு ஒரு படம். இலக்கியத்திலும் இதே நிலைமை.
கலைவரலாற்றுத் துறையைச் சேர்ந்தவர், பேராசிரியர், விரிவுரையாளர் என்பவற்றை முதன்மைப் படுத்தாமல் நேர்காணல் சனாதனனை அவருடைய முதன்மையான அடையாளமான, காண்பியக் கலைஞர், ஓவியர் என்ற அடிப்படையில் நின்று பிரிந்தா அணுகியிருக்கிறார். கலையின் வெற்றி என்பது கலைஞரின் உலகியல் வெற்றியோ, அது சார்ந்த அடைவுகளோ அல்ல. அது கலைஞரின் அகத்தினுடைய நிறைவு மட்டுமே. சொந்த விடுதலையை முன்னிட்டே கலை நிகழ்கிறது. எது அவருடைய மெய்யான அகமோ, எதுவாக நிறைந்து தன்னுடைய ஆளுமையின் உச்சத்தைக் கொடுத்து வெளிப்படுகிறாரோ, அதுவே அவருடைய கலை. சனாதனனின் சொற்களில் அது வெளிப்படுகிறது.
கலை இலக்கியத்தில் மெய்யான ஆளுமைகள் தங்களுடைய சொந்த வாழ்க்கையை எப்படித்தொகுத்துக் கொள்கிறார்கள் என்பதும், அதை வரலாற்றின் முன் எப்படி நிறுத்திப் பார்க்கிறார்கள் என்பதும் முதன்மையாகக் கவனப்படுத்தப்படும். சனாதனன் தன்னுடைய வாழ்க்கையையும் படைப்பையும் வரலாற்றில் நிறுத்தியே அபிப்பிராயங்களை உருவாக்குகிறார். நமக்கு என்ன நடந்தது என்பது முக்கியமல்ல, நாம் எதை நினைவுகூர்கிறோம் எப்படி நினைவு கூர்கிறோம் என்பதே முக்கியமானது என்றார் எழுத்தாளர் மார்க்வெஸ்.
மரபான கலை இலக்கியத்திற்கும் நவீன கலை இலக்கியத்திற்குமான முதன்மையான பிரிநிலை என்பது மரபிலக்கியத்தில் கலைஞனும் அவனுடைய படைப்புமே அறியப்படுபவை. நவீன இலக்கியத்தில் கலைஞனின் வாழ்க்கையும் அவனுடைய படைப்போடு இணைத்துக் கவனப்படுத்தப்படுகின்றது. கம்பராமாயணத்தை கம்பனின் தனிப்பட்ட வாழ்க்கைச் சித்திரம் இன்றியே இலக்கியம் நினைவு கொள்கிறது. தஸ்தெயெவெஸ்கியின் படைப்புகளை அவருடைய சொந்த வாழ்க்கையோடு இணைத்தே வாசிக்கிறோம்.
நேர்காணல் சனாதனன் என்ற ஓவியர் எப்படி உருவாகி வந்தார் என்ற கதைகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. அவர் அவற்றைத் திரட்டி ஒழுங்குபடுத்துகிறார். கலை இலக்கியத்தில் அன்னையர்களிடம் இருந்து அளிக்கப்படும் கலை தந்தையர்களிடம் இருந்து அளிக்கப்படும் எப்பெருஞ் செல்வத்தையும் விடவும் ஒரு படி மேலானது. மனைப்பொருளியல் ஆசிரியையான என்னுடைய அம்மா தன்னைப் ‘பொம்பிளைப் பிள்ளை மாதிரி வளர்த்தார்’ என்கிறார். பெண்களுக்கு இருக்கக் கூடிய அந்த ஒருபடி மேலான அழகுணர்வை அம்மாவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார் பொம்பிளைப்பிள்ளை’ இல்லாத வீடு என்பதற்கேற்ப என்னைப் பெண்பிள்ளை போலவே அம்மா வளர்த்தார். ஆண்-பெண் என வேறுபாடு காட்டாது தன்னுடைய திறன்களை எனக்குத்தான் பயிற்றுவித்தார். அழகு என்பது ஒழுங்கு பற்றிய உணர்வு என்றால் அதை முதன்முதலில் உணரவைத்தது அம்மா தான்.’ நேர்காணலில் சனாதனன் தன்னுடைய அம்மம்மா பற்றிச் சொல்லும் இடமும் இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டியது.
‘அம்மம்மாவின் வீட்டு முற்றம் நீண்ட தனிப்பட்ட மண் ஒழுங்கையுடன் கூடியது. இதை விளக்குமாற்றால் கூட்டும்போது மணல் மண்ணில் தோன்றும் கோடுகள், குறித்த கோல ஒழுங்கில் இருக்கவேண்டும் என்பதில் அம்மம்மா அதிகம் சிரத்தையெடுப்பார். அந்தக்கோலம் முறிந்து முறிந்து அடுக்கடுக்காக வராவிட்டால் அவர் திரும்பக் கூட்டச் சொல்வார். கூட்டிய பிறகு முழு முற்றமும் பெரிய பாம்பு செட்டையைக் கழட்டிப் போட்ட மாதிரி இருக்கும் ’ இவ்வருடம் அவர் வரைந்த அம்மம்மாவின் முற்றத்தில் (2026) அம்மாவிடம் பெற்ற ஈர்க்குப் பிடியின் Patten கள் வரையப்படுகின்றன. எங்கிருந்து உருவாகி வருகிறது, எதனால் தூண்டப்படுகிறது என்பது கலையில் முக்கியமானது. அதை பிறருக்குச் சொல்லாவிட்டாலும் கலைஞர் தான் அறிந்திருக்க வேண்டும்.

