நண்பர் மலர் மன்னன். தமிழ் நாட்டைச் சேர்ந்த வாசகர். நண்பர் கமலாபரன் மூலம் அறிமுகமானார். நகுலாத்தை வாசித்து விட்டு அது பற்றி தன்னுடைய இன்ஸ்ரகிராம் பக்கத்தில் சிறிய காணொளி ஒன்றைப் போட்டிருந்தார். அழைப்பெடுத்து நாவலைப் பற்றிக் கதைத்தார். பின்னர் தோறை வந்த போது அதை உடனே வாங்கி வாசிக்க ஆரம்பித்திருப்பதாக படங்கள் அனுப்பியிருந்தார். தோறை தடுக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் இருந்து வந்த முதல் அழைப்பு அவருடையது. எப்படியாவது என்னிடம் புத்தகங்களைச் சேர்த்து விட வேண்டும் என்று பிரயத்தனப்பட்டார். சில நாட்களாக அதற்கான மாற்று வழிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். பார்சல் அனுப்பும் வழிகளைப் பற்றித் தேடியறிந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொருமுறை அழைக்கும் போதும் அவருடைய குரலில் தெரியும் கவலை வருத்தும். அனுப்பும் செலவுகளைக் கூட தானே ஏற்பதென்று நின்றார். அவரைக் கையமர்த்தவே பெரும்பாடாகி விட்டது. அவருடைய வார்த்தைகளும் அன்புமே பெரிது என்றும் என்னால் சமாளிக்க முடியும் என்று சொன்னேன். செல்வத்தை வங்கியிலும் பெட்டியிலும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் இக்கட்டில் கைவிடாத படிக்கு உறவுகளையும் நண்பர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

மலர் மன்னன், நேற்றைக்கு முன் தினம் தன்னுடைய மகனின் சிறு வீடியோ நறுக்கொன்றை அனுப்பியிருந்தார். குழந்தை வெகு நேரமாக புத்தகத்தின் அட்டைப்படத்தை இலயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றார். அறியாப் பைசாசத்தில் குழந்தை புத்தகத்துடன் பேசிக்கொண்டிருந்தான். சிற்றுணர்வுகள் மீது அதிகம் மினக்கெடாதவன் என்று தருக்கிக் கொண்டாலும் உணர்வு பூர்வமான சிறு செயலும் காட்சியும் தொடாமல் போவதில்லை. தோறை அன்னையருக்கும் குழந்தைகளுக்கும் நெருக்கமானது. தோறையில் தந்தையர்களும் ஆண்களும் அதன் எதிராடிகள். மலர்மன்னன் நேற்று நாவல் முடியும் தறுவாயில் இருப்பதாகவும் அதில் வரும் தேவாங்கு தன்னைப் பாதித்த விதத்தையும் சிறு குறிப்பாக அனுப்பியிருந்தார். கூடவே செயற்கை நுண்ணறிவில் தோறை மீது தேவாங்கு ஒன்று அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றையும் வடிவமைத்திருந்தார். தோறைக்கு எழுதப்பட்ட முதல் வாசகர் குறிப்பிது. இலக்கிய மதிப்பீடுகள், வாசிப்பின் வழிமுறைகள், கத்திகள் கோடரிகளுக்கு மத்தியில் ஒரு சிறுமலரும் தவிர்க்க முடியாதபடிக்கு ஆகி விடுவதுதான் அதன் முழு அழகும்.