சனாதனன் தன்னுடைய ஒவ்வொரு ஓவியத்தையும் தன்னுடைய கதையுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார். அன்றாடத்துடனோ உலகியலுடனோ அல்ல அவர் அகத்துடன் இணைக்கிறார். ஒரு படைப்பில் இரண்டு வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாமவர் அதை ஆக்கியவர். அதில் தன் வாழ்வையும் மீட்பையும் வாசிக்கிறார். சனாதனின் ஓவியங்கள் அதற்கான அவருடைய கதைகள் சொல்லப்படாவிட்டாலும் பிறருக்கு அவர்களுடைய வாழ்வோடும் இரசனையோடும் பொருத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றன.
நல்ல படைப்பாளியின் சொற்களில் தரித்து நின்றே அக்கலையின் அழகியலும் வரலாறும் மாறிச் செல்கின்றன. ஏனென்றால் வேறெப்படியும் அந்த மாற்றத்தை நுண்மையாகப் பார்க்க முடியாது. 1988 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டபத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளின் காட்சியொன்றை பார்க்க முடிந்தது. இதில் சமகால போர்சார் வாழ்க்கை சித்தரிக்கப்பட்ட ஓவியங்கள் அதிகம் இருந்தன. வீரம், துன்பம், இழப்பு, சுதந்திரம் போன்ற தொனிப்பொருட்களை வெளிக்காட்டும் ஒன்றாக ஓவியம் மாறியிருந்தது. வழமையான சாமிப்படங்களும் கிராமக்காட்சிகளும், புராணக்காட்சிகளும் இங்கு பெரும்பாலும் விடைபெற்றிருந்தன. இவை புரியாத ஓர் உணர்வை என்னுள் ஏற்படுத்தின என்கிறார் ஓவியர். சாமிப்படங்களில் இருந்தும் காலைக் காட்சிகளில் இருந்தும் காட்சி மாறும் நிகழ்வை நம்மால் தெய்வங்களைப் போல எங்கோ மேலிருந்து பார்க்க முடியாது. வரலாறு, காலத்தின் பெருவுரு. அதை காட்டுவது கலையினுடைய வேலை. கலை வரலாற்றை அதன் போக்கோடு ஏற்றுக்கொள்வதில்லை. அதை ஆக்கி அழிக்கும் தன்னுடைய பணியையும் உணர்ந்தே உள்ளது. தன்னுடைய காலத்தின் மீது விமர்சன பூர்வமான பார்வையுடன் அமர்ந்திருக்கிறது. கலைஞரின் வரலாற்றுப் பார்வை என்பது அதை விமர்சன பூர்வமாக அணுகுவதும் தான். சராசரிகளால் வரலாற்றின் முன் பணிவதைத் தவிர எதுவும் செய்ய முடிவதில்லை. கலை தன்னுடைய அழகியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு கறார் தன்மையுடன் வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுகின்றது. அதற்குச் சாட்டுச்சொவதோ ஒப்புக்குக் குத்தி முறிவதோ ஆகாது.
இக்காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் நவீன ஓவியம் பற்றிய கலந்துரையாடல்கள் மீள ஆரம்பித்திருந்தன. அவை நவீனவாதத்தை உருவம் சார்ந்தும் இசம்கள் (Isms) சார்ந்தும் தான் நோக்கின. மேற்குலகில் நவீனவாதம் தோன்றி கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப் பின்னர் பின்நவீனத்துவம் தோன்றி பத்து வருடங்களுக்குப் பின்னர் நவீனம் சரியா, பிழையா என யாழ்ப்பாணத்தவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவை ஓவியத்தை அல்லது நவீன ஓவியத்தை வரலாற்றுப்போக்கிலிருந்து பார்க்கவில்லை, உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்து பார்க்கவில்லை. மாறாக உருவமாகவும் உள்ளடக்கமாகவுமே பார்த்தன. வடிவம் சார்ந்தே நவீன ஓவியம் ஞாயப்படுத்தப்பட்டது அல்லது எதிர்க்கப்பட்டது.
ஈழத்தில் ஓவியத்தை மட்டுமல்ல, இலக்கியத்தையும் இந்தத் தரப்பே சிதைத்தது. அழகியலைக் கொன்று விட்டு அரசியல் போராட்டங்களுக்கு கலையை ஏவலாளியாக நிறுத்தப்பார்த்தது. முதலில் இடதுசாரிகள், பிறகு தமிழ்த் தேசியர்கள். ஈழத்தில் தொழில் முறை புத்திசீவிகளும், அரசியல் கோட்பாட்டாளர்களும் அழித்தொழித்த அழகியலை மீட்டெடுப்பதே இக்காலத்தின் பெரும்பணியாக இருக்கிறது. ஏன் இந்நேர்காணலை இவ்வளவு கவனப்படுத்த வேண்டியிருக்கின்றது என்றால். இன்றைக்கு மூத்த தலைமுறைகளில் அழகியல் தரப்பு, வாழ்க்கையின் அல்லது கலையின் தரப்பு என்று சொல்லத்தக்க மூத்த ஆளுமைகள் அரிதினும் அரிதானவர்கள் என்பதால்தான். இந்த அசட்டு அரசியல் தரப்புக்கு எதிராக நிற்கும் களத்தில், மூத்தவர்களின் இத்தகைய சொற்கள் முகபடாம் மின்னக் களமெழும் போர் வேழங்களைப் போன்றவை.
நேர்காணலை வாசிக்க : சக்கரவியூகத்தில் சிக்குண்டுள்ள நானும் எனது வீடும்: காண்பியக் கலைஞர் தா. சனாதனனுடனான நேர்காணல் – பகுதி 1
கோட்டில் கேட்கும் சங்கீதம் – பிரிந்தா



